மௌனத்தின் வலி

​""சசி..அயர்ன் பண்ண பேண்ட் ஷர்ட், டிரெஸ்ஸிங் டேபிள் பக்கத்தில் வச்சிருக்கேன்னு சொல்லு'' என்று அப்பா எதிரில் நின்றிருக்கும்போதே,  அம்மா என்னிடம் சொல்வாள்.
மௌனத்தின் வலி


""சசி..அயர்ன் பண்ண பேண்ட் ஷர்ட், டிரெஸ்ஸிங் டேபிள் பக்கத்தில் வச்சிருக்கேன்னு சொல்லு'' என்று அப்பா எதிரில் நின்றிருக்கும்போதே, அம்மா என்னிடம் சொல்வாள்.

""லஞ்ச் பாக்ஸ் ரெடியான்னு கேளு''ஆபீஸிற்கு கிளம்பும்போது, அப்பாவிடமிருந்து, என்னை நோக்கி குரல் வரும்.

""பிசிபேளாவும், தொட்டுக்க சிப்ஸýம், ஊறுகாயும் வச்சுருக்கேன்!'' அம்மா என்னை பார்த்து பதில் சொல்வாள்.

மகளான என்னை மீடியமாக வைத்து, அப்பாவும்,அம்மாவும், இப்படி ஒருவர் முகத்தை மற்றவர் பார்க்காமல் பேசிக் கொள்ளும் நிகழ்வுகள் என் வாழ்க்கையில், ஒரு நீண்ட தொடர் கதையாகி நின்றது. இந்தத் தொடரின் முந்தைய அத்தியாயங்களை, நினைவில் நிற்கும் காலங்கள் வரை, பின்னோக்கி நகர்த்தினால், சில நிகழ்வுகள் மனதில் நிழலாடும்.

இருவரும் நேருக்கு நேர் பேசி நான் பார்த்ததில்லை.

தோழிகள் வீட்டுக்குச் செல்லும்போதெல்லாம், கூர்ந்து கவனிப்பேன். எல்லோர் வீடுகளிலும், அவர்கள் நேரடியாக, சிரித்து, கோபப்பட்டு அல்லது சாதாரணமாக பேசிக் கொள்வதை பார்த்த பொழுது, "நம்ம வீட்டில் மட்டும் ஏன் இப்படி..?' என்ற கேள்வி என் மனதில் எட்டிப் பார்க்கும்.

ஒருமுறை பாட்டி வீட்டுக்குப் போயிருந்தபோது, என் சந்தேகத்தை கேட்டேன்.

""நீ பொறக்கற வரைக்கும், அவங்களிடையே பேச்சுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை. எப்படாப்பா பேச்சை நிறுத்தப் போறங்கன்னு கூட தோணும். அதுக்கப்புறம்தான் இந்தக் கண்ணாமூச்சி விளையாட்டு ஆரம்பிச்சுது.. அதுக்கான காரணம், நம்ம குடும்பத்தில் இதுவரை யாருக்கும் தெரியாது. உன் அப்பாவிடம் இதுபற்றி வாயை திறக்காதே! அவர் ரொம்ப கோபக்காரர்'' என்று என் வாயைப் பொத்தியதை தவிர, வேறு எந்த உருப்படியான பதிலும் கிடைக்கவில்லை.

சிறிது கால இடைவெளிக்கு பிறகு, அம்மாவிடம் நேரிடையாக ஒரு முறை, இது பற்றி கேட்டேன்.

""ரொம்ப அவசியம் பாரு..இப்ப இதை பற்றி தெரிஞ்சுண்டு என்ன பண்ணப் போற!'' என்று அவளும் என் வாயை அடக்கினாள். நான் வளர்ந்து, கல்லூரி காலம் முடிந்து வேலையில் சேர்ந்தேன். "அம்மாவுக்கு எதிரில் உட்கார்ந்து, இப்பொழுதாவது கேட்டு விட வேண்டும்' என்று மனது துடித்தது.

