பிரணாப்தா என்கிற மந்திரச் சொல்! - 169

ஜெய்பால் ரெட்டியை சந்தித்துவிட்டு ஒடிஸா பவனிலிருந்து கிளம்பிய நான், தமிழ்நாடு இல்லத்தை நோக்கி விரைந்தேன்.
பிரணாப்தா என்கிற மந்திரச் சொல்! - 169


ஜெய்பால் ரெட்டியை சந்தித்துவிட்டு ஒடிஸா பவனிலிருந்து கிளம்பிய நான், தமிழ்நாடு இல்லத்தை நோக்கி விரைந்தேன். முதல்வர் கருணாநிதி தமிழ்நாடு இல்லம் வந்திருக்கக் கூடும் என்கிற எதிர்பார்ப்புதான் காரணம்.

தமிழ்நாடு இல்லம் வெறிச்சோடிக் கிடந்தது. அதிலிருந்து முதல்வர் வந்திருக்கவில்லை என்பதைப் புரிந்துகொண்டேன். வரவேற் பறையில் சம்பத்தும், மாமூலனும் பேசிக் கொண்டிருந்தனர். சம்பத், முரசொலி மாறனின் வலது கரம் போலச் செயல்பட்டவர். மாமூலன், தமிழ்நாடு இல்லத்தில் பணிபுரிந்த தமிழக அரசின் செய்தித் துறை அதிகாரி. 

என்னைப் பார்த்ததும் மாமூலன் கேட்ட முதல் கேள்வி - 'என்ன, ஜெயின் கமிஷன் விசாரணைக்குப் போகவில்லையா?'

சட்டென எனக்குப் புரியவில்லை. அவரே தொடர்ந்தார் - 'இன்றைக்கு ஜெயின் கமிஷனில் நிதியமைச்சர் ப.சிதம்பரம் சாட்சி சொல்கிறாரே, அங்கே போகாமல் இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?'

அப்போதுதான் பிரதமருடனான சந்திப்பில் ப. சிதம்பரம் கலந்துகொள்ளாதது ஏன் என்பதற்கு எனக்கு விடை கிடைத்தது. அதற்குப் பிறகு நான் ஏன் அங்கே நிற்கிறேன்? விஞ்ஞான் பவனுக்கு விரைந்தேன் என்றாலும், ப. சிதம்பரத்தின் சாட்சியம் அநேகமாக முடிந்திருந்தது. 

இந்த இடத்தில் இன்னொன்றை நான் குறிப்பிட்டாக வேண்டும். ஜெயின் கமிஷன் விசாரணையை ஒருநாள் விடாமல் முழுவதுமாகக் கூர்ந்து கவனித்துப் பதிவு செய்த தமிழ்ப் பத்திரிகையாளர் நண்பர் ஆர். நூருல்லா ஒருவர்தான். ஆரம்பம் முதல் கடைசி வரை, ஒரு நிமிடம்கூட இடைவிடாமல் தில்லியில் தவமாய்க் கிடந்து சாட்சியங்கள், குறுக்கு விசாரணைகள் அனைத்தையும் அவர் பதிவு செய்து கொண்டார். அதையெல்லாம் புத்தக வடிவமாக்கினாரா என்பது எனக்குத் தெரியாது.

விஞ்ஞான் பவனில் ப. சிதம்பரம் ஜெயின் கமிஷனில் சாட்சி சொல்ல வந்திருந்தபோது, அங்கே பார்வையாளர்கள் வரிசையில் வாழப்பாடி ராமமூர்த்தியும், மணிசங்கர் அய்யரும் அமர்ந்திருந்தனர். வாழப்பாடி ராமமூர்த்தி, மதிமுக பொதுச்செயலாளர் வை. கோபால்சாமி ஆகியோர் சார்பில் சில கேள்விகள் அவர்களது வழக்குரைஞர்களால் குறுக்கு விசாரணையின்போது ப.சிதம்பரத்திடம் கேட்கப்பட்டன.

