ஈரம் மறந்த நெஞ்சங்கள்

அந்த எக்ஸ்பிரஸ் ரயில் காற்றை கிழித்துகொண்டு 'தட தட' வென்று ஓட,  கம்பார்ட்மென்ட்டுகளில், உணவுப் பொருள்களின் கதம்ப வாசனை பரவத் தொடங்கியது.
ஈரம் மறந்த நெஞ்சங்கள்

அந்த எக்ஸ்பிரஸ் ரயில் காற்றை கிழித்துகொண்டு 'தட தட' வென்று ஓட, கம்பார்ட்மென்ட்டுகளில், உணவுப் பொருள்களின் கதம்ப வாசனை பரவத் தொடங்கியது.
'அம்மா நாமளும் சாப்பிடலாம்மா.. பசிக்கிறது, என்ன கொண்டு வந்திருக்கே''
'கோபி.. அத்தை எல்லாருக்கும் சேர்த்துக் கொண்டு வந்திருக்கா? சரயூ, டிபனை எடுத்துக் கொடு'' என்று பெரிய மன்னி கூற, சரயூ பையிலிருந்து, பொட்டலங்களை எடுத்து அனைவருக்கும் விநியோகித்தாள்.
பொட்டலத்தில், பூ போன்ற இட்லிகள் இருந்தன. சிறு சிறு கன்டெய்னர்களில் மிளகாய் பொடி, எண்ணெய் இருக்க, அனைவரின் இலைகளிலும் வைத்த சரயூ, பெரிய அண்ணா சிவா கையிலிருந்த பொட்டலத்தை வாங்கி, தனக்கு வைத்துக் கொண்டாள். பிறகு, இரண்டாவது அண்ணா இலையில் மிளகாய் பொடி வைக்காமல், அடுத்தவர்களுக்கு வைக்கத் தொடங்கினாள்.
'என்ன சரயூ, எனக்கு மிளகாய் பொடி வைக்கலை?'' கேட்ட அண்ணன் கணேஷிடம், 'உனக்கு தான் மிளகாய் பொடி வைத்து சாப்பிட்டால், தொண்டையை அடைக்கிற மாதிரி இருக்கும்னு சொல்லுவே இல்லண்ணா? அதனால உனக்கு பிடிச்ச புதினா சட்னி கொண்டு வந்திருக்கேன்'' என்று சொல்லியவாறே பரிமாறினாள் சரயூ.
'சிவா அண்ணா, இட்லி பிடிக்காதா உனக்கு, இந்தா உன் ஃபேவரிட் புளியஞ்சாதம்'' என்று சொல்லியவாறே அவனிடம் ஒரு பொட்டலத்தை எடுத்து தந்தாள்.
'சரயூ, அப்படியே அம்மா கைப்பக்குவம் உனக்கு வந்திருக்கு'' என்று கடைசி அண்ணன் சரவணன் யதார்த்தமாக சொல்ல, சரயூவின் முகம் வாடியது.
'நம்ம வீட்டுலயும் நீங்க மூணு லேடீஸ் இருக்கீங்க. ஆனா, ஒன்னுமே கொண்டு வராம, வந்திருக்கீங்க. சரயூ தனியா எல்லாருக்கும் செஞ்சு கொண்டு வந்திருக்கா?'' என்று சிவா சீற, 'அண்ணா, நான்தான் எல்லாருக்கும் சேர்த்து கொண்டு வர்றதா சொன்னேன். நீ அவங்களை எதுவும் சொல்லாதே!'' என்றாள் சரயூ.
' 'இவங்க எல்லாருக்கும் வேண்டிய பிரயாண லக்கேஜை ரெடி பண்ணவே நேரம் போறலை. எங்களை குறை சொல்லலைன்னா, உங்க அண்ணாக்களுக்கு பொழுதே போகாது சரயூ'' என்று பெரிய மன்னி அலுப்புடன் கூறி, கை அலம்ப எழுந்து சென்றாள்.
