மாற்றம் தேவை...!

சென்னையில் திருநங்கைகளின் வாழ்வில் ஒளியேற்ற தொடங்கப்பட்டதுதான் "சகோதரன்' அமைப்பு.
மாற்றம் தேவை...!


சென்னையில் திருநங்கைகளின் வாழ்வில் ஒளியேற்ற தொடங்கப்பட்டதுதான் "சகோதரன்' அமைப்பு.  இந்த அமைப்பை சேர்ந்த சுதா,  திருநங்கைகள் தங்களது வாழ்வில் முன்னேற  பல்வேறு நலத் திட்டப் பணிகளைச் செய்து வருகிறார்.   இவரது சேவையை பாராட்டி சுதாவுக்கு கலைமாமணி விருதும் வழங்கி பாராட்டியுள்ளது அரசு. 

அவருடன் ஓர் சந்திப்பு:

திருநங்கைகளின்  முன்னேற்றத்தில்  உங்களுக்கு ஆர்வம் வந்தது எப்படி?

நான் ஆணாக இருந்து திருநங்கையாக மாறியபோது  ஏற்பட்ட பாதிப்பு, அவமானம் ஆகியன திருநங்கைகளுக்கான வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தி, சமூகத்தில் உயர்ந்த நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. 

"சகோதரன்' அமைப்பை 1996- ஆம் ஆண்டு அக். 2 -இல் சுனில்மேனன் என்பவர் தொடங்கினார். இந்த அமைப்பின் துணைத் தலைவராக பதவியேற்றேன். தொடர்ந்து, அமைப்பில் செயல்பட்டுவருகிறேன்.

தமிழகத்தில் திருநங்கைகள் சுமார் 30 ஆயிரம் பேர் உள்ளனர். நான் வாரியத்தில் அங்கம் வகித்தபோது,   ஏராளமானவர்களை உறுப்பினர்களாகச் சேர்த்தேன்.  சகோதரன் அமைப்பு மூலம்  2, 500 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளைப் பெற்று தந்துள்ளேன்.

1,200 பேருக்கு அரசின் இலவச வீடுகளைப் பெற்று தந்தேன். சென்னையில் மட்டும் 500 பேர் பயன் அடைந்தனர்.

சமூக நலத் துறையின் மூலம் திருநங்கைகளுக்கு100 சதவீத மானியமாக ரூ.50 ஆயிரம் உதவித் தொகையை சென்னையில் 20  பேருக்குப் பெற்று தந்தேன்.

சுமார் 300 திருநங்கைகள் அரசு,  தனியார்  துறைகளில் வேலைவாய்ப்பு பெற வழிவகை செய்தேன். சிறுதொழில் புரிய வங்கிக் கடனுதவியும் பெற்றுதருகிறேன்.

வீட்டில் இருந்து விரட்டப்பட்டட 100 திருநங்கைகள் தவறான பாதைக்குசெல்வதைத் தடுத்து,  அவர்களது குடும்பத்தினருக்கு ஆலோசனை வழங்கி குடும்பத்துடன் சேர்த்து வைத்துள்ளேன். ஆண்டுதோறும் 25 திருநங்கைகளை கல்லூரிகளில் அமைப்பின் சார்பில் படிக்க வைக்கிறேன்.

திருநங்கைகள் சந்திக்கும் பிரச்னைகள் என்ன?

தன்னுள் ஏற்படும் மாற்றத்தால், திருநங்கைகள்  மன உளைச்சலால் குழப்பத்துக்கு  ஆளாகிறார்கள். மாற்றம் அடைந்த திருநங்கையர்களால் பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது, கழிவறைகளைப் பயன்படுத்துவதிலேயே பிரச்னை ஏற்படுகிறது. இதனால் கல்வியும் பாதிக்கப்படுகிறது.

எங்களைப் போன்றவர்களையும் மனித இனமாக மதிக்க வேண்டும். சங்கக் காலங்களிலும், புராணங்களிலும் அங்கீகாரம் உள்ளது. 

திருநங்கைகளுக்கு வீடு, உணவு, உடை என அத்தியாவசியமானவைகளே கிடைப்பதில்லை. அவர்கள் மீதான கேலி, கிண்டல் செய்வோர் மீது நடவடிக்கை தேவை.


முற்போக்கு சிந்தனைகள் மூலம் அவர்கள் மீது ஒருபுறம் அன்பு செலுத்தினாலும் ஆதரவு காட்டினாலும் சமூகமோ அவர்களின் மீதான மதிப்பை குறைத்தே காட்டுகிறது. பழித்தே பேசுகிறது. இழித்தே கூறுகிறது. இந்த நிலை மாற வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com