ராஜீவ் படுகொலை தொடர்பாக ஜெயின் கமிஷன் விசாரணையின்போது, ப. சிதம்பரம் தெரிவித்த சில தகவல்கள், வரலாற்று ஆய்வாளர்களுக்கான தரவுகள் என்பதால் அவற்றை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். அவரது சாட்சியத்தில் சொல்லப்பட்ட முக்கியமான கருத்துகள் இவை: 

முதல்வராக எம்.ஜி.ஆர். இருந்த 1982-ஆம் ஆண்டு முதலே, இலங்கையைச் சேர்ந்த விடுதலைப் புலிகள் உள்ளிட்ட பல ஈழத் தமிழப் போராளிக் குழுக்கள் தமிழகத்தில் இருந்து தங்களது நடவடிக்கைகளை மேற்கொண்டன.

தமிழகத்தில் 1989-90 திமுக ஆட்சியில் போராளிக் குழுக்களின் நடவடிக்கைகள் அதிகரித்தது குறித்தும், அதனால் சட்டம் - ஒழுங்கு சிக்கல்கள் ஏற்பட்டது குறித்தும் எனக்குத் தெரியும்.

அப்போது எனக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், திமுக அரசைப் பதவியிலிருந்து அகற்றியதை நான் நாடாளுமன்றத்தில் ஆதரித்துப் பேசியது உண்மை. காங்கிரஸ் கட்சியின் சார்பில் நான் பேசினேன். தமிழகத்தில் திமுக அரசைப் பதவியிலிருந்து அகற்றி, குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்பது ராஜீவ் காந்தியின் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின் நிலைப்பாடு. அதைப் பிரதிபலிக்கும் விதத்தில்தான் நான் அப்போது பேசினேன்.

ராஜீவின் தமிழக வருகைக்கும், பிரசாரத்துக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிதான் பொறுப்பேற்றிருந்தது. எனக்கு அது குறித்துத் தெரியாது. அதிமுக - காங்கிரஸ் கூட்டணி சார்பில் சென்னையில் நடந்த கூட்டத்துக்குப் பிறகு ராஜீவ் காந்தி தமிழகம் வருவதில்லை என்று ஜெயலலிதாவுடன் உடன்பாடு இருந்ததா என்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது.

தேர்தல் பிரசாரத்துக்காக 1991 மே 21-ஆம் தேதி தமிழகத்துக்கு ராஜீவ் காந்தி வருவதாக எனக்குத் தகவல் வந்தது. அப்போது நான் சிவகங்கை தொகுதியில் பிரசாரத்தில் இருந்தேன். என்னுடைய தொகுதியில் 21-ஆம் தேதி ராஜீவ் வருகையின்போது ஒரு பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்யுமாறு, எனது தொகுதியில் இருந்த தேர்தல் அலுவலகத்துக்குத் தகவல் வந்தது. பிறகு என்ன காரணத்தாலோ அது 22-ஆம் தேதியாக மாற்றப்பட்டது.

உடனடியாக நான், எனது தொகுதியில் ராஜீவ் காந்தி பிரசாரத்துக்கு வரும்போது அவருக்குப் பாதுகாப்பு அளிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர், காவல் துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். இது குறித்துக் கட்சி நிர்வாகிகள் யாருடனும் நான் பேசவோ, கலந்தாலோசிக்கவோ இல்லை.

ராஜீவ் காந்தியைக் கொல்ல விடுதலைப் புலிகள் திட்டமிடுவதாக 1987 நவம்பர் மாதமே மத்திய அரசுக்குத் தகவல் கிடைத்தது. அப்போது நான் உள்துறை இணையமைச்சராக இருந்தேன். இந்திரா படுகொலையும் அதைத் தொடர்ந்து நடந்த வன்முறைகளும் ராஜீவ் காந்திக்கும் அவரது குடும்பத்துக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருந்தது உண்மை. ராஜீவ் காந்தி மீது ராஜ்காட்டில் நடந்த தாக்குதலைத் தொடர்ந்து, பிரதமருக்கு சிறப்புப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டிய அவசியத்தை உணர்ந்தோம். அதன் அடிப்படையில்தான் அது தொடர்பான சட்டத்தை இயற்றினோம்.

உள்துறை இணையமைச்சராக இருந்த நான், முன்னாள் பிரதமர்களுக்கும் எஸ்.பி.ஜி. சிறப்புப் பாதுகாப்பு அளிப்பதற்கான நடவடிக்கை எதையும் அப்போது எடுக்கவில்லை என்பது என்னவோ உண்மை. தேர்தலில் காங்கிரஸ் தோல்வியைத் தழுவும், ராஜீவ் காந்தி பதவியிழப்பார் என்று நாங்கள் எதிர்பார்க்காததுதான் அதற்குக் காரணம். முன்னாள் பிரதமர்களுக்கு எஸ்.பி.ஜி. பாதுகாப்பு அளிப்பது குறித்து வி.பி. சிங் அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், எடுக்கவில்லை.

