'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 171

ராஜீவ் காந்தியின் படுகொலையில் திமுகவுக்கும் தமிழக முதல்வர் கருணாநிதிக்கும் தொடர்பு இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்கிற முனைப்பில் காங்கிரஸ் கட்சி அப்போது இருந்தது.
'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 171


ராஜீவ் காந்தியின் படுகொலையில் திமுகவுக்கும் தமிழக முதல்வர் கருணாநிதிக்கும் தொடர்பு இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்கிற முனைப்பில் காங்கிரஸ் கட்சி அப்போது இருந்தது. சீதாராம் கேசரி இடைக்காலத் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டது முதல், சோனியா காந்தி ஆதரவாளர்களின் கரங்கள் காங்கிரஸில் வலுப்பெற்றன. அதுவும் அதற்கு ஒரு காரணம்.
'நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? விடுதலைப் புலிகளுக்கும் திமுக அரசுக்கும் தொடர்பு இருக்கிறது என்பதுதான் உங்கள் அபிப்பிராயமா? அப்படி இருந்தால், விடுதலைப் புலிகள் ஏன் தமிழகக் காவல் துறையால் கைது செய்யப்பட்டு, இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன?' என்று நான் வாழப்பாடி ராமமூர்த்தியை நேராகவே கேட்டுவிட்டேன்.
'நான் எந்த அபிப்பிராயமும் சொல்ல விரும்பவில்லை. திமுக ஆட்சி நடக்கிறது. அப்படி இருக்கும்போது, தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களின் நடமாட்டம் தமிழகத்தில் இருந்தால் அதற்கு அவர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும்.'
நான் பதிலளிக்கவில்லை. மெளனமாக இருந்தேன். நாங்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்ததை வி.என்.காட்கில்ஜி புன்னகைத்தபடி பார்த்துக் கொண்டிருந்தார். தமிழில் ஏதோ சண்டை போடுகிறார்கள் என்று நினைத்தாரோ என்னவோ, பேச்சைத் திசைத்திருப்ப அவர் என்னிடம் ஒரு தகவலைத் தெரிவித்தார்.
'எனக்குக் கிடைத்த நம்பகமான தகவல்களின்படி, விரைவில் ஜெயலலிதா கைது செய்யப்படலாம். நாளைக்கு அவர் வீட்டில் விசாரணை நடக்கும் என்று ஒரு மூத்த தமிழகக் காவல்துறை அதிகாரி என்னிடம் தெரிவித்தார்' என்றார் காட்கில்ஜி.
'எனக்குத் தெரிந்து அவர் கைதுக்குத் தயாராகத்தான் இருக்கிறார். கைது செய்தால் அவரது செல்வாக்குக் கூடிவிடுமோ என்று கருணாநிதி பயப்படுகிறார். அதனால்தான், அவரைக் கைது செய்வதற்கு சில முன்னேற்பாடுகளை முன்னெடுக்கிறார் அவர். இந்த மிரட்டல்களுக்கெல்லாம் பயப்படும் பெண்மணி ஜெயலலிதா அல்ல' என்று வாழப்பாடி சொன்னதும், காட்கில்ஜி சிரித்தபடியே அவரிடம் கேட்டார்.
'உங்களுடைய முதல் விசுவாசம் இந்த மேடத்திடமா, அந்த மேடத்திடமா?' (வேர் இஸ் யுவர் பர்ஸ்ட் லாயல்டி - டு திஸ் மேடம், ஆர் தட் மேடம்?) என்கிற கேள்விக்குத் தயக்கமே இல்லாமல் வாழப்பாடியிடமிருந்து பதில் வந்தது.
'டு போத் தி மேடம்ஸ்...' (இரண்டு மேடம்களுக்கும்தான்..)
அடுத்த நாளும் ஜெயின் கமிஷன் விசாரணையில் முதல்வர் கருணாநிதி சாட்சி சொல்ல இருந்ததால், 'நாளை விஞ்ஞான் பவனில் சந்திப்போம்' என்று சொல்லி நான் விடைபெற எத்தனித்தேன்.
