பேல்பூரி

வாழ்க்கையை கற்றுக் கொள்வதில் குழந்தையைப் போல் இரு.
பேல்பூரி

கண்டது


(நன்னிலத்தில் ஓர் பிளக்ஸ் கடையின் நுழைவுவாயிலில் )

'சாதி, மதம், தீண்டாமை மற்றும் காலணிகளை வெளியே விடவும்.'

-சி.முருகேசன்,
மாப்பிள்ளைகுப்பம்.

(திண்டிவனத்தில் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருள்கள் கடை ஒன்றின் பெயர்)

'தத்தக்கா பித்தக்கா'

-ம.வசந்தி,
திண்டிவனம்.

(சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகே புட் கோர்ட்டில் உள்ள ஓர் உணவத்தின் பெயர்)

'உயர்திணை'

-சம்பத்குமாரி,
பொன்மலை.

கேட்டது


(அறந்தாங்கி பழக்கடை ஒன்றில்)

'இந்தப் பழம் என்ன விலைங்க..?'
' நம்ம கடையில் "இந்தப் பழம்'-என்னு எதுவும் இல்லைங்க?'

-ப.விஸ்வநாதன்,
கீரமங்கலம்.

(விழுப்புரம் பெரிய மார்க்கெட் வீதியில் இரு மூதாட்டிகள் பேசியது)

'நான் பால்கனியில் செடி வளர்க்கிறது என் மருமகளுக்குப் பிடிக்கலை?'
'அப்புறம் என்ன ஆச்சு..'
'அவ ரெண்டு ஆடுங்களை வாங்கி வளர்க்க ஆரம்பிச்சுட்டாள்!'

-கே.இந்து குமரப்பன்,
விழுப்புரம்.

(சென்னை கேளம்பாக்கம் ஓ.எம்.ஆர். சாலையில் ஓர் சாலையோர கரும்புச் சாறு கடையில்)

'இந்த வியாபாரம் சக்கைப் போடு போடுமில்லையாப்பா?'
'சுமார் தாங்க.  குவித்து வைத்திருப்பது பத்து நாள்களாகச் சேர்ந்த சக்கை.'

-வி.சி.கிருஷ்ணரத்னம்,
ங்கல்பட்டு.


யோசிக்கிறாங்கப்பா!

கோபத்தை வெளிப்படுத்த மௌனத்தைத் தேர்ந்தெடுங்கள். 
அன்பை வெளிப்படுத்த வார்த்தையைத் தேர்ந்தெடுங்கள்.

-தி.பச்சமுத்து,
கிருஷ்ணகிரி.


 மைக்ரோ கதை

ஒரு குண்டான மனிதர் தன் குடும்ப மருத்துவரிடம் சென்று , தன் உடல் உபாதை கஷ்டத்தைச்  சொல்லி அழுதார். 
டாக்டரும் அவருக்கு ஒரு சிறந்த ஆலோசனையை வழங்கினார். 
'முதலில் உங்க எடையைக் குறைக்கணும்.  சாப்பிடும் சாப்பாட்டுத் தட்டு சிறியதாக இருக்கணும். அதில சாப்பிடுங்க?  ஒரு ஆறு மாசம் கழிச்சி வாங்க!'
அதேபோல, அந்த ஆறு மாத காலம் முடிந்தவுடன் குண்டு மனிதர் மருத்துவரிடம் சென்றார்,
'டாக்டர்.  நீங்க சொன்ன மாதிரி சின்ன தட்டிலே இப்ப அவர் சாப்பிடறார். ஆனாலும் உடம்பு குறையவே இல்லையே' என்று குண்டு மனிதருடன் வந்த மனைவி சொன்னார். மருத்துவர் குழம்பிப் போய்,  'எப்படி சாப்பிடுறார்'  என்று கேட்டார்.
'அஞ்சி சின்ன சைஸ் தட்டு வாங்கி அதில்தான் எல்லாம்போட்டு  சாப்பிடறார்'.'
மருத்துவர் என்ன சொல்வதென்று தெரியாமல்,  தன்னுடைய  தலையில் அடித்துக் கொண்டார்.

-மனோகர்,
மைசூரு.

எஸ்.எம்.எஸ்


வாழ்க்கையை கற்றுக் கொள்வதில் குழந்தையைப் போல் இரு.

-கே.பிரபாவதி,
மேலகிருஷ்ணன்புதூர்.

அப்படீங்களா!


சலவை இயந்திரம் என்றாலே மணிக்கணக்கில் ஓடும், லிட்டர் கணக்கில் தண்ணீரைப் பயன்படுத்தும் என்பது வழக்கம். வீட்டு உபயோகப் பொருள்களில் அத்தியாவசிய தேவையாகிவிட்ட சலவை இயந்திரத்தில் பயன்படுத்தப்பட்ட லிட்டர் கணக்கிலான சோப்பு நீர் நிலத்துக்கு மாசை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
1 தேக்கரண்டி கறையை  அகற்ற 100 லிட்டர் தண்ணீரை சலவை இயந்திரங்கள் பயன்
படுத்துவதாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. 
இதற்கு மாற்றாக தண்ணீரைப் பயன்படுத்தாமல் துணிகளைத் துவைக்கும் சலவை இயந்திரத்தை பஞ்சாப் மாநிலம் சண்டீகரைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.
"80 வாஷ்' எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த நிறுவனத்தின் சலவை இயந்திரத்தில் வெறும் அரை மூடி நீரை வைத்து 80 நொடிகளில் 5 துணிகளைத் துவைத்து எடுத்துவிடலாம். இதற்கு டிடர்ஜென்ட் பவுடரும் தேவையில்லை. 
50 துணிகளை 6 கப் தண்ணீரை வைத்து துவைத்துவிடலாம் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
துணிகளில் படிந்திருக்கும் கறை, விடாபிடி கறை, துற்நாற்றம், கிருமிகளை தண்ணீர் இல்லாமல் அகற்றுவது சவாலான காரியமாக இருந்ததாகவும், இறுதியில் பல்வேறு கட்ட ஆய்வுக்கு பிறகு இதில் வெற்றிப் பெற்றதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
சோதனை முறையில் சண்டீகர், பஞ்ச்குலா, மோஹாலி ஆகிய பகுதிகளில் இந்த 80 வாஷ் தண்ணீரில்லா சலவை இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
சலவை இயந்திரங்களை உருவாக்கும் பெரு நிறுவனங்கள் இந்த தண்ணீரில்லா சலவை இயந்திர தொழில்நுட்பத்தை செயல்வடிவமாக்க கோடிக்கணக்கில் செலவு செய்து வருகின்றன. இந்த நிலையில், இந்திய தயாரிப்பான தண்ணீரில்லா சலவை இயந்திரம் அனைவரின் பயன்பாட்டிற்கு கிடைத்துவிட்டால், துணிகளைத் துவைப்பதற்கே பெரும்பாலான தண்ணீர் சேமிக்கப்படும். சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும்.
-அ.சர்ப்ராஸ்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com