

'என்ன பிரதர், புரமோஷன்ல காஞ்சிபுரம் போறீங்களாமே?''
இன்பத் தேன் வந்து பாய்ந்தது என் காதுகளில்...! காஞ்சிபுரம் எண்ணெய்க்காரத் தெருவையும், அருகிலிருந்த பலராமன் தேநீர்க் கடையையும் மறப்பது அவ்வளவு சுலபமல்ல; புரமோஷன் எதுவுமில்லாமலேயே கூட காஞ்சிபுரத்துக்கு டிரான்ஸ்பரில் செல்ல எந்த நிமிடமும் நான் தயார்தான்.
பலராமன் தேநீர்க் கடையில் அதிகாலை நேரத்தில் ஒலிக்கும் எம்.ஜி.ஆர்., சிவாஜி பாடல்களும், தேநீர்க் கடையின் எதிர்ப்புறத்து வீட்டில் வாசல் தெளித்துக் கோலம் போட்டுவிட்டு மின்னலாய் வீட்டுக்குள் மறையும் அந்த தேவகியும்..! மறக்க முடியுமா என்ன? ஆனால், அந்த வீட்டில் தேவகி இன்னமும் கோலம் போட்டுக் கொண்டிருப்பாளா?
சே... எத்தனை அபத்தமான சிந்தனை. இருபது வருஷமா என் செல்லக்குட்டி தேவகிக்குத் திருமணம் ஆகாமலா இருக்கும்.
எண்ணெய்க்காரத் தெரு இன்னமும் அப்படியேதான் இருக்குமோ? இல்லை. ஓட்டு வீடுகளைக் களைந்து அடுக்குமாடிகளால் நிரப்பி இருப்பார்களோ? என்னைப் போன்றதொரு மூத்த பேச்சுலர் குடிமகனுக்கு இன்றும் அங்கே ஒரு தனியறை கிடைக்க வாய்ப்பு இருக்குமோ?
எண்ணற்ற கேள்விகளுடன் அன்றைய தினம் பிற்பகலுடன் நான் தற்போதைய அலுவலகத்தில் இருந்து கழற்றிவிடப்பட்டதாய்த் தெரிவிக்கும் ரிலீவிங் ஆர்டரைப் பெற்றுக் கொண்டேன்.
அன்றைய இரவின் கனவுகள் தேவகியால் நிரம்பி வழிந்தன.
வயது ஐம்பதுக்குக் கொஞ்சம் நெருக்கம். வைரம் பாய்ந்த கட்டை பிரம்மச்சாரி.
உடன் பிறந்த எல்லோரும் குடும்பஸ்தர்களாகி, பேரன், பேத்திகளைக் கொஞ்சிக் கொண்டிருக்க, ஏனோ எனக்கு மட்டும் பிரம்மச்சாரி போஸ்ட் நிரந்தரமாகிவிட்டது.
வீட்டில் என்னவோ எனக்குப் பெண் பார்க்கத்தான் செய்தனர். நானும் பவுடர் அடித்த முகத்துடன், முழுக்கைச் சட்டையை இன் பண்ணிக்கொண்டு, முன்பக்க வழுக்கையைப் படிய வாரிய தலைமுடியால் திரை போட்டு மறைத்து, 'ஈஸ்ட்மேன் கலர் கூலிங் கிளாஸ்' அணிந்தபடி என் அப்பா, அம்மாவுடன் பஸ், ரயில், டாக்ஸி, நடந்து.. என்று சாத்தியமான அனைத்துவிதப் போக்குவரத்துகளையும் பயன்படுத்தி ஐந்தாறு முறை பெண் பார்த்துவிட்டுத்தான் வந்தேன். அவற்றில் இரண்டு வீடுகளில் படுமோசமான காப்பி.
எவ்வளவு முயற்சித்தும் பெண் அமையவில்லை. அவ்வளவுதான். கலர் கொஞ்சம் கம்மி. ஐ மீன், எனக்கு. அதனாலேயே நான் பார்த்த பெண்களோ, அவர்களைப் பெற்றவர்களோ என்னை நிராகரித்திருக்கலாம்.
அரசாங்க வேலை என்ற கவர்ச்சியை மீறி என்னுடைய கலர் வேலை செய்திருக்கிறது.
அம்மா இந்த உலகத்தை விட்டுக் கிளம்பியபோது, எனக்கு வயசு முப்பதை நெருங்கிக் கொண்டிருந்தது. படுத்த படுக்கையாகிப் போன அப்பாவைப் பெரிய அண்ணனும் அண்ணியும் பார்த்துக் கொள்ள, அரசு உத்தியோகத்தின் முதல் இடம் மாறுதல் உத்தரவு வந்தது.
