அத்திம்பேரின் வருகை

சனிக்கிழமை சற்று நேரம்  தூங்கிவிட்டு மெதுவாக எழுந்திருக்கலாம் என்று நினைத்துக் கொண்டால் எந்தப் பட்சி போய் யாரிடம் என்ன சொல்லியதோ தெரியவில்லை. வாசலில் 'டொய்ங்.. டொய்ங்..'  என்று காலிங் பெல் ஒலித்தது. 
அத்திம்பேரின் வருகை

சனிக்கிழமை சற்று நேரம் தூங்கிவிட்டு மெதுவாக எழுந்திருக்கலாம் என்று நினைத்துக் கொண்டால் எந்தப் பட்சி போய் யாரிடம் என்ன சொல்லியதோ தெரியவில்லை. வாசலில் 'டொய்ங்.. டொய்ங்..' என்று காலிங் பெல்
ஒலித்தது.
என் செல்ல மனைவி ரெஸ்ட்ரூம் போய் இருந்தாளோ? என்னவோ தெரியவில்லை. வாசல் மெயின் டோர் திறக்கப்படவில்லை போலிருக்கிறது. 'விட்டேனா பார்' என்று கங்கணம் கட்டிக் கொண்டு, காலிங் பெல்லின் மேல் யாரோ ஏறி உட்கார்ந்து விட்டார்கள்போல் இருக்கிறது. விடாமல் அடித்துத் தள்ளியது. யாராக இருக்கும் இந்த காலை வேளையில் என்று எனக்கே பற்றிக் கொண்டு வந்தது. எனக்கு படுக்கையைவிட்டு எழுந்து கதவைத் திறக்கவும் மனது வரவில்லை.
'வரேன் வரேன்' என்று குரல் கொடுத்தபடியே என் பத்தினி சாவியை எடுத்துக்கொண்டு வாசல் பக்கம் ஓடினாள்.
'வாங்கோ.. வாங்கோ. .. என்ன திடீர்னு இந்தப் பக்கம்? சொல்லி இருந்தா இவரை நான் ஸ்டேஷனுக்கே அனுப்பி இருப்பேனே!'
ஸ்டேஷனுக்கு போகப் போறவன் நான். இவள் என்ன அண்ணாவி என்னை ஸ்டேஷனுக்கு அனுப்புகிறேன் என்று சொல்வதற்கு? ஆனாலும் இவளுக்கு பந்துகளைக் கண்டால் தலைகால் புரியாது.
'செளக்கியமா என்ன தூக்கத்தில் டிஸ்டர்ப் பண்ணிட்டோமா?'
சட்டென்று புரிந்துவிட்டது. இந்த கரகர தொண்டைக்குச் சொந்தக்காரர் என் அத்திம்பேரே தான். காமு அக்காவும் அத்திம்பேரும் வந்திருக்கிறார்கள் போலிருக்கிறது. அத்திம்பேர் என்று மனதில் ஒரு நிழல் ஓடியதும் கழுத்து வரை இருந்த போர்வையை இழுத்து தலைவரை போர்த்திக் கொள்ளலாம் போலிருந்தது.
'அதெல்லாம் ஒண்ணும் இல்ல அத்திம்பேர். நானே உங்களை வரச் சொல்லி கூப்பிடலாம்னு இருந்தேன். எத்தனை நாளாச்சு உங்களை எல்லாம் பார்த்து? இவருக்கு தான் என்னமோ எப்ப பாத்தாலும் வேலை வேலை. லீவே இல்ல அப்படின்னு ஏதோ சாக்குபோக்கு சொல்லிண்டே இருக்கார். மனுஷானா வந்துண்டு போயிண்டு இருந்தா தானே நன்னா இருக்கும்? பல்லை தேய்ச்சுக்கோங்கோ. சூடா காப்பி போட்டு தரேன்.'
என் பெட்டர் ஹாஃப் இல்லையில்லை பிட்டர் ஹாஃப்.
இதற்கு மேலும் தூங்குவதுபோல் பாசாங்கு செய்தால் நன்றாக இருக்காது என்று மனதுக்கு தோன்றியது. எழுந்திருக்கவும் மனதில்லாமல் மெதுவாக பார்த்தேன். எப்படி பார்த்தேன் என்கிறீர்களா? ஓட்டைக் கண் தான்.
அத்திம்பேர் இன்னும் மாறவே இல்லை. எப்பொழுதும்போல் பட்டாபட்டி அண்டர்வேரைப் போட்டுக் கொண்டு, அது தெரியும்படியாக வேட்டியை தூக்கி மடித்துக் கட்டிக்கொண்டு ராஜ்கிரண் ஸ்டைலில் நின்று கொண்டிருந்தார். ஒரு மலைப் பிஞ்சு பட்டாபட்டி டிராயருடன் நிற்பது போல் இருந்தது.
