பசி

அந்த விளையாட்டு மைதானத்தில் சரவணன் வந்து அமர்ந்தபோது, அவன் மனம் உணர்ச்சிப் பிழம்பாய் இருந்தது.
பசி


அந்த விளையாட்டு மைதானத்தில் சரவணன் வந்து அமர்ந்தபோது, அவன் மனம் உணர்ச்சிப் பிழம்பாய் இருந்தது. சந்தோஷம், திருப்தி, சோக உணர்ச்சிகளின் கலவை அவனை ஆட்கொண்டது. உட்கார்ந்திருந்த அவன், கையில் இருந்த அழைப்பிதழைப் பார்த்தான். திடீரென்று காற்று வீசி அவன் அழைப்பிதழை அசைத்ததோடு இல்லாமல், அவன் மனதையும் பல ஆண்டுகளுக்கு முன்னால் கொண்டு சென்றது.
அன்று இந்த மைதானத்தில் அமர்ந்த சரவணனின் மனம் முழுவதும் வேதனை மட்டுமே. அந்த மதிய வேளையில் புல் தரையின் சூடு, அவன் உடம்பைச் சுட்டாலும் அதை அவன் உணரவேயில்லை. மனதில் வேதனை அவ்வளவு இருக்கும்போது உடல் வேதனை எம்மாத்திரம்.
ஓட்டல் நாராயண பவன் முதலாளி அவனிடம் சொன்ன வார்த்தைகள் அவன் மனதைத் துளைத்தெடுத்துக் கொண்டிருந்தன.
'என்னது ஒரு ஓட்டல் முதலாளி ஆகணும்னுங்கறது உன் கனவா. கேட்கவே ரொம்ப சிரிப்பா இருக்கு. கனவு காணறத்துக்கு ஒரு தகுதி வேணும் தம்பி. உன் தகுதிக்குஏற்ற கனவா காணு''
மதியம் ஒன்றரை மணி இருக்கும். அவன் பாத்திரங்கள் கழுவும் ஒரு பணியாளனாகப் பணிபுரிந்து கொண்டிருந்த நாராயண பவனில் மதிய உணவு உண்டு விட்டு பத்து நிமிடங்கள் ஓய்வெடுக்க அமர்ந்துகொண்ட சரவணன் கண் அயர்ந்து விட்டிருக்கிறான். அப்படி உறங்கிய உறக்கத்தில் 'யாருப்பா, ஏ.சி. ரூம் இன்சார்ஜ், உடனே என் ரூமுக்கு வரச் சொல்லு'' என இரைந்து சொல்லிவிட்டு பதிலை எதிர்பார்த்துக் காத்திருந்தான், கனவில்தான்.
அப்பொழுது பார்த்து அந்த ஓட்டலின் முதலாளி சங்கரலிங்கம் அங்கு வந்திருக்க வேண்டுமா என்ன?
"சரவணா.. ..''
திடீர் என்று ஒருவர் இவனைத் தட்டி எழுப்புவதை உணர்ந்து திடுக்கிட்டு, கண் விழித்து எழுந்து நின்றபோது எதிரில் சாட்சாத் சங்கரலிங்கம். கால்கள் நடுங்க ஆரம்பித்தன. இவன் வாயைத் திறந்து ஏதோ சொல்ல வருவதற்குள் சங்கரலிங்கம் கிச்சனுக்குள் நுழைந்துவிட்டார்.
அப்பாடா அவர் எதுவும் சொல்லவில்லை என்று எண்ணிக் கொண்டு பணியைத் தொடங்கினான்.
"உனக்கு ஏற்கெனவே ரெண்டு முறை சொல்லியிருக்கேன் சரவணா. மதியம் தூங்காதேன்னு. இப்ப பார்த்தியா. முதலாளியே நீ தூங்கறதைப் பார்த்துட்டார். இனிமே இப்படி செய்யாதே'' சொன்னார் சூப்பர்வைஸர் சுந்தரம்.
'வேணும்னு தூங்கலை அண்ணே. ஓட்டல் வேலையை முடிச்சுட்டு ராத்திரியில காய்கறி மார்க்கெட்ல வேற வேலை செய்யறேனே. தம்பி, தங்கை படிக்க வைக்கப் பணம் வேணும். அதுதான் தூக்கமே போதலை. உட்காரதான் செஞ்சேன். அப்படியே தூக்கம் வர தூங்கிட்டேன்'' என்று சொன்னான்.