அவர்கள் தங்கள் தாய் - தந்தைக்கு 'பிண்ட ப்ரதானம்' செய்ய தான் கயாவுக்குச் சென்று கொண்டிருந்தனர்.
பெற்றோருக்கு 'பிண்ட ப்ராதானம்' செய்வர்களை 'புத்' என்ற நரகத்திலிருந்து காப்பவன்தான் 'புத்ரன்' என்று சாஸ்திரம் சொல்கிறது. இதை அடிக்கடி கூறி, அவர்களை இதற்கு ஆயத்தப்படுத்தியது அவர்கள் குடும்ப சாஸ்திரிகள்தான்.
இரு வருடங்களுக்கு முன் மறைந்த பத்மினி அம்மாவை நினைத்தவுடன் கண்கள் தளும்பியது சரயூவுக்கு!
சரயூவின் சொந்த அம்மா இல்லை பத்மினி. பத்மினி வீட்டின் அடுத்த வீட்டில் வசித்த கெளரி - சுந்தரம் தம்பதிகளின் ஒரே மகள் தான் சரயூ. அவள் ஆறாம் வகுப்பு படிக்கும்போது, மறுநாள் தேர்வுக்காக, அவளை பத்மினி வீட்டில் இருந்து படிக்கச் சொல்லி விட்டு, சில மணி நேரத்தில் திரும்பி வந்து விடுவோம் என்று சொல்லிவிட்டு, ஒரு திருமணத்துக்குக் கிளம்பி போனவர்கள், பஸ் விபத்தில் மரணமடைய, நிர்கதியானாள் சரயூ.
உறவினர்கள் யாரும் அவளை ஏற்றுக் கொள்ள தயங்கிய வேளையில், கெளரியின் பக்கத்து வீட்டு உயிர் சிநேகிதியான பத்மினி தான், தன் கணவர் சம்மதத்துடன், அவளை அரவணைத்து, வளர்த்து, ஆளாக்கி திருமணமும் செய்து வைத்தாள்.
பத்மினிக்கு மூன்று ஆண் பிள்ளைகள். அவர்கள் அப்போது, பி.காம், பிளஸ் 2 , ஒன்பதாவது படித்துக் கொண்டிருந்தனர். பத்மினி என்றுமே அவளை தன் சொந்த மகளாகவே பாவித்ததால், சரயூ பத்மினி - கைலாஷ் இருவரையும், 'அம்மா - அப்பா' என்றும் அவர்கள் மகன்களை 'அண்ணா' என்றும் மனமார அழைத்தாள்.
பழைய நினைவுகளில் மூழ்கியிருந்த சரயூவை, கம்பார்ட்மென்ட்டில் கேட்ட 'கலீர்' சத்தம் தட்டி எழுப்பியது. அனைவரும் சீட்டு விளையாடிக்கொண்டும், சமீபத்தில் சென்று வந்திருந்த, உறவினர் கல்யாணத்தில் நடந்த சம்பவங்களைப் பேசி, அவர்கள் மண்டையை உருட்டிக் கொண்டும் இருந்தனர்.
'இவர்களில் யாராவது ஒருவர் இப்போது அம்மாவை நினைத்துப் பார்ப்பார்களா?' என்று யோசனையுடன் சரயூ அவர்களைப் பார்க்க, 'எனக்கு தூக்கம் வருகிறது, நீங்கள் விளையாடுங்கள்'' என்று நடு அண்ணன் சீட்டுக்கட்டை கீழே போட, டிராவல் பேக்கிலிருந்து பெட் ஷீட்டை எடுத்து வைத்து, ஏர்பில்லோவை ஊதி பெரிதாக்கி, அவன் படுக்க வசதி ஏற்படுத்தி கொடுத்தாள் சரயூ.
'சரயூ, அம்மா போலவே ரொம்ப கேரிங் நீ'' என்று சொன்ன கணேஷை, சரயூ ஏறிட்டு பார்க்க, அவன் கண்களில் துணுக்கம்.
