இல்லம்

மீனாம்பாள் அந்தக் காலத்திலேயே கும்பகோணம் போய் படித்தவர். 
இல்லம்

மீனாம்பாள் அந்தக் காலத்திலேயே கும்பகோணம் போய் படித்தவர். ஊருக்குள் படித்த பெண் என்றால், அது மீனாம்பாள் மட்டும்தான்! அந்த ஒரு தகுதியால் மட்டுமே கிராமத்தில் பிறந்து வளர்ந்த பெண் மதுரையில் வாக்கப்பட்டுப் பெரிய வீட்டு மருமகள் ஆனவர்.

மீனாம்பாள் கல்யாணமாகி முதன்முதலாய் இந்த வீட்டுக்குள் வந்த நாளில், 'இவ்வளவு பெரிய வீடா?' என்று மலைத்துப் போயிருக்கிறார். சலவைக்கல் தளமும் பூக்கள் வேலைப்பாடும் முதல் கட்டின் முற்றமும் அதன் நான்கு புறமும் இருந்த தேக்குமரத் தூண்களும் தூண்களின் வேலைப்பாடும் சரவிளக்கும் கிளி விளக்கும் ஜொலிக்கும் அழகைப் பார்த்துப் பார்த்து ரசிப்பார்.

திரும்பிய பக்கமெல்லாம் தேக்குமர வேலைப்பாடுகள், தேக்குமர நாற்காலிகள், மேசைகள் , அலமாரிகள், முக்காலி வரை எல்லாமும் பளபளத்தன. ஊஞ்சல் பலகையில் தந்தத்தால் பூ வேலைப்பாடு செய்திருக்கும். அந்த ஊஞ்சலில் மீனாம்பாளின் மாமியார் கோமதியம்மாள் அமர்ந்து, சுந்தரகாண்டம் படிப்பதும் திருவாசகம் சொல்வதும் நாள் தவறாமல் நடக்கும்.
இரண்டாம் கட்டில் இரண்டு பக்கமும் பக்கத்துக்கு இரண்டு அறைகள் என்று நான்கு அறைகள் இருக்கும். அதிலே, ஓர் அறை மீனாம்பாளுக்கும் அவளது கணவர் விஸ்வநாதனுக்கும் என்று ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த அறையில் நூற்றாண்டு கண்ட கட்டில். ஆறு பேர் ஒரே நேரத்தில் வசதியாகப் படுத்து நிம்மதியாக உறங்கலாம். அத்தனை பெரியது. இரண்டு குழந்தைகள் பிறந்து வளர்ந்த நாள்களில் இரண்டு பேரும் கட்டில் மேல் நின்று ஆடுவார்கள். இன்றைக்குப் போலவென்றால், அந்த ஒரே அறையில் ஒரு வீடே கட்டிவிடலாம்.

எதிர்ப்புறத்து அறையில் மாமியாரும், மாமியாருக்கு மாமியாரும் இருப்பார்கள். பக்கத்திலேயே பூஜை அறை. நாள் தவறாமல் அதிகாலையில் சூரியன் உதிக்கும் முன் விளக்கேற்றி சிவபுராணம் பாடுவார் கோமதியம்மாள். பூஜை அறையில் ஒரு ஸ்படிக லிங்கம். எடுத்துக் கையில் வைத்துக் கொண்டால் ஒரு குழந்தையை அணைத்து வைத்துக் கொண்டதைப் போல இருக்கும். அவ்வளவு பெரிய ஸ்படிக லிங்கம். அதைவிட உயரமாக பக்கத்தில் நடராஜப் பெருமானின் ஐம்பொன் சிலை. பரம்பரை பரம்பரையாக வந்து கொண்டிருக்கும் சிலை. இந்த வீட்டில் லிங்கமும் நடராஜப் பெருமானும் இறைவன் கூடவே இருந்து எல்லாவற்றையும் வழிநடத்தும் பெருமான். சிவ பூஜை நாள் தவறாது பல தலைமுறைகளாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. நான்காவது அறை பொருள்கள் பாதுகாக்கவென்று வைத்திருந்தார்கள். அந்தப் பெரிய வீட்டுக்கு அதுதான் கஜானா.

