ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: அடிக்கடி சிறுநீர் கழிக்காமல் இருக்க...

எனது ஆருயிர் நண்பர், ஒருநாளில் குறைந்தது இருபது தடவையாவது சிறுநீர் கழிக்கிறார்.  இதனால் பேருந்தில் அவர் பயணம் செய்வதில்லை.
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: அடிக்கடி சிறுநீர் கழிக்காமல் இருக்க...
Published on
Updated on
1 min read


எனது ஆருயிர் நண்பர், ஒருநாளில் குறைந்தது இருபது தடவையாவது சிறுநீர் கழிக்கிறார்.  இதனால் பேருந்தில் அவர் பயணம் செய்வதில்லை. நீண்ட நாள்களாக இருக்கும் இந்த பிரச்னையிலிருந்து விடுபட அவருக்கு ஆயுர்வேதம் கூறும் அறிவுரைகளும் மருந்துகளும் என்னன்ன?

ஏ.காதர்மன்சூர், அரும்பாக்கம்,
சென்னை.

ரத்தத்தில் கலந்துள்ள நீரை, சிறுநீரகப் பகுதிகளுக்குள் அமைந்துள்ள நரம்புகளின் அழுத்தத்தின் வாயிலாக, பிரிக்கப்பட்டு,  சொட்டு சொட்டாக, குழாய்களின் மூலமாக சிறுநீர்ப் பையை வந்தடையும். இந்தத் தருவாயில், இதற்கு மேல் தாங்காது வெளியேற்றிவிட வேண்டும் என்ற தீர்மானத்தை நரம்புகளும், தசைநார்களும் தீர்மானித்து, உணர்வைத் தூண்டிவிடும் நிகழ்வானது தங்களுடைய ஆருயிர் நண்பருக்கு மற்றவர்களைவிட அதிக வேகத்தில் நடைபெறுகிறது.
இதற்கு  காரணமான கிருமிகளின் தொற்று, அதிகநீர் வேட்கையினால், தண்ணீர் அருந்துதல், சிறுநீரைப் போக்கு நரம்புகளின் நுண் அதிர்வுகளின் கூடுதலான செயல்பாடு, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடுதலாக இருத்தல், கப தோஷத்தின் குணங்களாகிய நெய்ப்பு குளிர்ச்சி கனம் மந்தம் வழுவழுப்பு கொழகொழப்பு நிலைப்பு ஆகியவற்றை  வாழைப்பழம், பலாப்பழம், பேரீச்சம் பழம், உளுந்து , அரிசி, பயறு, நெய், பால், வெண்ணெய், பிஸ்கட், பேக்கரி பொருள்கள் மூலம் அதிகம் உடலினுள்ளே சேர்த்தல் போன்ற சில காரணங்களால் நிர்பந்தம் ஏற்படுகிறது.

அவை முழுவதுமாக அலசிப் பிரிந்து சிறுநீராக வெளியேற்ற சிறுநீரகம் எடுக்கும் முயற்சியினால் அதிக சிறுநீர் வெளியேறுகிறது. சிறுநீர் வெளியேற்றத்தின் அளவையும் செல்லும் நேரத்தின் அளவைக் குறைக்கவும்.

கேழ்வரகு, கம்பு, சோளம், வரகு, கொள்ளு முதலிய புஞ்சை தானியங்களாலான உணவு,  யவை எனும் வாற்கோதுமையின் அன்னம் அவர் சாப்பிட உகந்தவை. அரிசி, கோதுமை முதலிய நஞ்சைத் தானியங்களாலானதும் பருப்பு வகைகள் மிக்கதும் குறைந்த அளவில் சேர்ப்பதே நல்லது.

பொன்னாங்கண்ணிக் கீரை, பசலைக் கீரை, புளியாரை, வல்லாரை, அகத்திக் கீரை, கொத்துமல்லி, வெந்தயக்கீரை, மணத்தக்காளிக் கீரை,  கத்திரிப் பிஞ்சு, பாகல், அவரை, சுரை, காராக்கரணை, வெங்காயம், வாழைப் பூ, வற்றல் வகை, மிளகு, இஞ்சி இவற்றாலான ஊறுகாய்கள் சாப்பிட ஏற்றவை.

பகல் தூக்கம், அதிகம் ஓய்வு, மென்மையான இருக்கையில் அதிக நேரம் உட்காருதல் முதலியவை அபத்தியம். தூக்கத்தின் அளவைக் குறைத்து தேகப் பயிற்சியும் சுறுசுறுப்பாக எல்லாச் செயல்களிலும் அதிகம் ஈடுபடுதலும் வழிநடையும் நல்லவை.
கதககதிராதி கஷாயம், நிசாகதகாதி கஷாயம், சந்திரபிரபாகுளிகை, நிரூர்யாதி மாத்திரை, அமிருதமேஹாரி சூரணம், சிலாசத்து பற்பம், வில்வாதி குளிகை, நாவல்பட்டை சூரணம், மஞ்சள், மரமஞ்சள் சூரணம், லோத்ராஸவம், அயஸ்கிருதி போன்ற தரமான ஆயுர்வேத மருந்துகளால் அவர் பயனடையலாம். மருத்துவர் ஆலோசனைப்படி சாப்பிடலாம்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com