'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 173

ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால், அன்று குழந்தைகள் வீட்டில் இருந்தனர்.
'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 173


ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால், அன்று குழந்தைகள் வீட்டில் இருந்தனர். ஏழாம் வகுப்பு, எட்டாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த மகன்கள் இருவருக்கும் நீண்ட நாள்களுக்குப் பிறகு தந்தையைப் பார்த்த மகிழ்ச்சி. அவர்களது செய்திகளையும், சாகசங்களையும் சொல்லி மாளவில்லை. மகள் அப்போது பிறந்திருக்கவில்லை.
நீண்ட நாள்களுக்குப் பிறகு (வாரங்கள் போய், மாதம் ஒன்று கடந்துவிட்டிருந்தது....) மனைவி, குழந்தைகளைப் பார்த்ததால் ஏற்பட்ட மகிழ்ச்சி கொஞ்சமல்ல. குளித்து, சாப்பிட்டுவிட்டு அன்றைய தினசரிகளைப் புரட்டத் தொடங்கினேன்.
எப்போதுமே, காலை தினசரியில் தலைப்புச் செய்தியை ஒரு பார்வை பார்த்துவிட்டு, நான் அடுத்தபடியான நோட்டம் விடுவது அன்றைய நிகழ்ச்சிகள் பகுதியாகத்தான் இருக்கும். பெரும்பாலான செய்தியாளர்கள் இந்த வழக்கத்தைக் கடைப்பிடிப்பார்கள். அன்றைய நிகழ்ச்சிகள் பகுதியில் முதலிடம் வகித்திருந்தது, சோனியா காந்தி பங்குபெறும் நிகழ்ச்சியல்ல. மாறாக, குடியரசு துணைத் தலைவர் கே.ஆர். நாராயணனின் நிகழ்ச்சிகள்.
கே.ஆர். நாராயணன் சென்னையில் இருக்கிறார் என்று தெரிந்ததும் எனது பரபரப்பு அதிகரித்தது. அவர் வெளியுறவுத் துறை அதிகாரியாக இருந்தபோதே எனக்குத் தெரிந்தவர். சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இந்தியத் தூதராக இருந்த கே.ஆர். நாராயணனின் அரசியல் பிரவேசம் 1984 தேர்தலில் தொடங்கியது. இந்திரா படுகொலையைத் தொடர்ந்து நடந்த அந்தத் தேர்தலில் ஆரம்பித்து, அவர் குடியரசு துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படும் வரை, கேரள மாநிலம் ஒற்றப்பாலம் தொகுதியின் மக்களவை உறுப்பினராகத் தொடர்ந்தார் அவர்.
அரசியல் ரீதியாகக் கருணாகரனுக்கு எதிரணியில் இருந்தாலும், எனக்கும் அவருக்கும் இடையேயான நெருக்கம் பாதிக்கப்படவில்லை. ராஜீவ் காந்தி அமைச்சரவையில் இணையமைச்சராக கே.ஆர். நாராயணன் இருந்தபோதும், 1989-இல் எதிர்க்கட்சி எம்.பி.யாக இருந்தபோதும் அவரைப் பலமுறை பேட்டி எடுத்திருக்கிறேன். அப்படி ஏற்பட்ட நெருக்கம், அவர் என்னைப் பெயர் சொல்லி 'வா, போ' என்று அழைக்கும் அளவுக்கு வளர்ந்தது.
'மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸ்' என்கிற கல்வி நிறுவனத்தின் நிர்வாகக் கட்டடத்தைத் திறந்து வைப்பதற்காக அவர் சென்னை வந்திருப்பதாக, அன்றைய நிகழ்ச்சிகள் பகுதியில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய நிதியமைச்சரும், மகாராஷ்டிர மாநிலத்தின் முன்னாள் ஆளுநருமான சி. சுப்பிரமணியம் கலந்து கொள்ள இருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
குடியரசு துணைத் தலைவர் என்பதால் அவர் ஆளுநர் மாளிகையில்தான் தங்கி இருப்பார் என்று எனக்குத் தெரியும். அதற்கு மேலும் வீட்டில் உட்கார்ந்திருக்கத் தோன்றவில்லை. தொலைபேசியைச் சுழற்றி, ராஜ் பவனுடன் தொடர்பு கொண்டபோது, கே.ஆர். நாராயணன் இருப்பதாகத் தகவல் தெரிவித்தனர். 
