

கர்நாடக சங்கீதம், ஹிந்துஸ்தானி, மெல்லிசை, கஜல், பஜன் பாடல்களை ஸ்வரம் சுத்தமாக மட்டுமல்ல ; வார்த்தைகள் உச்சரிப்பு சுத்தமாகவும் பாடியிருப்பவர் வாணி ஜெயராம்.
தமிழ், ஹிந்தி பக்திப் பாடல்களை எழுதி பாடியிருக்கிறார் வாணி. தமிழில் கவிதைத் தொகுப்பையும் வெளியிட்டிருக்கிறார்.
கலைவாணியின் குடும்பத்தினருக்கு கர்நாடக சங்கீதம் சுவாசமாக இருந்தது.
ஐந்து வயதாக இருக்கும்போதே கடலூர் சீனிவாச ஐயங்கார் பயிற்சியை அளித்தார். சிறுமியாக இருக்கும்போதே சென்னை வானொலியில் பாட ஆரம்பித்து விட்டார். சென்னையில் ராணி மேரிக் கல்லூரியில் படித்த கலைவாணிக்கு "ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா'வில் வேலை கிடைத்தது. கணவர் ஜெயராம் மும்பையில் பணிபுரிந்து வந்ததால், வாணி ஜெயராமாக மாறி பணிமாற்றமும் பெற்று மும்பைக்குச் சென்றார்.
வாணியின் எண்ணம் அறிந்த கணவர் ஜெயராம் ஊக்கம் அளித்து, உஸ்தாத் அப்துல் ரஹ்மான் கான் என்பவரிடம் ஹிந்துஸ்தானி சங்கீதம் பயில வைத்தார்.
வாணியின் குரலால் கவரப்பட்ட உஸ்தாத், "மகளே வாணி. உன் திறமை உனக்கு வெளிச்சம் காட்டும். வங்கி வேலையை விட்டுவிடு'' என்றார். ஜெயராமும் "உஸ்தாதின் முடிவு சரி' என்றார். வாணியும் வேலையை ராஜிநாமா செய்தார்.
பயிற்சி முடியும் தருவாயில் உஸ்தாத் அன்றைய பிரபல இசையமைப்பாளர் வசந்த் தேசாயிடம் வாணியை அறிமுகம் செய்தார். உடனே தான் இசை அமைக்கும் மராத்தி படத்தில் பாடவும் வாய்ப்பு கொடுத்தார்.
தொடர்ந்து ஹிரிஷிகேஷ் முகர்ஜி இயக்கும் "குட்டி' படத்தில் தேசாய் மூன்று பாடல்களைப் பாட வாய்ப்பு கொடுத்தார். சூப்பர் ஹிட்டாக, வாணியின் பாடல்கள் "பினாகா கீத் மாலா' நிகழ்ச்சியில் ஒலிபரப்பானது. 16 வாரங்கள் டாப் ஒன்னாக , வாணியின் "போலே ரே பப்பிஹரா" பாடல் இடம் பிடித்தது. வாணியின் கனவும் நனவானது.
எந்தப் பாடகர்களின் குரல்களைக் கேட்டு வளர்ந்தாரோ, அவர்களுடனே இணைந்து பாட ஆரம்பித்தார். குஜராத்தி, போஜ்புரி, அஸ்ஸாமி , ஹரியான்வி என்று அவரது இசை சாம்ராஜ்ஜியம் பல மொழிகளில் விரிந்தது.
ஹிந்தி "மீரா' படத்தில் உலகப் புகழ்பெற்ற சிதார் இசைக் கலைஞர் "பாரத ரத்னா' பண்டிட் ரவி ஷங்கர் இசை அமைத்து எல்லா பாடல்களையும் வாணியைப் பாட வைத்தார்.
1971-இல் ஹிந்தியில் அறிமுகம். ஆனாலும், தமிழுக்கு 1974 -இல்தான்.
