ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: முதுமையிலும் இளமையுடன் இருக்க..!

எனக்கு வயது 90. மனப்படபடப்பு இருக்கிறது.  மூச்சு திணறுகிறது.  ரத்த அழுத்தம் இருக்கிறது.
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: முதுமையிலும் இளமையுடன் இருக்க..!
Updated on
2 min read

எனக்கு வயது 90. மனப்படபடப்பு இருக்கிறது.  மூச்சு திணறுகிறது.  ரத்த அழுத்தம் இருக்கிறது.  கால் பாதமிரண்டும்  வீக்கமடைகிறது.  பகல்- இரவு இரண்டும் அதிகம் சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கிறது.  இரவில் தூக்கம் வருவதில்லை. இவை குணமாக மருந்து இருக்கிறதா?

-வி.சேது, சாலைக்கிராமம்,
சிவகங்கை மாவட்டம்.

மனம்- மூச்சுக்குழாய்-ரத்தக் குழாய்- சிறுநீர்க் குழாய் ஆகியவற்றில் வறட்சி, குளிர்ச்சி, தளர்ச்சி  ஆகிய வாத தோஷத்தின் சீர்கேட்டால் தங்களது மனமும் உடலும்  தளர்ந்துள்ளதையே இவை காட்டுகின்றன.

உள்ளும் புறமும் நெய்ப்பைப் பெற வேண்டிய நிர்பந்தம் உங்களுக்கு இந்த வயோதிகத்தில் தேவை ஏற்பட்டுள்ளதையே இவை காட்டுகின்றன. 

உடலும் மனமும் தனித்து இயங்குபவையல்ல என்பதால் மனதை வலுவூட்டும் மருந்துகளால், நீங்கள் உடலை பலப்படுத்திக் கொள்ளலாம் என்பதையும் அறியலாம்.

கல்யாணகம்- மஹா கல்யாணகம்- ஸாரஸ்வதம்- பிராம்மீ போன்ற பெயரில் விற்பனை செய்யப்படுகின்றன.  மூலிகை மருந்துகளில் ஒன்றிரண்டையும் பயன்படுத்தி, மன- உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளலாம்.

செரிப்பதில் கடினமான இந்த மருந்துகளை, மருத்துவரை அணுகி எதை எவ்விதம் சாப்பிட வேண்டும் என்பதை தெரிந்துகொள்ளவும்.

உட்புறக் குழாய்களை வலுவூட்டி அதன் உட்புறச் சவ்வுகளில் மேம்படுத்தப்படும் ரப்பர் போன்ற தன்மையினால், வயோதிகத்தில் பல உபாதைகளையும் நாம் மாற்றி, வலுப்பெறலாம் எனும் ஆயுர்வேதத்தின் பரிந்துரையை தைலம்- நெய்- மாமிசக் கொழுப்பு மற்றும் மஜ்ஜை மூலமாகப் பெற வேண்டும். அவற்றில் உடங்கியுள்ள வழுவழுப்பைப் பெற, உணவைப் பாகப்படுத்தும் இரைப்பை- குடல் சார்ந்த "பாசகம்' எனும் பித்தம், செயல்திறன் குன்றாதிருத்தல் அவசியமாகும்.

மஹாமாஷதைலம்- பயாஅஸ்வகந்தா  தைலம்- பிரபஞ்சவிமர்தனம் குழம்பு போன்ற ஆயுர்வேத தைலங்களை, வெதுவெதுப்பாக உடலெங்கும் தடவி, முக்கால்- ஒரு மணி நேரம் வரை ஊறிய பிறகு, வெதுவெதுப்பான நீரில் குளித்து புளி- உப்பு- காரம் சிறிது தூக்கலாக சமைக்கப்பட்ட கூட்டு, ரசம் போன்றவற்றை, சூடான சாதத்துடன் சாப்பிடும் வயோதிக அன்பர்களுக்கு உடல்- மனம் சார்ந்த குறைபாடுகள் ஏற்பட வழியேயில்லை.

இவற்றால் ஏற்படும் பசியின் தீவிரத்தை சமாதானப்படுத்த, முன்குறிப்பிட்ட நான்கு வகை நெய்ப்புப் பொருட்களை, சிறிய அளவில் தினமும் உள்ளுக்குப் பயன்படுத்த, உங்கள் உபாதைகளின் தாக்கம் வெகுவாகக் குறைந்து, நல்ல உறக்கமும் ஏற்படும்.

மேற்குறிப்பிட்ட சிகிச்சை முறைகளால், இரத்த அழுத்தம் கூடிவிடுமோ என்ற பயத்தினால்தான், வயோதிகத்தில் பலரும் தைலம்- நெய் பயன்பாட்டினைத் தவிர்க்கிறார்கள்.  இந்தத் தவிர்ப்பினால் ஏற்படும் உட்புறக் குழாய்களின் வறட்சியினால்தான் ரத்த அழுத்தம் கூடுகிறது என்பதை அவர்கள் அறிவதில்லை. 

உடல் உட்புற உறுப்புகளின் உரசல்களைத் தவிர்க்கவும், அவற்றின் விரிவு சுருக்கம் ஆகிய செயல்பாடுகளின் திறனைக் கூட்டவும், வெளிப்புற தைலப் பிரயோகத்தாலும் உட்புற நெய்- மாமிசக் கொழுப்பு- மஜ்ஜை ஆகியவற்றால் மட்டுமே சாதிக்க முடியும் என்பதால், நீங்கள் அவற்றின் மீது மோகம் கொள்ள வேண்டிய தருணமிது.

மானஸமித்ரம் குளிகை மனம் சார்ந்த படபடப்பைக் குறைக்க உதவும். மூச்சுத்திணறலுக்கு சுவாஸானந்தம் குளிகை, இரத்த அழுத்த உபாதைக்கு சர்பகந்தா மாத்திரை, பாத வீக்கத்துக்கு கோஷீராதி சூரணம், சிறுநீர்க் கழிவு குறைய சுகுமாரம் கஷாயம்/ நெய், தூக்கத்துக்கு ஜாதிக்காய் என மருந்துகள் இருந்தாலும், அடிப்படையில் நீங்கள் இழந்துள்ள மேற்படி காரணத்தை நீக்குவதே நிரந்தர சுகத்துக்கான வழியாகும்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com