உதவுவோம் பிறருக்கு...

தங்களது அன்றாட நாளில்,  சேவைப் பணிகளுக்காகத் தங்களால் இயன்ற நேரத்தை ஒதுக்கி, தங்களால் முடிந்த உதவிகளைப் பிறருக்குச் செய்திட வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்' என்கிறார் ரோட்டரி சங்க முன்னாள் ஆளுநர்.
உதவுவோம் பிறருக்கு...

'ஒவ்வொருவரும் தங்களது அன்றாட நாளில், சேவைப் பணிகளுக்காகத் தங்களால் இயன்ற நேரத்தை ஒதுக்கி, தங்களால் முடிந்த உதவிகளைப் பிறருக்குச் செய்திட வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்' என்கிறார் 3231 ரோட்டரி சங்க முன்னாள் ஆளுநர் ஜே.கே.என்.பழனி.
காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 100 ரோட்டரி சங்கங்களை உள்ளடக்கிய 'ரோட்டரி மாவட்டம்
3231'-இன்ஆளுநராக 2022ஆம் ஆண்டு ஜூலை 1 முதல் 2023ஆம் ஆண்டு ஜூன் 30 வரையில் பதவி வகித்தவர் ஜே.கே.என்.பழனி.
குடியாத்தத்தில் நெசவுத் தொழிலாளியாக இருந்து எல்.ஐ.சி. முகவராகிய இவர் 2011ஆம் ஆண்டில் ரோட்டரி சங்கத்தில் இணைந்தார்.
தனது சேவையால் ரோட்டரி ஆளுநராகக் குறுகிய காலத்திலேயே முன்னேறிய இவர், ஓராண்டில் 'தினம் ஒர் சேவை' என்று 365 நாள்களும் ஈடுபட்டு, பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்தார். அவரிடம் பேசியபோது:
'ரோட்டரி சங்க நிர்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், சமூக சேவையாளர்கள் வாயிலாக, ஓராண்டில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றினோம்.
நான் பதவியேற்ற முதல் நாளே 35 இடங்களில் ரத்த தான முகாம்களை நடத்தி, 1,744 பேரிடம் ரத்தம் சேகரித்து அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கினோம். ஓராண்டில் 100க்கும் மேற்பட்ட முகாம்கள் வாயிலாக, 5,628 பேரிடம் ரத்தம் சேகரித்து மருத்துவமனைகளுக்கு வழங்கினோம்.
வேலூர் மாவட்டத்தில் ஓர் நாளில், ஒரே மணி நேரத்தில் இரண்டரை லட்சம் பனைவிதைகளை நட்டோம். இந்தப் பணியில் ரோட்டரி சங்கத்தினரோடு 50 ஆயிரம் சுய உதவிக் குழு பெண்களும் ஈடுபட்டனர்.
'வெளிச்சம்' திட்டத்தின்படி, 75 தையல் பயிற்சி மையங்களைத் தொடங்கி, 20 ஆயிரம் பெண்கள் தையல் பயிற்சி பெற வைத்து அவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய செய்தோம்.
'தன்வந்திரி' திட்டத்தின்படி, இலங்கையில் உள்ள முல்லைத் தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், மன்னார் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு புத்தகங்கள், நூல்கள், தளவாடப் பொருள்கள், அரசு மருத்துவமனைகளுக்கு அறுவைச் சிகிச்சை சாதனங்கள் என ரூ.25 லட்சம் மதிப்பில் நல உதவிகள் வழங்க நேரில் சென்றோம்.
மலேசியாவில் உள்ள தமிழ்ப் பள்ளிகளில் பயிலும் 850 மாணவர்களுக்கு அவ்வையாரின் மூதுரை உள்ளிட்ட நூல்களை நேரில் சென்று வழங்கினோம்.
அமைப்புசாராத் தொழில்களில் ஈடுபட்டுவரும் பெண்களுக்கு மார்ப்பகப் புற்றுநோயைக் கண்டறிய ரூ.1.50 கோடி மதிப்பில் அதிநவீன இயந்திரமான 'மொபைல் மெமோகிராபி' எனும் நடமாடும் மருத்துவப் பேருந்து ரோட்டரி மாவட்டம் சார்பில் வாங்கப்பட்டு, விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது.
திருவண்ணாமலை அரசு மருத்துமனைக்கு டயலாசிஸ் இயந்திரம் வழங்கப்பட்டு, இலவசமாக மக்கள் பயன்பாட்டில் உள்ளது. காஞ்சிபுரம், மறைமலை நகர் வேலூர், வாலாஜா, குடியாத்தம், அணைக்கட்டு ஆகிய 6 அரசு, ரோட்டரி மருத்துவமனைகளுக்கும் டயலாசிஸ் இயந்திரங்கள் வழங்கிட நடவடிக்கை எடுத்துள்ளேன்.
தொழிலதிபரும் முன்னாள் மாவட்டஆளுநருமான அபிராமி ராமநாதனின் நிதியுதவியில், 6 ஆம்புலன்ஸ் பெற்று, தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வாயிலாக, ரோட்டரி சங்கங்களிடம் மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது.
நடைபாதைகளில் வியாபாரம் செய்துவந்த 100 பேருக்கு தள்ளுவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. 25 அரசுப் பள்ளிகளுக்கு கீரின் போர்டுகளை வழங்கினேன்.
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை வாயிலாக, 75 பேருக்கு ரூ.10 லட்சம் மதிப்பில் செயற்கை கை, கால்கள் வழங்கப்பட்டுள்ளன' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com