பிரதமர் பதவியிலிருந்து விலகியதற்குப் பின்னால், வெளியூர்களுக்குச் செல்லும்போது தனக்குக் குறைந்த அளவிலான பாதுகாப்பு அளிக்கப்படுவதாக ராஜீவ் காந்தி என்னிடம் வருத்தப்பட்டு கூறியிருந்தார். பிரதமராக இருந்தபோது ராஜீவ் காந்தியின் உயிருக்கு எந்த அளவுக்கு ஆபத்து இருந்ததோ, அதே அளவிலான ஆபத்து, அவர் பிரதமராக இல்லாதபோதும் இருந்தது. அதனால் அவருக்கு எஸ்.பி.ஜி. போன்ற சிறப்புப் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்று நான் கோரினேன்.

இந்தப் பிரச்னையை பிரதமர் வி.பி. சிங், உள்துறை அமைச்சர் முஃதி முகமது சயீது ஆகியோரின் கவனத்துக்குக் கொண்டு செல்ல நான் விரும்பினேன். 

ஆனால் அவர்களிடம் எஸ்.பி.ஜி. பாதுகாப்பை தனக்குக்கேட்டுப் பெறுவதை ராஜீவ் காந்தி விரும்பவில்லை. அதனால் என்னை அவர் ஊக்குவிக்கவில்லை.

பத்மநாபா கொலைக்கும், ராஜீவ் காந்தி படுகொலைக்கும் சில பொதுவான அம்சங்கள் இருக்கின்றன. உள்துறை இணையமைச்சராக இருந்தாலும் பத்மநாபா கொலை வழக்கு மாநிலப் பொறுப்பில் இருந்ததால், என் கவனத்தைப் பெறவில்லை. சிபிஐ பொறுப்பில் இருந்த கோடியக்கரை சண்முகம் தற்கொலை குறித்துத் தெரியும். அது குறித்து விசாரணை நடந்ததும் தெரியும்.

பிரபாகரனுக்கு எதிராக ஏற்கெனவே கைது வாரண்ட் இருந்தது என்பது குறித்து எனக்குத் தெரியாது. ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பிறகு, விடுதலைப் புலிகள் அமைப்பைத் தடை செய்ய வேண்டும் என்று முதலில் கோரியது காங்கிரஸ்தான். நரசிம்ம ராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசுதான் விடுதலைப் புலிகளைத் தடை செய்தது. அப்போது நான் வர்த்தகத் துறை இணையமைச்சராக இருந்தேன்.

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கு விசாரணையை ஒருங்கிணைக்கும் கூடுதல் பொறுப்பு எனக்குப் பிரதமர் நரசிம்ம ராவால் 1995 மார்ச் மாதம் வழங்கப்பட்டது. வழக்கை விரைந்து முடிப்பதற்காகப் பல்வேறு அமைப்புகளிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதுதான் என் பணியாக இருந்தது. அப்போதும்கூட நீதிமன்றம் அல்லது விசாரணை கமிஷன் முன்பு இருந்த ஆவணங்கள் எதையும் நான் கையாளவில்லை.

ராஜீவ் படுகொலை தொடர்பாக ஜெயின் கமிஷன் விசாரணையில் தனது முதல் நாள் சாட்சியத்தில் ப. சிதம்பரம் தெரிவித்தவை மேலே குறிப்பிட்ட தகவல்கள். இதற்குப் பிறகு மேலும் இரண்டு தடவைகள் அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டார். அப்போதும் சில முக்கியமான தகவல்களை அவர் தெரிவித்திருக்கிறார். அவரை வாழப்பாடி ராமமூர்த்தி, காங்கிரஸ் கட்சியின் சார்பில் மித்தல் உள்ளிட்டவர்கள் குறுக்கு விசாரணை நடத்தி இருக்கிறார்கள். அதையெல்லாம் பதிவு செய்தால் விரிவாகப் போய்விடும் என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். 