"ஒரே வீட்டில் இருந்து கொண்டு, இருவரும் பேசிக் கொள்ளாமல் குடும்பம் நடத்துவது அசிங்கம் இல்லையா? அதுவும், மகளை கூட வைத்துக் கொண்டு இப்படி செய்வது சரிதானா என்று கொஞ்சமாவது யோசிக்க வேண்டாமா?' என்று நறுக்கென்று நாலு வார்த்தைகள் கேட்க தோணும். ஆனால், அதற்கேற்ற வாய்ப்பு அமையவில்லை.

ஒருவித தண்டனை என்றால், அந்தத் தண்டனையை, இந்த இருவருள் யாருக்கு யார் கொடுத்திருப்பார்கள். எதற்காக கொடுத்திருப்பார்கள் அல்லது இதில் மூன்றாவது மனிதர் யாருக்காவது தொடர்பு உள்ளதா? காலப் போக்கில், இந்த தலையாய கேள்வி என்னுள் படர்ந்து, என்னை மனதளவில் வதைத்துக் கொண்டிருந்தது.

நாள்கள் நகர்ந்ததே தவிர, என் கேள்விக்கு விடை கிடைக்காமல், தவித்தேன்.

அன்று வெள்ளிக்கிழமை. தலைவலியால், சீக்கிரமாக வீட்டுக்கு வந்து விட்டேன். கோயிலுக்கு கிளம்பிய அம்மா, ""உனக்காக, சாமியிடம், என்ன வேண்டிக்கணும்னு சொல்லு'' என்றாள்.

""உன் மனசுல, என் மனசுல நினைச்சுக்கிட்டு இருக்கிறது எல்லாம் நிறைவேறணும்னு வேண்டிக்கோம்மா!'' என்று மேலோட்டமாக பதில் சொன்னேன்.