சில ஆண்டுகளுக்கு முன் வரை அவரைப் பார்த்தாலே என் வாய் தானாகவே முணுமுணுக்கும் ஒரு பாட்டு என்ன தெரியுமா? கரகாட்டக்காரன் என்கிற சினிமாவில் வருமே 'மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு. உன்னை மாலையிட தேடி வரும் நாளும் எந்த நாளு' என்று, அந்த மெட்டில், 'கோடு போட்ட டவுசர் ஒண்ணு வாங்கிருக்கேன் பாரு! அதை போட்டுக்கிட்டு டப்பாங்குத்து ஆடப்போறேன் பாரு' என்கிற வரிகள்தான்.
எத்தனையோ வகையான இன்னர்வேர்கள் எல்லாம் ஆண்களுக்கு இப்பொழுது சந்தையில் இருக்கும்பொழுது, இவர் மட்டும் எப்படி இன்னும் மாறாமல் இருக்கிறார் என்று மனதுக்குத் தோன்றியது. ஆனால் இவர் சைசுக்கு அதாவது, கஜ கெளபீணம் என்பார்களே, ஒரு யானைக்கு கோவணம் தைக்க எவ்வளவு துணி தேவைப்படும்? இப்பொழுது அந்தக் கணக்கெல்லாம் போட்டு நான் மண்டையை உடைத்துக் கொள்ளத் தயாராக இல்லை. அக்காவை கோயிலில் வைத்துதான்
கும்பிட வேண்டும்.
அப்பொழுதுதான் கண் விழித்து எழுந்திருப்பது போல் பாசாங்கு செய்து கொண்டே எழ ஆரம்பித்தேன்.
'வாங்கோ வாங்கோ. நேத்திக்கு தான் உங்களைப் பற்றி எல்லாம் நினைச்சுண்டே இருந்தேன். ( மனது பொய் பொய் என்று ஓலமிட்டது) நேசம் உள்ளவாள நெஞ்சில் நினை அப்படின்னு சொல்லுவா தெரியுமா? நான் நேத்திக்கு நெனச்சேன். இன்னைக்கு நீங்க வந்தது ரொம்ப சந்தோஷமா இருக்கு. நானும் பிரஷ் பண்ணிட்டு வந்து உங்களோட காபிக்கு ஜாயின் பண்ணிக்கிறேன்.'
'நேத்திக்கு வீக் எண்டு வெள்ளிக்கிழமையாச்சே. ஏதாவது அப்படி இப்படி உண்டா? அதான் தூங்கிட்டியோ?' என்று கேட்டபடி வாய்க்கு அருகில் கட்டை விரலை வைத்துக்கொண்டு, 'நான் தண்ணி அடித்தேனா?' என்பதை அபிநயம் செய்தபடி கேட்டுவிட்டு இடி இடி என்று சிரித்தார். இசை மேதை, 'கோபால கிருஷ்ண பாரதி'யின், 'நடனம் ஆடினார் 'க்ருதியில், அண்டம் அதிர, கங்கை துளி சிதற' என்கிற வரி இவருக்குத் தான் மிகவும் பொருத்தமாக இருந்திருக்கும்.
நடிகை சரோஜாதேவிக்கு, 'அபிநய சரஸ்வதி' என்கிற டைட்டில் கொடுத்ததைப் போல இவருக்கு அபிநய சுந்தரன் என்கிற டைட்டிலைக் கொடுத்திருக்கலாம்.
'அதெல்லாம் ஒண்ணும் இல்லை . சரி டிரெயின் ஜர்னி செளக்கியமா இருந்ததாக்கா?'
'இங்க சென்னையில் தானே செகண்ட் ஹேண்ட் காரை வாங்கினோம். என்னமோ சில மாசங்கள் கழிச்சு வந்து ஃப்ரீ சர்வீஸ் பண்ணிக்கலாம்னு சொன்னாரு? அதை பண்ணிண்டு போலாம் என்கிறதுக்காக காரில் தான் வந்தோம். ட்ரெயின்ல வரல்ல '- இது அக்கா காமு.
'பரவாயில்லையே அத்திம்பேர் கார் ஓட்டக்கத்துண்டு, லைசென்ஸ் வாங்கி, திருச்சி டூ சென்னை காரை ஓட்டிண்டு வந்திருக்காரே. பேஷ்.'