அவரது உதவியாளரை (ஏ.டி.சி.) தொடர்பு கொண்டு சந்திக்க நேரம் கேட்டேன். எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்று கே.ஆர். நாராயணன் தெரிவித்ததாக சற்று நேரத்தில் பதில் வந்தது. அதற்குப் பிறகு நான் ஏன் வீட்டில் இருக்கப் போகிறேன்?

ராஜ் பவன் அருகில் ஏகப்பட்ட கெடுபிடி. அத்தனை பாதுகாப்பு ஏற்பாடுகளும் குடியரசு துணைத் தலைவர் கே.ஆர். நாராயணனுக்காக அல்ல என்பதும், மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மனைவி சோனியா காந்திக்காகத்தான் என்பதும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. காலை 8 மணிக்கே சோனியா காந்தி ஸ்ரீபெரும்புதூர் கிளம்பிச் சென்று, ராஜீவ் காந்தி நினைவிடத்தில் முன்னெடுக்கப்படும் பணிகளைப் பார்வையிட்டதாகச் சொன்னார்கள்.
சோனியா காந்தியை சொந்தம் கொண்டாடுவதில் காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர்களும் தொண்டர்களும் போட்டி போட்டுக் கொண்டிருந்தனர். அதிக அளவில் யார் இருக்கிறார்கள் என்பதில்தான் போட்டி 
நிலவியது.
ஸ்ரீபெரும்புதூர் சென்றுவிட்டு, சென்னையில் சில நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்றார் சோனியா காந்தி. சென்னையில் நடைபெற்ற தென் கிழக்கு ஆசிய அமெச்சூர் ரேடியோ உபயோகிப்பாளர் மாநாட்டின் நிறைவு விழாவில் சோனியா காந்தி ஏன் கலந்து கொள்கிறார் என்று விசாரித்தேன். அப்போது சுவாரஸ்யமான தகவல் கிடைத்தது.
விமான ஓட்டியாக இருந்தபோது, உதிரிபாகங்களை வாங்கி வந்து ராஜீவ் காந்தி அவரே சொந்தமாக ரேடியோவைத் தயாரிப்பாராம். அதன் மூலம், தனது நண்பர்களுடன் தகவல்களைப் பரிமாறிக் கொள்வது வழக்கமாம். சோனியா காந்திக்கும் அதைக் கற்றுக் கொடுத்து, அமெச்சூர் ரேடியோ மூலம் தொடர்பு கொள்ளும் பொழுதுபோக்கை அவருக்கு அறிமுகப்படுத்தி இருந்தார். 1991 மே மாதம் 21-ஆம் தேதி படுகொலை செய்யப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்புகூட, ராஜீவ் காந்தி தனது நண்பர்களுடன் அமெச்சூர் ரேடியோ மூலம் தகவல் பரிமாற்றம் செய்ததாகக் கூறப்படுகிறது.
அதனால்தான் அந்த அமைப்பினர் சோனியா காந்தியைத் தங்களது மாநாட்டில் கலந்துகொள்ள அழைத்திருந்தனர். ஏவிஎம். சரவணன்தான் அதற்கான முயற்சியை முன்னெடுத்தவர். அந்த நிகழ்ச்சியில் தமாகா தலைவர் ஜி.கே. மூப்பனாரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் குமரி அனந்தனும் மேடையில் இருந்தனர் என்று சொன்னார்கள்.
இதெல்லாம் ஆளுநர் மாளிகைக்கு நான் சென்றபோது, அங்கே குழுமியிருந்த காங்கிரஸ் தலைவர்கள் என்னிடம் பகிர்ந்து கொண்டவை. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்களும், காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்களும் ஆளுநர் மாளிகைக்கு உள்ளேயும், வெளியேயும் பெரும் திரளாகக் கூடியிருந்தனர். பெரும்பாலும் பெயர் சொல்லும்படியான தலைவர்கள்.
