தனக்குத் தானே சிலை

வரலாற்றில் இடம் பிடிக்கத்  தனக்குத் தானே சிலை வைத்துள்ளார் அறுபத்து ஆறு வயதான தொழிலாளி நல்லதம்பி.
தனக்குத் தானே சிலை

வரலாற்றில் இடம் பிடிக்கத்  தனக்குத் தானே சிலை வைத்துள்ளார் அறுபத்து ஆறு வயதான தொழிலாளி நல்லதம்பி. இதன் திறப்பு விழாவுக்கான செலவுக்காகப் பணம் சேகரிக்க,  மூன்று ஆண்டுகளாக பழைய பாட்டில்களைச் சேகரித்து விற்பனை செய்து பணம் திரட்டி வருகிறார்.
சமூகத்துக்காகப் பாடுபட்டு மறைந்த தலைவர்களுக்கு அவர்களுடைய ஆதரவாளர்கள் சிலைகளை வைத்து மரியாதை செலுத்துவார்கள். ஆனால், சேலம் மாவட்டத்துக்கு உள்பட்ட வாழப்பாடி  அருகேயுள்ள  அத்தனுôர்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இவர், மாறுபட்ட முறையில் சிந்தித்து தனக்குத் தானே சிலை அமைத்துள்ளார்.

அவரிடம் பேசியபோது:

குறிச்சி அணைமேடு கிராமம்தான் எனது சொந்த ஊர்.  25 ஆண்டுகளுக்கு முன் குடும்பத்தினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால்  வீட்டை விட்டு வெளியேறி தன்னந்தனியாக அத்தனுôர்பட்டி கிராமத்துக்கு வந்து குடியேறினேன். 
ஆரம்பக் கட்டத்தில் கட்டுமானத் தொழிலாளியாக இருந்தேன்.  கடந்த சில ஆண்டுகளாக தெருவில் கிடக்கும் பழைய கண்ணாடி பாட்டில்கள், நெகிழிப் பாட்டில்களைச் சேகரித்து விற்பனை செய்து வருகிறேன்.
என்னை தனிமைப்படுத்திய குடும்பத்தினர்,  உறவினர்களுக்கு முன் சொந்த உழைப்பில் முன்னேறி வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற லட்சியம் இருக்கிறது. இதற்காக, சிறுகச் சிறுகப் பணம் சேர்த்து 5 வீட்டுமனைகளை வாங்கினேன்.
தனி ஒருவனாகப் போராடி வாழ்ந்த எனது வரலாறு, கால ஓட்டத்தில் மறைந்து விடாமல், எதிர்காலச் சந்ததியர் அறிந்து கொள்ளும் வகையில் புதுமையாக 
ஏதாவது செய்ய வேண்டுமென எண்ணினேன். இதற்காக,  அத்தனுôர்பட்டியில் வாழப்பாடி- பேளூர் பிரதான சாலையோரத்தில் வாங்கிய பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டுமனை ஒன்றில் எனக்கு நானே சிலையை அமைக்க முடிவு 
செய்தேன்.
எனது புகைப்படத்தை, திருச்சி மாவட்டம் துறையூர் அருகே ஒக்கரை கிராமத்தில் பிரபல சிற்பி ஒருவரிடம் கொடுத்தேன். ஒரு லட்சம் ரூபாய் செலவில் ஐந்தரை அடி உயரத்தில், ஒற்றைக் கருங்கல்லில் எனது முழு உருவச்சிலையை வடிவமைத்து தந்தார்.
2020-ஆம் ஆண்டில் எனது வீட்டுமனை நிலத்தில் சிலையை நிறுவி சிறு மண்டபமும் அமைத்தேன்.  இரு கரம் கூப்பி நிற்பதைப்போல நிறுவப்பட்டுள்ள இந்த முழு உருவச்சிலை, கிராமப்புற குல தெய்வ கோயில்களில் காணப்படும் முன்னோர்களின் சிலைகளைப் போல காட்சி அளிக்கும்.
சிலை திறப்பு விழாவை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளேன்.  இதற்காக மூன்று  ஆண்டுகளாக பழைய பாட்டில்களைச் சேகரித்து விற்று,  பணம் திரட்டி வருகிறேன். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில், பணியையும் செய்துவருகிறேன். ரூ.1 லட்சம் நிதி சேர்ந்தவுடன் திறப்பு விழாவை நடத்துவேன்'' என்றார்.
நல்லதம்பிக்கு உதவியாக இருந்துவரும் துக்கியாம்பாளையம் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த மாணிக்கத்திடம் பேசியபோது:
'எந்த வேலை கிடைத்தாலும் தயங்காமல் செய்து, நல்லதம்பி பணம் சம்பாதித்தார். பணத்தை வீண் செலவு செய்யாமல் சேமித்தார்.  சிலை வைத்துள்ள மண்டபத்தை வண்ணம் தீட்டி அழகுபடுத்தி திறப்பு விழா செய்திட திட்டமிட்டு,  மூன்று ஆண்டுகளாக பணம் சேகரித்து வருகிறார்'' என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com