'இல்லை உஷா. என் பிரண்டு ஒருத்தன் சென்னைக்கு வரணும்னு சொல்லிண்டு இருந்தான். அவனுக்கு நன்னா கார் ஓட்ட தெரியும். அவன் சொன்னான், நான் ஒரு காரை புடிச்சு வாடகையை கொடுத்துண்டு சென்னைக்கு போறதுக்கு நானே காரை ஓட்டிண்டு வரேன். டீசலும் போட்டுக்
கிறேன். ஏன் கவலைப்படுறே. உன்னை கூட்டிண்டு போயிட்டு கூட்டிண்டு வர வேண்டியது என் பொறுப்பு. அப்படின்னு சொல்லிட்டான். அப்புறம் என்ன? நல்லதா போச்சுன்னு கௌம்பிட்டேன். எங்கள எறக்கி விட்டுட்டு,அவன், கொஞ்ச நாழி வெயிட் பண்ணி பார்த்தான். கதவு தெறக்க நாழியானதாலே கௌம்பி போயிட்டான்.சரிதானே!'
'அப்படி போடு ஜின்னாக்குனானாம். அதானே பார்த்தேன். இந்த மனுஷனாவது கை காசு செலவழித்துக் கொண்டு, டீசலையும் போட்டுக் கொண்டு வருவதாவது?'
'நீங்க எல்லாம் பேசிண்டு இருங்கோ. நேத்திக்கி மார்க்கெட்டில், மிதி பாவக்காயும், எண்ணெய் கத்தரிக்காய் கறி பண்ணறாப் போல சின்ன சின்ன கத்தரிக்காயும் வெச்சிருந்தான். அத்திம்பேர் உங்களுக்கு ரெண்டுமே ரொம்ப பிடிக்குமில்லையா? பாவக்காய் ஃப்ரையும், கத்திக்காய் ஸ்டஃப்டு கறியும் பண்ணி தரேன்.'
'ரொம்ப இழுத்து விட்டுக்காத உஷா. முடிஞ்சதை பண்ணு போறும்'
எப்பொழுதும் காமு இங்கிதமாக நடந்து கொள்வாள்.
'எண்ணெய் கத்திரிக்காய்ன்னு சொன்ன உடனேதான் ஞாபகம் வருது. இன்னிக்கு சனிக்கிழமை ஆச்சே. எண்ணெய் தேச்சு குளிக்கணும். அதனால கீசர ஆன் பண்ணிடு. உஷா, எக்ஸ்ட்ராவா ஒரு பருப்புத் தொகையலும் சீரகம், மிளகு போட்டு ரசமும் வெச்சீனா எண்ணெய் தேய்ச்சு குளிச்சதுக்கு நன்னா கல, கலன்னு இருக்கும். ரகு பர்ஸிலிருந்து ஜாஸ்தியாவே பணத்தை எடுத்துண்டு போ. கீரை, பழங்கள் கிடைச்சாலும் வாங்கிண்டு வா.'
கை கருணைக்கிழங்கு. தன் பர்ஸிலிருந்து சல்லிக் காசு எடுக்கவில்லை. அடுத்தவன் பர்ஸூக்கு விளக்கெண்ணெய் கொடுத்து என்னமா கெத்து காட்டுகிறார். 'ஊரான் வீட்டு தோட்டத்தில வெளஞ்சிருக்காம் வெள்ளரிக்கா. காசுக்கு பத்து போடுன்னு கடுதாசு போட்டானாம் வெள்ளைக்காரன்' என்று ஊர்ப்பக்கம் சொல்லக் கேட்டிருக்கிறேன். அந்தக் கதையாக அல்லவா இருக்கிறது.
இப்படி ஒரு பவானி ஜமக்காள கஞ்சனை நான் பார்த்தது இல்லை.
உஷாவும் ' சரி' என்கிற பாவனையில் தலையை ஆட்டியபடி பையை எடுத்து, 'மார்க்கெட்டுக்குப் போகிறேன்' என்கிற சாக்கில் தப்பித்துக் கொண்டாள்.
சுமாராக அரை லிட்டர் நல்லெண்ணெய்யை உச்சி முதல் பாதம் வரை தேய்த்துக் குளிக்கிறேன் பேர்வழி என்று அபிஷேகம் செய்துகொண்டு, ஆவி பொங்கப் பொங்க வெந்நீரில் குளித்துவிட்டு, பாத்ரூமையே ஆயில் ஸ்கேட்டிங் ரூமாக மாற்றிய பெருமை அவரை மட்டுமே சாரும்.
'சமையல் ரெடி ஆயிடுத்து. மார்க்கெட்டுல நல்லவேளை வாழை இலையும் கிடைச்சது. வாங்கிண்டு வந்துட்டேன். வாங்கோ சூடா சாப்பிடலாம்.'
