பேல்பூரி

சொந்தக்காரனை நம்பினால் தகராறு. சொந்தக் காலில் நின்றால் வரலாறு.
பேல்பூரி

கண்டது


(கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகேயுள்ள ஊரின் பெயர்)

'வழுக்கம்பாறை''

அ.இரவீந்திரன்,
ஞ்சன்விளை.

(தென்காசி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தின் பெயர்)

'காசிக்குவாய்த்தான்''

நெ.இராமகிருஷ்ணன்,
சென்னை.

(திருச்சி செல்லும் வழியில் உள்ள ஒரு கிராமத்தில் உணவு விடுதியின் பெயர்)

'அஞ்சு கிராமம்''

மு.சுகாரா,
ராமநாதபுரம்.

கேட்டது


(ராமநாதபுரம் கடலில் குளிக்கும்போது இருவர் பேசியது)

'தங்கம் கடத்துபவர்கள் தாங்கள் பிடிபட்டால் கடலில் வீசிவிடுவாங்களாம். தெரியுமா?''
'அதான். நான் கடலில் குளிக்கும்போது, காலில் ஏதாவது தட்டுப்படுதான்னு பார்ப்பேன்!''

எஸ்.மோகன்,
கோவில்பட்டி.
 

(கொடை "லேக்' பகுதியில் சுற்றுலாப் பயணியும் குதிரைக்காரரும் பேசியது)

'என்ன சார். ஒரு ரவுண்ட் "ரைடு'  வரலாமா?''
'ஆளை விடுப்பா. பேப்பரே திறந்தா ஒரே "ரெய்டு' பத்திதான். நீயும் சொல்லி ஞாபகப்படுத்தறே?''

சம்பத்குமாரி,
பொன்மலை.

(மயிலாடுதுறை பட்டமங்கலத் தெருவில் இருவர் பேசியது)

'தீபாவளி, பொங்கல் மாதிரி இந்த ஆடி மாசத்துக்கும் போனஸ் கொடுத்தா நல்லா இருக்கும்!''
'ஏன் அப்படி என்ன செலவு உங்களுக்கு?''
'சம்பளப் பணம் மொத்தமும் ஆடி தள்ளுபடியில் துணி எடுத்தே காலியாடுச்சே?''

சங்கீத.சரவணன்,
மயிலாடுதுறை.

யோசிக்கிறாங்கப்பா!

பெண் குழந்தைகளைக் கொண்டாடுங்கள். 
இந்த உலகில்  உயிரை உருவாக்கும் சக்தி 
பெண்ணுக்கும் மண்ணுக்கும் மட்டுமே உண்டு.

ந.சண்முகம்,
திருவண்ணாமலை.

மைக்ரோ கதை


மாரடைப்பு காரணமாக,  மருத்துவமனையில் தொழிலதிபர் மணி சேர்க்கப்பட்டார்.  மருத்துவர்கள் ஆறு அடைப்பு இருக்கிறது என்று அறுவைச் சிகிச்சை செய்து உயிரைக் காப்பாற்றினர். பில் ரூ.10 லட்சம் எனக் கூறினார்.  இதைக் கேட்ட மணியோ அழ ஆரம்பித்துவிட்டார். 

'நீ கொஞ்சம் குறைத்து கூட கொடுப்பா? அதுக்காக அழுதா உடம்புக்கு ஏதாவது ஆகப் போகுது!'' என்று டாக்டர்கள் கூறியும், அழுகையை மணி நிறுத்தவில்லை.
'ஐயா. நான் பத்து லட்சம் ரூபாயை பற்றி கவலைப்படவில்லை.  என்னிடம் ஏராளமாகப் பணம் இருக்குது.  முழுசா கொடுக்கறேன்.  ஆனால் ஒரே வருத்தம்.  எழுபது வருஷமா இந்த இதயத்தைச் சீராக இயக்கிய இறைவனுக்கு நான் எவ்வளவு பணம் கொடுத்தால் சரியாகுமுன்னு நினைக்கிறேன். அதான் யோசித்து அழுகையை அடக்க முடியாமல் தவிக்கிறேன்!'' என்றார்.
டாக்டர்களும் திகைத்து நின்றனர்.

ஜி.அர்ஜுனன்,
செங்கல்பட்டு.


எஸ்எம்எஸ்


சொந்தக்காரனை நம்பினால் தகராறு. 
சொந்தக் காலில் நின்றால் வரலாறு.

பொன்.சொர்ணவேல்,
செங்கோட்டை.

அப்படீங்களா!


உலகின் முன்னணி தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ் ஆப்பில் பல புதிய சேவைகள் அறிமுகமாக உள்ளன.  "வாய்ஸ் சாட்' எனும் புதிய சேவையை அறிமுகம் செய்ய உள்ளது. தனியாக ஒருவரிடம் நடத்தப்படும் வாய்ஸ் சாட்டை பதிவுப் போன்று ஒரு குழுவாக வாய்ஸ் சாட் நடத்த இந்த புதிய சேவை உதவும். 

அண்மையில் "விடியோ மெசேஜஸ்'  எனும் சிறு விடியோக்களை அனுப்பும் புதிய சேவையை வாட்ஸ் ஆப் தொடங்கியது. தற்போது இந்த வாய்ஸ் சாட்டை பீட்டா பயன்பாட்டாளர்களுக்கு அந்த நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது.

இதன் மூலம் குழுவில் உள்ளவர்கள் தங்களுக்குள் அழைப்புகளை மேற்கொள்ளாமலே வாய்ஸ் சாட் மூலம் பேசலாம்.  குழுவில் உள்ள ஒருவர் வாய்ஸ் சாட் எனும் சேவையைத் தொடங்கி விட்டால் அதில் உள்ள உறுப்பினர்களும் பங்கேற்று தங்கள் கருத்துகளை ஒலி வடிவில் பதிவிடலாம்.

இந்தக் குழுவில் எத்தனைப் பேர் இடம்பெற்றுள்ளார்கள் என்பது குழுவின் முகப்பில் இடம்பெறும். அவர்கள் பதிவிடும் வாய்ஸ் சாட் பதிவுகள் உடனுக்குடன் பதிவாகும். 60 நிமிஷங்களுக்கு எந்தப் பதிவும் இடம்பெறவில்லை என்றால் அந்தக் குழு தானாக கலைந்துவிடும். 32 பேருக்கு மேல் உள்ள குழுக்களுக்கு மட்டும் இந்த வாய்ஸ் சாட் சேவை தற்போதைக்கு வழங்கப்பட உள்ளதாக  கூறப்படுகிறது.

மேலும், தகவல் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வாட்ஸ் ஆப்புக்குள் நுழைவதற்கு 6 இலக்கத்தை பதிவு செய்யும் சேவை வழங்கப்பட்டுள்ளது. இந்தச் சேவையை இரட்டை பதிவு பரிசீலனையாக வாட்ஸ் ஆப் வழங்கி வந்தாலும், , தற்போது புதிதாக இமெயில் ஐடியை சேர்க்க வலியுறுத்துகிறது. இதனால் புதிய அறிதிறன்பேசிக்கு மாறினால் நமது வாட்ஸ் ஆப் தகவல்கள் அனைத்தும் இமெயில் முகவரியின் அடிப்படையில் மீண்டும் கிடைத்துவிடும். 

அ.சர்ப்ராஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com