ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கடுமையான இடுப்பு வலி குணமடைய...

வீட்டினுள் மழைநீர் புகுந்ததால் அதை  அப்புறப்படுத்த குனிந்து நீரை எடுத்து வெளிப்புறம் ஊற்றியதில்,  எனக்கு இடுப்புப் பிடிப்பு ஏற்பட்டு மிகவும் அவதியுறுகிறேன்.
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கடுமையான இடுப்பு வலி குணமடைய...

வீட்டினுள் மழைநீர் புகுந்ததால் அதை அப்புறப்படுத்த குனிந்து நீரை எடுத்து வெளிப்புறம் ஊற்றியதில், எனக்கு இடுப்புப் பிடிப்பு ஏற்பட்டு மிகவும் அவதியுறுகிறேன். சர்க்கரை உபாதையினால், உடலும் மெலிந்து உடல் சோர்வு வேறு. நாற்பது ஒன்பது வயதாவதால், மாதவிடாய் நிற்கும் நிலையில் இருக்கிறேன். அதனாலும் பதற்றம், பயம், கோபம் என்றெல்லாம் ஏற்பட்டு துன்புறுகிறேன். எனது கடுமையான இடுப்பு வலி குணமடைய என்ன வழி?

-திலகவதி, முடிச்சூர்,
சென்னை.

'கடிவஸ்தி' என்றொரு சிகிச்சை முறை உண்டு. 'கடி' என்றால் இடுப்பு, 'வஸ்தி' என்றால் தைலத்தை நிரப்பி நிறுத்தி வைத்தல் என்று கூறலாம். பெண்களுக்கு மிகவும் உகந்த, மூலிகைத் தைலங்களாகிய 'தான்வந்திரம்', 'மூரிவெண்ணரி' ஆகியவற்றைக் கலந்து, சிறிது உப்பு கலந்து கரைத்து, இரும்பு வாணலியில் ஊற்றி, அடுப்பில் வைத்து இளம்சூடாகக் காய வைக்க வேண்டும். பின்னர் இந்தத் தைலத்தை உங்களைக் குப்புறப் படுக்க வைத்து, இடுப்பில் வலி உள்ள இடத்தைச் சுற்றி உளுந்து, மைதா கலந்த மாவினால் வரம்பு கட்டி, அதனுள் இந்த மூலிகைத் தைலக் கலவையை வெதுவெதுப்பாக ஊற்றி, அப்படியே சூடாறும் வரை வைத்திருக்க வேண்டும்.

சிகிச்சையின் பலனை விரைவாகப் பெறுவதற்கு தைலத்தில் உள்ள சூடு ஆறியதும் அதைப் பஞ்சால் பிழித்தெடுத்து, மறுபடியும் சூடாக்கி ஊற்றுவது சிறப்பாகும். மூன்று அல்லது நான்கு முறை இப்படி செய்தவுடன் வரம்பை அகற்றி இடுப்புப் பகுதியில் மூலிகை இலை, தழைகளால் உருவாக்கப்பட்ட நீராவிக் குளியலைச் செய்வது மிகச் சிறந்த சிகிச்சையாகும். இதற்கு 'நாடீஸ்வேதம்' என்று பெயராகும்.

சர்க்கரை உபாதையின் தாக்கம், மாதவிடாய் நிற்கக் கூடிய வயது, நீரை எடுத்து ஊற்றியதில் விளைவு ஆகியவற்றால் ஏற்பட்ட உபாதைக்கு மேற்குறிப்பிட்ட சிகிச்சை நல்ல பலனை அளிக்கும். இருப்பினும், மறுபடியும் இடுப்பு வலி காலப்போக்கி ஏற்படும் அபாயம் இருக்கிறது.

அதைத் தவிர்க்க, கடிவஸ்தி சிகிச்சையை செய்துகொள்வதற்கு முன்பாக, இதே தைலங்களின் கலவையை உடல் முழுவதும் தேய்த்து விடுவது ('அப்யங்கம்' என்று பெயர்) , மூலிகை இலைகளை, சிறு துண்டுகளாக நறுக்கி, காடாதுணியில் முடிந்து, தவாவில் சூடாக்கி, ஒத்தடம் கொடுத்தல் ('பத்ரபிண்டஸ்வேதம்' என்று பெயர்) , ஆசன வாய் வழியாக அரைத்த மூலிகைகள், மருந்து உருண்டைகளை பாலில் கலந்து, நெய்ச் சேர்த்து காய்ச்சி செலுத்தும் 'க்ஷீரவஸ்தி' எனும் பிரயோகங்களால் உடல் உள்புறக் கழிவுகளை வெளியேற்றலாம். இதன்வாயிலாக, இடுப்பைத் தாங்கிப் பிடிக்கும் தசைநார்கள், மாமிசக் கொழுப்பு, நரம்புகள் ஆகியன வலுப்பெறும். இதன்பிறகு, மேற்குறிப்பிட்ட சிகிச்சை முறைகளால் ஏற்படும் குணமானது , பல ஆண்டுகளுக்கு பலன் அளிக்கும்.

'ஸப்தஸர்ரம்', 'ராஸ்னாஏரண்டாதி கஷாயம்', 'தான்வந்திரம் கஷாயம்' போன்றவற்றில் ஒன்றை தேர்ந்தெடுத்து, 'தான்வந்திரம் 101' என்ற மாத்திரையை சாப்பிடலாம். இதனால் உபாதை நீங்கும்.

உணவில் வாயுப் பொருள்களான பருப்பு, வேர்க்கடலை, கடலை எண்ணெய், உருளைக்கிழங்கு, வாழைக்காய் போன்றவற்றை ஆறிய நிலையில் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். சித்தரத்தை போட்டுக் காய்ச்சிய வென்னீரைக் குடிப்பதற்குப் பயன்படுத்துவது நல்ல பலனை அளிக்கும்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com