ஸ்டூடியோ ரவுண்ட் அப்!: கோலிவுட்டின் பர பர அப்டேட்ஸ்

'ஜெய்பீம்' இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 'தலைவர் 170' பட வேலைகள் மும்முரமாகிவிட்டன.
ஸ்டூடியோ ரவுண்ட் அப்!: கோலிவுட்டின் பர பர அப்டேட்ஸ்

விக்ரமா? நானியா?

'ஜெய்பீம்' இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 'தலைவர் 170' பட வேலைகள் மும்முரமாகிவிட்டன.

ரஜினிக்கு இணையான கதாபாத்திரத்தில் அமிதாப்பச்சன் நடிப்பது உறுதியாகியிருக்கிறது. 1991ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான 'ஹம்' படத்துக்குப் பிறகு இருவரும் இணைகின்றனர்.

இந்தப் படத்தில் சூர்யா நடிக்கிறார் என்ற பேச்சு உலவியது. ஆனால், அந்த முயற்சிக்கே யாரும் செல்லவில்லை என்கிறார்கள்.

வில்லனாக 'சீயான்' விக்ரம் எனத் தகவல்கள் பரவின. ரஜினி, அமிதாப் என ஜாம்பவான்கள் இருக்கும்போது, அதில் தனக்கான ஸ்கோப் எப்படி இருக்கும்? என நினைத்தே விக்ரம் மறுத்துவிட்டார் என்றார்கள். மற்றபடி அவர் அதிக சம்பளம் கேட்டார் என்ற தகவலில் உண்மை இல்லை.

இப்போது நானி நடிப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. அவருக்கும் மகிழ்ச்சிதான். தெலுங்கில் மட்டுமல்ல, 'தசரா' படத்துக்குப் பின்னர் 'பான் இண்டியா' நடிகராகவும் வலம் வருகிறார். அவருக்கென தனி பிசினஸூம் இருக்கிறது. 'தனக்கான ஸ்கோப் எப்படி இருக்குமோ?' எனத் தயங்கியே வந்த வாய்ப்பை மறுத்துவிட்டார் நானி.

'படத்தில் நானியின் கதாபாத்திரம் பேசக் கூடிய பாத்திரம் என்பதும், இதில் அவர் நடிக்க மறுத்துவிட்டதால் இன்னொரு பெரிய ஸ்டாரிடம் பேசி வரு
கின்றனர்' என்கிறார்கள்.

இளையராஜாவின் பயோபிக்

இயக்குநர் பால்கி, இசையமைப்பாளர் இளையராஜாவின் தீவிர ரசிகர். இளையராஜாவும் அடிக்கடி பிரியமுடன் சந்திக்கும் மிகச் சில திரை பிரமுகர்களில் பால்கிக்கு தனித்த இடம் உண்டு. சமீபத்தில் அவர் இயக்கிய ஒரு படத்தைத் தவிர்த்து, பால்கியின் எல்லா ஹிந்திப் படங்களுக்கும் இளையராஜாவே இசை அமைப்பாளராக இருந்திருக்கிறார்.

இதற்கு முன்னரே தன் வாழ்க்கை வரலாற்றை இளையராஜாவே தன் கைப்பட எழுதி வருகிறார். நெருங்கிய நண்பர்களிடம் அதன் சில சுவாரஸ்யமான பகுதிகளைப் படித்து காண்பிப்பதில் அவருக்கு பெரும் ஆர்வம் உண்டு. தனுஷ், பால்கி, அவருடைய சில நெருங்கிய நண்பர்களுக்கு மட்டுமே கிடைத்திருக்கிறது. தன்னுடைய கதாபாத்திரத்தை தனுஷ் மட்டுமே சிறப்பாகச் செய்ய முடியும் என இளையராஜா நம்புகிறார். இவ்வளவு தூரம் அவரை நெருங்கிய ஹீரோக்களில் ரஜினி, கமல், தனுஷ் உள்ளிட்டோரிடம் மட்டுமே அவருக்கு பிரியமும், மனம் விட்டு பேசுவதும் நடக்கும்.