""ஆறு மணிக்கு முன்னாடி, ஜன்னல் கதவுகளை மூடிடு. இல்லைன்னா, கொசு உள்ளே வந்துடும். ராத்திரி சரியா தூங்க முடியாது'' என்ற அம்மாவின் எச்சரிக்கையை முற்றிலும் மறந்து, கனத்த மனதுடன், சோபாவில் சாய்ந்து உட்கார்ந்திருந்தபோதுதான், ஒரு கிரிக்கெட் பந்து, ஜன்னல் வழியாக சர் என்று உள்ளே நுழைந்து, எதிர் அறையில், உயரத்தில் இருந்த பரணுக்குள் தஞ்சமடைந்ததை பார்க்க முடிந்தது.
வீட்டில் இருந்த மற்ற பரண்களை ஆறு மாதத்துக்கு ஒரு முறையாவது சுத்தம் செய்யும் அம்மா, அந்தப் பரணை மட்டும் சுத்தம் செய்து நான் பார்த்தது இல்லை.
""நான் ஏறி, சுத்தம் செய்யறேன்'' என்று ஒரு நாள் சொன்ன போது, ஏதோ சொல்லக் கூடாததை சொல்லிவிட்டது போல் அம்மா வெகுண்டு எழுந்தாள்.
""அதெல்லாம் எனக்கு தெரியும். அதிக பிரசங்கித்தனம் பண்ணாதே. மேல ஏறி காலை ஒடிச்சிக்கறதுக்கா?'' என்று என்னை கண்டித்தாள்.
இப்பொழுது, அந்தப் பரணுக்குள், என் கண் எதிரில், ஒரு அந்நிய பொருள் தஞ்சம் புகுந்திருந்தது. "அம்மா வந்த பிறகு சொல்லிக் கொள்ளலாம்' என்ற முடிவில், கையிலிருந்த வார இதழை புரட்ட ஆரம்பித்தவுடன், அந்தக் குரல் கேட்டது.
""கிரிக்கெட் பந்து உள்ள விழுந்துடுச்சு..எடுத்துக் கொடுங்க அக்கா..ப்ளீஸ்..'' என்று வாசலில் வந்து நின்ற சிறுவன் கெஞ்சும் குரலில் கேட்டான்.
""வீட்டுக்குள்ள வர்ற மாதிரியா, பந்தை வேகமா அடிப்பாங்க..உயரத்தில் இருக்கிற பரண் மேல என்னால ஏற முடியாதே! அதனால, பந்தை இப்ப எடுக்கறது ரொம்ப கஷ்டம். நாளைக்கு வா பார்க்கலாம்!'' என்று தவறுக்கு வருந்துகிறேன் பாணியில், தலை குனிந்து நின்ற சிறுவனிடம், மெல்லத்தான் சொன்னேன். அதற்குள், அவன் கேவி, கேவி அழ ஆரம்பித்தான்.
""இப்ப நீ எதுக்கு அழுவுறே?''
""ஃபீல்டிங்கில் நான் கோட்டை விட்டதால்தான், பந்து காணாம போச்சுன்னு, டீமில் யாரும் என்னோட பேச மாட்டாங்க..அதான்!''
பந்தைவிட, நண்பர்கள் பேசாமல் இருக்கும் தண்டனை அவனை பயமுறுத்துகிறது என்பது புரிந்தது.
""கொஞ்சம் பொறு. பந்தை எடுக்க முயற்சிக்கிறேன்'' என்றேன்.
பரணுக்கு உள்புறமாக ஒதுங்கியிருந்த பந்தை, நீண்ட குச்சியால் மெள்ள மெள்ள தள்ளி, விளிம்பு வரை கொண்டு வந்தேன். சிறிது நேரம் ஆட்டம் காட்டிய பந்து, கடைசியில் தரையில் வந்து விழுந்ததும், அந்த பையனின் முகம், ஆயிரம் வால்ட் பல்பாக, சந்தோஷத்தில் பிரகாசித்தது.
""ரொம்ப தேங்க்ஸ் அக்கா'' என்றவன், ""பந்து கிடைச்சுடுச்சு'' என்ற கூக்குரலுடன் ஓட்டம் எடுத்தான்.
அந்தத் தருணத்தில், கண்ணாடி உடையும் சத்தம் கேட்டு, மீண்டும் பரண் இருந்த அறையில் எட்டிப் பார்த்தேன்.
