பேல் பூரி

'மணிவிழுந்தான்''சிவகிரி- ஈரோடு சாலையில் உள்ள ஓர் ஊரின் பெயர் - 'விளக்கேத்தி'
பேல் பூரி

கண்டது

(தலைவாசல் அருகே உள்ள ஓர் ஊரின் பெயர்)

'மணிவிழுந்தான்'
'சிவகிரி- ஈரோடு சாலையில் உள்ள ஓர் ஊரின் பெயர் - 'விளக்கேத்தி'

- பி. மோகன்ராஜு,
சென்னை -78

(கும்மிடிப்பூண்டியில் உள்ள ஓர் உணவகத்தின் பெயர்)

'அம்மா பசிக்குது'

-கு.கோப்பெருந்தேவி,
சென்னை-125.

(விருதுநகர் மாவட்ட நூலகத்தில் எழுதியிருந்தது)

'நூலகத்தில் செல்போனுக்கு ஓய்வு கொடுத்து, புத்தகங்களுக்கு வேலை கொடுங்கள்.'

-ஏ.எஸ்.ராஜேந்திரன்,
வெள்ளூர்- 626 005.

கேட்டது


(சிட்லப்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் இருவர் பேசியது..)

'உங்க குடை காணாமல் போனதுன்னு எப்போ தெரிஞ்சது?'
'மழை விட்டதும் குடையை மடக்கப் பார்த்தப்போ கையில் குடையைக் காணோம்?'

-எஸ்.மாரிமுத்து,
சென்னை-64.


(திருச்சியில் உள்ள பூங்கா ஒன்றில்...)

'ஒரு விஷயம் மட்டும் எனக்கு பிடிக்கவே இல்லை?'
'எது?'
'இந்த சீரியலில் அப்படி என்னதான் இருக்குது..?'
'ஒரே முறை நீங்க உட்கார்ந்து பாருங்க? இந்த நடைப்பயிற்சியை மறந்துவிடுவீங்க?'

-அ.சுஹைல் ரஹ்மான்,
திருச்சி.

(நன்மங்கலம் பூங்காவில் இரு நண்பர்களுக்கிடையே நடந்த உரையாடல்)


'தீபாவளிக்கு மாமனார் பிரேஸ்லெட் போட்டாருன்னு சொன்னீயே... எத்தனை சவரன்ல?'
'நீ வேற... கருங்காலி பிரேஸ்லெட் தான் இப்போ டிரென்டிங்னு அதை போட்டு விட்டுட்டாரு?'

- ப.சோமசுந்தரம்,
சென்னை 129.

யோசிக்கிறாங்கப்பா!


எத்தனை பேர் கைப்பட்டாலும்
தீட்டு என்று ஒதுக்கப்படாத ஒரே பொருள் - பணம்.

-ந.சண்முகம்,
திருவண்ணாமலை.

