பேல் பூரி

''மரம் வளர்த்து பூமியைப் பாதுகாப்போம்! ஏனெனில், பூமிக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது.''
பேல் பூரி

கண்டது

(வேதாரண்யம் கடைவீதியில் நின்றிருந்த லாரியில் எழுதப்பட்ட வாசகம்)

''மரம் வளர்த்து பூமியைப் பாதுகாப்போம்! ஏனெனில், பூமிக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது.''

-சு.மூன்சுதாகரன்,
வானவன்மகாதேவி.

(மதுரை அருகே உள்ள ஒரு சிற்றுண்டி உணவகத்தின் பெயர்)

''போறப்போக்குல...''

-த.நேசப்ரியன்,
அய்யன்கோட்டை.

(சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தின் பெயர்)

''காக்காப்பாளையம்''

-செல்வமுத்துகுமார்.
ஜி, சிதம்பரம்.


கேட்டது

(திருநெல்வேலி கே.டி.சி. பகுதியில் பயணியும் ஆட்டோ ஓட்டுநரும்..)

''டவுன் வரைக்கும் போகணும்...''
''ஜங்ஷன் வரைக்கும் ஆட்டோவில் 
போகலாம். அங்கிருந்து டவுனுக்கு போட்டில்தான் போகணும்...''

-க.சரவணகுமார்,
திருநெல்வேலி.

(விழுப்புரத்தில் உள்ள துணிக் கடை ஒன்றில் ஊழியரும், வாடிக்கையாளரும்..'')

''இந்த யூனிபார்ம் துணி கிழியவே கிழியாது சார்..''
''அப்புறம் எப்படி எனக்கு கிழிச்சி தருவீங்க..?''

-கே.இந்து குமரப்பன்,
விழுப்புரம்.

(சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இரு நண்பர்கள் பேசியது)

''நான் குடிச்சிட்டு செல்போனில் பேசினால் கூட என் மனைவி கண்டுபிடிச்சிடுவாடா?''
''எப்படி..?''
''போதை ஏறிடுச்சின்னா இங்கிலீஷில்தான் பேசுவேன்...''

-தீபிகா சாரதி,
சென்னை.


யோசிக்கிறாங்கப்பா!

ஆறுதலுக்காக யாரையாவது தேடுங்கள். ஆனால் 
உங்கள் மொத்த ஆறுதலும் அவர்தான் என்று நம்பாதீர்கள்.

-மீ.யூசுப்ஜாகிர்,
வந்தவாசி.

மைக்ரோ கதை


ஒரு யோகி பஞ்ச பூதங்களையும் அடக்கும் வலிமை கொண்டிருந்தார். அவர் சிறு கிராமத்துக்குச் சென்றபோது, அங்கிருந்த மக்களிடம் தனது பலவிதமான வித்தைகளைக் காண்பித்தார். அந்தரத்தில் மிதப்பது, வாயில் இருந்து நெருப்பை விடுவது, நீர் மேல் நடப்பது... என்று பல வித்தைகளைக் கண்ட மக்களும் பலத்த கைட்டல்களைத் தெரிவித்து, வணங்கினர்.

அப்போது, ஒரு சிறுவன் பேப்பரில் பாம்பு போன்று செய்து வீசினான். உடனே யோகி கூச்சலுடன், ''யாரது இதை செய்தது. அவனை நான் எரித்துவிடுவேன்'' என்றார். அப்போது அங்கிருந்த பெரியவர், ''முனிவரே. நீங்கள் பஞ்ச பூதங்களை அடக்கத் தெரிகிறது. ஆனால், கோபத்தை அடக்கத் தெரியவில்லையே?'' என்றார்.

உடனே அங்கே அமைதி நிலவியது.

-மனோஹர்,
மைசூரு.

எஸ்எம்எஸ்

ஒருவரின் வளர்ச்சியைப் பார்க்காதே! 
அதற்கான முயற்சியைப் பார்.

-பொறிஞர் நரசிம்மன்,
திருச்சி.


அப்படீங்களா!

வாட்ஸ் ஆஃப்பில்  நாள்தோறும் ஏராளமான தகவல்கள் பரிமாற்றம் நடைபெறுகின்றன.  பொதுவாக முக்கியமான தகவல்
களைத் தவிர தேவையற்ற தகவல்கள்தான் ஏராளமாக இருக்கும். அவற்றையெல்லாம் படிக்க நாள் போதாது.
முக்கியத் தகவல்களை வாட்ஸ் ஆஃப்பிலேயே சேகரித்து வைக்கும் வகையில் சொந்த பயன்பாட்டாளரின் தொலைபேசி எண்ணையே சாட்டில் 'யூ' என வாட்ஸ் ஆஃப் அறிமுகம் செய்தது.   நீண்டகால இடைவெளிக்கு பிறகு முக்கியத் தகவல்களைக் குறிப்படும் வகையில் 'பின்'  என்ற புதிய சேவையை வாட்ஸ் ஆஃப் அறிமுகம் செய்துள்ளது.
குழுக்கள் அல்லது ஒருவரது சாட்டில் பகிரப்படும் முக்கியத் தகவலை குறிப்பெடுத்து வைப்பதுதான் இந்த 'பின்'  சேவையின் பணி. எழுத்துபூர்வ மெசேஜ், இமேஜஸ், ஏமோஜிஸ், வாக்கெடுப்பு உள்ளிட்ட அனைத்து முக்கியமான தகவல்களை 'பின்'  செய்யலாம்.
இந்தச் சேவையைப் பயன்படுத்த முதலில் 'பின்'  செய்ய வேண்டிய மெசேஜை சிறிது நேரம் அழுத்த வேண்டும். பின்னர் வரும் கான்டெக்ஸ் மெனுவில் 'பின்'  சேவையை தேர்வு செய்ய வேண்டும். அதில், 'பின்'  செய்ய வேண்டிய 24 மணி நேரம் அல்லது 7 நாள்கள் அல்லது 30 நாள்கள் என காண்பிக்கும். இதில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்தால் அத்தனை நாள்களுக்கு அந்த தகவல் முக்கியத்துவம் பட்டியலில் இருக்கும். 
குழு சாட்களில் அட்மின்கள் மட்டும் முக்கியத் தகவல்களை 'பின்' செய்து வைக்க முடியும். முக்கியத் தகவல் இல்லையென்றால், 'பின்'  செய்ததில் இருந்து விடுவிக்க மீண்டும் அந்த சாட் தகவலை சிறிது நேரம் அழுத்திபிடித்தவுடன் மீண்டும் அன்பின் சேவையை தேர்வு செய்தால் போதும்.  

- அ.சர்ப்ராஸ்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com