டவலில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஒரு பொருள், பரணிலிருந்து கீழே விழுந்திருந்தது. டவலின் அடிப்படை நிறம், வெள்ளை என்று ஊகிக்க முடிந்தாலும், தூசி படிந்து, அது பழுப்பு நிறமாக மாறியிருந்தது. அதனால், அந்த பார்சல் பல ஆண்டுகள் பழசானது என்று ஓரளவு ஊகிக்க முடிந்தது.
குச்சியை பல திசைகளில் திருப்பி, பந்தை பரணிலிருந்து, வெளியே தள்ள முயன்றபோது, அந்த பார்சலும் வெளியேற்றப்பட்டிருக்கலாம் என்று ஊகித்து, கட்டைப் பிரித்து, ஜாக்கிரதையாக உள்ளே இருப்பதை கையில் எடுத்து, திருப்பி பார்த்தேன்.
அது ஒரு பழைய கருப்பு வெள்ளை போட்டோ. பரணில் தஞ்சம் அடைந்திருந்ததால், ஆங்காங்கே பூச்சிகள் அரித்திருந்தன. பழுப்பு நிறம் ஏறி இருந்த அந்தப் புகைப்
படத்தில், அப்பாவோடு, ஒரு இளம்பெண் சேர்ந்து நின்றிருந்தது, அந்த மங்கலான வெளிச்சத்திலும், என் கண்களுக்கு தெளிவாக தெரிந்தது.
அதைப் பற்றி மேற்கொண்டு யோசிப்பதற்கு முன்பு, அங்கு பரவியிருந்த கண்ணாடி சிதறல்களை, அம்மாவுக்கு எந்த சந்தேகமும் எழாதபடி, அப்புறப்படுத்தி, அந்த இடத்தை சுத்தப்படுத்தினேன். அம்மா வந்து விடப் போகிறாள் என்ற பயத்தில், புகைப்படத்தை, ஹாண்ட் பேக்குக்குள் திணித்து, அதற்கு மேல், டிரைவிங் லைசென்ஸை வைத்து மூடி, பத்திரப்படுத்தினேன். அந்தப் பெண் யார், அந்தப் புகைப்படத்தை ஏன் அம்மா பத்திரப்படுத்த வேண்டும், அந்த பெண்ணுக்கும், அப்பாவுக்கும் என்ன சம்பந்தம்.. என்று எனக்கு நானே கேட்டுக் கொண்ட கேள்விகளால், இரவு வெகு நேரம் தூக்கம் வராமல் தவித்தேன்.
மறுநாள்,புதிய ஜெனரல் மானேஜர் வருகையால், அலுவலகத்துக்கு அரை மணி முன்னதாக கிளம்ப வேண்டி இருந்தது. அலுவலகத்தில் நுழைந்ததும் சீட்டுக்குப் போகாமல், புதிய ஜி.எம்.மின் அறிமுக பரிமாற்றம் நடக்கவிருக்கும் காஃன்பரன்ஸ் ஹாலுக்கு நேரடியாகச் செல்லும்படி, அறிவிப்பு வைக்கப்பட்டிருந்தது.
""என் பெயர் ஜானகி'' என்று ஜி.எம். தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். வயது ஐம்பதுக்குள் இருக்கும். நெற்றியில், பளிச்சென்று பொட்டு வைத்திருந்தவர், ஒவ்வொருவரிடமும், தனித்தனியாக அறிமுகப்படுத்திக் கொண்டார். வேகமாகவும், விவேகமாகவும் முடிவு எடுப்பதில் பெயர் பெற்றவர் என்று அவரைப் பற்றி, பெருமையாக பேசினார்கள்.
""எதையும், உள்ளது உள்ளபடியே, வெளிப்படையாக பேசும் நான், உங்களில் ஒருத்திதான். என்னை ஜானகி மேம்னு கூப்பிடலாம்'' என்ற முத்தாய்ப்புடன், அவருடைய பேச்சுப் படலம் முடிந்து, தேநீர் அருந்துவதற்கு பக்கத்து அறைக்கு சென்றோம். அந்த சமயத்தில், ஜி.எம். உள்பட அனைவரும், எங்கள் ஹேண்ட் பேக்கை கான்பரன்ஸ் அறையில், ஒரே இடத்தில் விட்டு சென்றோம்.
போன் வந்ததால், அவசரமாக வெளியேறிய ஜானகி மேம், கான்பரன்ஸ் ஹாலுக்குள் நுழைந்து, கையில் ஹேண்ட் பேக்குடன் வெளியேறுவதை தூரத்திலிருந்து பார்த்தேன்.
