ஜோதிடரான எழுத்தாளர்

வேதா கோபாலன்   பத்திரிகையாளர், எழுத்தாளர். கடந்த சில ஆண்டுகளாக அவர் ஜோதிடராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார்.
ஜோதிடரான எழுத்தாளர்

வேதா கோபாலன் பத்திரிகையாளர்,எழுத்தாளர். கடந்த சில ஆண்டுகளாக அவர் ஜோதிடராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார்.
பத்திரிகைகளில் ராசி பலன்கள் எழுதுதல், ஜாதகப் பொருத்தம் பார்த்தல்.. என பிஸியாக இருக்கிறார்.
'எழுத்தாளரான நீங்கள் திடீரென்று ஜோதிடர் ஆனது எப்படி?' என்று கேட்டபோது, அவர்கூறியதாவது:
'' என்னுடைய 19-ஆம் வயதில், 'கல்கி' இதழுக்காக அன்றைய பிரபல ஜோதிடர் கடலங்குடி சரஸ்வதியுடன் உரையாட ஓர் வாய்ப்பு கிடைத்தது.
பத்திரிகையாளரும் எழுத்தாளருமான எல்.வி. பார்த்தசாரதி என்னிடம், 'ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லை என்கிற மாதிரி காரசாரமாகக் கேள்விகள் கேட்டால் பேட்டி சுவாரஸ்யமாக அமையும்'' என்றார். அப்போதெல்லாம், 'எனக்கு நிஜமாகவே ஜோதிடத்தில் நம்பிக்கை கிடையாது!'' என்றபோது அவர் அதிர்ந்தார். அச்சகம் நடத்திக் கொண்டிருந்தாலும் என் அப்பாவே ஓர் ஜோதிடர்தான்! 'பிரஹத் சம்ஹிதா' போன்ற ஜோதிட நூல்களைப் படித்து ஆழ்ந்த ஞானம்கொண்டவர் அவர்.
என் அக்கா, அண்ணா, தம்பி, தங்கை எல்லாரையும் விட்டுவிட்டு, என்னிடம், 'இதோ பாரு வேதா. நம் வீட்டில் ஜோதிடத்தைத் தொழிலாக எடுத்துப் பிற்காலத்தில் நீ பிரபலமாவாய்! உன் ஜாதகம் சொல்லறது!'' என்பார். இதைக் கேட்டு நான் நம்பாமல் சிரிப்பேன்.
' எனக்கு ஜோதிடம் கற்றுக் கொடுக்க முயற்சித்தபோதெல்லாம் பரீட்சைக்குப் படிக்கணும்'' என்று நழுவி விடுவேன். நான் இரண்டாம் ஆண்டு பட்டப்
படிப்பு படித்தபோது, அப்பா இறந்தார்.
அதன் பின்னர் இரு வாரங்கள் கழித்து, அவருடைய பீரோவைப் பார்த்தபோது அதிர்ந்தோம். தனது ஜாதகத்தைத் தானே அலசி, இறக்கும் காலகட்டத்தையும் குறிப்பிட்டு எழுதியிருந்தார்.
'இது சாஸ்திரம் மட்டுமல்ல; அறிவியல், வானியல், கணிதம்'' என்று அப்பா அடிக்கடி சொன்னது நினைவுக்கு வந்தது.
பஞ்சாங்கத்தில் எப்படி கிரகணம் பிடிக்கும் நேரத்தையும் விடும் நேரத்தையும் முன்னோர்கள் துல்லியமாக எழுதி வைத்தார்கள் என்பதை விளக்கியபோது, அதை கவனிக்காமல், ஆனால் கவனிப்பது போல ஏமாற்றி செய்த குற்ற உணர்வு என்னைக் குத்தியது. அதுவரை எனக்கு ஜோதிடம் முற்றிலும் தெரியாது. ஆனால் கற்றுக் கொள்ளாமல் போய்விட்டோமே' என்று மனம் வருந்தியது.
அப்பா எழுதி வைத்த நோட்டுப் புத்தகங்களைப் புரட்டியபோது, எளிமையாகத்தான் இருந்தது. ஆனால் எனக்குத்தான் ஒன்றுமே புரியவில்லை. ஆனால், என் அக்கா கீதா கண்ணனுக்கு எளிதில் புரிந்தது. ஓர் ஆராய்ச்சி மாணவி போல இரவு பகலாகப் படித்துப் புரிந்துகொண்டாள். ஜோதிட வகுப்பிலும் சேர்ந்து பொறுமையோடு கற்றுக் கொண்டாள்.
அடுத்து தான் கற்றுக் கொண்டதை எனக்கு ரொம்ப எளிமையாகக் கற்றுக் கொடுத்தபோது, எனக்கு எல்லாம் எளிதாக இருந்தது. அக்கா ஜோதிடத்தைத் தொழிலாக எடுத்துச் செய்யவில்லை என்றாலும் ஏகப்பட்ட ஜாதகங்களை ஆராய்ந்து எனக்கும் சொல்வாள்.
எனக்கு ஜோதிடம் தெரியும் என்று எனது கணவர் பாமா கோபாலன், 'குமுதம்' அலுவலகத்தில் சொன்னதும், அவர்கள் மாலைமதியில் ராசிபலன் எழுதச் சொன்னார்கள். பிறகு, 2000- ஆம் ஆண்டு சுஜாதா ஆசிரியராக இருந்த 'மின்னம்பலம்' இணைய இதழில் ஜோதிடப் பகுதி எழுதி வந்த மூத்த ஜோதிடர் ஏ.எம்.ராஜகோபாலன் அமெரிக்கா சென்றபோது ராசிபலன் எழுதும் வாய்ப்பு கிடைத்தது.
'கிரகங்களின் பெயர்களைக் குறிப்பிடாதீங்க? பலருக்கு அதில் சுவாரஸ்யம் இருக்காது ஜஸ்ட் ஜோதிட பலன்கள் கொடுங்க போதும்'' என்று சுஜாதா கூறியபோது, முதலில் அதிர்ச்சி அடைந்தாலும், இன்று வரை அவரது ஆலோசனையைப் பின்பற்றியே ராசி
பலன் எழுதுகிறேன்.
ஜோதிடத்தில் நம்பிக்கையே இல்லாதிருந்தவள், இப்போது முழு நேரத் தொழிலாக எடுத்து ராசி பலன் எழுதிக் கொண்டிருக்கிறேன். என் அப்பா சொன்னதை இன்றுவரை வியந்துகொண்டிருக்கிறேன்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com