அன்றைய ஜெயின் கமிஷன் விசாரணை முடிந்ததும், விஞ்ஞான் பவனிலிருந்து வெளியேறும்போது, வாழப்பாடி ராமமூர்த்தியை சந்தித்தேன். ரங்கராஜன் குமாரமங்கலத்தின் வீட்டுக்குப் போகலாம் என்று அவர் என்னை அழைத்தபோது, அவருடன் இணைந்து கொண்டேன். வாழப்பாடி மீண்டும் காங்கிரஸில் இணைந்ததுபோல இணையாமல், ரங்கராஜன் குமாரமங்கலம் அப்போது திவாரி காங்கிரஸில் தொடர்ந்த நேரம்.

ரங்கராஜனின் வீட்டிற்குப் போனால் அங்கே ம.நடராசன் ஏற்கெனவே வாழப்பாடிக்காகக் காத்துக் கொண்டிருந்தார். அதற்குப் பிறகு நடந்த உரையாடல்கள், தனிப்பட்ட முறையில் நடந்தவை என்பதால் தவிர்க்க விரும்புகிறேன். ரங்கா, வாழப்பாடி, நடராசன் மூவருக்குமே ப.சிதம்பரத்தின் மீது தனிப்பட்ட வருத்தங்கள் இருந்தன என்பதை மட்டும் பதிவு செய்வதுடன் நிறுத்திக் கொள்கிறேன்.

'மூப்பனாரை சமாதானப்படுத்தி விட்டார்கள். அதனால் இப்போதைக்கு தேவே கெளடா அமைச்சரவைக்குப் பிரச்னை இல்லை' - ம. நடராசன்.

'அதெப்படி சொல்ல முடியும்? சீதாராம் கேசரி அத்தனை எளிதில் விட்டுவிடுபவர் அல்ல. தேவே கெளடா, ஃபோபர்ஸ் குறித்த விசாரணையை முன்னெடுத்திருப்பது, சோனியா காந்தியை பயமுறுத்தத்தான் என்பது கூடவா காங்கிரஸூக்குத் தெரியாது? இந்த ஆட்சியின் நாள்கள் எண்ணப்படுகின்றன' என்றார் வாழப்பாடி.

அதற்குப் பிறகு எங்கள் உரையாடல் ஜெயலலிதா குறித்தும், அவரது வழக்கு குறித்தும் தொடர்ந்தது.

ரங்கராஜன் வீட்டில் நடராசனும் வாழப்பாடியாரும் இரவு உணவு உண்ண இருந்தனர். நான் விடைபெற்றுக் கொண்டு, முதல்வர் கருணாநிதியை சந்தித்துவிட வேண்டும் என்று தமிழ்நாடு இல்லத்துக்கு விரைந்தேன்.

முதல்வர் தமிழ்நாடு இல்லம் திரும்பி இருந்தார். என்னைப் போலவே அவரை சந்திக்கும் எண்ணத்துடன் பல நிருபர்கள் அங்கே காத்திருந்தனர். முரசொலி மாறன் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களும் குறிப்பிட்ட சில திமுக எம்.பி-க்களும் முதல்வருடன் ஆலோசனையில் இருப்பதாகச் சொன்னார்கள்.

இரவு சுமார் ஒன்பது மணிக்கு வெளியே வந்த அமைச்சர் முரசொலி மாறன் தெரிவித்த செய்தி என்ன தெரியுமா?

'நாளைக்கு ஜெயின் கமிஷன் விசாரணையில் காட்சி சொன்ன பிறகுதான் முதல்வர் உங்களை எல்லாம் சந்திப்பார். அதுவரை தயவுசெய்து தொந்தரவு செய்யாதீர்கள். சென்னை திரும்புவதற்கு முன்னர் கட்டாயமாக உங்களை சந்திப்பார். இப்போது கலைந்து செல்லுங்கள்!'

அடுத்த நாள் விஞ்ஞான் பவனில் ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பாக முதல்வர் கருணாநிதி சாட்சி சொல்வதைக் கேட்கும் ஆர்வத்துடன் நாங்கள் பிரிந்து சென்றோம்.

ப.சிதம்பரத்தின் வாக்குமூலத்தைப் போலவே, முதல்வர் கருணாநிதியின் சாட்சியமும் ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பான விசாரணையில் முக்கியமான பதிவு!

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com