இளையராஜாவின் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பதில் தனுஷ் வாழ்நாள் கனவு என்று சொல்லும்படியான ஆர்வம் கொண்டிருக்கிறார். அவருக்கான பெரும் சம்பளம் பற்றியெல்லாம் அவர் கவலைப்படவேயில்லை. 'கண்டிப்பாக நான் நடித்துக் கொடுக்கிறேன்!' என்று இளையராஜாவிடம் உறுதி அளித்துவிட்டார்.

கதையை இறுதி செய்யும் பணியை மட்டுமே இளையராஜா செய்து கொண்டிருக்கிறார். பால்கி இயக்குவது மட்டும் உறுதியாகிவிட்டது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தியிலும் வெளியாக வாய்ப்பிருக்கிறது. நேரம் கிடைக்கும்போதெல்லாம் இளையராஜாவின் ஸ்டூடியோவுக்கு வந்து விடுகிறார் தனுஷ். திரைக்கதையைப் பற்றி ஆலோசனை நடத்திவிட்டு மாலைதான் வீட்டுக்குத் திரும்புகிறார். மூன்று தயாரிப்பு நிறுவனங்கள் படத்தைத் தயாரிக்க முன் வந்திருக்கின்றன.

சென்னையில் கங்குவா

'அண்ணாத்த' சிவாவின் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 'கங்குவா' 3டி தொழில்நுட்பத்தில் பிரமாண்டமாக பத்து மொழிகளில் தயாராகிவரும் படம். சூர்யாவின் மற்ற படங்களைவிட இரு மடங்கு பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகி வருகிறது.

இதில், சூர்யா பல விதமான தோற்றங்களில் வருகிறார். இதன் மோஷன் போஸ்டர் விடியோவில்கூட அரந்தர், வெண்காட்டர், மண்டாங்கர், முக்காட்டர், பெருமனத்தார் என ஒவ்வொரு லுக்கின் பெயர்களும் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகரித்திருந்தன. கொடைக்கானலில் நடந்த படப்பிடிப்புக்குப் பின்னர், உடல் எடை அதிகரித்த சூர்யாவின் புகைப்படங்கள் வைரலாகின.

சென்னை, கோவா, எண்ணூர், கொடைக்கானல் ஆகிய இடங்களைத் தொடர்ந்து மீண்டும் சென்னையில் இ.வி.பி. ஸ்டூடியோவில் ஷூட்டிங் நடக்கிறது. கொடைக்கானல் ஷெட்யூல் படப்பிடிப்பு போய்க் கொண்டிருந்தபோதே, இ.வி.பி.யில் அரங்கம் அமைக்கும் பணிகளும் நடந்து வந்தன. அந்தப் பணிகள் நிறைவடைந்துவிட்டதால், மீண்டும் படப்பிடிப்பு தொடங்குகிறது. சூர்யா, திஷா பதானி காம்பினேஷனில் பாடல் காட்சி ஒன்றை இங்கே படமாக்க உள்ளதாகச் சொல்கிறார்கள்.

இதனிடையே சூர்யா அடுத்து சுதா கொங்கராவின் படத்தில் நடிக்க உள்ளார் என்ற பேச்சு இருக்கிறது. இந்தக் காரணத்தால் சூர்யா ஏற்கெனவே கமிட்டான
வெற்றிமாறனின் 'வாடிவாசல்' எப்போது தொடங்கும் என்பது குறித்து விசாரித்தால், இதற்கான விடை வெற்றிமாறனிடம்தான் இருக்கிறது என்கிறார்கள். வெற்றிமாறன் இப்போது ‘விடுதலை பாகம் 2' படப்பிடிப்பில் இருக்கிறார். இந்தப் படத்தை முடித்துவிட்டுத்தான் 'வாடிவாசல்' படத்தை ஆரம்பிப்பார் என்கிறார்கள்.

