ஆஸ்கர் போட்டியும் சுவாரஸ்யமும்!

ஆஸ்கர் இறுதிப் பரிந்துரைப் பட்டியலுக்கு முந்தைய தகுதிப் பட்டியலுக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ள 301 படங்களின் பெயர்களைத் தேர்வுக் குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
ஆஸ்கர் போட்டியும் சுவாரஸ்யமும்!


ஆஸ்கர் இறுதிப் பரிந்துரைப் பட்டியலுக்கு முந்தைய தகுதிப் பட்டியலுக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ள 301 படங்களின் பெயர்களைத் தேர்வுக் குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

உயரிய விருதாகக் கருதப்படும் "தி அகாதெமி அவார்ட்ஸ்' எனப்படும் ஆஸ்கர் விழா ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. அந்த வகையில் 95--ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவு வரும்  மார்ச் 13-இல்  நடைபெறவுள்ளது.  தேர்வுக் குழுவினர் வெளியிட்ட பட்டியலில் சுவாரஸ்யமான படங்கள் இடம்பெற்றுள்ளன.

விவேக் அக்னிஹோத்திரி இயக்கி சர்ச்சையைக் கிளப்பிய "தி காஷ்மீர் ஃபைல்ஸ்'  திரைப்படமும்,  ரிஷப்  ஷெட்டி இயக்கி நடித்த "காந்தாரா' திரைப்படமும், பார்த்திபனின் "இரவின் நிழல்' படமும், மாதவன் இயக்கி நடித்த "ராக்கெட்ரி' படமும் இடம் பிடித்துள்ளன.  இது இந்திய அளவில் ஆஸ்கர் பட்டியலுக்கு எப்போதும் போகாத எண்ணிக்கையாகும்.

இதுதவிர ஆலியா பட் நடித்த "கங்குபாய் கத்தியவாடி' படமும் இடம் பெற்றுள்ளது.  ஏற்கெனவே தேர்வான " ஆர் ஆர் ஆர்' இந்தியா சார்பில் அதிகாரபூர்வமாக ஆஸ்கர் தேர்வுக்கு அனுப்பப்பட்ட குஜராத்திப் படமான "ஷலோ ஷோ' படமும் இடம் பிடித்துள்ளன. இவற்றுடன் "மீ வசந்த்ராவ்', "தி நெக்ஸ்ட் மார்னிங்', கிச்சா சுதீப் நடித்த "விக்ராந்த் ரோனா' உள்பட 10 இந்திய திரைப்படங்கள் இடம்பிடித்துள்ளன. 

மேலும் "அவதார்: தி வே ஆஃப் வாட்டர்', "பிளாக் பாந்தர்: வகாண்டா பாரெவர்', "ஆப்டர்சன்'  போன்ற ஹாலிவுட் படங்களும் இடம் பெற்றுள்ளன.  இதனைத் தொடர்ந்து "தி காஷ்மீர் ஃபைல்ஸ்' இயக்குநர் விவேக் அக்னிஹோத்திரி தனது ட்விட்டர் பக்கத்தில் தனது படம் ஆஸ்கர் விருதுகளுக்கான தகுதிப் பட்டியலில் இடம்பிடித்துள்ள செய்தியைப் பகிர்ந்து "இந்திய சினிமாவுக்கு இது சிறப்பான ஓர் ஆண்டு' எனத் தெரிவித்திருக்கிறார்.

"இரவின் நிழல்' திரைப்படம் இடம்பெற்றதைத் தொடர்ந்து பார்த்திபனும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி ட்வீட் ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில், "அந்த மஹா சமுத்திரத்தில் இந்த எளியவனின் படம் பரிந்துரை பட்டியல் வரை வந்ததே வரம்தான். அதுவும் ஒரு ரூபாய்  கூட செலவழிக்காமல் வந்ததே பெரிய விஷயம்தான்''! என்று குறிப்பிட்டுள்ளார்.  ரிஷப் ஷெட்டியின் "காந்தாரா' திரைப்படம் சிறந்த படம் மற்றும் சிறந்த நடிகர் ஆகிய இரண்டு பிரிவுகளில் தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மற்றொருபுறம் இந்தியாவின் அதிகாரபூர்வமான நுழைவாக தேர்வாகாமல் போன "ஆர் ஆர் ஆர்' திரைப்படத்தைத் தனிப்பட்ட முறையில் ஆஸ்கர் விருதுக்கு அனுப்பினார் இயக்குநர் ராஜமெளலி.  இதன் விளைவாக ஆஸ்கரின் தேர்வுப் பட்டியலில் (ஷார்ட்லிஸ்ட்டில்) ஒரிஜினல் பாடல் பிரிவில் எம்.எம்.கீரவாணி இசையமைத்திருந்த "ஆர் ஆர் ஆர்' படத்தின் "நாட்டு நாட்டு' பாடல் இடம்பெற்றது.