ஒரே ஒரு சூட்கேஸில் துணிமணிகள், சோப்பு, ஷேவிங் செட், கையகலக் கண்ணாடி, டூ இன் ஒன் டேப் ரிகார்டர் சகிதம் ஈரோட்டிலிருந்து காஞ்சிபுரத்திற்கு ரயில் ஏறினேன்.
அரசாங்க அலுவலகத்தின் அந்தக்கால மரநாற்காலிகளில் நமது பிருஷ்டம் பொருந்தி, அவ்விடத்து மூட்டைப் பூச்சிகளுடன் நட்பு பெருகத் தொடங்கும்பொழுது 'டாண்' என்று மாற்றல் உத்தரவு வந்துவிடும்.
முதல் முதலாகப் பணியில் சேர்ந்த ஈரோட்டில் எனது மூன்றாவது வருஷம் முடிந்தவுடன் முன்பே காஞ்சிபுரத்துக்குப் போகச் சொல்லி உத்தரவு.
முன் பின் தெரியாத ஊர் என்ற கிலியை மீறி அந்தக் காஞ்சிபுரத்தை நான் காதலிக்கும்படி செய்தது பலராமன் டீக்கடை.
அதைவிட அந்த டீக்கடையில் அதிகாலை நாலரைக்கே அலறத் தொடங்கும் அந்த சினிமா பாடல்கள் என்னை அதிகமாகவே வசீகரித்தன.
ரிக்கார்டு பிளேயர்கள் தங்கள் மவுசைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து, அவற்றின் இடத்தை டேப் ரிக்கார்டுகள் பிடித்துக் கொள்ள ஆரம்பித்த நேரம் அது. உண்மையில் ரஜினி, கமல் வகையறாக்கள் தலையெடுத்து ஹிட் பாடல்கள் கொடுத்துக் கொண்டிருந்த அந்தக் காலத்தில், நான் செல்லும் டீக்கடைக்குச் சொந்தக்காரரான பலராமன் இன்னும் சிவாஜி, எம்.ஜி.ஆர். பாடல்களையே போட்டுக் கொண்டிருந்தார்.
'ஒரு ராஜா ராணியிடம்..', 'யாருக்காக? இது யாருக்காக..', 'அழகிய தமிழ் மகள் இவள்..', 'ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்..', 'நாலு பேருக்கு நன்றி..', 'நலம்தானா..', ' ஆறு மனமே ஆறு...' என்று காதல், சோகம் இரண்டு வெரைட்டிகளிலும் கலந்து கட்டியாகப் பாடல்களைப் போட்டுத் தெருவையே அலறவிடுவார் பலராமன் மாஸ்டர்.
அதிகாலை நாலரைக்கு பாய்லரைப் பற்ற வைக்கும்போதே சுப்ரபாதம்போல முதல் பாட்டாக, 'கண்ணா. ஆ, நீயும் நானுமா?' என்ற கெளரவம் படப் பாடலைப் போடுவது வழக்கம்.
முதல்நாள் ஆபீஸிலிருந்து ராத்திரி பத்து மணிக்கு ரூமுக்குத் திரும்பிப் பதினொன்றுக்குப் படுக்கையைத் தஞ்சமடைந்திருந்தாலும், மறுநாள் அதிகாலை நாலரைக்கு அந்தப் பாடல், 'என்னை 'சோம்பேறி, இன்னும் என்னடா தூக்கம்?' என்று எழுப்பி விடும். பல்லைத் துலக்கி, ரூமைப் பூட்டிக் கொண்டு நான் போய் நிற்பதற்குள் பலராமன் டீக்கடையின் இரண்டு பக்க பெஞ்சுகளும் தூக்கம் வராத வயசாளி ஆள்களால் நிறைந்திருக்கும்.
'சாருக்குக் கொஞ்சம் இடம் கொடுங்கப்பா?'' என்ற பலராமனாரின் சிபாரிசில் பெஞ்சு மீது ஒடுங்குவேன்.
'ஸ்டிராங்கா, மீடியமா' என்று புரியாத கலரில் அதே சமயம் சுவை குறையாமல் ஆவி பறக்கும் தேநீர் பாதியளவு நிரம்பிய கண்ணாடி கிளாஸ் என் கைகளில் வரும்பொழுது மணி அதிகாலை ஐந்தை நெருங்கிக் கொண்டிருக்கும்.
