

ராஜஸ்தானின் பார்மர் நகரின் அருகேயுள்ள ஒரு குக்கிராமத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்து எட்டாம் வகுப்பே படித்த ரூமா தேவி, இன்று
பல்லாயிரக்கணக்கான பெண்களைத் தொழில் முனைவோராக மாற்றியுள்ளார்.
ஹார்வர்ட் பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழிகாட்டும் சொற்பொழிவும் நடத்தி இந்திய நாட்டுக்கே பெருமை சேர்த்துள்ளார்.
அவரிடம் பேசுவோம்:
''எனது சிறு வயதிலேயே தாய் இறந்தார். அப்பா மறுமணம் செய்து கொள்வதற்காக, தாய் மாமன் - அத்தையின் பராமரிப்பில் வளர அனுப்பினார். ஆனால் அவர்கள் எனது கல்வியைத் தொடர விடவில்லை. நான் படித்தது எட்டாம் வகுப்பு வரை மட்டுமே.
வீட்டுத் தேவைகளுக்காக, தினமும் 10 கி.மீ. பயணம் செய்து தண்ணீர் எடுக்க வேண்டியிருந்தது. அதிர்ஷ்டவசமாக தையல், எம்பிராய்டரி கலையை பாட்டி எனக்கு சிறு வயதிலிருந்தே கற்றுத் தர, அவற்றில் வல்லமை பெற்றேன். கிராம வழக்கப்படி எனக்கு 2005-ஆம் ஆண்டில் பதினேழாம் வயதிலேயே திருமணம் செய்து வைத்தனர்.
புகுந்த வீட்டில் வாழ்வாதாரத்துக்காக, நிலத்தில் விளைவிக்கும் பயிர்வகைகளை நம்பியிருந்தனர், பருவமழை பொய்த்தது. போதுமான பணம் சம்பாதிக்க முடியாமல் திணறினார்கள். பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க எப்படி உதவ முடியும் என்று நான் யோசிக்க ஆரம்பித்தேன்.
திருமணமான அடுத்த ஆண்டே குழந்தை பிறந்தது. குழந்தையும் இரண்டு நாள்கள் மட்டும்தான் உயிருடன் இருந்தது. குழந்தையை இழந்த நான் உடல், மன ரீதியாகப் பாதிக்கப்பட்டேன். குணம் அடைந்த பிறகு, அக்கம்பக்கத்து பெண்களை ஒன்று சேர்த்தேன். பழைய தையல் இயந்திரங்களை விலைக்கு வாங்கி தையல், எம்பிராய்டரி கலையை பெண்களுக்குச் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தேன். விரைவில் அந்தப் பெண்கள் கலைகளில் அதிசயங்களைச் செய்தனர்.
எனக்காகவும் என்னைப் போன்ற கைவினைஞர்களுக்காகவும் ஒரு முகவரியை உருவாக்க வேண்டும் என்ற வைராக்கியம் ஏற்பட்டது.
கிராம பெண்கள் சுயமாக சம்பாதிக்க உதவ, மகளிர் சுய உதவிக் குழுவை 2006-இல் தொடங்கினேன். இந்த முயற்சியை பக்கத்து கிராமங்களுக்கும் விரிவாக்கம் செய்தேன். ராஜஸ்தானின் தார் பகுதியில் பணிபுரியும் 75 கிராமங்களைச் சேர்ந்த 22 ஆயிரம் பெண் கைவினைஞர்களுக்கு நான் பயிற்சி அளித்து, வேலைவாய்ப்புகளைப் பெற உதவினேன். நாங்கள் உருவாக்கும் ஆடைகள், விரிப்புகள், பின்னல் வேலைகள் நாடு முழுவதும் பிரபலமானது.
நாங்கள் தயாரித்த கைவினைப் பொருள்களை மாநில, தேசிய அளவில் நடைபெறும் ஃபேஷன் ஷோக்களில் இடம் பெறச் செய்தேன். அந்தக் கைவினைப் பொருள்களுக்கு நானே மாடலாகவும் மாறினேன். இந்தச் சாதனையை அறிந்த மகாத்மா ஜோதிராவ் ஃபுலே பல்கலைக்கழகம், ஹார்வர்டு பல்கலைக்கழக நிர்வாகங்கள் என்னை சொற்பொழிவு ஆற்ற அழைத்தன.
ஜெர்மனி, இங்கிலாந்து, அமெரிக்கா, சிங்கப்பூர், தாய்லாந்து, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் அழைப்பின்பேரில் சென்று எனது வெற்றிக் கதையைப் பகிர்ந்துள்ளேன். அமிதாப் பச்சனின் 'கோன் பனேகா குரோர்பதி' நிகழ்ச்சியில் நான் பங்கேற்றபோது, தேசிய அளவில் பேசப்பட்டேன்.
இந்தியாவின் பெண்களுக்கான மிக உயர்ந்த குடிமகளுக்கான விருதான 'நாரி சக்தி புரஸ்கார்' விருதை 2018-இல் மத்திய அரசு வழங்கியது.
'தெரிந்த கைவினை கலையைப் பயன்படுத்தி சாதிக்க வேண்டும்' என்று நடத்திய போராட்டத்தின் ஆரம்பக் காலத்தில், 'நான் ஒரு நாள் நிச்சயம் வெற்றிபெறுவேன்'என்று நான் உள்பட யாரும் நம்பவில்லை. ஆனால் எனது அர்ப்பணிப்பு வீண் போகவில்லை''என்றார் ரூமா தேவி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.