சிறிது நேரத்தில் ஜி.எம்.மிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது. ஹேண்ட் பேக்கை கூட எடுக்காமல், வேகமாக நடந்து, மேமின் கண்ணாடி அறைக் கதவை விரல்களால் தட்டினேன்.
""எஸ்..கம் இன் சசி'' என்ற குரல் கேட்டு, உள்ளே நுழைந்தேன்.
என் பெயரை மேம் நினைவில் வைத்திருந்தது சற்று வியப்பாக இருந்தது.
""உன் பெயர் எனக்கு எப்படி நினைவில் இருக்கும்னு யோசிக்கிற போல இருக்கு''
நான் தலையை ஆட்டினேன்.
""உன் டிரைவிங் லைசென்ஸில் பார்த்தேன். அது என்னிடம் எப்படி வந்ததுன்னு யோசிக்கிறியா? அது உன் ஹாண்ட் பாக்கில் இருந்தது!''
""....''
""உன் ஹேண்ட பேக் என்னிடம் எப்படி வந்ததுன்னு யோசிக்கிறயா..?''
நான் விழித்தேன்.
""புது இடத்துக்கு டிரான்ஸ்பர் ஆகி வந்தால், ஒரு புது ஹேண்ட் பேக் வாங்குவது என்னுடைய பழக்கம். நேற்று இரவுதான் ஒரு புது ஹேண்ட் பேக் வாங்கினேன். போன் பேசிக்கிட்டு, சரியாக கவனிக்காமல், அதே கலரில் இருந்த உன் ஹாண்ட் பேக்கை எடுத்து வந்துட்டேன்னு நினைக்கிறேன். என்னுடையது என்று நினைத்து,. ஹேண்ட் பேக்கை திறந்துட்டேன். அதனால், மேலாக இருந்த சிலவற்றை தற்செயலாகப் பார்க்க நேர்ந்தது. அந்தத் தவறுக்கு முதலில் மன்னிப்பு கேட்டுக்கறேன்.''
""பரவாயில்லை மேம். உங்க ஹேண்ட் பேக்கை கொண்டு வந்துடறேன்!'' என்று எழ முற்பட்டவளை, உட்காரச் சொன்னார். அவருடைய ஹேண்ட் பேக்கை ப்யூன் எடுத்து வந்தார். இரண்டு ஹேண்ட் பேக்குகளும் ஒரே மாதிரி இருந்தது புரிந்தது.
""கேட்கிறேன்னு தப்பா நினைச்சுக்காதே! இந்த கேள்வி ப்யூர்லி பர்சனல் ஒன்.''
""சொல்லுங்க மேம்.''
""பையில் இருந்த பழைய போட்டோ உன்னிடம் எப்படி வந்ததுன்னு தெரிஞ்சுக்கலாமா?''
""எங்க வீட்டில் இருந்தது மேம்..நேற்றுதான், தற்செயலாக என் கையில் கிடைச்சுது. இதைப் பற்றிய மேற்கொண்டு விவரங்கள் தெரியலை.''
""நான் சொல்றேன். அது என் இள வயது போட்டோ. நிறம் மாறிய, இளம் வயது போட்டோவை வைத்து, என்னை உன்னால் அடையாளம் காண முடிஞ்சிருக்காது. அந்த போட்டோவில் என்னுடன் இருப்பவர் பெயர் பிரபாகர். கல்லூரி காலத்தில், என் நெருங்கிய நண்பர்.'' என்று மேம் ஒரே மூச்சில் சொல்லி முடித்தார்.
""பிரபாகர் என் அப்பா''என்றேன் தயக்கத்துடன்.
""வாவ்! நான் இதை எதிர்பார்க்கலை. நீண்ட காலமாக தொடர்பில் இல்லாத ஒரு நண்பரைப் பற்றிய தகவல் தெரிஞ்சிக்க ஆவலா இருக்கு. அந்தச் சமயத்தில், அவர், என்னைவிட சற்று வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். பீஸ் கட்ட முடியாமல், படிப்பை நிறுத்த நேர்ந்த தருணங்களில், அவர் செய்த பொருளாதார உதவிகளை என்னால் மறக்க முடியாது. நான் இந்த நிலைக்கு உயர்ந்திருப்பதற்கு அவரும் ஒரு காரணம்.''
