ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கருங்காலி  மாலை அணிவதால் பயன் என்ன?

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கருங்காலி  மாலை அணிவதால் பயன் என்ன?

கருங்காலி மாலை அணிவதால் உடல், மன நலம் வலுவாகும் என்று கூறுகின்றனர்.  இது உண்மையா? ஆயுர்வேதத்தில் கருங்காலி குறித்த வர்ணனை உள்ளதா?

கருங்காலி மாலை அணிவதால் உடல், மன நலம் வலுவாகும் என்று கூறுகின்றனர்.  இது உண்மையா? ஆயுர்வேதத்தில் கருங்காலி குறித்த வர்ணனை உள்ளதா?

-கீதாரமணி,
ஸ்ரீரங்கம்.

கருங்காலிக் கட்டை, பட்டை, காசுக்கட்டி எனும் மரத்தின் பிசின் ஆகிய அனைத்தும் மருத்துவக் குணம் நிறைந்தவை. மனச் சோர்வு, விழிவெண்படல அழற்சி, நுரையீரல், மூச்சுக்குழாய், குரல்வளை ஆகியவற்றில் இருந்து ரத்தம் அல்லது ரத்தக் கறை படிந்த சளி, இருமல் போன்ற உபாதைகளில் கருங்காலிப்பட்டை கஷாயம் சாப்பிட மிகவும் நல்லது.

பதினைந்து கிராம் பட்டையை, ஒரு லிட்டர் தண்ணீருடன் கலந்து கொதிக்கவிட்டு கால் லிட்டராக வற்றியதும் வடிகட்டி, காலையில் பாதியும் மாலையில் பாதியும் வெறும் வயிற்றில் குடிக்க, இந்த உபாதைகளின் தாக்கம் நன்கு குறைந்துவிடும்.

கருங்காலி மாலை, அதன் வைரம் எனும் மரத்தின் கட்டையில் இருந்து தயாரிப்பதாகும். கசப்பு, துவர்ப்புச் சுவை உடையது. குளிர்ச்சியானது. ரத்தத்தைச் சுத்தப்படுத்துவது, குடலில் தேவையற்ற கிருமிகளை அழித்து வெளியேற்றுவது, தோல் அழற்சி, தோலில் படிந்துள்ள கிருமிகளை அழித்து அகற்றுவது, பேதியை நிறுத்துவது, காய்ச்சலைக் குணப்படுத்துவது, பசியைத் தூண்டுவது, ரத்தக் கசிவை உறையச் செய்வது போன்ற சிறந்த செயல்களை கருங்காலி வைரப் பகுதி செய்கிறது. 

கப-பித்த சீற்றங்களால் ஏற்படும் கண்புரை, இருமல், தோல் அரிப்பு, குஷ்டம், வெண்தோல், மற்ற தோல் சார்ந்த உபாதைகள், குடல் புழுவினால் ஏற்படும் உபாதைகள், பசியின்மை, பேதி, ரத்த பேதி, தோல் புண்களால் ஏற்படும் துர்நாற்றம், முறைக் காய்ச்சல் போன்றவற்றைக் குணப்படுத்தும்.

காசுக்கட்டியானது காரம், கசப்புச் சுவை உடையது. உடல் சூட்டை அதிகப்படுத்தும்.  நல்ல ஜீரணகாரி என்பதால், பசியைத் தூண்டும். விந்தணு பெருக்கத்துக்கு உதவும்.  ரத்தத்தைச் சுத்தப்படுத்தும். கபவாத உபாதைகளைக் கண்டிக்கும்.

'கருங்காலியானது குளிர்ச்சியான வீரியமுடையது. பற்களுக்கு உகந்தது. உடல் அரிப்பு, இருமல், ருசியின்மை மாற்றக் கூடியது. உடல் கொழுப்பைக் கரைப்பது, குடல் கிருமிகள், சர்க்கரை உபாதை, காய்ச்சல், புண் ஆகியவற்றைக் குணப்படுத்தும். வெண்குஷ்டம், வீக்கம், மப்புநிலை, ரத்த பித்தம் எனும் கசிவு உபாதை, சோகை, குஷ்டம், கப உபாதைகள் ஆகியவற்றை நீக்கும் திறனுடையது' என்கிறார் பாவ பிரகாசர்.  

பல ஆயுர்வேத மருந்துகளில் கருங்காலி சேர்க்கப்படுகிறது. கருங்காலிக்கு 'கதிரம்' என்று ஆயுர்வேதம் பெயரிட்டுள்ளது. 'கதிராரிஷ்டம்' எனும் ஆயுர்வேத மருந்து மிகவும் பிரசித்தமானது. பசியின் தன்மைக்கு ஏற்ப, இதன் அளவை நிர்ணயித்துச் சாப்பிட வேண்டும். பலதரப்பட்ட தோல் உபாதைகள், இதயம் சார்ந்த நோய்கள், சோகை, கேன்சர் கட்டிகள் எனும் வாயு உபாதை, கட்டிகள், குடல் கிருமிகள், சளியால் ஏற்படும் இருமல்,  மண்ணீரல் வீக்கல், வயிறு உப்புசம் போன்ற உபாதைகளில் நல்ல பலனைத் தரும்.

உட்புறப் பயன்களாக மேல்குறிப்பிட்டவை அனைத்தும் கருங்காலியால் கிடைத்தாலும் அதன் வீரியத் தன்மை, மாலையாகப் பயன்படுத்தினாலும் கிடைக்க வாய்ப்புள்ளது. இதனால் அதன் பயன்பாடு மாலை வடிவமாக உபயோகிக்கலாம். அதனுடன் ருத்திராட்சம் சேர்த்து ஒரே மாலையாகக் கோர்த்து பயன்படுத்தினால் நன்மைகள் பல மேலும் கிடைக்கும்.

(தொடரும்)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com