மூன்றாம் கட்டில் சமையல் கட்டு ஒருபக்கமும் தண்ணீர் புழக்கத்துக்கு மறுபக்கமும் என்றிருந்தது. தண்ணீர் புழக்கத்துக்கு வசதியாகக் கிணறும் பக்கத்திலேயே இருக்கும். மீனாம்பாள் கல்யாணமான புதிதில் கிணற்றடியில் உட்கார்ந்துதான் புத்தகங்கள் படிப்பது வழக்கம். பகல் நேரத்தில் வீட்டில் எல்லாரும் சாப்பிட்டு முடித்து வீடு அமைதியாகும்பொழுது மீனாம்பாள் ஆசுவாசப்படுத்திக் கொள்ளவும், வீட்டுக்குக் கடிதம் எழுதவும் என்று அவளுக்கே அவளுக்கான இடமாக அது இருந்தது.

விஸ்வநாதன் அவளுக்கு வசதியாக இருக்கட்டுமே என்று கிணற்றடியில் ஒரு கல்மேடை சலவைக்கல்லில் அமைத்துக் கொடுத்தார். இளம்வயதில் மட்டுமல்ல; ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு இன்றைக்கும் மீனாம்பாளுக்கு மனதுக்கு நெருக்கமான இடம் இதுதான்.

மூன்றாம் கட்டைத் தாண்டி வெளியில் ஓடு வேய்ந்த பின்கட்டு. தட்டுமுட்டு சாமான்கள் ஒருபுறமும் மாடு கன்றுகளுக்கென கொட்டகை மறுபுறமுமாக இருக்கும். மீனாம்பாள் வந்த புதிதில் ஐந்து மாடுகள் கன்றுகளோடு இருந்தன. பக்கத்திலேயே சின்னதாக ஓடு இறக்கி வீட்டு வேலைக்காரர்கள் குடும்பத்தோடு உள்ளேயே இருந்தார்கள்.

கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து வேலை செய்த செண்பகமும் அவளது புருஷன் முத்தண்ணனும் யாருக்கும் கிடைக்காத பாரதி பாடிய 'கண்ணன் என் சேவகன்' போல அப்படி ஒரு விசுவாசம் அவர்களுக்கு இந்த வீட்டிடமும் வீட்டு மனிதர்களிடமும் இருந்தது. செண்பகம் வீட்டை ஒரு தூசி தும்பு அண்டாமல் பார்த்துக் கொள்ளுவாள்.
வீட்டை அலங்கரிப்பதும் ஒன்பது படிகள் கொண்ட வீட்டு வாசலில் பெரிது பெரிதாகக் கோலமிடுவதும் மீனாம்பாளின் விருப்பம். நாள், கிழமை, விசேஷம்.. என்று வந்துவிட்டால் வீடே கோயில் போல ஆகிவிடும்.
செண்பகமும் மீனாம்பாளும் சேர்ந்து மாட்டுக் கொட்டகைக்கு அப்பால் ஒரு தென்னை மரமும் மாமரமும் மட்டும் இருந்த இடத்தில் தோட்டம் போட்டார்கள். ரோஜாப்பூ செடி ஒருமுறை கொடைக்கானல் போய்வந்த விஸ்வநாதன் வாங்கி வந்தார். அது வளர்ந்து பூத்துக் குலுங்கிய நாளில் வீடே குதூகலித்தது. எல்லார் முகங்களும், ' ரோஜா பூப்போல மலர்ந்துருச்சு!' என்று செண்பகம் சொன்னது இன்றைக்குப் போல அப்படியே நினைவிருக்கிறது. வில்வம் வைத்து மரமாக வளர்ந்து நிற்கிறது. ஐம்பது வயசு இன்றைக்கு அந்த மரத்துக்கு. மல்லிகையும் ரோஜாவும் துளசியும் என்று பூஜைக்கு எடுத்து வைத்த போது கோமதி மருமகளை சீராட்டிவிட்டார்.
அன்றாடம் கூடத்தில் உட்கார்ந்து பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கும் மீனாம்பாளை கோமதியம்மாள் ஓவியமே போல பார்த்துக் கொண்டிருப்பார். இரண்டு ஆண் பிள்ளைகளும் நன்றாகப் படித்தார்கள். 'அதுக்குத் தானே படிச்ச பொண்ணு வேணுமுன்னு கொண்டுவந்தேன்!' என்று பிள்ளைகள் புத்திசாலித்தனத்தை மாமியாரும் மருமகளும் பகிர்ந்து கொண்டதும் இந்தக் கூடத்தில்தான்.
வெளிநாட்டுக்குப் படிக்கப் போகிறான் பேரன் என்று கோமதி பாட்டியும் மீனாம்பாளும் வீட்டில் திருவாசகம் முற்றோதல் வைத்து ஐநூறு பேருக்கு அன்னதானம் கொடுத்ததும் இந்த முற்றத்தில்தான். மார்கழி மாதத்தில் திருவெம்பாவை பாடினால் பட்டுபுடவையும் வெள்ளி குங்குமச் சிமிழும் தருவார் கோமதி பாட்டி.
ஊருக்குள் இருக்கும் பெண்கள் எல்லாரும் நாள் தவறாமல் வந்து திருவெம்பாவை பாடியதும் இந்த முற்றத்தில்தான். ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு இன்றைக்கும் மீனாம்பாள் அதைத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறார்.
ஒருமுறை ஓதுவார் வீட்டுப் பெண் வந்து திருவெம்பாவை இசையோடு வயலின் வாசித்துக் கொண்டே பாடினாள். விஸ்வநாதனும் அவரது தாயாரும் கண்ணீர் மல்கக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். பாடி முடித்தவளுக்கு மீனாம்பாள் பட்டுப்புடவையும் குங்குமச் சிமிழும் கொடுத்ததோடு அந்தப் பெண்ணை அருகே அழைத்துத் தன் விரலில் இருந்த மோதிரத்தைக் கழற்றி அவளுக்கு அணிவித்தாள். அந்தப் பெண், 'தெள்ளேணம் கொட்டாமோ?'” என்று பாடிக்கொண்டே துள்ளிக் குதித்து ஓடியது இதோ இங்கே தான். தான் அப்படி மோதிரத்தைக் கழற்றிக் கொடுத்ததைப் பார்த்து ஊஞ்சலில் உட்கார்ந்திருந்த கோமதி பாட்டி, 'கற்றாரைக் கற்றாரே காமுறுவர்'” என்று சொல்லி இரண்டு கைகளையும் ஆசிர்வதிப்பதாக உயர்த்திக் காட்டியது நடந்து வருஷம் இருபதுக்கு மேல் ஆகிறது என்றாலும் பசுமையாக நேற்று நடந்தது போல இருக்கிறது.