கணேஷ் காலேஜில் சேர்ந்த புதிதில், மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு, அது, முற்றியதால் மிக அபாய கட்டத்துக்குச் சென்று விட்டான். அம்மா பத்தியமாகச் சமைத்து, வேளாவேளைக்கு இளநீர், மருந்து கொடுத்து, தூங்காமல் கண் விழித்து, அவன் அருகிலேயே இருந்து, அவன் நன்றானவுடன்தான், அவள் சரியாக உணவருந்தவே தொடங்கினாள். கணேஷுக்கு, அது புனர் ஜென்மம் தான்.
கடைசி மகன் சரவணன், மிகவும் முன்கோபி. பிடிவாதக்காரன். இரவு தாமதமாக வீட்டுக்கு வந்து, எனக்கு இப்பவே முருங்கைக்காய் அரைத்துவிட்ட சாம்பார் செய்து கொடுத்தால் தான் சாப்பிடுவேன் என்று அழிச்சாட்டியம் பண்ணுவான். முகம் சுளிக்காமல் செய்வாள் பத்மினி.
மூத்தவன் சிவா ஃபுட்பால் சாம்பியன். ஒருமுறை, அவன் மேட்ச்சில் விளையாடி, கால் - கைகளில் அடிபட்டு, ஃப்ராக்ச்சராகி, ஆறு மாதம் படுத்த படுக்கையாய் இருந்தான். அவனை குழந்தைப் போல் பார்த்துக் கொண்டு, உடல் துடைத்து, பெட்பான் வைத்து, என்று சகலமும் செய்தது பத்மினிதான்.
கம்பார்ட்மென்டில் அனைவரும் உறங்கத் தொடங்கியிருந்தனர். தூக்கம் வராமல், புரண்டு படுத்த சரயூவின் மனதில், பழைய நினைவுகள் உருண்டோடின. அனைவருக்கும், திருமணம் முடித்து, பேரன், பேத்திகளை பார்த்து, நிறைவான வாழ்க்கை வாழ்ந்த கைலாஷ், ஒரு நாள் திடீர் மாரடைப்பில் காலமானார். அவர் மறைந்து, ஐந்து வருடங்கள் வரை, எல்லாம் வழக்கப்படிதான் நடந்தது. பத்மினி வீட்டில் எல்லா வேலைகளையும் செய்வாள். மருமகள்கள் மூன்று பேரும் குழந்தைகளையும், கணவரையும் தயார்ப்படுத்துவதை மட்டும், செய்வார்கள்.
ஒருநாள் சரயூ அம்மாவை பார்த்து வரலாம் என்று போக, வழக்கத்துக்கு மாறாக, உற்சாகம் குன்றியிருந்தாள் பத்மினி.
'அம்மா, எப்படிம்மா இருக்கே?''
'சரயூ, எனக்கு குளிக்கும்போது, தண்ணியை மக்கில் எடுத்து, தூக்கி விட்டுக் கொள்ள, கஷ்டமா இருக்குடி. ஒரு அளவுக்கு மேல், கையை தூக்கினால் வலிக்கிறது.''
'சிவா அண்ணா கிட்ட சொன்னியாம்மா?''
'இதோ பாரு சரயூ, வர வர அம்மா ரொம்ப மாறிட்டா? ஏதாவது உடம்புக்கு வந்திருக்கிறதா, அவாளே கற்பனை பண்ணிக்கிறா. நீ வேற, அதை ஊதி பெரிசாக்காதே.'' என்று கோபத்துடன் பேசி விட்டு அகன்றாள் பெரிய மன்னி மஞ்சுளா. மற்றொரு நாள், பத்மினி போன் பண்ணியிருந்தாள். 'சரயூ, நீ கொஞ்சம் வீட்டுக்கு வர்றியா?'
அம்மா எப்பவும் இப்படி கூப்பிட மாட்டாளே! அவசர அவசரமாக கிளம்பி சென்றாள் சரயூ.