""எனக்கு அமைதியான குடும்ப வாழ்க்கை..உங்க வீட்டிலும் அப்படித்தானே..?'' என்ற ஒரு துணை கேள்வியை கேட்டார்.
யாருடன் பகிர்ந்து கொள்வது என்று தெரியாமல், நீண்ட காலமாக தவித்துக் கொண்டிருந்த எனக்கு, திடீரென்று ஒரு வடிகால் கிடைத்தது போல் தோன்றியது. எப்படி சொல்வது என்பது புரியாமல், மெளனம் காத்தேன்.
""யோசிப்பதை பார்த்தால், ஏதோ பிரச்னை இருக்கிற மாதிரி தெரியுது'' என்று யூகித்தவரிடம், என் மன பாரத்தை இறக்கி விடலாம் என்று தோன்றியது.
""அம்மாவும், அப்பாவும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதில்லை. யார் கண்ணிலும் படாமல் இருக்க, இந்த போட்டோ ஒளித்து வைக்கப்பட்டிருந்தது. இதுக்கெல்லாம் காரணம் புரியாமல் தவிக்கிறேன்.''
""எத்தனை நாளா பேசிக்காம இருக்காங்க?''
""நான் பிறந்ததிலிருந்துன்னு பாட்டி சொன்னாங்க!''
""அப்ப குடும்ப சூழ்நிலை நரகமா ஆயிருக்குமே?''
""அவுங்களுக்கு எப்படியோ..எனக்கு அப்படித்தான் தோணுது மேம்.''
மேம் சிறிது நேரம் யோசித்தார்.
""பிரபாகர் என்ற என் பழைய நண்பரை பார்க்க, நாளை உங்கள் வீட்டுக்கு வருகிறேன். நான் வரும் விஷயம் சர்ப்ரைஸாக இருக்கட்டும்.'' என்றவர், ஹேண்ட் பேக்கை என்னிடம் கொடுத்து, விலாசத்தை பெற்றுக் கொண்டார். மறக்காமல், போட்டோவை வாங்கி வைத்துக் கொண்டார். என்னுடைய சஸ்பென்ஸ் அதிகரித்தது.
மறுநாள், அவர் வருகையை எதிர்நோக்கி, காத்திருந்தேன். காலிங் பெல் சத்தம் கேட்டதும், அப்பாதான் கதவை திறந்தார்.
""ஹெள ஆர் யூ பிரபாகர். நான் யார்னு தெரியுதா?'' என்றவரை திகைப்புடன் பார்த்தார் அப்பா.
""நான் தான், உங்க கல்லூரி ஃபிரண்ட், ஜானகி. எனக்கு கல்யாணம் ஆகி ஒரு பெண் இருக்கா. உங்க மகள் ஆபீஸிற்கு ஜி.எம்.மா டிரான்ஸ்பரில் வந்திருக்கேன். ஜாயின் பண்ண அன்றைக்கே, எனக்கு ஒரு சர்ப்ரைஸ் கிடைச்சுது. அதான் தேடி வந்துட்டேன்..எப்படி இருக்கீங்க..வொய்ஃபை கூப்பிடுங்க!'' என்று அப்பாவுக்கு வாய்ப்பு கொடுக்காமல், எல்லாவற்றையும் சொல்லி முடித்தார் மேம்.
என்ன பேசுவது என்று புரியாமல், திகைத்து நின்றார் அப்பா.
""யார் இவுங்க'' என்று பேச்சு சத்தம் கேட்டு அம்மா வெளியே வந்து, என்னிடம் கேட்டாள்.
""கடந்த காலத்தில், பிரபாகரோட ஃபிரண்ட்.. நிகழ் காலத்தில், உங்க மகள் ஆபீஸ் ஜி.எம். நான் வாழ்க்கையில் படித்து முன்னேறியதற்கு பிரபாகரரும் ஒரு காரணம். என்னை உங்களுக்கு தெரியுதா?''
""தெரியாது''என்று அம்மா தலையை ஆட்டினாள்.
தன் ஹேண்ட் பேக்கிலிருந்து போட்டோவை எடுத்தவர், ""இந்த போட்டோவில் இருப்பது நானும், பிரபாகனும்தான். அதுவாவது தெரியுமா?'' என்று சுற்றி வளைக்காமல், மேம், நேரடியாக சப்ஜெக்ட்டுக்குள் நுழைந்தாள்.