'நாளைக்கு நான் சில குறுக்குக் கேள்விகள் எழுப்பப் போகிறேன். கருணாநிதி திணறப் போகிறார். நீங்கள் நேரில் பார்ப்பீர்கள்...' என்று சொல்லி என்னை வழியனுப்பினார் வாழப்பாடி..
அடுத்த நாள் ஜெயின் கமிஷன் விசாரணை நடக்கும் விஞ்ஞான் பவன் அனெக்சுக்குப் போனபோது, களைகட்டியிருந்தது.
திமுக தலைவர் வருகிறார் என்பதால் பலர் முன்பே வந்திருந்து அமர்ந்திருந்தனர். திமுக எம்.பி.க்கள் உள்பட முக்கியமான பல தலைவர்கள் பின்வரிசையில் அமர நேர்ந்தது. முதல் நாள் விசாரணையில் அமைச்சர்கள் கலந்துகொள்ளவில்லை என்றால், இரண்டாம் நாளன்று திமுக எம்.பி.க்களும் மத்திய அமைச்சர்கள் நான்கு பேருமே விசாரணையைப் பார்க்க வந்திருந்தனர்.
முரசொலி மாறன் நுழைந்தபோது, அந்த விசாரணை நீதிமன்றத்தில் சலசலப்பு ஏற்பட்டது. எல்லா திமுகவினரும் எழுந்து நின்றனர். விசாரணையிலிருந்து கவனம் திசை திரும்பியதை நீதிபதி மிலாப் சந்த் ஜெயின் ரசிக்கவில்லை என்பதை அவரது முகம் காட்டியது. சிறிது நேரம் இருந்துவிட்டு மாறன் கிளம்பிவிட்டார். ஏனைய மூன்று அமைச்சர்களும் (டி.ஜி. வெங்கட்ராமன், என்.வி.என். சோமு, டி.ஆர். பாலு) கடைசிவரை இருந்தனர். எம்.பி.க்களும் அதிக அளவில் வந்திருந்தனர்.


1991-இல் திமுக ஆட்சி கலைக்கப்பட்டு, குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது குறித்த  விவாதத்தில், எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யான
ப. சிதம்பரம் பேசியது குறித்துக் கேள்விகள் எழுப்பப்பட்டன. முதல்வர் கருணாநிதியை அது குறித்து குறுக்கு விசாரணை செய்து கொண்டிருந்தார் அரசுத் தரப்பு வழக்குரைஞராக இருந்தவர். அப்போது கருணாநிதி அளித்த பதில்களை திமுகவின் வழக்குரைஞர் மொழிபெயர்த்துக் கொண்டிருந்தார். 
'சாட்சி சொல்லாததை எல்லாம் திமுக வழக்குரைஞர் தனது மொழிபெயர்ப்பில் சேர்த்துக் கொள்கிறார். சாட்சியின் பணியை அவரது வக்கீல் செய்து கொண்டிருக்கிறார்' என்று பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருந்த வாழப்பாடி ராமமூர்த்தி உரத்த குரலில் ஆட்சேபம் எழுப்பினார். ஒரு நிமிடம், விசாரணை நீதிமன்றத்தில் நிசப்தம் நிலவியது. முதல்வர் கருணாநிதி தனது கண்ணாடியை சரி செய்தபடி, வாழப்பாடி ராமமூர்த்தியைப் பார்த்தார்.
'அப்படியானால் நீங்களே சென்று மொழிபெயர்க்க வேண்டியதுதானே..?' என்று வாழப்பாடியைப் பார்த்துக் கோபமாக திமுக எம்.பி. கே.பி. ராமலிங்கம் சொன்னபோது, நீதிமன்றத்தில் சலசலப்பு.
'நாடாளுமன்ற உறுப்பினர்கள் விசாரணை நீதிமன்றத்தில் வந்து அமர்ந்து கொண்டு கருத்துக் கூறுவதும், விமர்சனம் செய்வதுமாக இருக்கிறார்கள். அவர்கள் குறுக்கிடுவதை நான் ஆட்சேபிக்கிறேன்' - பலத்த குரலில் வாழப்பாடி.