'சரயூ, இப்ப கொஞ்ச நாளா, எனக்கு, ஜாக்கெட் ஹூக் போட்டுக்க முடியலை. ரொம்ப சிரமப்பட்டு தான் போடறேன். எனக்கு, ரெண்டு, மூணு நைட்டி வாங்கித் தர்றியா?'' என்று பணத்தை நீட்டினாள்
பத்மினி.
'அம்மா, என்னம்மா இது, பணமெல்லாம் குடுக்கற?''
'என்கிட்ட இருக்கு, குடுக்கறேன்'' என்று பிடிவாதமாக அவள் கைகளில் பணத்தை திணித்தாள் பத்மினி.
அன்று அண்ணன்கள் வரும் வரை காத்திருந்த சரயூ, அவர்களிடம் அம்மாவைப் பற்றிக் கூற, மூவரும் ஒரே குரலில், 'அது வயசாறது இல்ல, கொஞ்சம் அப்படி, இப்படிதான் இருக்கும். நீ எதுவும் பயப்படாதே! என்ன, உன் மன்னிகளுக்குதான் கஷ்டம். பாவம் எல்லா வேலைகளையும் அவாளே பண்ண வேண்டியதா இருக்கு?''
மனம் கசந்து போக, வெளியேறினாள் சரயூ. வீட்டில் தனது கணவர் ராமிடம் குமைய, 'நீயும் அவாளோட மகள் தானே? நீ கூட்டிண்டு போ' என்று ராம் சொல்ல, மறுநாளே, டாக்டரின் அப்பாயின்ட்மென்ட் வாங்கி கூட்டி சென்றாள்.
'இவங்களுக்கு வைட்டமின் 'டி' பற்றாக்குறை வந்திருக்கு. அதாவது, சூரிய ஒளிக்கதிர்கள், உடலில் தேவையான அளவுப்படாம போனா, உடம்பு இப்படி ஆகும். வீட்டிலேயே அடைஞ்சு கிடக்காம, வெளியிலே வாக்கிங் கூட்டிண்டு போங்க. எல்லாம் சரி ஆயிடும்'' என்று டாக்டர் அறிவுறுத்தி, மாத்திரைகளும் எழுதி கொடுத்தார்.
அன்று முதல் தினமும் அம்மா வீட்டுக்கு மாலையில் சென்று, அவளை நடைப்பயிற்சிக்கு கூட்டிச் சென்றாள் சரயூ. முன்பு போல் அம்மாவால் வீட்டு வேலை செய்ய முடியாததால், மருமகள்கள் அலட்சியப்படுத்தி பேச, பத்மினிக்கு மனச் சோர்வு ஏற்பட்டது. எழுபது வயது ஆகி விட்டதே!
ரயில் அலகாபாத்தை அடைய, ரூமில் உணவருந்தி, அனைவரும் திரிவேணி சங்கமத்தை, படகு மூலம் அடைந்தனர். அங்கு கடலில் மூழ்கி எழுந்து, சங்கல்பம் செய்தனர். பின் மறுநாள் காசி சென்று, விசுவநாதர் - அன்னபூரணியைத் தரிசித்து, அங்கிருந்து, கயாவுக்குப் புறப்பட்டு சென்றனர்.
சென்னை சாஸ்திரிகளின் ஏற்பாட்டின் படி, அங்கு தயாராக இருந்த, தமிழ் பேசத் தெரிந்த, மணீஷ் ஷர்மா, அவர்களை. 'அக்ஷய வடம்' என்ற இடத்துக்கு அழைத்துச் சென்றார்.

அங்கு ஒரு பெரிய மரம் இருந்தது. அதன் நிழலுக்கு அழைத்துச் சென்று, இங்கு தான் நாம், 'பிண்ட ப்ரதானம்' செய்யப் போகிறோம்' என்று கூறினார்.