அம்மா பேச முடியாமல் திணறினாள். அந்தத் திணறல், அழுகையாக மாறி வெடித்தது.
அம்மா அழுது முடியும் வரை, மேம் ஒன்றுமே பேசவில்லை.
""நானும் உங்களை மாதிரி, கல்யாண வயதில் இருக்கிற ஒரு பெண்ணுக்குத் தாய். கணவனை நேசிக்கும் அன்பு மனைவி. எங்களுக்குள், ஏதாவது ஒரு காரணத்துக்காக, சண்டை சச்சரவு வரும். ஓரிரு நாள்கள் பேசாமல் இருப்போம். திரும்ப பேசிக் கொள்ளுபோது, ஏற்படும் மன சந்தோஷத்துக்கு அளவே இல்லை. உங்க வீட்டில் எப்படிங்க?''
அந்தக் கேள்வியை கேட்டு அம்மா அதிர்ந்து போனாள். இதுநாள் வரை, இந்த உலகத்திடமிருந்து மறைத்து வைத்திருந்த இந்த விஷயம், எப்படி தெரிய வந்தது என்று அம்மா தீவிரமாக யோசிப்பது போல் தோன்றியது.
அம்மா பக்கத்தில் போய் உட்கார்ந்த மேம், தன் கைகளால், அவளை நட்புடன் அரவணைத்தார்.
""பிரபாகருக்கு ஃபிரண்டுன்னா, உங்களுக்கும் நான் ஃபிரண்டுதானே?''
தலையாட்டினாள் அம்மா.
""எத்தனை காலமாக கணவனும், மனைவியும் பேசாம இருக்கீங்க? இதைவிட கொடிய தண்டனை வேறு எதுவும் இல்லை. கல்யாண வயதில் ஒரு பெண் இருப்பதை மறந்துட்டீங்களா?''
அம்மா குமுறி, குமுறி அழ ஆரம்பித்தாள். பல ஆண்டுகளாக தேக்கி வைத்திருந்த மனச் சுமை கரைய ஆரம்பித்ததின் அறிகுறியாக, அது எனக்கு தெரிந்தது.
""மகள்.. மூலமாகத்தான்.. பேசிக்குவோம்!''
""ஒரு காலத்தில், நானும் பிரபாகரும் காதலிச்சது உண்மை. அதில், எந்த வரம்பு மீறலும் இருந்தது இல்லை. அவருடைய அமேஸிங் டிஸிப்ளினுக்கு நான் ரசிகை. அந்த காதல், சில காரணங்களால், நிறைவேறுவதற்கு வாய்ப்பு இல்லைன்னு தெரிஞ்சபோது, வருத்தம் இருந்ததே தவிர, வெறுப்பு இல்லை. நடந்தவைகளை நினைத்து கலங்காமல், அதற்கு பிந்தைய வாழ்க்கை பாதையைத் தீர்க்கமாகத் தீர்மானிச்சு, மேல் படிப்பு படிச்சேன். பழைய காதலைப் பற்றி,என்னவரிடம் பகிர்ந்து கொண்ட பிறகுதான், கல்யாணத்துக்குச் சம்மதம் தெரிவிச்சேன். அதற்கு பின் விளைவுகளை சமாளிக்கும் தைரியம் வேண்டும். மூன்றாம் மனிதர் சொல்லித் தெரிவதைவிட, நம் வாழ்க்கை துணையிடம், கடந்த கால விவரங்களை நாமே சொல்வதுதான் அறம். பிரபாகரை நான் புரிஞ்சுக்கிட்ட வரை, அந்த மன தைரியம் அவருக்கு கிடையாதுன்னு நினைக்கிறேன். நீங்க என்ன நினைக்கீறீங்க!'' என்று சொல்லியவர், என் அம்மாவின் கண்ணீரை, தன் புடவை தலைப்பால் துடைத்து விட்டார்.
அந்தத் தருணத்தில், அம்மா வேகமாக கரைய ஆரம்பித்தாள்.
