குறுங்காட்டில்  பள்ளிப் பாடம்..!

மயிலாடுதுறை மாவட்டத்துக்கு உள்பட்ட சீர்காழியை அடுத்த கொள்ளிடம் சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தையொட்டி ஐந்து ஏக்கரில் இயற்கை வனவெளிப் பள்ளி அமைந்துள்ளது காண்போரைக் கவருகிறது.
குறுங்காட்டில்  பள்ளிப் பாடம்..!

மயிலாடுதுறை மாவட்டத்துக்கு உள்பட்ட சீர்காழியை அடுத்த கொள்ளிடம் சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தையொட்டி ஐந்து ஏக்கரில் இயற்கை வனவெளிப் பள்ளி அமைந்துள்ளது காண்போரைக் கவருகிறது. இங்கு 14 வகையான 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் வளர்க்கப்படுவதோடு, பாடக் கல்வியோடு இயற்கையைக் காப்பதின் அவசியம் குறித்து மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கப்படுகிறது.
இதுகுறித்து பள்ளியின் நிறுவனர் ரவீந்திரனிடம் பேசியபோது:
''இயற்கையின் மீது எனக்கு ஆர்வம் அதிகம். இயற்கை வளங்கள் அழிந்து வருவதாலும், சாலை விரிவாக்கம் போன்ற கட்டமைப்பு வசதிகளுக்காக மரங்கள் வெட்டப்படுவதாலும் அதிகமாகும் வெப்பத்தால் வருங்காலங்களில் மனிதர்கள் வாழ்க்கையே பெரும் சவாலாக இருக்கும் என்பதை பெரும்பாலானோர் உணருவதில்லை.
இதை இளைய தலைமுறையினருக்கு உணர்த்தும் வகையிலும் மரங்கள் வளர்ப்பதால் ஏற்படும் நன்மைகள், அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த முடிவு செய்தேன்.
இதற்காக, எங்கள் பள்ளியில் பயிலும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு கல்வியுடன் இயற்கையின் அவசியத்தை எடுத்துரைக்க முடிவு செய்தோம்.
பள்ளியின் அருகிலேயே 5 ஏக்கர் நிலத்தை வாங்கி பண்படுத்தும் முயற்சியில், 2009 ஆம் ஆண்டு முதல் ஈடுபடத் தொடங்கினேன். அப்போது ஏற்பட்ட தாணே புயலின்போது, குறுங்காடு வளர்ப்பில் ஆரம்ப நிலையில் இருந்த மரக்கன்றுகள் பெரிதும் பாதிப்புத்து ஆளாயின. சாய்ந்த அனைத்து மரக்கன்றுகளையும் நிமிர்த்து அதற்கு மண் அணைத்து காப்பாற்றினோம். தற்போது குறுங்காடுகளாக, இயற்கை வனப் பகுதியாக மாறி ரம்மியமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வனப் பகுதியில் தேக்கு, ஆப்பிரிக்கன் தேக்கு, வெள்ளைக் கடம்பை, சந்தன மரம், செம்மரம், ரோஸ் வுட் ,வேங்கை, அரிய வகை கருங்காலி மரம், செண்பக மரம், மலை வேம்பு, கேரளா மட்டி , குமிழ் மரம், மகாகனி, விசு மரம் என 14 வகையான மரங்கள் 50 அடி உயரம் வரை வளர்ந்துள்ளன.
இந்த மரங்களை வளர்க்க அந்த மரங்களில் இருந்து உதிரும் இழைகளையே, இயற்கை உரமாக்கி கூடுதல் சத்துகளை அளித்து வனப் பகுதியை பராமரித்துவருகிறோம். இதற்கு எனது தாயாரின் பெயரில் 'நீலா வனம்- வனவெளிப் பள்ளி' என்று பெயரிட்டுள்ளேன். இங்கு 'உயிர் காற்று இலவசம்' .
மாணவ, மாணவிகள் நாள்தோறும் இங்கு அழைத்து வரப்பட்டு, தாவரவியல் போன்ற பாடங்களை மூங்கில் கூடில் வகுப்பறையில் நடத்துகிறோம். அப்போது, இயற்கை வளத்தைப் பராமரிக்கவும், மரங்கள் வெட்டப்படுவதைத் தடுக்கவும் , அவற்றை நடுவதன் அவசியத்தையும் பாடங்களாக எடுத்துரைப்போம். இது மாணவர்களுக்கு உந்து சக்தியை ஏற்படுத்துகிறது.
இந்தப் பகுதியில் தடாகத்தை அமைத்து அதன் மேலே ஒரு மரத்தினாலான வீடு அமைக்கப்பட்டுள்ளது. பள்ளி வளாகம் முழுவதும் தேங்கும் மழைநீர் குழாய்கள் முறையாக அமைத்து, தடாகத்துக்கு வந்து சேரும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இங்கு மயில், வாத்து , நாரை போன்ற பறவைகளும் வளர்கின்றன. வெளிநாட்டு பறவைகளும் வந்து அமர்ந்து இளைப்பாரி செல்கின்றன.
ரசாயன கலப்பின்றி இயற்கை முறையில் விளைவிக்கப்படும் வாழைப்பழங்கள், மாம்பழங்கள் உள்ளிட்ட பழ வகைகள் பணியாளர்களுக்கும், பள்ளி ஆசிரியர்களுக்கும் இலவசமாக வழங்குகிறோம்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com