கடையின் எதிர் வீட்டு வாசல் விளக்கு சட்டென்று எரியத் தொடங்கும். அந்த நாற்பது வாட்ஸ் குண்டு பல்பு சம்பளம் போதாத வேலையாள் போல அரை வெளிச்சத்தை உமிழத் தொடங்க, சட்டென்று தண்ணீர் வாளியும், தென்னந்துடைப்பமும் கையிலேந்தி வெளிப்பட்டு ஜீவகளையுள்ள ஒரு கோலத்தைப்போட்டுவிட்டு மின்னல் வேகத்தில் வீட்டுக்குள் சென்று மறையும் அந்த தேவதையின் பெயர் 'தேவகி' என்று எனக்குத் தெரிவதற்கு நாலைந்து வாரம் பிடித்தது.
தேவகி சாயங்கால வேளைகளிலும் கோலம் போடுவாள் என்பதை ஒருவாறு மோப்பம் பிடித்துச் சில வேலை நாள்களில் தலைவலி என்று பர்மிஷன் கேட்டுக் கொண்டு நேராக டீக்கடைக்கு வந்துவிடுவேன்.
பலராமன் டீ மாஸ்டர் ரொம்ப புத்திசாலி.
கடையில் வேறு யாரும் இல்லாத ஒரு நேரத்தில் 'என்ன சார், தேவகியை லவ் பண்றீங்களா?'' என்று நேரடியாகவே என்னைக் கேட்டுவிட்டார்.
தலையைக் குனிந்து கொண்டு, ' ம்'' என்றேன்.
டீ கிளாஸை என் கையில் கொடுத்து விட்டு, 'ஆந்த ஆசையை விட்டுடுங்க தம்பி. தேவகியோட அப்பா ரொம்பப் பொல்லாதவன். விஷயம் தெரிஞ்சா கை காலை எடுத்துடுவான். ஏற்கெனவே ரெண்டு மூணு பசங்களை அவன் பொளந்துருக்கான்..''
மெளனமாய்ச் சிறிது நேரம் கடந்தது.
'அரசாங்க உத்தியோகம் பார்க்குறீங்க. உங்க வீட்டுலயே நல்ல இடமாகப் பார்க்கச் சொல்லி கல்யாணம் செஞ்சுக்கிட்டு சந்தோஷமா இருப்பீங்களா, அத வுட்டுட்டு...'' என்றார்.
டீக்காசைக் கொடுத்து விட்டுக் கிளம்பினேன்.
அதற்குப் பிறகு எனது டீக்கடை விஜயங்களில் பலராமனுக்குத் தெரியாமல் தேவகியை நோட்டமிட முயன்று தோற்றேன். ஒரேயொரு முறை தேவகியின் கண்களும் எனது கண்களும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்ட போது சிலீரென்று இருந்த உணர்வு நீடிக்கவில்லை.
பின்னாலிருந்து எனது தோள்பட்டையை உலுக்கிய பலராமன் மாஸ்டர், 'சொல்லுறதை சொல்லிட்டேன். அப்புறம் உன் தலையெழுத்து. இனிமேல் நீ இந்தக் கடைப் பக்கம் வந்துடாதே. அநாவசியமா என் கடை எதிரே எந்த சம்பவமும் நடக்க வேணாம்ப்பா தம்பி.'' என்று கை கூப்பினார். பின்னணியில் அவர் போட்டிருந்த, 'போனால் போகட்டும் போடா.!'' என்ற பாடல் என்னைக் கேலி செய்தது. கிளம்பி விட்டேன்.
தங்கியிருந்த இடத்தையும் அடுத்த நாளே
மாற்றிவிட்டேன். வேறு டீக்கடை. அதன் எதிரில் எந்த வீடும் கிடையாது.
நாலைந்து டிரான்ஸ்ஃபர்களுக்குப் பிறகு மீண்டும் இதோ காஞ்சிபுரம் வாசம்.
நமது மனசு அவ்வப்போது எதையெதையோ குழந்தைத் தனமாக ஆசைப்படுகிறது. ஆசைப்பட்டபடியே நடக்கும் என்று நம்பவும் செய்கிறது.
இதோ நான் மறுபடியும் காஞ்சிபுரம் செல்கிறேன். அங்கே அதே இடத்தில் பலராமன் டீக்கடை இருக்கும் என்றும், என் மனதைக் கவர்ந்த தேவகி இன்னும் அதே இளமை மின்னலுடன் கோலம் போட்டபடி எனக்காகக் காத்துக் கொண்டிருப்பாள் என்று ஆசைப்படும் என் மனசு, அதையே நம்பவும் செய்கிறது.