'புரியுது சரவணா. இதையெல்லாம் முதலாளி கேட்பாரா? அவருக்கு ஓட்டல்ல வேலை செய்யறவங்க வாங்கற சம்பளத்துக்கு ஒழுங்கா வேலை செய்யணும். அவ்வளவுதான். உன்னோட நல்ல நேரம் அவர் உன்னை மன்னிச்சுட்டார்னு நினைக்கறேன். இனிமேல அவர் கண்காணிப்பார்' என்று சொல்லிவிட்டு தன் பணியைத் தொடர்ந்தார் சுந்தரம்.
கடகட என வேலையைச் செய்ய ஆரம்பித்து பத்து நிமிடங்கள் ஆகியிருக்கும்.
'சரவணா, முதலாளி கூப்பிடறார்'' என்று சுந்தரம் சொல்ல, முதலாளி அறைக்குச் சென்றான்.
இவன் உள்ளே நுழைந்துவணக்கம் சார்' என்று சொன்னபோது அவர் யாரோ ஒருவருடன் கைப்பேசியில் பேசிக் கொண்டே தலையாட்டினார். சிறிது நிமிடங்கள் கைப்பேசியில் உரையாடி விட்டு இவனைப் பார்த்தார். இவன் துடிக்கும் மனதுடன் நின்றிருந்தான்.
'சொல்லு, சரவணா. என்ன விஷயம்?'' என்று சங்கரலிங்கம் கேட்க, இவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை.
'நீங்க கூப்பிட்டதா சூப்பர்வைசர் சொன்னார் சார்''
'ஓ அப்படியா.நான் கூப்பிட்டேனா. எதுக்குக் கூப்பிட்டிருப்பேன்னு நினைக்கறே?'' என்று முதலாளி கேட்க, இவனுக்கு விளங்க ஆரம்பித்தது.
'ராத்திரி கொஞ்ச நேரம்தான் தூங்கினதால என்னை மீறி தூக்கம் வந்து தூங்கிட்டேன் சார். இனிமே தூங்க மாட்டேன்'' என்று சொன்னான்.
'அப்ப உனக்கே தெரியுது. ஓட்டல்ல தூங்கறது தப்புன்னு..''
'வீட்ல கஷ்டம் சார். அப்பா இறந்துட்டார். தம்பி, தங்கை படிக்கறாங்க. அம்மா பத்துப் பாத்திரம் தேய்க்கற வேலை செய்யறாங்க. பணம் போதலை. அதுக்காக வேலை நேரத்துக்கப்புறம் காய்கறி மார்க்கட்டுல ஹெல்பர் வேலை செய்யறேன். ராத்திரி வீட்டுக்குப் போக லேட் ஆயிடுது. என்னை அறியாம தூங்கிட்டேன்.
இனிமே செய்ய மாட்டேன்.''
'நாளைக்கும் இதே மாதிரி ராத்திரி தூக்கம் குறைவா இருந்தா வேலை நேரத்துல தூக்கம் வராதா? நான் கவலைப்பட வேண்டியது என் ஓட்டலைப் பற்றித்தான். நீ செய்யற வேலைக்கு நான் சம்பளம் தர்றேன்.உன்னோட கஷ்டம் எல்லாம் பார்த்தா என் பிழைப்பு என்ன ஆகறது.''
சொல்லிவிட்டு சில நிமிடங்கள் அமைதியானார்.
'சரி அப்புறம் ஏதோ ஏ.சி. ரூம் இன்சார்ஜை உன் ரூமுக்கு வரச் சொல்லுன்னு தூக்கத்துல சொல்லிட்டு இருந்தியே. என்ன கனவா?'' என்று முதலாளி கேட்டார்.
"கனவுல நான் ஒரு ஓட்டல் முதலாளி சார்.''
'பார்டா. எதேச்சையா கனவா, இல்ல, உன் மனசுலயும் அந்த ஆசை இருக்கா?''
'ஒரு ஓட்டல் ஆரம்பிச்சு நடத்தணும்னு ரொம்ப ஆசை சார்'' என்று சொல்லும்போதே சரவணன் கண்களில் ஒரு ஓளி தெரிந்தது.
சங்கரலிங்கம் பெல்லை அடித்தவுடன் ஒருவன் வர, 'சூப்பர்வைசரை வரச் சொல்லு'' என்று சொன்னார். சில நிமிடங்களில் அங்கு வந்து சேர்ந்தார் சுந்தரம்.