'ஹிந்துக்கள் தங்கள் வாழ்க்கையில், ஒருமுறையாவது கயாவுக்கு வந்து, பித்ருக்களுக்கு தங்கள் கடமையை செய்ய வேண்டும். அவ்வாறு சிரத்தையோடு செய்தால், அவர்கள் குடும்பம் சகல சம்பத்துகளும், ஸ்ரேயஸூம் பெறும். பித்ருக்கள் காலமான திதியில் அவர்கள் பசியை போக்கினால், உங்கள் வாழ்க்கை, முன்னோர்களின் ஆசீர்வாதத்தால் சுபிக்ஷமடையும்' சொல்லி முடித்தார் சாஸ்திரி மணீஷ் ஷர்மா.

அன்று பத்மினி இறந்த சஷ்டி திதி. உடனே மஞ்சுளா, 'பண்டிட்ஜி, எங்க மாமியாருக்கு திரட்டுப்பாலும், நெய் தோசையும் ரொம்ப பிடிக்கும். அதை வாங்கி வரச்சொல்லட்டுமா?'' என்று வினவினாள்.

'அட அஞ்ஞானமே!' என்பதுபோல் பார்வையை வீசிய ஷர்மா, 'மாமி, இப்போது அவாளுக்கு தேவை திரட்டுப்பாலும், நெய் தோசையும் இல்லை. வெறும் எள்ளும், தண்ணியும்தான்'' என்றார்.

'நாம் இப்போது 64 ஸ்ரார்த்த பிண்டத்தை இட போகிறோம். இது உங்கள் பித்ருக்களுக்கு (மூதாதையர்களுக்கு) மட்டுமல்ல, உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கும், அறிந்தவர்களுக்கும் சேர்த்துதான். திருப்தியத, திருப்தியத என்று அவர்களுக்கு அளித்து, மனமுருக வேண்டினால், அவர்களின் ஆசி கிடைக்கும். நாம் இப்போது, 'மாத்ரு ஷோடசி' செய்யப் போகிறோம். அதாவது, நாம் வைக்கும் 64 பிண்டங்களில், தாய்க்கு மட்டும் 16 பிண்டங்கள் வைக்கப் போகிறோம். அதை ஒவ்வொரு வாக்கியமாக - ஸ்லோகமாக சொல்லி பிண்டம் இட வேண்டும். நான் ஒவ்வொன்றையும் வடமொழியில் கூற, நீங்கள் அதை திருப்பி சொல்லுங்கள். அத்துடன் உங்களுக்கு பொருள் விளங்க, நான் தமிழிலும் கூறுகிறேன்'' என்று கூற தொடங்கினார்:

'பத்து மாதம் கர்ப்பத்தில் என்னால் விளைந்த கஷ்டங்களுடன், மேடு பள்ளங்களில் அலைந்தாயே, அந்தப் பாவத்தை போக்க பரிகாரமாக, இந்த முதல் பிண்டத்தை ஏற்றுக் கொள்வாயா? நான் வளர, வளர உன் துன்பமும் வளர்ந்தது. அதற்கு பரிகாரமாக இதோ இரண்டாவது பிண்டம். வயிற்றில் நான் எட்டி உதைத்த துன்பத்தை, அல்லும் பகலும் தாங்கிய உனக்கு இதோ மூன்றாவது பிண்டத்தை இடுகிறேன். இந்த நான்காவது பிண்டம், உன் பூர்ண கர்ப்பக் காலத்தில், நீ என்னால் பட்ட வேதனைக்கான பரிசு - எனது பிராயச்சித்தம். மூச்சு விடக் கூட கஷ்டப்பட்டு, அதை கூட தாங்கி, என்னை பொறுத்துக் கொண்டு, கர்ப்பத்தை தாங்கிய உனக்கு என் கையில் நான் தாங்கும் ஐந்தாவது பிண்டம் இது. ஏற்றுக்கொள் தாயே. உனக்கு பிடித்த உணவை விலக்கி, நான் நோயற்று வளர, பத்தியம் இருந்த தியாகத்துக்கு இந்த ஆறாவது பிண்டத்தை தருவதை தவிர வேறு என்ன செய்ய முடியும் தாயே? நான் 'குவா குவா' என்று பேசிய நாள் முதல், உன் பசி அடக்கி வெறும் வயிற்றோடு தூக்கமின்றி எனக்கு பால் கொடுத்த துன்பத்துக்குப் பரிகாரம் இந்த ஏழாவது பிண்டம். இரவில் நீ தூங்கும்போது, நான் உன் புடவையை ஈரம் பண்ண, சிரித்தவாறு, முகம் சுளிக்காமல், எனக்கு துணி மாற்றிய உனக்கு இடும் கைமாறு, இந்த எட்டாவது பிண்டம். இதையாவது உனக்கு ஈரமில்லாமல் தருகிறேன்'' என்று கூறிக் கொண்டே வந்தார்.