கேரளத்தில் ஒரு முதியோர் இல்லத்தில் இருந்த வயசான ஆணும் பெண்ணும் அறுபத்தைந்து வயதில் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார்களாம். அதைப் போல என்னுடைய ஐம்பதாவது வயதில் எனது பிரம்மச்சரியம் முடிவுக்கு வரக்கூடாதா என்ன ?
முதல் நாளிலேயே அறிமுகமாகிய காஞ்சிபுரம் அலுவலக நண்பர்கள், 'வீடு பார்க்கவா பிரதர்'' என்பதற்கு பதில் சொல்லாமல் முதல் வேலையாய் ஒரு ஆட்டோ பிடித்து எண்ணெய்க்காரத் தெருவை அடைந்தேன்.
பலராமன் தேநீர்க் கடை இப்போது கொஞ்சம் புதுப்பொலிவுடன் 'பலராமன் டீ அண்டு ஸ்நாக்ஸ் சென்டர்' என்று பெயர் மாற்றம் பெற்றிருந்தது. வாசலில் மர பெஞ்சுகளுக்கு பதிலாக ஏழெட்டு பிளாஸ்டிக் சேர்கள். கடையின் உள்ளேயும் சில மேஜை, நாற்காலிகள். டீக்கடைகளுக்கே அடையாளமாகிய பாய்லர், புதியதாய், பளபளப்பாய்.
லவுட் ஸ்பீக்கர் ஏதும் இல்லை. அதற்கு பதில் கடையின் உள்ளே சுவரில் தொங்கிய எல்.இ.டி. டி.வி.யின் பக்கத்திலேயே பூ வைத்து பொட்டோடு தொங்கிய
பலராமனின் புகைப்படம் எனது கண்களில் பட்டது.
அவரைப் போன்ற ஜாடையில் இருந்த நடுவயது டீ மாஸ்டரிடம், 'ஒரு டீ கொடுங்க பிரதர்'' என்று சொல்லி விட்டுப் பிளாஸ்டிக் சேரில் அமர்ந்தபடி எதிர்ப்
புறத்தை நோட்டமிட்டேன்.
என் பிரியத்துக்குரிய தேவகி கோலமிட்ட அந்த வீடு இடிக்கப்பட்டு இரண்டு மாடிக் கட்டடமாகி தரைத்தளத்தில் ஒரு டாக்டர் கிளினிக்கும், முதல் இரண்டாம் மாடிகளில் ஏதோ சில ஃபைனான்ஸ் கம்பெனிகளும் குடியேறியிருந்தன.
அந்தக் கேரளத் தாத்தாவுக்கு நடந்தது போன்ற அதிசயம் எதுவும் எனக்கு நிகழ வாய்ப்பில்லை என்பது புரிந்துவிட்டது.
டீக்காசு கொடுப்பதற்காகப் பர்சை எடுத்த தருணத்தில் வெளிறிய ஒரு கலர் புடவையும், பிளாஸ்டிக் வளையல்களுமாய் கைநிறைய சாமான்களுடன் டீக்கடையில் நுழைந்தவளின் இளைத்த முகத்தில் என் தேவகி தெரிந்தாள். கழுத்தில் இருந்த மஞ்சள் கயிறும் வெளியிருந்ததை நான் கவனிக்கத் தவறவில்லை.
'கடைக்குப் போய் வர எவ்வளவு நேரண்டி. போய் அந்த டீ கிளாஸூங்களைக் கழுவு'' என்று விரட்டிய டீ மாஸ்டரின் குரலை இனி மீண்டும் எனது வாழ்க்கையில் நான் கேட்க விரும்பவில்லை.
உடனடியாகக் கிளம்பினேன். ஆபீஸ் அருகிலேயே ஹவுஸிங் போர்டில் ஓர் இடம் பார்க்கச் சொல்ல வேண்டும்.
சுமாரான லாட்ஜ் ஒன்றை புக் செய்து கட்டிலில் சோர்வுடன் சரிந்தேன்.
இரவு டிபன் சாப்பிடத் தோன்றவில்லை.
சொல்ல மறந்து விட்டேனே.
டீக்கடை டி.வி.யில் நான் கிளம்பும் பொழுது, 'ரஞ்சிதமே ரஞ்சிதமே..'' பாடல் ஓடிக் கொண்டிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.