ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: வயிற்று வலி பூரண குணமாக வழி என்ன?

எனக்கு எழுபத்து இரண்டு வயதாகிறது. கல்லீரல், மண்ணீரல் கோளாறு ஏற்பட்டு குணமாகியது.
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: வயிற்று வலி பூரண குணமாக வழி என்ன?

எனக்கு எழுபத்து இரண்டு வயதாகிறது. கல்லீரல், மண்ணீரல் கோளாறு ஏற்பட்டு குணமாகியது.  தற்போது அடிக்கடி  இயற்கை உபாதை செல்வது, வயிற்று இரைச்சல், வயிற்று வலி அதிகமாக இருக்கின்றன.   இதனால் உடல் எடையும் குறைந்துவிட்டது. இவை பூரண குணமாக என்ன தீர்வு?

-க.ராஜேந்திரன், மதுரை.

தங்களுக்கு ஏற்பட்ட கோளாறுகளை குணப்படுத்திக் கொள்வதற்காக மேற்கொண்ட சிகிச்சை, உணவு முறைகள், செயல்களால் வாயுவின் சீற்றத்தை ஏற்படுத்தும் குணங்களாகிய வரட்சி, குளிர்ச்சி,  எளிதில் செரிக்கக் கூடியதும், குறைந்த அளவிலுமாகிய உணவுகள் இரவில் உறக்கமில்லாமல் அதிகம் விழித்திருத்தல் ஆகியவற்றால் ஏற்றம் கொண்ட தாதுக்களின் சத்துக் குறைவு, கோபம், பயம், வருத்தம்,  இயற்கைக் கழிவுகளை வலுக்கட்டாயமாக அடக்குதல், அடிக்கடி மருத்துவமனைக்குச் சென்று வருதல் போன்றவற்றாலும், உடலில் உள்புறக் குழாய்களில் ஏற்படும் எந்தப் பகுதிகள் காலியாக இருக்கின்றனவோ , அந்தப் பகுதியில் வாயுவின் வரவானது தீவிரமாக நுழைந்து நோயை ஏற்படுத்திவிடும்.

உங்களுடைய விஷயத்தில் வாயு, குடல், வயிறு ஆகிய பகுதிகளில் ஆவேசமாகக் குடி கொண்டுள்ளதால், மலப்பையின் வலுவானது குறைந்து அதன்படி தளர்ந்துள்ளதால் அடிக்கடி மலம் வெளியேறுகிறது. வயிறு இரைச்சல், வலி போன்றவை சமர்ணன், அபானன் எனும் வாயுக்களைச் சீற்றமடைய செய்திருக்கிறது.

குடல் பகுதியை வலுவாக்கி, வாயுவின் சீற்றத்தை அடக்கக் கூடிய ஆயுர்வேத மருந்துகளாகிய 'தசமூலம் கஷாயம்' , 'இந்து காந்தம் கிருதம்'  எனும் நெய் மருந்து, 'தான்வந்திரம் குளிகை' , 'விதார்யாதிலேஹ்யம்', 'தசமூலாரிஷ்டம்', 'வாயு குளிகை' போன்ற தரமான உபாதைகளைக் குணப்படுத்தக் கூடியவை விற்பனையில் உள்ளன.  இவற்றில் எதை முதலில் பயன்படுத்தி, வாயுவின் கோபத்தை, அமைதிப்படுத்தி, அதன்பிறகு குடலை வலுவாக்கும் மருந்துகளை உபயோகிக்கலாம். இதை ஆயுர்வேத மருத்துவர்களால் மட்டுமே தீர்மானிக்க முடியும் என்பதால், ஆலோசனையைக் கேட்டு மருந்துகளைப் பயன்படுத்தி குணம் பெறவும்.

இதில், காலதாமதம் செய்தால், வாயுவின் குணங்களால் வயிறு, குடல் உள்புற வால்வுகள், சவ்வுகள், ரத்த நாளங்கள், நரம்புகளின் அசைவுகள் போன்றவை தொய்வடைந்து, தம்முடைய வேலைகளை நிறுத்திக் கொள்ளும் பெரிய அபாயம் உள்ளது.

மேற்குறிப்பிட்டவை அனைத்தும் உள்புற சிகிச்சை முறைகளாகும். வெளிப்புறச் சிகிச்சை முறைகளாகிய மூலிகை எண்ணெய்த் தேய்ப்பு, வியர்வையை வரவழைக்கும் சிகிச்சை, மூலிகை இலைகளால் கொடுக்கப்படும் ஒத்தடம் எனும் முறை, சிவப்பான அரிசியை, சித்தாமுட்டி வேர்க் கஷாயம், பாலுடன் வேகவைத்து, மூட்டை கட்டி உடலெங்கும் தேய்த்துவிடும் சிகிச்சை போன்றவற்றாலும் நீங்கள் குணம் பெறலாம்.

உணவில் காரம், கசப்பு, துவர்ப்புச் சுவைகளைத் தவிர்க்கவும். நெய்ப்புடன் கூடிய வெதுவெதுப்பான இனிப்பு, புளிப்பு, உப்புச் சுவை மிதமான அளவில் சேர்த்திருக்கக் கூடிய உணவு வகைகளை, முன் உண்ட உணவு செரித்து பசி வந்துள்ள நிலையில், காலதாமதமின்றி சாப்பிடும் வழக்கத்தை நீங்கள் ஏற்படுத்திக் கொள்வது நல்லது.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com