"சுந்தரம், இவனுக்கு இன்னிக்கு வரைக்கும் கொடுக்க வேண்டிய சம்பளத்தைக் கணக்குப் பண்ணி, உடனே வேலையை விட்டு அனுப்பிடுங்க? என்று முதலாளி சொல்ல, சரவணன் அதிர்ந்தான்.
'தெரியாம தூங்கிட்டேன். என்னை மன்னிச்சுடுங்க.இனிமேல் செய்ய மாட்டேன். ப்ளீஸ் சார். தயவு செஞ்சு'' என்று கைகளைக் கூப்பி கெஞ்சினான்.
"நான் தனிப்பட்ட முறையில உனக்கு இரக்கம் காட்டலாம் சரவணா. இதே மாதிரி ரெண்டு மூணு தடவை ஆகியிருக்காமே. நீ தூங்கினதை நானே பார்த்துட்டேன்னு எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சு. உன்னை நான் மன்னிச்சுட்டேன்னு வைச்சுக்க, எல்லாருமே பயமே இல்லாம தப்பு பண்ண சான்ஸ் இருக்கு. அப்புறம் நான் ஓட்டலை இழுத்து மூடிட்டுப் போக வேண்டியதுதான். ஒரு மாசம் முடிய இன்னும் நாலு நாள் இருக்கு இல்லையா? ஒரு மாச சம்பளம் இவன் கையில கொடுத்து உடனே இவனை வெளியே.. ..'' என்று ஆணையிடும் தோரணையில் சொன்னார் சங்கரலிங்கம்.
அமைதியானான் சரவணன். முதலாளி முடிவெடுத்து விட்டார் என்று!
"சார். இந்த ஒருமுறை மன்னிச்சு'' என்று ஆரம்பித்த சுந்தரத்தின் வாயை உடனே அடக்கினார் சங்கரலிங்கம்.
'நோ சுந்தரம், என் பிழைப்புக்கே ஆபத்துன்னு சொல்லிட்டேனே. சொன்னதைச் செய்யுங்க'' என்று கட்டளை இட்டார்.
'ஓகே சார், ஆனா ஒரே விஷயம் மட்டும் எனக்காக செய்ய முடியுமா?' என்று சொன்ன சுந்தரத்தை என்ன என்பது போல் பார்த்தார் சங்கரலிங்கம்.
'சரவணன் செஞ்சது தப்புதான் சார். ஆனால் நல்லா வேலை செஞ்சிருக்கான். திடீர்னு வேலையைவிட்டு அனுப்பறீங்க. வேற இடத்துல வேலை கிடைக்க டயம் ஆகலாம். பெரிய மனசு பண்ணி ஒரு மாச சம்பளம் அதிகமா கொடுத்தா நல்லா இருக்கும். வீட்டுக்குப் பணத் தேவை இருக்குன்னு ராத்திரி கண் விழிச்சு வேலை செய்யப் போய் இந்த மாதிரி ஆயிடுச்சு'' என்று கைகளைக் கூப்பி முதலாளியைக் கேட்டுக் கொண்டார் சுந்தரம்.
'தப்புப் பண்ணினதுக்குப் பரிசு கொடுக்கச் சொல்றீங்களா?'' என்று கேட்டார் முதலாளி.
'ஏழைக் குடும்பம். குடும்பம் மேல பாசம் வைச்சுருக்கான் பாவம்.''
'சரி சுந்தரம். இந்த எக்ஸ்ட்ரா மாச பணத்தை என்னோட பர்சனல் அக்கெளண்ட்ஸிலயிருந்து கொடுத்துடுங்க. சரவணா, சம்பளத்தை வாங்கிட்டு உடனே இடத்தைக் காலி பண்ணு. ஓ.கே.'' சொல்லி விட்டு கைப்பேசியை எடுத்து தன் பணியைத் தொடங்கலானார்.
'வா சரவணா'' என்று இவன் கையைப் பிடித்து அழைத்துச் செல்லலானார் சுந்தரம். கேஷியர் அறைக்கு. சோகமான முகத்துடனும் மனதுடனும் அந்த அறையை விட்டு வெளியேறலானான் சரவணன்.
'அப்புறம் சரவணன், ஒரு விஷயம் சொல்லணும்'' என்று முதலாளி குரல் வர, திரும்பினான். அவர் மனது மாறியிருக்குமா என நப்பாசை.
