ஜவான்:  பாலிவுட்டில்

ஷாருக்கான் நடிப்பில் 2018 - ஆம் ஆண்டில் வெளியான படம்  'ஜீரோ'.  இந்தப் படத்துக்காக,  அவ்வளவு உழைத்திருந்தார் ஷாருக்.
ஜவான்:  பாலிவுட்டில்

ஷாருக்கான் நடிப்பில் 2018 - ஆம் ஆண்டில் வெளியான படம்  'ஜீரோ'.  இந்தப் படத்துக்காக,  அவ்வளவு உழைத்திருந்தார் ஷாருக்.  ஆனால், படம் மிகவும் மோசமான விமர்சனங்களையே சந்தித்தது.  அதன் பிறகு, சில ஆண்டுகள் அவர் எந்தப் படத்தையும் கமிட் செய்யவில்லை.  வெற்றிமாறன், ஆஷிக் அபு, ஷதி ஃபேமிலி மேன்' இயக்குநர்கள் ராஜ் - டிகே எனப் பல இயக்குநர்களைச் சந்தித்தார்  ஷாருக்.  கமிட்மென்ட் காரணமாக, மேலே சொன்ன கூட்டணியில் படங்கள் எதுவும் உருவாகவில்லை. இந்த வரிசையில் அட்லியின் பெயரும் இணைந்தது. இந்தக் கூட்டணியில் படமும் உறுதியானது. அதுதான் 'ஜவான்'.
அட்லி இயக்கத்தில் ஷாருக்கான்.  அதை அவரே தயாரித்து நடிக்கிறார் என்ற தகவல்களே எல்லோருக்கும் இன்ப அதிர்ச்சிதான். ரஜினி, கமல், விஜய் என கோலிவுட்டின் டாப் ஹீரோக்களுக்கு எதிராக நின்று, கம்பீர வில்லனாக மிரட்டிய விஜய் சேதுபதி,  இந்தப் படத்தில் ஷாருக்கானுக்கு வில்லன் என்றதும் எதிர்பார்ப்பு எங்கேயோ போய்விட்டது.
தவிர, நயன்தாராவின் பாலிவுட் அறிமுகம், அவருடன் பிரியாமணி, சான்யா மல்ஹோத்ரா, யோகிபாபு, கேமியோவில் தீபிகா படுகோன் எனப் படத்துக்கு ஸ்டார்கள் இணைய இணைய, எப்போ படம் ரிலீஸ் என்ற ஆர்வமும் ரசிகர்களிடையே அதிகரிக்கத் தொடங்கியது. 

டெக்னிக்கலாக, ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு, கலை இயக்குநர் முத்துராஜ், எடிட்டர் ரூபன், ஸ்டன்ட் மாஸ்டர் அனல் அரசு, நடன இயக்குநர் ஷோபி, லலிதா ஷோபி என அட்லியின் முந்தைய படங்களில் பணியாற்றிய அவருக்கு நெருக்கமான அதே டீம்தான். முதல் இரண்டு படங்களுக்கு ஜி.வி.பிரகாஷ், அடுத்த இரண்டு படங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் எனப் பணியாற்றிய இயக்குநர் அட்லி, முதல்முறையாக அனிருத்துடன் இணைந்திருக்கிறார். இப்படி இந்தப் படத்தில் இருக்கும் நபர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள். 
தமிழ் சினிமாவில் இருந்து பாலிவுட்டுக்குப் போய் பலர் இயக்குநர்களாகவும் நடிகர்களாகவும் முத்திரை பதித்திருக்கின்றனர். கே.பாலசந்தர், கமல், ஸ்ரீதேவி தொடங்கி தற்போது விஜய் சேதுபதி வரை, அந்த லீஸ்ட் ரொம்பவே நீளமானது. இவ்வளவு ஏன், பாலிவுட் கொண்டாடும் பல ஒளிப்பதிவாளர்களும் நம்மவர்களே! பாலிவுட்டில் ஏ.ஆர்.ரஹ்மான் செய்திடாத மேஜிக்கா?!  இப்படி கோலிவுட்டைச் சேர்ந்த நிறைய நபர்கள் தனித்தனியே பாலிவுட்டை அலங்கரித்திருக்கின்றனர். ஆனால், ஒரு குழுவாகப் போய் ஒட்டுமொத்த படத்தையும் தாங்கி, வாகை சூடிய வரலாற்றைக் கொஞ்சம் திரும்பிப் பார்க்கலாம். 

தில் சே

இயக்குநர் மணிரத்னத்தின் பாலிவுட் அறிமுகம். ஏற்கெனவே தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் படங்கள் இயக்கி வெற்றி கண்டுவிட்டு, அடுத்ததாக பாலிவுட்டை குறிவைத்தார். ஷாருக்கான் கரியரில் மிக முக்கியமான படங்களில் ஒன்று. மணிரத்னம், சந்தோஷ் சிவன், ஏ.ஆர்.ரஹ்மான், எடிட்டர் சுரேஷ் அர்ஸ் என முழுக்க முழுக்க தமிழ் கூட்டணிதான். தமிழில் 'உயிரே' என வெளியானது. ஷாருக் கானுக்கு அரவிந்த்சாமி குரல் கொடுத்திருப்பார். இதன் தயாரிப்பாளர்களில் மணிரத்னமும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

யுவா' (தமிழில் 'ஆயுத எழுத்து') 

அஜய் தேவ்கன்,  அபிஷேக் பச்சன், விவேக் ஓபராய், ராணி முகர்ஜி, கரீனா கபூர் ஆகியோரை வைத்து மணிரத்னம் இயக்கிய 'யுவா' படத்திற்கு ஒளிப்பதிவு ரவி கே.சந்திரன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத். தமிழில் சூர்யா, மாதவன், சித்தார்த் ஆகியோர் நடித்தனர்.  இரண்டுமே ஒரே சமயத்தில் பைலிங்குவலாக உருவாகி 2004 -ஆம் ஆண்டு ஒரே நாளில் வெளியானது.   