மைக்ரோ கதை


திருநெல்வேலியில் இருந்து நாகர்கோயிலுக்கு செல்லும் அந்தப் பேருந்து புறப்படும் நேரம் பார்த்து, தன்னருகே காலியாக இருந்த இடத்தில், திருநங்கை வந்து அமர மனதுக்குள் சற்றே சங்கடப்பட்டாள் வேதவள்ளி. பேருந்தில் காலி இருக்கை ஏதும் இல்லாததால், சற்று விலகியே அமர்ந்திருந்த வேதவள்ளி, நடத்துநர் தன்னருகே வந்தபோது பணம் எடுக்காமல் வந்துவிட்டதை உணர்ந்து திடுக்கிட்டாள்.
இந்தப் பேருந்தை விட்டு இறங்கி, வீட்டுக்குப் போய் பணத்தை எடுத்துட்டு அடுத்த பேருந்தைப் பிடித்து குறித்த நேரத்தில் இன்டர்வியூ போய் சேர முடியாது என்பதை நினைத்துப் பார்த்த வேதவள்ளிக்கு அழுகையே வரும் போலிருந்தது .
' எங்கம்மா போகணும்?'
' வள்ளியூர் போகணும். இன்டர்வியூக்கு போறேன், அவசரத்துல பணம் கொண்டு வர மறந்துட்டேன் சார் .'
'பணம் இல்லாம ஏம்மா பஸ்ஸில ஏறுறீங்க? செக்கிங் வந்தா யார் பதில் சொல்றது?
இறங்கிக்குங்க?' என்றபடி நடத்துநரும் வேதவள்ளியை இறக்கிவிட பேருந்தை நிறுத்த விசில் அடிக்க முற்பட்டார்.
'வள்ளியூருக்கு டிக்கெட் இருபது ரூபாய் தானே ! அவங்களுக்கும் சேர்த்து நான் பணம் தரேன் சார்' என்றபடி நூறு ரூபாய் நோட்டு ஒன்றை திருநங்கை நடத்துனரிடம் தந்தார். பின்னர், சில்லறையை வாங்கிய திருநங்கையோ வேதவள்ளியிடம், 'இந்தாம்மா இருபது ரூபாயை வச்சுக்கோ, திரும்ப வர டிக்கட்டுக்கு பணம் வேணுமில்லை' என்றாள். மனம் குறுகிப் போனாள் வேதவள்ளி.

-இரா.சாந்தகுமார்,
கூடுவாஞ்சேரி.


எஸ்எம்எஸ்


தனக்குரிய சிலவற்றை விட்டுக் கொடுப்பது தியாகமாக இருக்கலாம்.
எல்லாவற்றையும் விட்டுக் கொடுப்பது ஏமாளித்தனமானது.

-மதிராஜா திலகர்,
சின்னபுங்கனேரி.

அப்படீங்களா!


கூகுளின் சேவைகளைப் பயன்படுத்தாதோர் இல்லை என்ற அளவுக்கு காலத்துக்கு ஏற்ப நவீனமயமாகி வருகிறது.
ஒன்றுக்கு மேற்பட்ட கூகுளின் ஜிமெயில் கணக்குகளை உருவாக்கி தங்களுடைய தேவைக்கு ஏற்ப பலர் பயன்படுத்தி வருகின்றனர். பலர் பிரதான பயன்பாட்டு கணக்கை தவிர பிற கணக்குகளைப் பயன்பாட்டு காலம் முடிந்தவுடன் மறந்து விடுகின்றனர். அப்படி இரு ஆண்டுகள் செயலற்ற கணக்குகளை நீக்க கூகுள் தயாராகிவிட்டது.
செயலற்ற கணக்குகளுக்கு அந்தக் கணக்குடன் இணைக்கப்பட்ட மின்னஞ்சலுக்கும் அதன் மீட்பு முகவரிக்கும் கூகுள் இதற்கான தகவல்களை அனுப்பி வருகிறது.
ஜிமெயில், போட்டோஸ், யூடியூப், பலவற்றில் உங்கள் உள்ளடக்கம் சேமிக்கப்பட்டுள்ளதா என்பதும் சரிபார்க்கப்பட்டது.
செயலற்ற கணக்குகளின் படங்கள், கேலெண்டர் உள்ளீடுகள், மின்னஞ்சல்கள், தொடர்புகள் மற்றும் இயக்கக ஆவணங்கள் போன்ற அனைத்து உள்ளடக்கங்களையும் கூகுள் நீக்கும்.
ஸ்பேம், ஃபிஷிங் மோசடிகள் மற்றும் கணக்கு அபகரிப்பு போன்ற பாதுகாப்பு அச்சுறுத்தல்களில் இருந்து தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூகுள் தெரிவித்துள்ளது.
எனினும், யூ டியூப் விடியோ அப்டேட் ஆகி இருந்தால் அந்தக் கணக்குகள் பாதிக்கப்படாது என கூகுள் தெரிவித்துள்ளது.

-அ.சர்ப்ராஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com