'சரவணா, கனவு காணுங்கன்னு அப்துல் கலாம் சொன்னார்தான். நீ கண்ட கனவுக்கும் உனக்கும் ஏணி வைச்சாக் கூட எட்டாத கனவு காணறதா? நான் படிச்சவன். இருந்த சொத்தைப் போட்டு. . படிச்சதனால லோன் வாங்கி, விளையாடறியா? நீயாவது ஓட்டல் முதலாளி ஆகிறதாவது? கனவு காணறத்துக்கு ஒரு தகுதி வேணும். அடுத்த வேலை கிடைக்கும்போதாவது ஒழுங்கா உழை என்ன'' என்று சொல்லிவிட்டு இவனைத் திரும்பிக் கூட பார்க்காமல் கைப்பேசியில் ஒருவரைத் தொடர்பு கொண்டு தன் ஓட்டல் நிர்வாக வேலையை சங்கரலிங்கம் பார்க்க ஆரம்பித்தார்.
திரும்ப ஏதாவது சொல்ல வேண்டும் என மனதில் சரவணனுக்கு எண்ண வெள்ளம் பொங்கி வந்தும் அடக்கிக் கொண்டான்.
மனதில் கோபமும் வேதனையும் துக்கமும் பொங்கி வர, அந்த மைதானத்தில் வந்து அமர்ந்தான். சம்பளத்தை வாங்கிக் கொண்டு ஒட்டலைவிட்டு வெளியேறும்போது எல்லாரும் அவனை பிடித்து தள்ளி விடுவது போல் இருந்தது. இவனுக்காக ஒரு மாத சம்பளத்தை அதிகமாக வாங்கிக் கொடுத்த சூப்பர்வைசர் சுந்தரம் இவன் மன வெப்பத்தை லேசாக தணிக்க உதவி செய்திருந்தார். அவருக்கு நன்றியை இவன் மனதில் எழுதி விட்டான்.
ஆனால் சங்கரலிங்கத்தின் வார்த்தைகள், சரவணனின் மனதைத் துளைத்தது.
போர்ட்டர் வேலை செய்த இவன் அப்பா குடித்துக் குடித்து தன் குடலை அழித்துக் கொண்டு, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் இறந்துவிட்டார்தான். இவன் அம்மா சில வீடுகளில் பத்துப் பாத்திரம் தேய்க்கும் வேலை செய்கிறவள்தான். வருமானம் சொற்பம்தான். தம்பி, தங்கையைப் படிக்க வைக்க வேண்டும் என்ற பெரிய பொறுப்பு இவனுக்கு!
அப்பா இறந்ததும் இவன் குடும்பப் பொறுப்பை ஏற்று படிப்பை நிறுத்தியவன்தான்.
சங்கரலிங்கத்தை நாலு வார்த்தைகள் நறுக்கென்று கேட்டுவிட்டு வந்திருக்க வேண்டும் என இவன் உள்ளம் துடித்தது. அந்த வெயில் வேளையில், தலையை நிமிர்த்தி இவன் பார்க்க, சூரியன் படு உச்சத்தில் பிரகாசித்துக் கொண்டிருந்தான். இவனால் ஒரு விநாடிக்கு மேல் மேலே பார்க்க முடியவில்லை. ஒருவித வெறியுடன் எழுந்து வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
அன்றும் இன்றும் அதே புல்வெளியில் அமர்ந்து கொண்டிருந்தவன் கையில் இருந்தது, இவன் திறக்கும் ஓட்டலுக்கான திறப்பு விழா அழைப்பிதழ்.
"உமையாள் உணவகம்' . அதோடு சேர்த்து அவன் அம்மாவின் புகைப்படமும் சேர்ந்து இவன் கண்களில் தாரை தாரையாக கண்ணீரை வரவழைத்தன.
'என்னை விட்டுட்டுப் போயிட்டியேம்மா?'' என்று ஓவென கதறி அழுதான்.
மனம் அந்த நாள்களுக்குச் சென்றது. இதே மைதானத்திலிருந்து உணர்ச்சிக் கவலைகளுடன் வீட்டை அடைந்து அப்படியே உட்கார்ந்திருக்க, அவன் அருகில் வந்தாள் அம்மா. 'என்னடா கண்ணா ஆச்சு?'' அவன் தலையை ஆதரவாகத் தடவிக் கொடுத்தபடியே கேட்டாள்.
முழு விவரத்தையும் சொன்னான்.
'விட்டுத் தள்ளு சரவணா. வேலை போச்சா. பரவாயில்லை. வேற தேடிக்கலாம். யாரோ ஏதோ சொன்னார்ங்கறத்துக்காக நம்ம மனசைப் போட்டு இப்படி அலட்டிக்கறது சரியில்ல. அவர் கிடக்கறாரு. சாப்பிட்டுட்டியா?'' என்று மகனுக்கு சாப்பாடு எடுத்து வர எழுந்தாள்.