'அதைச் சொல்வதற்கு நீங்கள் யார்? நீங்கள் விசாரணையைப் பார்ப்பதற்கு வரலாமானால் நாங்களும் வரலாம். எங்கள் தலைவர் சாட்சி சொல்ல வந்திருக்கும்போது, நாங்கள் உடன் வருவதைக் குறைகூற உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது..?' என்று கே.பி. ராமலிங்கம் தலைமையில் அங்கே கூடியிருந்த திமுக எம்.பி.க்கள் சொன்னபோது, நீதிபதி எரிச்சலடைந்தார்.
'பின்வரிசையில் இருந்தபடி பேசிக் கொண்டும், வாக்குவாதம் செய்து கொண்டும் இருப்பதை அனுமதிக்க முடியாது. எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். தயவுசெய்து நீங்கள் வெளியேறுங்கள்' என்று நீதிபதி மிலாப் சந்த் ஜெயின் சொன்ன பிறகுதான், அமைதி திரும்பியது. கே.பி. ராமலிங்கம், கோவை மு. ராமநாதன், டி. நாகரத்தினம் மூவரும்தான் வாழப்பாடியாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட எம்.பி.க்கள். அவர்களை அமைதியாக இருக்கும்படி கருணாநிதி சைகை செய்ததாக எனக்கு நினைவு. நான் குறித்து வைக்கவில்லை.
முந்தைய நாளைவிட, முதல்வர் கருணாநிதியிடம் நடந்த இரண்டாவது நாள் விசாரணை மிகவும் சுவாரஸ்யமாகவும், பரபரப்பாகவும் இருந்தது. மதிமுக வழக்குரைஞர் எஸ்.ஜி. ஜேம்ஸின் குறுக்கு விசாரணையின்போது, முந்தைய நாளைப்போலவே சற்றும் அலட்டிக் கொள்ளாமல், புன்னகையுடன் முதல்வர் கருணாநிதி பதிலளித்தார்.
தர்மசங்கடமான பல கேள்விகள் அவரிடம் எழுப்பப்பட்டன. கருப்புக் கண்ணாடி அணிந்திருந்ததால், அவர் அந்தக் கேள்விகளை எப்படி எடுத்துக்கொண்டார் 
என்பதைத் தெரிந்து கொள்ள முடியவில்லை. அவருக்குக் கோபமும் எரிச்சலும் இருந்திருந்தாலும் அது வெளியில் தெரியவில்லை. அவரது குரலிலும் அது வெளிப்படவில்லை.
தனது முன்னாள் தலைவரான கருணாநிதியை நேருக்கு நேர் எதிர்கொள்ளும் தர்மசங்கடத்தைத் தவிர்க்க விரும்பியதாலோ என்னவோ, வை. கோபால்சாமி (அப்போது அவர் வைகோவாக மாறியிருக்கவில்லை) விசாரணை நடந்தபோது வரவில்லை. அவரது வழக்குரைஞர் ஜேம்ஸ் குறுக்கு விசாரணையில் எழுப்பிய கேள்விகள் அனைத்தும், வழக்குரைஞரான மதிமுக பொதுச்செயலாளரால் மிகவும் சாதுர்யமாகத் தயாரிக்கப்பட்டிருந்தன என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது.
குறுக்கு விசாரணையில் முதல்வர் கருணாநிதி, மதிமுக பொதுச்செயலாளர் வை. கோபால்சாமி தொடர்பான கேள்விகளுக்குத் தெரிவித்த பதில்கள் இவை - 
'கோபால்சாமிக்கு ஆதரவாக, விடுதலைப் புலிகளால் என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஊர்ஜிதமல்லாத தகவல்கள் கிடைத்ததாக, மத்திய அரசிடமிருந்து தமிழக அரசுக்கு 28.9.1993-இல் கடிதம் வந்தது. அதற்கு முன்னர், கோபால்சாமி என்னை மிரட்டியதில்லை.'