சரயூவுக்கு அம்மாவின் கடைசி நாள் நினைவு வந்தது. அன்று அம்மாவுக்கு காலையிலேயே படுக்கையை விட்டு எழ சிரமமானது. மூச்சு முட்டுவதை போல் இருந்தது. நடு அண்ணன் கணேஷ் போன் பண்ண, உடனே கணவருடன் அங்கே சென்றாள் சரயூ.

'எங்க மூணு பேருக்கும், ஆபிஸூக்கு லீவு போட முடியாது. மன்னிகளும் வீட்டுல வேலை இருக்குன்னு சொல்றா. உன்னால் ஆஸ்பத்திரிக்கு கூட்டிண்டு போக முடியுமா?'' என்று கணேஷ் கேட்க, ஆம்புலன்ஸில் அம்மாவை ஆஸ்பத்திரிக்கு கூட்டிச் சென்றனர் சரயூம், ராமும்.
பெரிய அண்ணா சிவாவின் நண்பர் டாக்டர் ஆனந்த் தான் அங்கே தலைமை மருத்துவர்.
'சரயூ, நீ அட்மிட் பண்ணிடு. அம்மாவுக்கு இப்ப செமி கான்ஷியஸ்தான் இருக்கு'' என்று சொல்லியவாறே ஐ.சி. யூ வில் சேர்த்து, அவசரச் சிகிச்சையைத் தொடங்கினார் டாக்டர் ஆனந்த்.
சிறிது நேரத்தில் வெளியில் வந்த ஆனந்த், 'உயிருக்கு ஆபத்தான நிலையில் ரொம்ப வீக்கா இருக்காங்க? கொஞ்ச நாள் பெட் ரெஸ்டில்தான் இருக்கணும். அவங்களால நடக்க முடியாது. மூன்று மாதத்துக்குப் பிறகு உடம்பு வலு பெற்றவுடன், பிஸியோதெரபி மூலம் நடக்க வைக்கலாம். அவங்களுக்கு, வைட்டமின் 'டி' குறைபாடு இருப்பதால், கீழே விழக் கூடாது. விழுந்து அடிபட்டா ரொம்ப ஆபத்து.''
உடனே அண்ணன்களுக்கு போனில் விவரம் சொல்ல, மூவரும் சிறிது நேரத்தில், ஆஸ்பத்திரிக்கு வந்து விட்டனர்.
' டேய் ஆனந்த், என்னடா இது?'' என்று பெரிய அண்ணா சிவா வினவ, 'பயப்படாதே சிவா, அம்மாவை எப்படியாவது குணப்படுத்திட முயற்சிக்கிறேன். என்ன, கொஞ்ச நாள் ஆகும். அதுவரை படுக்கையில் வெச்சு, ஒரு குழந்தையைப் போல் பார்த்துக்
கணும்.''