'வேண்டாம், டீ கொடு. பசி இருக்கு.சாப்பிட மனசில்லை'' என்று சரவணன் சொல்ல, அவனுக்கு டீ கொடுத்து விட்டு அவன் அருகில் உட்கார்ந்தாள்.
'கவலைப்படாதே கண்ணா. கடவுள் நமக்கு வேற வழி பண்ணுவாரு. அந்த ஆள் சொன்னதை மறந்துட்டு நடக்க வேண்டியதைப் பாரு'' என்று சொன்னாள்.
'அதைதாம்மா யோசிச்சுட்டு இருக்கேன். ஒரு ஓட்டல் ஆரம்பிக்கணும்கறது என்னோட கனவு.''
'சரவணா அதெல்லாம் நம்மால முடியற விஷயமா?''
'அம்மா நீயும் என்னை அவமானப்படுத்தறியா?'' என்று கேட்டவனை அணைத்துக் கொண்டாள் உமையாள்.
'நான் உன் அம்மாடா. அக்கறையில சொல்றேன். அதுக்கெல்லாம் பணம் வேணாமா. நாம என்னைப் பிடி உன்னைப் பிடின்னு வாழ்ந்துட்டு இருக்கோம்'' என்று சொன்னாள்.
'இல்லம்மா. நான் எப்படியாவது பண்ணியே தீருவேன். நாம ஏழைங்கறதுனால கனவு காணறத்துக்குக் கூட இன்னொருத்தர் கட்டுப்பாடு விதிக்கறது. நாம என்ன மட்டமா. ஒரு வழி பார்த்துட்டுத்தாம்மா தீருவேன்'' என்று சொன்ன மகனின் கண்களில் இருந்த உறுதியைப் பார்த்தாள் உமையாள்.
'நீ அத்தனை உறுதியா இருந்தா பண்ணு கண்ணா.நான் என்னால முடிஞ்ச அளவுக்கு உனக்குத் துணை இருப்பேன்.என்ன பண்ணப் போறே?''
'கொஞ்சம் கொஞ்சமாத்தம்மா செய்யணும். ஓட்டல்ங்கறது கடைசியில. முதல்ல ஒரு வடை கடை மாதிரி ஆரம்பிக்கலாம்னு தோணுது. சாயங்கால நேரத்துல முதல்ல ஐம்பது வடை பண்ணி வித்தாக் கூட போதும்.''
'சுந்தரம் சார், எனக்காக சங்கரலிங்கத்துகிட்டே கெஞ்சி கூத்தாடி ஒரு மாச சம்பளம் அதிகமா வாங்கிக் கொடுத்திருக்காரு இல்லையா? அதை இந்த பிஸினஸ்ல போடலாம்னு இருக்கேன். கஷ்டப்பட ரெடியா இருக்கேன். என்னை வாழ்த்தும்மா'' என்று கண் கலங்கியபடியே அம்மாவைக் கேட்க, மகனின் தலையில் கைவைத்த உமையாளின் கண்கள் குளமாயிருந்தன.
'நீ நினைச்சதை கண்டிப்பா செஞ்சே தீருவே கண்ணா'' என்று சொன்னாள்.
மறுநாளே ஆரம்பித்த சிறிய அளவிலான வடை வியாபாரம் ஒரு மாதம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்க, அடுத்த கட்டத்துக்குச் சென்றால்தான் முன்னேற முடியும் என முடிவு செய்து அம்மாவிடம் தன் திட்டத்தை எடுத்துச் சொன்னான். அவன் படித்த, அவன் தம்பி, தங்கை படித்துக் கொண்டிருந்த பள்ளிக்குச் சென்றனர்சரஸ்வதி வித்யாலயா'.
உமையாள், மகனை அழைத்துக் கொண்டு தலைமை ஆசிரியர் குணசேகரன் இருந்த அறையை அடைந்தாள். சிறிது நேர காத்திருப்பு நேரத்துக்குப் பிறகு, உள்ளே செல்ல அனுமதிக்கப்பட, உள்ளே சென்றனர்.
"நீ. இங்கே படிச்சே இல்ல'' என்று தலைமை ஆசிரியர் இவன் பெயரை நினைவுப்படுத்த முயற்சி செய்து கொண்டிருந்தார்.