இரண்டு பிள்ளைகளுக்கும் கல்யாணம் பேசியது இந்தக் கூடத்தில்தான். பெரியவன் சாமிநாதனுக்கு வெளிநாட்டுப் படிப்பு என்பதால், பல ஜாதகங்கள் வந்தன. இந்த முற்றத்தில்தான் ஜாதகப் பொருத்தம் பார்த்தார்கள். ''வீட்டில் கல்யாணத்தை வச்சுக்கலாமே!'' என்ற கோமதி பாட்டியை மருமகள் மறுத்தாள்.
''மீனாட்சியம்மன் கோயில் மண்டபத்திலே கல்யாணம் நடத்தணும்னு வேண்டியிருக்கேன்'' என்றாள்.
''சிறப்பாக நடக்கட்டும்'' என்று அவர் ஆசிர்வதித்து இருபது ஆண்டுகள் ஓடிவிட்டன. வீட்டுக்கு முன்னாலும் பின்பக்கமும் பந்தல் போட்டுக் கல்யாணம் முடிந்த கையோடு உறவுகளுக்கெல்லாம் கல்யாண விருந்து மூன்று நாள்கள் நடைபெற்றன.
படித்து முடித்து வேலை தேடிக் கொண்டிருந்த இரண்டாவது மகன் சிவாவுக்கு விஸ்வநாதனின் சகோதரி மகளையே பேசி முடித்தது பூஜை அறையில்தான். மீனாட்சி திருக்கல்யாணம் பார்க்க வந்த சகோதரியைத் தனியே பூஜை அறைக்கு அழைத்து விஸ்வநாதன் பெண் கேட்டதும் அவள் ஒப்புக் கொண்டதும் நடராஜப் பெருமான் எதிரில்தான். கல்யாணம் கோலாகலம். 'நான் பொறந்த வீடு என் மகள் ஆளப்போற வீடுன்னு எனக்கு மனம் குளிர்ந்து போச்சு!' என்று அவள் வந்த உறவுகளிடமெல்லாம் சொல்லிச் சொல்லிப் பெருமைப்பட்டுக் கொண்டாள்.
தொண்ணூறு வயதுக்கு மேல் மாமியாராக கோமதிப் பாட்டி சிவபுராணம் கேட்டுக் கொண்டே விஸ்வநாதன் மடியில் உயிர் பிரிய இறைவனடி சேர்ந்ததும் 'கல்யாணச் சாவு' என்று கூடியிருந்தவர்கள் எல்லாரும் திருவாசகம் சொல்ல இறுதிக் காரியங்கள் நடத்தியது இந்த வாசலில்தான். பதினாறாம் நாள் காரியம் நடந்து கொண்டிருந்த நாளில் மாமனாரும் இறைவனடி சேர்ந்த அதிசயம் நிகழ்ந்ததும் இந்த வீட்டில்தான்.
வேலை தேடிய சிவாவுக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்ததும் தன் திறமை அங்கீகரிக்கப்பட்டுவிட்டதாக சந்தோஷப்பட்டான். மனைவியோடு ஒரே மாதத்தில் ஜெர்மனி போய் விட்டான். இந்தக் கூடத்தில் அவர்களுக்குத் திருநீறு பூசி அனுப்பிவைத்தாள். சின்னவன் வெளிநாட்டு வாழ்க்கை பற்றிச் சொல்லச் சொல்ல, பெரியவன் மனைவிக்கும் வெளிநாடு போக வேண்டும் என்ற ஆசை வந்து விட்டது. அவனும் குடும்பத்தோடு ஜெர்மனிக்கே போய்விட்டான். அண்ணனும் தம்பியும் ஜெர்மனியில் அமோகமாக வாழ்கிறார்கள்.
ஐம்பது ஆண்டுகள் கவலையற்று இந்த வீட்டில் நிறைவாழ்வு வாழ்வாங்கு வாழ்ந்து மீனாம்பாள் இப்போது பாட்டியாகி விட்டாள். எழுபது வயதாகிறது. இத்தனை காலம் இல்லாத புதிய பிரச்னை வந்திருக்கிறது. அவளை ராணியைப் போல வாழ வைத்த வீடு, இப்போது சுமையாகி விட்டது.
பிள்ளைகள், 'வயதான காலத்தில் ஏன் தனியாக இருக்க வேண்டும்? எங்களோடு வந்து விடுங்கள்?' என்று கூப்பிடுகிறார்கள். மீனாம்பாளுக்கோ விஸ்வநாதனுக்கோ அதிலே விருப்பமில்லை. இப்போதைக்குப் பிள்ளைகள் மீண்டும் மதுரை வந்து சேரப் போவதில்லை. பிள்ளைகள் பேரக் குழந்தைகள் முகத்தைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமானால் அவர்கள் சொல்வதைக் கேட்டாக வேண்டும்.
இரண்டு பிள்ளைகளும் வந்திருக்கிறார்கள். ''நாங்கள் உங்களோடு வந்துவிட்டால் இந்த வீட்டை யார் பார்த்துக் கொள்வார்கள்?'' என்று விஸ்வநாதன் கேட்டார். சற்றும் தயங்காமல், ''வீட்டை விற்று விடலாம். இங்கே சும்மா விட்டு வைத்தால் வீடு பாழாய்ப் போகும். நல்ல விலைக்கு விற்றுவிடலாம்'' என்று சின்னவன் சொன்னான். பெரியவன் தலையசைத்து ஆமோதித்தான். ஆக, அண்ணனும் தம்பியும் பேசி வைத்துக் கொண்டு தான் வந்திருக்கிறார்கள்.