'அது ஐ.சி.யூ, கும்பல் வேண்டாம், அண்ணன்கள் டாக்டருடன் பேசட்டும்'' என்று ராமை கூட்டிக் கொண்டு சரயூ வெளியேற முற்படும்போது, மூத்தவன் சிவா டாக்டரிடம், 'ஆனந்த்.. அம்மா வாழ்க்கையிலே எல்லாம் அனுபவிச்சுட்டா. இனிமேல் அவங்க எதுக்கு கஷ்டப்படணும்? ட்ரீட்மென்ட் எதுவும் வேண்டாம். முடிஞ்சா அவங்க உயிர் அமைதியா பிரியற மாதிரி பண்ணு'' என கூறியது அப்பட்டமாக காதில் வீழ்ந்தது.
'சிவா, நீ ஏன் இப்படி சொல்ற? அவங்களை குணப்படுத்திடலாம்'' என்று ஆனந்த் சொல்ல, 'ஆனந்த் அண்ணா, எங்க வீட்டுல ஏற்கெனவே தினமும் சண்டை, உங்க அம்மா ஒரு வேலையும் செய்யறதில்லைன்னு, எங்க மனைவிங்க புகார் சொல்லிண்டே இருக்காங்க. இப்ப படுத்த படுக்கையானா, யார் கவனிச்சுக்கிறது?'' நடு அண்ணன் கணேஷ் வினவினார்.
'நானே உங்களுக்கு ஒரு பேஷன்ட் அட்டென்டர் - அதாவது நோயாளியை கவனிக்க ஒரு பெண்ணை ஏற்பாடு செய்றேன்'' என்று ஆனந்த் மென்மையாக கூறினார்.
'அண்ணா, படுக்கையிலேயே இருந்தால், அங்கேயே பெட் பான் வெச்சு, அந்த ரூமே நாற்றமாயிடும். புண் வந்தா, அந்த நாத்தம் வேற. என் பொண்டாட்டி, கோவிச்சுக்கிட்டு, அவங்க அம்மா வீட்டுக்கு போயிடுவா'' என்று சின்னவன் சரவணன் தீர்மானமாகச் சொன்னான்.
'அடப்பாவிங்களா, பெற்ற அம்மாவை இப்படி சொல்றீங்களே?'' என்று நினைத்த சரயூவின் கண்களில் தாரை தாரையாக கண்ணீர். ராம் அவளை தோளோடு அணைத்து தட்டிக் கொடுத்தான்.
திரும்பி அம்மாவை பார்த்த சரயூ திக்பிரமையுற்றாள். அங்கே கண்களை அகல திறந்துகொண்டு படுத்திருந்தாள் அம்மா. அவள் எல்லாவற்றையும் கேட்டிருந்தாள் என்பதை அவள் வடித்த கண்ணீர் உணர்த்தியது.
'நீங்க நிதானமா யோசிங்க. நாங்க உயிரைக் காப்பாற்ற தான் இங்கே இருக்கோம். எடுக்க இல்லை. நாங்க சொல்றதை கேட்கறதாயிருந்தா டிரீட்மென்ட் குடுக்கறோம். இல்லைனா, நீங்க உங்களுக்கு சரிப்படும் ஆஸ்பத்திரிக்கு கூட்டிப் போங்க?'' என்று சிடுசிடுத்த குரலில் கூறியவாறே வெளியேறினார் டாக்டர் ஆனந்த்.
அடுத்த அரைமணி நேரத்தில், யாருக்கும், எந்த சிரமமும் கொடுக்காமல், அம்மா இறந்து விட்டாள். 'மாஸிவ் ஹார்ட் அட்டாக்' என்று மருத்துவ அறிக்கை கூறியது. 'ஈரம் மறந்த நெஞ்சங்களுடன் வாழ வேண்டாம்' என்று தன் இதய துடிப்பை நிறுத்திக் கொண்டாளோ?