' சார்.. என் பெயர் சரவணன். என்அப்பா இறந்து போயிட்டார். தம்பி, தங்கை இங்கே படிக்கறாங்க? வருமானத்துக்காகப் படிப்பை நிறுத்திட்டேன்'' என்று சொன்னான்.
'சரிப்பா இப்ப என்ன பண்ணறே. என்ன விஷயமா என்னைப் பார்க்க வந்திருக்கே?'' என்று கேட்டார்.
'இவங்க என் அம்மா'' என்று அவன் சொல்ல, 'என்ன விஷயம்?'' கேட்டார்.
உமையாள், தலைமை ஆசிரியர் குணசேகரனின் அருகில் சென்று அவர் முன்னால் ஒரு நொடி நின்றாள். பட்டென்று அவர் காலில் விழுந்து விட்டாள். இதை சரவணனும் எதிர்பார்க்கவில்லை.
'என்னம்மா இது. ஏன் என் கால்ல விழுந்தேம்மா.எழுந்திரும்மா'' என்று சொல்லியபடியே உமையாளைத் தூக்கி நிறுத்தினார்.
'நான் உன் மகனுக்குத்தாம்மா வாத்தியார். உனக்கு இல்லை. ஏன் கால்ல விழுந்தே?''
'ஐயா, சரவணனுக்கு பெரிய உதவி பண்ணனும் நீங்க'' என்று கண்களில் கண்ணீர் மல்க, கை கூப்பி வேண்டிக் கொண்டு நின்றாள். முழு விவரங்களையும் சுருக்கமாக எடுத்துச் சொன்னான் சரவணன்.
'சரவணா, நம்ம ஸ்கூல்ல கொஞ்ச நாளா கேன்டீனே இல்லாம இருக்கு. ஏற்பாடு பண்ணனும்னு நினைச்சுட்டு இருந்தேன். இப்ப நீயே வந்து கேட்கறே. உன் அம்மா என் கால்ல விழுந்து உதவி கேட்டுட்டாங்க. அதை என்னால உதாசீனப்படுத்த முடியாது. உன்னால என்ன முடிஞ்சதோ செய். இடம் உனக்கு இலவசம். ஏற்கெனவே கேன்டீன் இருந்த இடத்தை நீ உபயோகப்படுத்திக்கலாம். மற்றபடி என்ன செய்யலாம்னு இருக்கே?'' கேட்டார்.
தானும் தலைமை ஆசிரியர் காலைத் தொட்டு வணங்கினான்.
'ரொம்ப தாங்க்ஸ் சார். முதல்ல ஸ்நாக்ஸ் மட்டும். போகப் போக நிறைய அயிட்டம் போடலாம் சார். பணம் வேணுமே'' என்று சொன்னவனை அருகில் அழைத்தார் குணசேகரன்.
"நீ படிச்ச பள்ளியிலேயே கேன்டீன் நடத்தற லட்சியத்தோட வாழ்க்கையை ஆரம்பிக்கறியே. உன்னோட உணர்வை பாராட்டறேன். உனக்கு முடிஞ்ச உதவியும் செய்யறேன். எங்க ஸ்கூல் பசங்களுக்கு உணவு வழங்கப் போறே! ஆனா அயிட்டம் எல்லாம் சுத்தமா இருக்கணும்'' என்று சொன்னார்.
'சார். உங்க உதவியை நான் ஒரு நாளும் மறக்க மாட்டேன். என்னால முடிஞ்ச அளவுக்கு சிறப்பா செய்வேன்'' என்று கைகளைக் கூப்பி அவரை வணங்கிவிட்டுக் கிளம்பினான்.
அவன் மனதில் எழுந்திருந்த அதே முன்னேறும் வெறியுடன் பத்தே நாளில் அவன் படித்த பள்ளியில் மிக சிறிய அளவில் கேன்டீன் ஆரம்பித்து, கடினமாக உழைத்து சுத்தமான தின்பண்டம் வழங்கி, மெல்ல மெல்ல ஒவ்வொரு தின்பண்டமாக அதிகரிக்க ஆரம்பித்து இரண்டு ஆண்டுகளில் ஒரு முழு கேன்டீனாக மாற்றி, அதன் பிறகு, மார்க்கெட்டிலும் ஒரு சிறிய அறையை வாடகைக்கு எடுத்து அங்கும் சிறிய அளவில் கேன்டீன் ஆரம்பித்தான்.