குரு

அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், மாதவன், வித்யா பாலன் எனப் பிரமாதமான காம்போவில் படத்தை இயக்கிய மணிரத்னம், இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவாளராக ராஜிவ் மேனன், எடிட்டராக ஸ்ரீகர் பிரசாத் எனத் தனது ஆஸ்தான டீமை வைத்து வெற்றி கண்டார். 

ராவண்' (தமிழில் 'ராவணன்') 

மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்களாக விக்ரம், பிரியாமணி, ஒளிப்பதிவாளர்கள் சந்தோஷ் சிவன், வி.மணிகண்டன், ஏ.ஆர்.ரஹ்மான், எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் என மணிரத்னம் களம் கண்டார். அபிஷேக் பச்சன் நடித்த கேரக்டரில் விக்ரமும் விக்ரம் நடித்த கேரக்டரில் பிரித்விராஜும் தமிழில் நடித்தனர். பைலிங்குவல் படமாக இது 2010 - ஆம் ஆண்டு வெளியானது. 

கஜினி' 

தமிழில் கிடைத்த ஏகபோகமான வரவேற்புக்குப் பிறகு, ஹிந்தியில் ரீமேக்கானது 'கஜினி'.  ஏ.ஆர்.முருகதாஸ் - ஆர்.டி.ராஜசேகர் - ஹாரிஸ் ஜெயராஜ் - ஆண்டனி... இந்தக் கூட்டணியில் உருவானது தமிழ் 'கஜினி'.  இதுவே ஹிந்திக்குப் போகும்போது, ஆர்.டி.ராஜசேகருக்குப் பதில் ரவி கே.சந்திரனும் ஹாரிஸ் ஜெயராஜுக்குப் பதில் ஏ.ஆர்.ரஹ்மானும் பணியாற்றினர். ஆமிர் கான் கரியரில் 'கஜினி'யின் பங்கு முக்கியமானது.

'ஏக் தீவானா தா' 

தமிழில் சிம்பு - த்ரிஷாவை வைத்து 'விண்ணைத்தாண்டி வருவாயா' எனவும் தெலுங்கில் நாகசைதன்யா - சமந்தாவை வைத்து 'யே மாயா சேசாவே' எனவும் பைலிங்குவலாக படம் எடுத்தார் கௌதம் மேனன். இரண்டு மொழியிலும் ப்ளாக்பஸ்டரானதைத் தொடர்ந்து, ஹிந்தியிலும் அதை ரீமேக் செய்தார். பிரதிக் பாபர் - ஏமி ஜாக்சன் நடித்திருந்தனர். டெக்னிக்கலாகப் பார்த்தால், மூன்று மொழியிலும் கௌதம் மேனன் - ஏ.ஆர்.ரஹ்மான் - எடிட்டர் ஆண்டனி மாறவில்லை. ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவுக்கு பதில் ஹிந்தியில் எம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவு செய்திருப்பார்.   

'விக்ரம் வேதா' 

கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் கழித்து ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு அதே பெயரில் வெளியானது 'விக்ரம் வேதா'.  புஷ்கர் காயத்ரி இயக்கம், பி.எஸ்.வினோத் ஒளிப்பதிவு, சாம் சி.எஸ் இசை, ரிச்சர்ட் கெவின் எடிட்டிங். தமிழிலிருந்த இதே கூட்டணிதான் அங்கும் ஒன்றிணைந்தது. ஆனால், ஒரே ஒரு சின்ன மாற்றம் தமிழில் பாடல்கள், பின்னணி இசை இரண்டுமே சாம் சி.எஸ்தான். ஆனால், ஹிந்தியில் பின்னணி இசை மட்டும்தான் சாம். பாடல்களை விஷால் - சேகர் கூட்டணி இசையமைத்திருக்கும்.

இதில் பெரும்பாலான படங்கள் பைலிங்குவலாகவோ அல்லது ரீமேக் செய்யப்பட்டவையோதான். அதனால், பெரும்பாலும் தமிழ் சினிமா கூட்டணியே அங்கும் அமைந்தது. ஆனால், 'ஜவான்' அப்படியில்லை. ஷாருக் கானுக்காவே எழுதப்பட்ட கதை. இது பக்கா ஹிந்திப் படம். மற்ற மொழிகளில் டப் மட்டுமே செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது. தமிழ் நடிகர் - நடிகைகள் பெரும்பாலும் இருப்பதால் அவர்களது க்ளோஸ் அப் ஷாட்கள் மட்டும் தமிழுக்கென்று மீண்டுமொரு முறை எடுக்கப்பட்டிருக்கலாம்.

இயக்குநர் அட்லி மீது சில பல விமர்சனங்கள் இருக்கலாம், சொல்லப்படலாம். ஆனால், அட்லியின் வளர்ச்சி சாதாரணமானதல்ல. ஷாருக் கான் மாதிரியான இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரம் தான் தயாரித்து நடிக்கும் படத்தில் இயக்குநருக்கு இந்தளவுக்குச் சுதந்திரம் கொடுத்திருப்பது பெரிய விஷயம். இந்த டீமில் ஷாருக்கானுக்கு முழுக்க முழுக்க எல்லாமே புதியவர்கள்தான். ஆனால், இந்த இளம் அணியுடன் கைகோத்து ஷாருக்கான் ஆடும் ஆட்டம் நிச்சயம் வெறித்தனமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com