வாணி பாடிய ஹிந்தி பாடல்கள் அடங்கிய இரண்டு இசை நிகழ்ச்சி சென்னையில் 1973-இல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதல் நாள் நிகழ்ச்சிக்கு வந்த இசையமைப்பாளர் சுப்பையா நாயுடு "தாயும் சேயும்' படத்தில் வாணியைப் பாட வைத்தார். அந்தப் படம் வெளியாகவே இல்லை. இரண்டாவது நாள் நிகழ்ச்சிக்கு வந்த இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன், 1974 -இல் ஏ.சி.திருலோகசந்தர் இயக்கத்தில் வெளியான "தீர்க்க சுமங்கலி' படத்தில் "மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ..' பாடல் மூலம் அறிமுகம் செய்ய, அது வாணியை பிரபலமாக்கியது.
"மல்லிகை என் மன்னன் மயங்கும் ..' பாடல் இடம் பெற்றிருக்கும் "தீர்க்க சுமங்கலி' என்று விளம்பரம் செய்திருந்தார்கள். இந்தப் பாடலின் வெற்றிக்கு கே.ஆர். விஜயா அற்புதமாக நடித்திருந்ததும் ஒரு காரணம் என்று ஏற்றுக் கொண்டவர் வாணி. அடுத்த ஆண்டு ஏ.சி.திருலோகசந்தர் இயக்கத்தில் வெளியான "அன்பே ஆருயிரே' படத்தில் எம்.எஸ். விஸ்வநாதன் இசை அமைப்பில் "மல்லிகை முல்லை பூப்பந்தல் மரகத மாணிக்க பொன்னூஞ்சல்..' பாடலைப் வாணி பாட அதுவும் சூப்பர் ஹிட்.
சென்னை இசை நிகழ்ச்சியின்போது மலையாளப் படத்துக்கு இசை அமைப்பாளர் சலீல் செளத்ரி வாணியை ஒப்பந்தம் செய்தார். அடுத்தடுத்த ஆண்டுகளில் ஹிந்தி படங்களில் பாட நாள் ஒதுக்க முடியாமல் போகும் அளவுக்கு தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஒடிஸா, வங்காளம், துளு மொழிகளில் பாட வாய்ப்பு வர வாணி கணவருடன் சென்னை வந்தார்.
தொடக்கத்தில் ஒடியா, வங்காள மொழிப் பாடல்களைப் பாட வாணி ஜெயராம் கொல்கத்தா சென்று வருவார். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கில் பிஸியானதால், ஒடியா வங்காள இசை அமைப்பாளர்கள் வாணிக்காக சென்னை வர ஆரம்பித்தனர்.
1983-இல் தில்லியில் நடைபெற்ற அகில உலக ஹிந்தி மாநாட்டில் கடவுள் வணக்கமான "சரஸ்வதி வந்தனம்' பாடலை வாணி பாடினார். அப்போது, அன்றைய பிரதமர் இந்திரா காந்தி தன் இருக்கைக்கு அருகிலேயே வாணியை அமரச் சொன்னார். "யார் யாரோ என்னை வந்து சந்திக்கிறார்கள். ஆனா நீ வந்து என்னை சந்திக்கலையே!'' என்றார் இந்திரா.
"மேடம். நான் ஒரு சாதாரணப் பாடகர். நீங்களோ பிரதமர். அவசர வேலைகள் ஆயிரம் இருக்கும் நான் வருவது உங்கள் வேலைக்குத் தொந்தரவாக இருக்கும் என்றுதான் நான் முயற்சிக்கவில்லை'' என்று வாணி சொன்னதும், தனது செயலாளரை அழைத்து வாணிக்கு அடுத்த நாளில் நேர ஒதுக்கீடு கொடுத்து சந்தித்தார். அப்போது, "'தெற்கிலிருந்து வந்து ஹிந்தியில் திரைப் பாடல்கள் கஜல் பஜன் என்று கலக்குகிறாயே'' என்று பாராட்டினார்.