அவன் காதுகளிலும், மனதிலும் அவ்வப்பொழுது சங்கரலிங்கத்தின் வார்த்தைகள்ஒரு ஓட்டல் ஆரம்பிக்கும் கனவு காண உனக்குத் தகுதி இல்லை' என்று ஒலித்துக் கொண்டே இருந்தது. அந்த வார்த்தைகள் நினைவுக்கு வரும்போதெல்லாம் தூக்கத்திலிருந்து எழுந்து கூட வேலை செய்யும் வெறி வந்து விடும் அவனுக்கு.
சம்பாத்தித்த பணத்தில் ஒரு பங்கை சேமிக்க ஆரம்பித்திருந்தான். வங்கிக் கடன் வாங்க, படித்திருக்க வேண்டும் என்ற ஒரு நிபந்தனை விதிக்கப்பட்டால், இரவில் கண் விழித்துப் படித்து டிகிரி முடித்தான்.
இன்று,வங்கிக் கடன் பெருமளவு, இவன் சேமித்திருந்த பணம் சிறிதளவு என்று இணைத்து ஒரு இடத்தையும் இவன் பெயரில் வாங்கி, சற்றே பெரிய ஓட்டலை வடிவமைத்துஉமையாள் உணவகம்' உருவாகிவிட்டது. இன்னும் இரண்டு நாள்களில் துவக்க எல்லா ஏற்பாடுகளும் செய்து முடித்துவிட்டான்.
குணசேகரன் ஐயாவின் வீட்டை அடைந்து அவரைச் சந்தித்தான். அவர் கையில் அழைப்பிதழைக் கொடுத்து அவர் காலில் விழுந்த இவன் கண்கள் குளமாயிருந்தன. அவர் பணியிலிருந்து ஓய்வு பெற்றிருந்தார்.
கேன்டீன் ஆரம்பிப்பதற்கு குணசேகரனிடம் அனுமதியைப் பெற்றுத் தந்த, உமையாள் இந்த உலகத்திலேயே இல்லை. திடீரென்று உடம்பு சரியில்லாமல் போக, மருத்துவமனையில் அனுமதித்த மூன்று நாள்களில் இவனை விட்டுச் சென்று விட்டாள்.
அவனைத் தூக்கி நிறுத்திய குணசேகரன் ஐயாவின் முகம் உணச்சி வசப்பட்ட நிலையில் இருந்தது. அழைப்பிதழை முழுவதும் படித்த அவர் மனம் நிறைந்ததை அவர் கண்கள் சொல்ல, வார்த்தைகளும் வெளிப்படுத்தின.
'சரவணா, எங்க பள்ளி மாணவன் ஒருத்தன், வறுமை காரணமா படிப்பை நிறுத்த வேண்டிய சூழ்நிலை வர, அப்பவும் போராடி வாழ்க்கையில் ஜெயிச்சே ஆகணும்னு இன்னிக்கு ஒரு ஓட்டல் ஆரம்பிக்கற அளவுக்கு உயர்ந்திருக்கான்னு நினைக்கும்போது நான் என் ஜன்மம் எடுத்த பயனை அடைஞ்சா மாதிரி இருக்குப்பா? என் மனசை ரொம்ப நிறைச்சுட்டே சரவணா. நீ மேலும் மேலும் உயரணும்'' என்று அவன் தலையில் கை வைத்து ஆசீர்வதித்தார்.
'ஒரு விஷயத்தில் நீங்க என்னை மன்னிக்கணும் சார். நான் ஆரம்பிக்க இருக்கற ஓட்டலுக்கு உங்க பெயரைத்தான் வைக்கணும். நீங்கதான் என்னைத் தூக்கிவிட்டவர். ஆனா அம்மா பெயரை வைக்காம இருக்க முடியலை சார். என்னை மன்னிச்சுடுங்க'' என்று சொன்னான்.
'நோ சரவணா. மறந்துட்டியா. உங்க அம்மா என் கால்ல விழுந்ததும் என்னால ஒண்ணுமே செய்ய முடியலை. ஸ்கூல்ல கேன்டீன் ஆரம்பிக்க உனக்கு பர்மிஷன் தர்றதைத் தவிர வேற வழி இல்லாம செஞ்சதே உன் அம்மாதான். உன் அம்மாடோ துணை இல்லாம நீ இதையெல்லாம் சாதிச்சிருக்க முடியாது. நான் என்னப்பா சின்ன பர்மிஷன் கொடுத்தேன். அவ்வளவுதான்'' என்று சொன்னார்.