ஏகப்பட்ட கெடுபிடி. த.மா.கா.-வின் பொதுச் செயலாளரும் மூத்த தலைவருமான எஸ்.ஜி. விநாயகமூர்த்தியையே காவல் துறையினர் தடுத்து நிறுத்தி இருப்பதையும், அவர் காவல் துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருப்பதையும் நான் பார்த்தேன். இன்னொரு பக்கம், த.மா.கா. மாநகராட்சி உறுப்பினர்கள் 'கராத்தே' தியாகராஜன், வெற்றிவேல் உள்ளிட்டவர்கள் தங்கள் ஆதரவாளர்களை அடையாளம் காட்டி, காவல் துறையினரை அனுமதிக்கக் கேட்டுக் கொண்டிருந்தனர்.
இந்தக் களேபாரத்தில் எப்படி உள்ளே போவது என்று தெரியாமல் நான் பரிதாபமாக ஆளுநர் மாளிகைக்கு எதிர்வரிசை நடைமேடையில் நின்று கொண்டிருந்தேன். என்னுடைய அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும், தில்லியிலிருந்து சோனியா காந்தியின் நிகழ்ச்சிக்காக  அவருடன் வந்திருந்த சில பத்திரிகையாளர்கள் காரிலிருந்து இறங்கி ராஜ் பவன் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தனர். கூட்டத்தில் முண்டியடித்து நுழைந்த நான் அவர்களுடன் இணைந்து கொண்டேன்.
உள்ளூர் நிருபர்கள் என்றால் அவர்களை ஓரங்கட்டி தடுத்து நிறுத்தும் நம்ம ஊர் காவல் துறையினர், தில்லி நிருபர்கள் என்றால் அதீத மரியாதையுடன் வழிவிட்டு ஒதுங்கி நிற்பார்கள் என்பதை அப்போது நான் உணர்ந்தேன். அவர்களுடன் நானும் ஆளுநர் மாளிகைக்குள் நுழைந்துவிட்டேன். அங்கே போய்ப் பார்த்தால், நான் மயங்கி விழாத குறை.

ராஜ் பவன் பிரதான கட்டடத்துக்கு எதிரிலுள்ள புல்வெளியில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர்களும் தொண்டர்களும் குழுமியிருந்தனர். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கள் ஆங்காங்கே கோஷ்டியாகப் பிரிந்து அவரவர் தொண்டர்களுடன் நின்று கொண்டிருந்தது, பார்க்கவே வேடிக்கையாக இருந்தது. இப்போது பார்ப்பதுபோல என் கண் முன்னால் தெரிகிறது அந்தக் காட்சி - 
தண்டாயுதபாணி, எம். கிருஷ்ணசாமி, ராஜசேகரன், கத்திப்பாரா ஜனார்த்தனன் உள்ளிட்ட வாழப்பாடி ராமமூர்த்தி ஆதரவாளர்கள் தொண்டர்களுடன் நின்று கொண்டிருந்தனர்.  கே.வீ.தங்கபாலுவைச் சுற்றி முருகானந்தம், மக்பூல்ஜான், பி.வி. சுப்பிரமணியன், குறளரசு ஜெயபாரதி உள்ளிட்டோர் காத்துக் கொண்டிருந்தனர்.
ஆர்.பிரபுவின் ஆதரவாளர்களான ஆர். தாமோதரன், கலிவரதன், ராஜேஸ்வரன் ஆகியோரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் குமரி அனந்தனின் தலைமையில் எர்ணஸ்ட் பால், காமராஜ் ஆகியோரும், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் போளுர் வரதன் தலைமையில் சிலரும் சோனியா காந்தியை சந்திக்கத் தனித்தனியாகக் குழுமி இருந்தனர். 
வாழப்பாடி ராமமூர்த்திதான் முதலில் உள்ளே சென்று சோனியா காந்தியை சந்தித்தார் என்று எனது நினைவு. அதேபோல, த.மா.கா.வினரைச் சந்திக்க சோனியா காந்தியே புல்வெளிக்கு வந்துவிட்டார். எதிர்க்கட்சித் தலைவர் சோ. பாலகிருஷ்ணன், விநாயகமூர்த்தி, ஜெயந்தி நடராஜன், பாரமலை, சுதர்சனம், பீட்டர் அல்ஃபோன்ஸ், டாக்டர் செல்லக்குமார் உள்ளிட்ட தலைவர்கள் வரிசையாக மலர்க் கொத்து, பொன்னாடையுடன் சோனியா காந்தியை சந்தித்து வணக்கம் தெரிவித்தார்கள்.