"அவன்தான் மனிதன்' படத்தில் "எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது. அது எந்த தேவதையின் குரலோ " எனும் பாடலை ஜெயலலிதாவுக்காக வாணி பாடியிருந்தார். ஹிட்டான அந்தப் பாடலை பல ஆண்டுகள் வரை தினமும் தூங்கப் போகும் முன்பு ஜெயலலிதா கேட்டு வந்தாராம். ஒரு பேட்டியில் வாணியே சொன்ன தகவல் இது.
மேற்கு வங்க முன்னாள் முதல்வர் ஜோதி பாஸூவின் மனைவி கமலா பாஸூ , "வங்க மொழி பேசுபவர் பாடுவதைவிட நீ அருமையாக வங்காளத்தில் பாடுகிறாய்..'' என்று பாராட்டியிருக்கிறார்.
"அபூர்வ ராகங்கள்' படத்தில் "ஏழு ஸ்வரங்களுக்குள்..', "சங்கராபரணம்' (தெலுங்கு) படத்தில் "மானஸ சஞ்சரரே' ... "ஸ்வாதி கிரணம்' (தெலுங்கு) படத்தில் "அனாதிநீயரா ஹரா " பாடலுக்கு தேசிய விருதுகள் வாணிக்கு வழங்கப்பட்டன.
கர்நாடக சங்கீதம் முதல் மேற்கத்திய கிளப் டான்ஸ் பாடல்கள்வரை ஒரு கை பார்த்தவர் வாணி! மீன் குழம்பு எப்படி இருக்கும் என்றுகூட தெரியாத வாணி, "முள்ளும் மலரும்' படத்தில் "நித்தம் நித்தம் நெல்லுச் சோறு..' என்ற பாடலை எச்சில் ஊற ஊற பாடி, பாடலைக் கேட்டவர்கள் வாயிலும் எச்சில் ஊற செய்தவர் என்ற பெயரும் இவருக்கு உண்டு.
"டூயட் பாடும்போது, ஆண் , பெண் பாடகர்கள் இருவருமே திறமை காட்டி போட்டி போட்டு சரிசமமாகப் பாடுகிறார்கள். ஆனால் ஊதியம் ஆண் பாடகருக்கு அதிகம். பெண் பாடகருக்கோ குறைவு. அதுபோல் படத்தில் டைட்டில் கார்டு போடும் பொழுதும், பெண் பாடகர் எத்தனை சீனியர் பாடகராக இருந்தாலும், அவரது பெயரை ஜூனியர் ஆண் பாடகர்களின் பெயர்களுக்குக் கீழ்தான் எழுதிக்காட்டுவார்கள். அந்த மனக்குறை தீராத குறையாகவே இருந்துவிட்டது.
பாலைவனச்சோலை படத்தில்
"மேகமே மேகமே ... பால் நிலா தேயுதே...' பாடல்
"எனக்கொரு மலர்மாலை நீ வாங்க வேண்டும்
எனக்கொரு மலர்மாலை நீ வாங்க வேண்டும்
அது எதற்கோ...." என்று முடியும்.
அந்த வரிகள் கானக்குயில் வாணி ஜெயராமுக்கு அஞ்சலி மாலையாக அமைந்துவிட்டது. தனக்கு "பத்மபூஷன்' விருது அறிவிக்கப்பட்டதை அறிந்திருந்த வாணி அதை பெற்றுக் கொள்ளும் முன்பே புறப்பட்டுவிட்டார், அவரது ஜெயராம் ஸாரைத் தேடி (2018-இல் இறந்தார்).
"ஆயிரம் ஆண்டுகள்... ஆயிரம் பிறவிகள் பூமியில் பிறந்திட வேண்டுகிறேன். அத்தனை பிறப்பிலும் இத்தனை உறவுகள் அருகினில் இருந்திட வேண்டுகிறேன். உங்கள் அருகினில் இருந்திட வேண்டுகிறேன்' என்று ஒவ்வொரு இசை நிகழ்ச்சிகளின்போதும் ரசிகர்களிடம் பாடி வாணி விடை பெறுவார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.