திரைக் கதிர்

ரஜினிகாந்த் - த.செ.ஞானவேல் இணையும் படத்தில் அமிதாப் இடம் பிடித்தது பழைய செய்தி.
திரைக் கதிர்


ரஜினிகாந்த் - த.செ.ஞானவேல் இணையும் படத்தில் அமிதாப் இடம் பிடித்தது பழைய செய்தி. தெலுங்கில் படத்தை ஹிட் பண்ண, நானியையும் கதைக்குள் சேர்த்திருக்கிறார்களாம். 20 நிமிடங்கள் வந்து போகிற பாத்திரம்தான் என்றாலும், கதையில் தனக்கிருந்த முக்கியத்துவத்தைக் கேட்டுச் சிலிர்த்து விட்டாராம் நானி. கதை சொல்ல ஹைதராபாத்துக்கு வந்த த.செ.ஞானவேலைத் தன்னுடைய காரிலேயே விமான நிலையம் வரை கொண்டுவந்து விட்டாராம் நானி. "ரஜினி படத்தில் நடிக்க விரும்பிய என் வாழ்நாள் கனவு நிறைவேறியது' எனக் குடும்பத்தினருடன் கொண்டாடுகிறாராம் நானி. ஆனால், இந்த நிமிடம் வரை நானி குறித்த செய்தியைப் படு ரகசியமாக வைத்திருக்கிறது படக்குழு.


-----------------------------------------


விஜய் சேதுபதியை வைத்து "டி.எஸ்.பி.' படத்தை இயக்கிய பொன்ராம், அடுத்த படத்துக்கான கதையை எழுதி முடித்திருக்கிறார். "வருத்தப்படாத வாலிபர் சங்கம்', "ரஜினி முருகன்' என அடுத்தடுத்து சிவகார்த்திகேயனுக்கு வெற்றிப் படங்கள் கொடுத்த பொன்ராம் மறுபடியும் அவரை அணுக முடியாமல் போக, விஜய் சேதுபதியிடமே வந்தார். கைகொடுப்பதில் சளைக்காத விஜய் சேதுபதி, பொன்ராம் தன் கதையைச் சொல்வதற்கு முன்னரே, "நான் வெற்றிமாறன் சாரிடம் ஒரு கதை கேட்டேன்' எனச் சொல்லி, அந்தக் கதையைச் சொல்லத் தொடங்கினாராம். வெற்றிமாறன் கதை, பொன்ராம் டைரக்ஷன் என அடுத்த படத்தைத் தொடங்கவிருக்கிறார் விஜய் சேதுபதி.


-----------------------------------------


சூர்யாவின் "கங்குவா' மூலம் தமிழுக்கு வந்திருக்கிறார் திஷா பதானி. பாலிவுட்டில் பட்டையைக் கிளப்பும் திஷா, உத்தரப் பிரதேசத்தில் பிறந்து வளர்ந்தவர். லக்னோவில் டிகிரியை முடித்துவிட்டு மாடலிங்கில் நுழைந்தார். ஆனால், சினிமாவில் தெலுங்கில்தான் அறிமுகமானார். வருண் தேஜின் "லோஃபர்' படத்தின் மூலம் என்ட்ரி ஆனவர், அதன் பின் இந்தியில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார். இப்போது கமலுடன் ஒரு படத்திலும் கமிட் ஆகி நடித்து வருகிறார். "கங்குவா'வைத் தொடர்ந்து கமல் படமும் தமிழில் வருகிறது என்பதால், பூரிக்கிறார் திஷா.

-----------------------------------------


விஜய் டி.வி. தொடர்களில் துணை நடிகராக அறிமுகமாகி  உதவி இயக்குநர், சினிமாவில் கதாநாயகன் என உயர்ந்தவர் கவின். லிப்ட், டாடா என சமீபத்திய ஹிட் படங்களால் அனைவராலும் கவனிக்கப்பட்டு வருகிறார். தற்போது மகிழ்ச்சியான செய்தியை அனைவருடனும் பகிர்ந்துள்ளார் கவின். தனியார்ப் பள்ளியில் பணியாற்றி வரும் மோனிகா என்பவரைக் காதலித்து வந்தார் கவின். மிக ரகசியமான இவர்களின் காதல் தற்போது இருவீட்டார் சம்மதத்துடன் திருமணக் கட்டத்தை எட்டியுள்ளது. இவர்களின் திருமணம் அனைவரின் ஆசியுடன் இந்த மாதம் 20-ஆம் தேதி கோலாகலமாக நடைபெறவுள்ளது. வாழ்த்துகள் கவின் - மோனிகா!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com