""கல்யாணத்துக்கு முன்பான தன் வாழ்க்கையைப் பற்றி விவரங்களை என்னிடம் சொல்லாமல் மறைச்சுட்டார். குழந்தை பிறந்த பிறகு, யாரோ மூன்றாம் மனிதர், இலைமறைவு, காய் மறைவாக சொல்லித்தான், அந்த விஷயம் எனக்கு தெரிஞ்சுது. அந்தச் சமயத்தில்தான், நீங்க காண்பிச்ச போட்டோவும் என் கைக்கு கிடைச்சுது. ஒரு முக்கியமான விஷயம். என்னிடம் மறைக்கப்பட்ட, கோபம் எனக்குள் தீயாக எரிய ஆரம்பிச்சுது. அதை வெளியில் சொல்லி, உறவினர்கள் மத்தியில் குழப்பத்தை உண்டு பண்ணக் கூடாது என்று தீர்மானிச்சேன். அந்த தவறுக்காக, நான் யாருக்கும் தண்டனை வழங்கும் நிலையில் இல்லை. அதற்காக, எனக்கே நான் கொடுத்துக் கொண்ட பெரும் தண்டனைதான் இது!'' என்று பல ஆண்டுகளாக மனப் பெட்டியில் பூட்டி வைத்திருந்தவைகளை, வெளியே கொட்டி தீர்த்தாள்.
""இது எல்லா பெண்களுக்கும் உரிய "பொஸசிவ்னெஸ்' என்கிற பற்றால் ஏற்படும் பிரச்னைதான். ஆனால், அந்த பிரச்னையை பலூன் மாதிரி ஊதி, மனதுக்குள் வைக்காமல், அவரிடமே கேட்டு, டப்புன்னு போட்டு உடைச்சிருக்கணும். ஆனால், இந்த விஷயத்தில் சரியா நடந்திருக்க வேண்டியது என்னன்னா? ‘'
தண்ணீர் குடித்த பிறகு, மேம் தன் பேச்சை தொடர்ந்தாள்.
""எம்.பி.ஏ.வில் சைக்காலஜி படித்திருக்கிறேன். ஒரு பெண்ணின் மனதை இன்னொரு பெண்ணால் ஓரளவு படிக்க முடியும். இது போன்ற நிகழ்வை ஆங்கிலத்தில், "கம்யூனிகேஷன் கேப்' என்பார்கள். திருமண வாழ்க்கையில், தகவல் பரிமாற்றத்தில் குறை இருந்தால், அது பல பக்க விளைவுகளை ஏற்படுத்தி விடும். நிறைவேறாத தன் காதல் விஷயத்தை, பிரபாகரர் உங்களிடம் நேரிடையாகப் பகிர்ந்து கொண்டிருக்க வேண்டும். அந்தத் தைரியம் இல்லாததுதான் பிரபாகரிடம் ஆரம்பத்திலிருந்தே இருந்த பெரும் குறை. அந்தக் குறையால், ஒரு குடும்பமே, பாதிக்கப்பட்டிருப்பதை நினைத்து எனக்கு வருத்தம்தான். சிறிய காயத்தை கவனிக்காமல் விட்டால், அது பெரிய புண்ணாக மாறி பாதிப்பை ஏற்படுத்திவிடும். அதுதான், உங்க குடும்பத்தில் நடந்திருக்கு. இதற்கு நானும் ஒரு காரணமாகிவிட்டேன் என்பதை நினைத்தால், வருத்தம் அதிகமாகிறது. ஆனால், அந்த பாதிப்பை நிவர்த்தி செய்வதற்கான வாய்ப்பு கிடைத்ததற்கு கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்!''
""ரொம்ப தேங்க்ஸ்!'' என்றுஅம்மா மவுனம் கலைத்தாள். அவள் மனதுக்குள் தேங்கி இருந்த சுமை நீங்கி, லேசானது என்பது அந்த குரலில் வெளிப்பட்டது.
""வெறும் தேங்க்ஸ் சொன்னா மட்டும் போதாது. இப்ப நீங்க ரெண்டு பேரும். மகள் மூலமா இல்லாம, நேரடியா ஒரு ஹலோ சொல்லிக்கோங்க!'' என்று மேம் இருவர் கைகளையும் சேர்த்து வைத்தாள்.
""லஞ்ச் ரெடி பண்ணிடறேன்..அவுங்களை சாப்பிட்டுட்டுதான் போகணும்னு சொல்லுங்க!'' என்றுஅம்மா நேரிடையாக அப்பாவிடம் பேசியதை கேட்டவள், தலையிலிருந்து ஐஸ் கட்டிகள் கரைந்து வழிவது போன்ற உணர்வுகளில் திளைத்தேன்.
அந்தத் தருணம், மெளனத்தின் வலி விலகி, குடும்பத்தில், இல்லறம்-இரண்டாவது பாகத்தின் ஆரம்ப புள்ளியாக ஒளிர்ந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com