மூன்றாவது கண்...!

பார்வையற்றவர்களும் சாதாரண மனிதர்கள் போல எந்தவித பிரச்னையும் இல்லாமல் சாலையில் நடந்து செல்லும் வகையில்,   மூன்றாவது கண்ணாக "ஸ்மார்ட் ஸ்டிக்' -ஐ  அமெரிக்காவைச் சேர்ந்த குமார் கண்டறிந்துள்ளார்.
மூன்றாவது கண்...!
Published on
Updated on
1 min read

பார்வையற்றவர்களும் சாதாரண மனிதர்கள் போல எந்தவித பிரச்னையும் இல்லாமல் சாலையில் நடந்து செல்லும் வகையில்,   மூன்றாவது கண்ணாக "ஸ்மார்ட் ஸ்டிக்' -ஐ  அமெரிக்காவைச் சேர்ந்த எஸ்.சத்தியேந்திர குமார் கண்டறிந்துள்ளார்.   புதிய வகையிலான தொழில்நுட்பத்துடன்கூடிய  இந்த  ஸ்டிக்குக்கு  இந்தியாவில் காப்புரிமையும் அவர் பெற்றுள்ளார்.

பார்வையற்றவர்கள் நடக்கும்போது தற்போது சாதாரண வகையிலான ஸ்டிக்கை பயன்படுத்துகின்றனர்.  மேலும்,  ஒருவரது துணையுடன் சாலையில் நடக்க வேண்டியதுள்ளது. இந்தப் புதிய ஸ்டிக் பெரிய வரப்பிரசாதமாக இருக்கும். இதைக் கண்டறிந்த எஸ்.சத்தியேந்திர குமாரின்  சொந்த ஊர் கோவில்பட்டி.  

இவரிடம் பேசியபோது:

""புதிய ஸ்மார்ட் ஸ்டிக் அலுமினியத்திலானது. தேவையான அளவு உயரத்தைக் கூட்டவோ, குறைக்கவோ இயலும்.

ஸ்டிக்கின் நடுப்பகுதியில் சிறிய அளவிலான காமிரா பொருத்தப்பட்டிருக்கும்.  இதில்,  சென்சார்கள்,  ஜி.பி.ஆர்.எஸ். கருவி,  ஜி.பி.எஸ். கருவி  ,எல்.டி.இ. கருவி உள்ளிட்டவை பொருத்தப்பட்டுள்ளன. இவைத் தவிர,  மைக், ஸ்பீக்கர், ஹெட் போன் உள்ளிட்டவைகளும் உள்ளன. ஸ்டிக்கின் செயல்பாடுகளை கைப்பேசியில் இணைக்க இயலும்.  

பார்வையற்றவர்கள் ,இந்த ஸ்டிக்கை கையில் வைத்துக் கொண்டு நடந்து சென்றால், சாலையில் உள்ள பள்ளம், மேடு, தண்ணீர், கல் உள்ளிட்டவை இருந்தால், காமிரா மூலம் படம் பிடிக்கும்.  சென்சார்கள்,  அதில் பொருத்தப்பட்டுள்ள கருவிகள் மூலம் காதில் அணிந்திருக்கும் ஹெட்போன் மூலம் கேட்க இயலும்.  இதனால்,  பள்ளம் உள்ளிட்டவை இருப்பதை அறிந்து நடந்து செல்ல இயலும்.  ஹெட்போன் அணியாவிட்டால் அதில் பொருத்தப்பட்டுள்ள ஸ்பீக்கர் மூலம் சாலையில் உள்ள தடைகளைக் கேட்க இயலும். 

ஒரு குறிப்பிட இடத்துக்குச் செல்ல வேண்டும் என மைக்கில் கூறினால், இருக்கும் இடத்திலிருந்து போகும் தூரம் எவ்வளவு, எவ்வளவு நேரமாகும் என்பதை ஸ்பிக்கர் மூலம் கேட்க இயலும். எல்.டி.இ. கருவி இணைக்கப்பட்டுள்ளதால், வயர் மூலம் பார்வையற்றவர்களின் கைப்பேசியை இணைத்துவிட்டால் , யாராவது கைப்பேசியில் பேசினாலும், பதில் பேச இயலும். கையில் வைத்துகொண்டு நடக்கும்போது , உடல் நலக்குறைவு ஏற்பட்டு அமர்ந்து விட்டாலோ, கீழே விழுந்து விட்டாலோ, அருகில் உள்ள காவல் நிலையத்துக்கும், கைப்பேசியில் இணைக்கப்பட்டுள்ள குடும்பத்தினரின் கைப்பேசி எண்ணுக்கும் தகவல் கொடுக்கும் வசதியும் உள்ளது.

வைப்ரேஷன் முறை இணைக்கப்பட்டுள்ளதால் ஒலி இல்லாவிட்டாலும் அதிர்வு ஏற்படுத்தும். இதனால், பார்வையற்றவர்கள் சாதாரண நபர்களைப் போன்று நடந்து செல்ல இயலும். ஸ்மாட் ஸ்டிக்குக்கு இந்தியாவில் காப்புரிமை பெற்றுள்ளதால், இந்திய சந்தையில் இன்னும் சில மாதங்களில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளேன். அனைத்து தரப்பு பார்வையற்றவர்களும் பயன்படுத்த்ககூடிய அளவிலேயே விலையை முடிவு செய்ய உள்ளேன்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com