''அம்மா உங்களுக்கும் வயசாகுது அப்பாவுக்கு எழுபத்தைந்து வயது இரண்டு பேரும் தனியா இந்தப் பெரிய வீட்டில் இருப்பது அசெளகரியம் பாதுகாப்பும் இல்லை. அதனால் நீங்க எங்களோடு வருவது தான் நல்லது''- இது பெரியவன்.
'' ஐம்பது வருஷமா இந்த வீடே உலகமா இருந்துட்டேண்டா? இனிமேல் புது இடம் எனக்கு வேண்டாம்! மனசு ஏற்காது. மனசு ஏற்காம ஓர் இடத்திலே இருக்கறது சந்தோஷமா இருக்காது சுமையாய் இருக்கும். மதுரையை விட்டு வர எனக்கு விருப்பமில்லை!'' என்று அழுத்தமாகச் சொன்னார் மீனாம்பாள்.
''அப்போ தனியா இருக்க வேண்டாம். நீங்க இந்த வீட்டைப் பாதுகாத்துக்கிட்டு ஏன் கஷ்டப்படணும்? நீங்க தனியா இருக்கறதை நினைச்சு நாங்க கவலைப்படணும். இங்கேயே நல்ல சீனியர் சிட்டிஸன் ஹோம்ல இருங்க! கூப்பிட்ட குரலுக்கு உங்களுக்குத் தேவையானத்தைச் செய்து கொடுக்க ஆள் இருப்பாங்க. அன்றாடம் உடம்புக்கு செக் பண்ண டாக்டர், நர்ஸூன்னு எல்லாரும் இருப்பாங்க. அம்மாவும் அப்பாவும் பாதுகாப்பா இருக்காங்கன்னு நாங்களும் நிம்மதியா இருப்போம். எங்களைப் பார்க்கணும்னு நினைச்சா நீங்க வரலாம். உங்களைப் பார்க்கணும்னு தோணின உடனே நாங்க வருவோம். இது தான் நம்ம எல்லாருக்கும் நல்லது!'' என்று அண்ணனும் தம்பியும் மாற்றி மாற்றிச் சொன்னார்கள்.
''பார்க்கலாம் தம்பி நிம்மதியாகத் தூங்குங்கள். நிதானமாய் யோசித்து முடிவு செய்யலாம்!'' என்று விஸ்வநாதன் பெருமூச்சோடு எழுந்தார்.
மீனாம்பாள் மனதில் கேள்விகளும் யோசனைகளும் எழுந்தன. பிள்ளைகளைக் குறை சொல்வதற்கில்லை. அக்கறையினால் தான் சொல்கிறார்கள். நமக்கும் நர்ஸூகள் தேவை என்னும் அளவுக்கு ஆரோக்கியக் குறைவு ஒன்றும் இல்லை என்றாலும் தனிமை முதுமையில் பிரச்னை தான். இந்த வீட்டில் தலைமுறைகளாக வாழ்ந்திருக்கிறோம். பலரையும் வாழ வைத்திருக்கிறோம். மீனாட்சி நீயே நல்ல வழி காட்டு. கண்மூடி மனமுருகிப் பிரார்தித்துக் கொண்டாள்.
காலையில் விஸ்வநாதனும் மீனாம்பாளும் கோயிலுக்குப் போய்விட்டு மலர்ச்சியாக வந்தார்கள். பிள்ளைகளைக் கூப்பிட்டு பூஜை அறையில் நடராஜப்பெருமான் முன்னால் நிறுத்தி திருநீறு பூசினார்கள்.
'' ஒரு நல்ல முடிவை எடுத்திருக்கிறோம். இந்த வீட்டை விட்டுப் போவதில் எங்கள் இருவருக்குமே விருப்பமில்லை. எங்கள் காதலும் நேசமும் இன்பமும் துன்பமும் என்று இந்த வீடு முழுவதும் நினைவுகள் நிறைந்திருக்கின்றன. எங்களைப் போல வயதானவர்களுக்கு என்று இடம் இருப்பது மகிழ்ச்சி. அப்படியான பாதுகாப்பான இடத்தைப் போலவே இந்த வீட்டையும் வயதானவர்களுக்கான இல்லமாக மாற்றிவிடலாம் என்று நினைக்கிறோம். இந்த வீடும் பல முதியவர்களுக்கு அடைக்கலம் தரும் சரணாலயமாக இருக்கட்டும். இதனால் எங்களுக்கும் தனிமை விலகும். முடிந்த வரை நாங்கள் நிர்வகிக்கிறோம். அதன் பிறகு உங்களுக்கும் ஒரு நாள் இந்த வீடு அடைக்கலம் தரலாம். அதற்கான தேவையும் வரலாம். அன்றைக்கு நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள். நம் இல்லம் இல்லமாகவே தொடரட்டும்!''
தாயின் நம்பிக்கையையும் தகப்பனின் புரிதலையும் கண்டு மெளனமாக நின்றார்கள் பிள்ளைகள்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com