உரத்தக் குரலில் 'மாத்ரு ஷோடசி' ஸ்லோகங்களை தொடர்ந்துக் கொண்டிருந்தார் பண்டிட் மணீஷ் ஷர்மா:
'நான் சுகவாசி. பசி, தாகம், தூக்கம் எதுவும் தெரியாது. என்னை பார்த்துப் பார்த்து, எனக்காக எல்லாம் செய்தாயே அந்த பெரிய மனதுக்கு நான் அளித்த துன்பத்துக்குப் பிராயச்சித்தமே இந்த ஒன்பதாவது பிண்டம். பால் உறிஞ்சும்போது, உன்னை கடித்தேனே? வலித்ததல்லவா? ப்ளீஸ், அதற்காக இந்த 10 ஆவது பிண்டத்தை ஏற்றுக் கொள் அம்மா. பனி, மழை, வெயில், காற்று இவற்றிலிருந்து காலத்துக்கேற்ப, என்னைக் காத்து ரட்சித்தாயே, அதற்கு பிரதியுபகாரமே இந்த 11-ஆவது சிறு பிண்டம். எத்தனை இரவு, என் ஜுரம், சளி, சுவாச உபாதைகளை புரிந்துக் கொண்டு, மடியில் என்னை போட்டு, தட்டி ஆட்டி, மஞ்சள் பற்று, விபூதி எல்லாம் தடவி, என்னை வளர்த்தாயே, அதற்கு தான் இந்த பன்னிரெண்டாவது பிண்டம். நான் பூலோகத்தில், கார், பங்களா, பணத்தோடு வாழ, நீ அதை அனுபவிக்காமல், யமலோகம் நோக்கி நடக்கிறாயே, வழியெல்லாம் உனக்கு இடையூறு தானே? அவை துன்பம் தராமல் இருக்க, என்னால் தர முடிந்தது இந்த 13 ஆவது பிண்டம் தான் அம்மா. நான் இப்போது சமூகத்தில் மதிக்கத்தக்க பெரிய ஆள். நீ இல்லாவிட்டால், நான் எவ்வாறு வந்திருக்க முடியும்? ஆதார காரணமே நீ தான் என் தாயே. அதற்கு ப்ரதி நான் கொடுப்பது இந்த 14- ஆவது பிண்டம். திரும்பத் திரும்பச் சொல்கிறேன். நான் வாழ, நீ வேண்டியதை திரஸ்கரித்தாய். தன்னலமற்ற தியாகி நீ. எனக்காக நீ கிடந்த பட்டினி, பத்தியம் எல்லாவற்றிற்கும் நான் தருவது இந்த 15 ஆவது பிண்டம்.
நான் சுயநல விஷமி. உன்னில் நான் உருவாகி, கருவாகி, சிறுவனாகி, பெரியவனாகி, இப்போது, உன் மரண வேதனையை சற்றே உணர்ந்தவனாக, கண்ணில் நீரோடு தரும் இந்த 16ஆவது கடைசி பிண்டத்தை ஏற்றுக் கொள். என் தாயே, என் தெய்வமே! என்னை மன்னித்து விடு. ஆசிர்வதி'' என்று முடித்தார்.
மணீஷ் ஷர்மா உரத்த குரலில் கூற கூற , அதை திருப்பி சொல்ல முடியாமல் உணர்ச்சிக் கொந்தளிப்பில் பெரிய அண்ணா சிவா பெரிதான குரலில், 'அம்மா, தப்பு பண்ணி விட்டேனே'' என்று அழத் தொடங்க, கணேஷும், சரவணனும் அதில் கலந்துகொண்டனர்.
பாறை மனங்களிலும் ஈரத்தை ஒரு தாயால் மட்டுமே உண்டாக்க முடியும் என்ற நினைப்பு தோற்றுவித்த பரவசத்திலும், தாயையே கொல்லத் துணிந்தவர்களுக்கு, வாழ்நாள் முழுவதும் இந்த குற்ற உணர்ச்சியால் ஏற்படும் வலி தான் இறைவன் கொடுத்த தண்டனை என்ற நினைப்பு தோற்றுவித்த மன நிம்மதியிலும் தானும் கதறத் தொடங்கினாள் சரயூ.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com