ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: தொற்று உபாதையை தவிர்க்க...

இரவில் குளிரும், விடியற்காலையில் பனியும், பகலில் கடும் வெயிலும் தற்சமயம் தமிழகத்தில் நிலவுவதால், பலரும் இருமிக் கொண்டும், சளியைத் துப்பிக் கொண்டும், தும்மலுடன் கூடிய மூச்சிரைப்பாலும் அவதிப்படுகின்றனர்
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: தொற்று உபாதையை தவிர்க்க...

இரவில் குளிரும், விடியற்காலையில் பனியும், பகலில் கடும் வெயிலும் தற்சமயம் தமிழகத்தில் நிலவுவதால், பலரும் இருமிக் கொண்டும், சளியைத் துப்பிக் கொண்டும், தும்மலுடன் கூடிய மூச்சிரைப்பாலும் அவதிப்படுகின்றனர். அவர்கள் அருகில் சென்று நிற்பதற்கோ, பேசுவதற்கோ பயமாக இருக்கிறது. தொற்று உபாதை ஏற்பட்டுவிடுவோ என்ற அச்சம் ஏற்படுகிறது. இந்த உபாதையைத் தவிர்க்க வழி என்ன?

-வேலாயுதம், வில்லிவாக்கம்,
சென்னை.

பின்பனிக் காலத்தின் இறுதிப் பகுதியை நெருங்கிக் கொண்டிருக்கும் தமிழகத்தில், பகலின் கடும் வெயிலின் தாக்கத்தால் தலை- தொண்டை - உணவுக்குழாய், மூச்சுக்குழாய் பகுதிகளில் உறைந்துள்ள கபத்தின் தன்மையானது நீர்த்து விடுவதால் உடலே அதை வெளிப்படுத்த எடுக்கும் முயற்சிகளே நீங்கள் குறிப்பிடும் இருமல், சளி, தும்மல், மூச்சிரைப்பு போன்றவையாகும்.

இவற்றைத் தவிர்க்க, செரிமானத்தில் சுலபமானவையும், வரட்சியானவையும் இரவு உணவாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். உளுந்தும் அரிசியும் உப்பும் தண்ணீரும் சேரக் கூடிய மாவுப் பொருட்களை இரவில் சாப்பிடக் கூடாது. அதாவது, இட்லி, தோசை, வடை போன்றவை இரவில் தொண்டையில் சளி இறுகப் பற்றிக் கொண்டு செருமி செருமி பலரும் கஷ்டப்படுவதை இந்நாட்களில் காண்கிறோம்.

காரம், கசப்பு, துவர்ப்புச் சுவை, சூடான வீர்யம், ஊடுருவும் தன்மை, வரண்ட தன்மையுடைய உணவுகளையே தேர்ந்தெடுப்பதும், அதையும் அதிக அளவில் அல்லாமல் அரை வயிறுமாகச் சாப்பிடுவதை வழக்கமாகிக் கொண்டால், பகலில் உருகுவதற்கான அளவில் தொண்டையிலும், தலையிலும் சளி சேர்ந்திருக்காது.

சிறுதானியங்களாகிய துவரம் பருப்பு, கொண்டைக் கடலை, பார்லி, ராஜ்மா, பயத்தம் பருப்பு சிவப்பு நிற அரிசி, மிளகு, சீரகம், சுக்கு, திப்பிலி போன்றவற்றைக் கலந்து தயாரிக்கப்படும் கஞ்சியை வடிகட்டி, சூடு ஆறியவுடன் சிறிது தேன் கலந்து இரவில் சாப்பிடுவதன் மூலம் கப உபாதைகளை பகலில் பெருமளவு தவிர்க்கலாம்.

உப்பு கரைத்த வென்னீரைக் கொண்டு தொண்டையைக் கழுவி துப்பி விடுவதும், சுக்கு வென்னீரால் வாயைக் கழுவிக் கொள்வதும் இரவில் செய்துகொள்ள வேண்டிய நல்ல சிகிச்சை முறைகளாகும்.

அதுபோலவே, உப்பு வென்னீரைக் குடித்து வாந்தி செய்வதன் மூலமாக, தொண்டையின் உட்புறக் குழாய்களில் படிந்துள்ள கபதோஷத்தை வெளியேற்றிவிடுவதும் நல்லதே. வால்மிளகு- வசம்பு- விராளி மஞ்சள் போன்றவற்றில் ஒன்றை நெருப்பில் காண்பித்து, அதிலிருந்து வரும் புகையை மூக்கினுள் செலுத்தி முகர்வதால், கெட்டி சளியானது கரைந்து வெளிப்படும் உபாயமும் சரியானதே.

மூக்கினுள் மூலிகைத் தைலத்தைச் செலுத்தி, சளியைக் கரைத்து வெளியேற்றிவிட்டால், மூச்சுக் குழாயினுள் பிராண வாயுவின் வரவானது எளிதாகிவிடும் என்பதால், அந்த முயற்சிகளையும் செய்துவிடுவதும் நல்லதே.

இந்த உபாதையைத் தடுத்துக் கொள்வதற்காக, நம் முன்னோர் கடைப்பிடித்த உபாயங்களில், மூலிகைகளைக் காய்ச்சி வெல்லம் கலந்து, தாதிரிபூ சேர்த்து பீப்பாயில் அடைத்து, பூமியைக் குழித்து அதன்உள்ளே, 48 நாட்களுக்குப் பிறகு எடுத்து வடிகட்டி அருந்தும் அரிஷ்ட- ஆஸவே மருந்துகள் மிகவும் பிரபலமானவை.

அந்த வகையில் தற்சமயம் விற்பனையிலுள்ள தசமூலாரிஷ்டம், வாஸாரிஷ்டம், கனகாஸவம், பலாரிஷ்டம், ஜீரகாத்யாரிஷ்டம், பிப்பல்யாஸவம் போன்றவை தேர்ந்தெடுத்து சாப்பிடக் கூடியவை. இந்த விஷயத்தில் மருத்துவரின் ஆலோசனை மிகவும் முக்கியம்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com