 இதில் ஏற்கெனவே கோல்டன் குளோப் விருதை வெற்றிருந்த ராஜமௌலியின் "ஆர் ஆர் ஆர்' திரைப்படத்தின் "நாட்டு நாட்டு' பாடல் எதிர்பார்த்தபடி "சிறந்த பாடல்' பிரிவில் நாமினேஷனில் இடம் பெற்றுள்ளது. அதே போல் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியான "தி எலிபென்ட் வில்ஸ்பெர்ஸ்' என்ற ஆவணத்திரைப்படம் "சிறந்த ஆவணக் குறும்படம்' பிரிவிலும், "ஆல் தட் பிர்தஸ்' "சிறந்த ஆவணப்படம் பிரிவிலும் நாமினேட்டாகி உள்ளன. ஆனால், இந்தியா சார்பில் தேர்வு செய்யப்பட்டு ஆஸ்கருக்கு அனுப்பப்பட்ட குஜராத்தித் திரைப்படமான " தி லாஸ்ட் பிலிம் ஷோ " திரைப்படம் இந்த நாமினேஷன் பட்டியலில் இடம் பெறவில்லை.

அதேபோல் "ஆர் ஆர் ஆர்' படம், "சிறந்த பாடல்' தவிர, வேறெந்த பிரிவிலும் இடம்பெறவில்லை. அந்தப் படம் சிறந்த இயக்குநர், சிறந்த படம், சிறந்த நடிகர் உள்ளிட்ட பிரிவுகளில் போட்டிக்கு அனுப்பப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்ற பிற படங்கள்: "தி குயிட் வெஸ்ர்டன் பிராண்ட்',  தி அவதார் தி அவே வாட்டர்,  எவர்திங் எவர்வேர் ஆல் திங்க்ஸ், தி டாப் கன் மார்வேக், "தி பர்மான்ஸ்' சுவாரஸ்யங்கள்: விருது வழங்கும் அமைப்பிலிருந்த மார்கரெட் ஹெரிக் என்ற பெண் ஒருவர், விருதை பார்த்துவிட்டு அந்தச் சிலையின் உருவம் தனது மாமா ஆஸ்கர் போல அந்த உருவம் இருப்பதாக கூறினார் என்றும், அதனால்தான் அந்த விருதுக்கு ஆஸ்கர் என பெயரிடப்பட்டது என்றும் ஒரு வதந்தி இருக்கிறது.

1939- ஆம் ஆண்டுதான் இந்த விருதுக்கு ஆஸ்கர் விருது என்று பெயரிடப்பட்டது. இந்த விருதிற்கான அதிகாரபூர்வ பெயர் தி அகாதெமி அவார்ட்ஸ்  என்பதாகும்.
பார்க்க பளபளவென இருக்கும் இந்த விருதுகள், உண்மையில் முழுமையாக தங்கத்தால் செய்யப்பட்டவை அல்ல. இவை வெண்கலத்தால் செய்யப்பட்டு, 24 கேரட் தங்க முலாம் பூசப்பட்டவை ஆகும்.

இரண்டாம் உலகப் போரின்போது, இந்த விருதுகள் செய்ய போதுமான உலோகம் கிடைக்கவில்லை என்பதால், மூன்று ஆண்டுகளுக்கு பிளாஸ்டர் ஆஃப் பாரிஸில் இந்த விருதுகள் செய்யப்பட்டு வெற்றியாளர்களுக்கு வழங்கப்பட்டது.

ஆஸ்கர் விருதுகளைத் தயாரிப்பது சுலபமானது அல்ல. 50 விருதுகளை தயாரிக்க மூன்று மாதங்கள் ஆகும். இந்த விருது 35 சென்டி மீட்டர் உயரம் கொண்டது.  இதன் எடை 4 கிலோ.

இந்த விருதின் உருவத்தில் இருக்கும் செய்தி என்ன தெரியுமா? இதில் ஃபிலிம் ரீல் ஒன்று இருக்கும். அந்த ரீலில் ஐந்து ஆரங்கள் இருக்கும். நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள் மற்றும் எழுத்தாளர்களை அந்த 5 ஆரங்கள் குறிக்கும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com