'என்ன சார் இது, சின்ன பர்மிஷன்கறீங்க.அதுதான் என் வாழ்வோட தொடக்கமே. என் கனவை நனவாக்க ஆரம்பிச்சேன்.உங்களை என் கடைசி மூச்சு இருக்கறவரைக்கும் மறக்கவே மாட்டேன் சார்.என் வாழ்க்கையில் ஒளி ஏற்றி வைச்சவர் நீங்க?'' என்று சொன்னவனை அப்படியே அணைத்துக் கொண்டவர் கண்கள் கலங்கியிருந்தன.
'நாளன்னைக்குக் காலையில நானே வந்து உங்களைக் கார்ல அழைச்சுண்டு போறேன் சார். உங்க கையால உமையாள் உணவகத்தைத் திறந்து வைக்கணும். நான் இப்ப வரேன்'' என்று சொல்லிவிட்டு அவன் கிளம்ப, அவனை மீண்டும் வாழ்த்தி அனுப்பி இருந்தார் குணசேகரன்.
அந்த மைதானத்தில் புல் தரையில் அமர்ந்தபடியே அவன் ஆரம்பிக்க இருக்கும் உமையாள் உணவகத்தின் அழைப்பிதழையே பார்த்துக் கொண்டிருந்தவன், எழுந்து அந்த மைதானத்தை விட்டு வெளியே வந்து காரை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.
அப்படி கிளம்பிய கார் நின்றது நாராயண பவனின் முன்பு. காரை நிறுத்திவிட்டு அதன் முதலாளி சங்கரலிங்கம் இருக்கும் அறையை நோக்கிச் சென்றான். இவனைக் கண்ட அவர் கண்கள் இவனை ஏற்கெனவே பார்த்த உணர்வுடனே யோசிக்க ஆரம்பிக்க, இவன் தான் கொண்டு சென்றிருந்த அழைப்பிதழை அவர் முன் நீட்டினான். வாங்கிக் கொண்டு படித்து முடித்தார்.
'ம்ம்.. நீ ஓட்டல் ஆரம்பிக்கறே. எனக்கு இன்விடேஷன் கொடுத்திருக்கே. சந்தோஷம். ஆனா நீ... ?''
'சார்.. சம்பளத்தை வாங்கிட்டு உடனே இந்த இடத்தைக் காலி பண்ணுன்னு நீங்க வேலையைவிட்டு அனுப்பிட்ட சரவணன்தான். உங்க ஓட்டல்ல சாப்பிட்ட ப்ளேட் க்ளின் பண்ணற வேலையாளா இருந்தேன். சில ஆண்டுகளுக்கு முன்னால. ஞாபகம் இருக்கா சார்?''
"இப்ப நினைவுக்கு வருது. அப்படிப்பட்ட நீ இவ்வளவு வளர்ந்திருக்கியா. நல்லது. முடிஞ்சா பங்க்ஷனுக்கு வரேன்.''
'அப்படி சொல்லாதீங்க சார். நீங்க கண்டிப்பா வரணும். நான் இந்த அளவுக்காவது உயர்ந்திருக்கேன்னா, அதுக்கு காரணம் என் அம்மா, அப்புறம் நான் படிச்ச ஸ்கூலோட ஹெட் மாஸ்டர் குணசேகரன் சார். அப்புறம் நீங்க. முதல்ல என் மனசை நோகடிச்ச உங்க வார்த்தைகள், அப்புறம் என்னத் தூண்டி விட்டு, எனக்குள்ள ஒரு வெறி ஏற்படுத்தி, என்னை இந்த அளவுக்குக் கொண்டு வந்திருக்கு. நீங்க விழாவுக்கு கண்டிப்பா வரணும். மனசார ரிக்வஸ்ட் பண்ணறேன். கண்டிப்பா வாங்க சார்'' என்று சொல்லிவிட்டு அந்த அறையை விட்டு வெளியே வந்தவன், மறக்காமல் சூப்பர்வைசர் சுந்தரத்தைப் பார்த்து அவரிடமும் ஒரு அழைப்பிதழைக் கொடுத்து விட்டு வெளியேறினான்.
அப்படி வெளியேறியபோது அவன் கையில் மீதி வைத்திருந்த அழைப்பிதழைப் பார்த்தான். அதில், அம்மா உமையாள் படத்திலிருந்தபடியே இவனை ஆசீர்வதிக்க, கண்கள் குளமாக, மனது நிறைய, ஆனால் கம்பீரமாக நாராயண பவனைவிட்டு வெளியேறினான் சரவணன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com