சூர்யாவுக்கு பதில் அருண் விஜய்

2022-ஆம் ஆண்டு மார்ச் 28இல் பாலா இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி ஷெட்டி, மமிதா உள்பட பலர் நடிப்பில் 'வணங்கான்' படம் தொடங்கப்பட்டது.

முதல்கட்ட படப்பிடிப்புக்குப் பின்னர், அடுத்தகட்டப் படப்பிடிப்பு பற்றிய செய்தி வரும் என்று பார்த்தால், டிசம்பர் 4இல் இயக்குநர் பாலா வெளியிட்ட அறிக்கையில், 'வணங்கான்' படத்தில் இருந்து சூர்யா விலகிவிட்டதாகச் சொல்லியிருந்தார்.

அதில், ''சூர்யாவுடன் இணைந்து படத்தை இயக்க விரும்பினேன். ஆனால், கதையில் நிகழ்ந்த சில மாற்றங்களால் சூர்யாவுக்கு உகந்ததாக இருக்குமா? என்கிற ஐயம் தற்போது எனக்கு ஏற்பட்டுள்ளது. என் மீதும் இந்தக் கதையின் மீதும் முழுநம்பிக்கையுடன் இருக்கிறார் சூர்யா. இவ்வளவு அன்பும் மதிப்பும் நம்பிக்கையும் வைத்திருக்கும் என் தம்பிக்கு ஒரு அண்ணனாக என்னால் ஒரு சிறு தர்மசங்கடம் கூட நேர்ந்து விடக் கூடாது என்பது என் கடமையாகவும் இருக்கிறது. எனவே, அந்தப் படத்திலிருந்து சூர்யா விலகிக்கொள்வது என இருவரும் கலந்து பேசி ஒருமனதாக முடிவெடுத்திருக்கிறோம். அதில் அவருக்கு மிகவும் வருத்தம்தான் என்றாலும் அவரது நலன் கருதி எடுத்த முடிவு இது. நந்தாவில் நான் பார்த்த சூர்யா, பிதாமகனில் நீங்கள் பார்த்த சூர்யா போல் வேறு ஒரு தருணத்தில் உறுதியாக இணைவோம். மற்றபடி வணங்கான் படப்பணிகள் தொடரும் நன்றி'' என்று கூறியிருந்தார்.

அவர் சொன்னது போலவே சூர்யாவுக்குப் பதில் வணங்கான் ஆனார் அருண் விஜய். காது கேட்காத வாய் பேச முடியாத வேடம். சூர்யாவுக்குக் கொடுக்கப்பட்டிருந்த செம்பட்டைத்தலை தோற்றம் ஆகியவற்றில் அருண் விஜய்யைப் பொருத்தினார் பாலா. எவ்வித அறிவிப்புமின்றி படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. பெரும்பகுதி படம் நிறைவடைந்திருக்கிறது. கிளைமாக்ஸ் உட்பட சில முக்கியப் பகுதிகள் மட்டும் படமாக்கப்பட வேண்டியிருக்கிறதாம்.

இதுவரை எடுத்த காட்சிகளைப் போட்டுப் பார்த்திருக்கிறார்கள். அருண் விஜய் அவ்வளவு சிறப்பாக நடித்திருக்கிறாராம். செம்பட்டைத்தலைத் தோற்றம் மட்டுமின்றி உடல்மொழியிலும் பெரிய அளவில் மெனக்கெடலுடன் நடித்திருக்கிறார். நடப்பது, ஓடுவது போன்ற காட்சிகளிலும் இதுவரை பார்த்ததிலிருந்து முற்றிலும் மாறுபட்டுத் தெரிகிறாராம் அருண்விஜய். இந்தப்படத்தில் அவருடைய நடிப்புக்கு உரிய அங்கீகாரம் நிச்சயம் என்கிற நம்பிக்கை படக்குழுவினரிடையே இருக்கிறது.

அடுத்தகட்ட படப்பிடிப்புக்காகக் காத்திருக்கும் 'வணங்கான்' அருண் விஜய்யின் நடிப்புப் பயணத்தில் அடுத்தகட்ட பெரும்பாய்ச்சலாக இருக்கும் என்கிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com