குடியரசு துணைத் தலைவர் கே.ஆர். நாராயணன் ஓய்வெடுத்துக் கொண்டிருப்பதாகவும், என்னை காத்திருக்கும்படியும் அவரது உதவியாளர் சொல்லியிருந்தார். இதையெல்லாம் ராஜ் பவன் அலுவலகத்தின் ஜன்னல் வழியாக நான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். 
அப்போது ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்தது. எந்த அளவுக்கு சோனியா காந்தி காங்கிரஸ்காரர்களைவிட, ஜி.கே. மூப்பனார் மீதும் தமிழ் மாநில காங்கிரஸ்  மீதும் நம்பிக்கை வைத்திருந்தார் என்பதை அந்த நிகழ்வு வெளிப்படுத்தியது. ராஜீவ் காந்தியுடன் ஸ்ரீபெரும்புதூர் வெடிகுண்டுத் தாக்குதலில் இறந்த காவல் துறை கண்காணிப்பாளர் இக்பாலின் மனைவி, சோனியா காந்தியை சந்தித்து ஒரு மனுவை அளித்தார்.
''அரசிடமிருந்து மிகக் குறைந்த இழப்பீடுதான் கிடைத்தது. வாடகை வீட்டில் வசிக்கிறோம். எனது மகளுக்கும் மருமகனுக்கும் ஏதாவது வேலை வாங்கித் தாருங்கள்'' என்று இக்பாலின் மனைவி சோனியாவிடம் தெரிவித்தபோது, சோனியா காந்தி அழைத்தது ஜி.கே. மூப்பனாரைத்தான். அந்தக் குடும்பத்துக்கு உதவும்படி அவரைக் கேட்டுக் கொண்டபோது, அருகில் ஜெயந்தி நடராஜன் இருந்தார் என்று நினைக்கிறேன்.

அது இருக்கட்டும், காங்கிரஸ் கோஷ்டிகள் சோனியா காந்தியை சந்திக்க ராஜ் பவனில் முண்டியடித்ததற்குக் காரணம் என்ன தெரியுமா? சோனியா காந்தி அரசியலுக்கு வர வேண்டும், காங்கிரஸ் தலைமையை ஏற்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுப்பதற்காக மட்டும் அவர்கள் வரவில்லை. தத்தம் தலைவர்களைத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமிக்க வேண்டும் என்று சோனியா காந்தி பரிந்துரைப்பார் என்று நம்பிக்கையுடன் அவர்கள் வந்திருந்தார்கள்.
சோனியாவை சந்தித்துவிட்டு கோஷ்டி கோஷ்டியாகக் காங்கிரஸார் கலையத் தொடங்கி இருந்தனர். அப்போது ராஜ் பவன் அதிகாரி ஒருவர் என்னிடம் கேட்டார் - ''சார், துணை ஜனாதிபதியை சந்திக்க முதல்வர் கருணாநிதி வரப்போவதாகத் தகவல் வந்திருக்கிறது... அதற்குள் இவர்கள் போய்விடுவார்களா?''
அந்த அதிகாரியின் கவலை அவருக்கு. ஆனால் நான் சுறுசுறுப்பானேன். குடியரசு துணைத் தலைவர் கே.ஆர். நாராயணனைப் பார்க்க ஆளுநர் மாளிகைக்கு வரப்போகும் முதல்வர் கருணாநிதி, அங்கே தங்கியிருக்கும் சோனியா காந்தியை சந்திப்பாரா? அப்படியே அவர் சந்திக்க விழைந்தால், சோனியா காந்தி அதற்கு சம்மதிப்பாரா?
கே.ஆர். நாராயணனை சந்திக்க கிண்டி ராஜ் பவன் வளாகத்தில் நுழைந்த எனக்கு இந்தக் கேள்விகள்தான் முன்னிலை வகித்தன...

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com