பேல் பூரி

'விசா இல்லை. அந்நாட்டு பறவைகள் இந்நாட்டில்; இந்நாட்டு பறவைகள் அந்நாட்டில்...'
பேல் பூரி

கண்டது


(அரியலூர் பறவைகள் சரணாலயத்தில் எழுதியிருந்தது)

'விசா இல்லை. அந்நாட்டு பறவைகள் இந்நாட்டில்; இந்நாட்டு பறவைகள் அந்நாட்டில்...'

-ஏ.எஸ்.ராஜேந்திரன்,
விருதுநகர்.

(திருப்பத்தூர் பேருந்து நிலையத்துக்கு வெளியே நின்றிருந்த காரில்...)

கோபத்தில் ஏழையாக இரு! கருணையில் பணக்
காரனாக இரு!!

- இரா.வசந்தராசன்,  
கிருஷ்ணகிரி.

(சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தின் பெயர்)

'காக்காப்பாளையம்'

-செல்லமுத்துகுமார்.
ஜி, சிதம்பரம்.

கேட்டது


(தஞ்சாவூரில் உள்ள ஏ.டி.எம். ஒன்றில்...)

' யாருய்யா அது.. ராத்திரி 12 மணிக்கு  என்னய்யா நோண்டுறே?'
' என் பணம் தான் எடுக்கிறேன். உனக்கு என்னய்யா வேணும்?'
' ' சாரிப்பா... ரெயின் கோட், மப்லரில பார்த்ததும் சந்தேகம் வந்துடுச்சு!'

-பா. து. பிரகாஷ்,  
தஞ்சாவூர்.

(கடலூர் பேருந்து நிலைய வளாகம் அருகே உள்ள கடையொன்றில்..)

'டைம் என்ன ஆகுது சார்..?'
'சொல்றேன். நீங்க இங்க என்ன வேலை செய்றீங்க?'
'வாட்ச்மேன் சார்..'

-பரமசிவம்,
பண்ருட்டி.

(சென்னை  கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கணவன்- மனைவி பேசியது)

' 'கொட்டுற மழையில் பேப்பர்ல அப்படி என்ன மும்முரமா பாக்குறீங்க?'
' 'என் ராசி பலனை பார்க்கிறேன்டி.'
' சென்னையில எல்லா ராசிக்காரர்களுக்கும் ரெண்டு நாளு சந்திராஷ்டமம்தான். பேப்பரை மூடிட்டு கம்முன்னு உட்காருங்க?'

-அ.பேச்சியப்பன்,  
ராசபாளையம்.

யோசிக்கிறாங்கப்பா!


எந்த நிலம் யார் யாரிடம்  வாங்கினாலும் அந்த நிலம்  
நீர் நிலையா? என காண்பது அறிவு.

ஜி அர்ஜுனன்,
செங்கல்பட்டு.


மைக்ரோ கதை


தொழிலாளர்களின் தின ஊதியம் குறித்து, கட்டடத் தொழிலாளர்களாகப் பணிபுரிவோரின் இல்லப் பெண்கள் சிலரிடம் தொழிலாளர்கள் நல அதிகாரி விசாரணை மேற்கொண்டார். 

அப்போது கமலா, 'எங்க வீட்டுக்காரருக்கு எட்டு நூறு ரூபாய் ஊதியம்' என்றார்.   
விமலாவோ, 'எங்க வீட்டுக்காரருக்கு ஏழு நூறு ரூபாய் ஊதியம்' என்றார். 

சாந்தாவோ கண்ணீர் விட்டபடியே, 'நானூறு ரூபாய்' என்றார்.  

இதைக் கேட்ட அதிகாரி, ' தின ஊதியம் ஆயிரம் ரூபாய். இடைத்தரகர் யாரேனும் பிடித்துகொள்கிறார்களா?' என்று கேட்டார்.

இதைக் கேட்ட சாந்தாவோ, 'என் கணவர் மொடா குடிகாரன். அறுநூறுக்கு பிராந்தி குடிச்சிட்டு ரோட்டில் விழுந்து கிடப்பார். நான் போய் அவரு பாக்கெட்டில் இருந்து நானூறு ரூபாயை எடுத்திட்டு வருவேன். கமலா வீட்டுக்காரர் இரு நூறுக்கு குடிப்பார். விமலா வீட்டுக்காரர் நானூறுக்கு குடிப்பார். வீட்டுக்கு எவ்வளவு வருதோ அதுதானே ஊதியம்' என்றாள்.

தொழிலாளர் நல அதிகாரி அதிர்ச்சியில் ஆழ்ந்தார்.

-கி.சந்தானம்,
ஈக்காடு.


எஸ்எம்எஸ்


வில் வளைந்தால்தான் அம்பு செல்லும். 
சொல் கனிந்தால்தான் அன்பு செல்லும்.

-பால்ராமமூர்த்தி.
பி., அம்பாசமுத்திரம்.

அப்படீங்களா!


வாட்ஸ் ஆஃப்பில் பகிரப்படும் தகவல்களைப் பாதுகாப்பானதாக்க,  பல்வேறு புதிய சேவைகளை மெட்டா நிறுவனம் அறிவித்து வருகிறது.  வாட்ஸ் ஆஃப்பில் நுழைய பாஸ்வேர்ட் பயன்பாடு ஏற்கெனவே ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது மேலும் பாதுகாப்பானதாக்க குறிப்பிட்ட சாட்களைப் பூட்டி வைக்கும் புதிய சேவை அறிமுகமாகி உள்ளது.
'சீக்ரெட் கோட்' எனும் பெயரில் அறிமுகமாகி உள்ள இந்தச் சேவையின் மூலம் முக்கியமான சாட் தகவல்கள் மேலும் பாதுகாப்பானதாகப் பாதுகாக்க உதவும்.
இதற்கான சாட்டை தேர்வு செய்து அதை சிறிது நேரம் அழுத்தினால்போதும், அந்தச் சாட்டுக்கு ரகசிய பாஸ்வேர்டை பதிவு செய்யலாம்.
அந்த சாட் வழக்கமான சாட்களில் காண்பிக்காது. அந்த சாட்டை மீண்டும் காண வேண்டுமானால், சர்ச் பாரில் சென்று அந்த ரகசிய பாஸ்வேர்டை போட்டால் போதும் மீண்டும் அந்த சாட்டிற்குள் செல்லலாம்.
இந்த புதிய சேவை வாட்ஸ் ஆஃப் பயன்பாட்டை மேலும் பாதுகாப்பாக மாற்றும் என்று மெட்டா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க்  ஜுக்கர்பர்க் தெரிவித்துள்ளார்.
தற்போது பீட்டா பயன்பாட்டாளர்களுக்கு இந்தச் சேவை அறிமுகமாகி உள்ளது. இந்தச் சேவை விரைவில் அனைத்து பயன்பாட்டாளர்களுக்கும் விரிவாக்கம் செய்யப்படும் என்றும் வாட்ஸ் ஆஃப் தெரிவித்துள்ளது.

-அ.சர்ப்ராஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com