'திமுகவின் கொள்கைகளைப் பொதுவாக அவர் ஏற்றுக் கொண்டிருந்தாலும், இலங்கைப் பிரச்னையில் அதிக அக்கறை கொண்டவராகத் தன்னைக் காட்டிக் கொள்ள கோபால்சாமி முனைந்தார். அவ்வாறு காட்டக்கூடாது என்று கட்சியால் அறிவுறுத்தப்பட்டார்.'
'இலங்கைப் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண வேண்டும் என்பது திமுகவின் கொள்கை. எந்த வழியிலாவது தனி ஈழம் உருவாக்க வேண்டும் என்று கோபால்சாமி கருதினார். தனி ஈழத்துக்காக புலிகள் ஆயுதம் எடுப்பதை அவர் எதிர்க்கவில்லை.'
'நான் கோபால்சாமியை சந்தேகப்படவில்லை. அதே நேரத்தில் ஒரு சந்தேகத்தை எழுப்ப விரும்புகிறேன். புலியால் எனக்கு ஆபத்து இருப்பது குறித்து மத்திய அரசு 28.09.1993-இல் செய்தி அனுப்பிய பின்னரும்கூட, மாநிலங்களவை உறுப்பினராக அடுத்த இரண்டு ஆண்டுகள் கோபால்சாமி தொடர்ந்தார். அப்படி இருந்தும் அவர் ஏன் அது குறித்து மத்திய அரசிடம் எதுவும் கேட்கவில்லை என்பதுதான் எனது சந்தேகம்.'
'மத்திய அரசின் கடிதம் குறித்து நான் சொல்வதற்குக் காரணம், 'விடுதலைப் புலிகளுக்கும் எனக்கும் தொடர்பில்லை; அவர்கள் என்னைத் கொல்லத் திட்டமிட்டிருந்தனர்' என்பதை வலியுறுத்தத்தானே தவிர, கோபால்சாமியைக் குற்றஞ்சாட்டவோ, அவரைக் கட்சியிலிருந்து நாங்கள் வெளியேற்றியதை நியாயப்படுத்தவோ அல்ல!'
'திமுக ஆட்சி கலைக்கப்பட்ட பிறகு, குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானது. அது தொடர்பாக நாடாளுமன்றத்தில் 20.02.1991 அன்று ப. சிதம்பரம் பேசும்போது, விடுதலைப் புலிகளுடன் ஒரு திமுக எம்.பி. தொடர்பு வைத்திருந்ததாக குறிப்பிட்டிருந்தார். அது எனது கவனத்துக்கு வந்தது. ஆனால், அந்த எம்.பி. யார் என்று நான் அவரிடம் இதுவரை கேட்கவில்லை.'
கடைசியாக மதிமுக வழக்குரைஞர் ஜேம்ஸ், கருணாநிதியிடம் நேரடியாக ஒரு கேள்வி கேட்டார். அந்தக் கேள்வியை அவர் எழுப்பியதும் விசாரணை நடந்து கொண்டிருந்த அந்த நீதிமன்றம் முதல்வர் கருணாநிதியின் பதிலுக்காக ஆவலுடன் காத்திருந்தது.
'விடுதலைப் புலிகளின் துணையோடு உங்களைக் கொல்ல வை. கோபால்சாமி திட்டமிட்டிருந்தார் என்று நீங்கள் கருதுகிறீர்களா?'
எல்லோருடைய பார்வையும் கவனமும் முதல்வர் கருணாநிதியில் குவிந்தன. அவர் வழக்குரைஞர் ஜேம்ஸை ஒரு விநாடி உற்றுப் பார்த்தார். அங்கே கூடியிருந்த பார்வையாளர்களை நோட்டம் விட்டார். பிறகு, அவரது பார்வை நீதிபதி மிலாப் சந்த் ஜெயினை நோக்கித் திரும்பியது. 
மிகவும் மெல்லிய குரலில், ஆனால் தெளிவாக, அந்தக் கேள்விக்கு பதிலளித்தார் முதல்வர் கருணாநிதி!

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com