உஷாவின் இந்தச் சொல் தேனாக காதில் பாய்ந்தது. எனக்கு அல்ல. என் அத்திம்பேருக்குத்தான். பரபரவென்று ஓடி வந்து டைனிங் டேபிளில் நான்தான் ஃபர்ஸ்ட் என்கிறாற் போல் வந்து உட்கார்ந்து விட்டார்.
'ரகு, குளிச்சிட்டியோன்னோ. வா. நீயும் அத்திம்பேரோட வந்து சேர்ந்து சாப்பிடு' என்றாள் அக்கா, அனுசரணையாக.
உஷாவும், காமுவும் வேண்டுமா, வேண்டுமா என்று, கேட்டு கேட்டு பரிமாறினார்கள். சர்......புர்.....என்கிற சத்தம் திருச்சிக்கே கேட்டிருக்கும். என்ன என்கிறீர்களா? சாப்பிட உட்கார்ந்தால் அடித்து ஆடுவதுதான் அவரின் வழக்கம். கிழக்கும் மேற்கும் வடக்கும் தெற்குமே அவர் ஊறியும் உறிஞ்சலில் உள்ளே போய்விடும் போல் இருந்தது. சுத்தமாக டேபிள் மேனர்ஸ் என்பது ஜீரோ தான்.என்ன செய்வது? என் சகதர்மினிக்கு நிலை கொள்ளா சந்தோஷம். தன் சமையலை இவ்வளவு விரும்பி சாப்பிடுகிறாரே? என்கிற ஒரு பேரானந்தம். இடுப்புத் துணியை அவிழ்த்து தலைக்கு கட்டிக் கொண்டு ஆடாத குறை தான்.
ஆனந்தமாக சாப்பாட்டுக் கடையும் ஒரு வழியாக முடிந்தது. சாப்பிடும்பொழுது வேஷ்டியில் ஏதோ சிறிது சிந்திவிட்டது என்பதற்காக வாஷ் பண்ணிக் கொண்டு வருகிறேன் என்று பாத்ரூமுக்குள் போனார் அத்திம்பேர். ' டமால்' என்று பெரிய சத்தம். கூடவே 'ஐயோ காமூ...' பெரிய கூக்குரல்.
எல்லோரும் விழுந்து அடித்துக் கொண்டு பாத்ரூம் வாயிலில் போய் நின்று பார்த்தால், எண்ணெய் தன் வேலையை காட்டி இருக்கிறது என்பது புரிந்தது. அத்திம்பேர் உள்ளே விழுந்து கிடந்தார். டைல்ஸ் ஏதாவது டேமேஜ் ஆகி இருந்தால் ஹவுஸ் ஓனருக்கு நான் தானே பதில் சொல்ல வேண்டும் என்கிற பயமும் இருந்தது.அக்கம் பக்கத்து பிளாட் ஆண்களை உதவிக்குக் கூட்டி வந்து ஒரு வழியாக அவரை பெட்டில் படுக்க வைத்தோம். காலில் ஃபிராக்சர் ஆகிவிட்டதா? வேறு எங்காவது அடிபட்டிருக்கிறதா என்பதே தெரியவில்லை.
'காமு, உங்களைக் கொண்டு வந்து விட்டாரே ஒரு ஃபிரண்ட் அவர் போன் நம்பர் உன்கிட்ட இருந்தா கொடு. அவருக்கு போன் பண்றேன். ஆஸ்பத்திரிக்கும் பண்ணி இருக்கேன். ஆம்புலன்ஸ் வரும். அத்திம்பேரை கூட்டிண்டு போய் காமிப்போம். என்ன வைத்தியம் வேணுமோ பண்ணுவோம். சரியா. பயப்படாதே.'
' என்னமோ போ, ரகு. போறாத வேளை தான். அத்திம்பேர், கிளம்பும்போதே சொன்னார். இன்னைக்கு கரி நாளா இருக்கு. போக வேண்டாம். நாளைக்கு போய்க்கலாம்னு. அந்த ஃபிரண்டு தான் ஏதோ அர்ஜெண்ட் ஜோலி இருக்குன்னு சொன்னதும் உடனே கிளம்பிட்டார்.'
நல்ல வேளை அருகாமையில், ஒரு நல்ல ஆஸ்பத்திரி என்ற பெயரில் ஒன்று இருந்தது. அங்குதான் கூட்டிக் கொண்டு போகலாம் என்று ஆம்புலன்ஸை வரச் சொல்லி இருந்தேன். ஆம்புலன்ஸூம் வந்தது. அவர்கள் ஸ்ட்ரெச்சரை உள்ளே தள்ளிக் கொண்டு வந்து அத்திம்பேரை அதில் படுக்க வைப்பதற்குள், ஆ..ஊ.. என்று கத்தி ஊரையே கூட்டி அமர்க்களம் செய்துவிட்டார். அவர்கள் இத்தனைக்கும் மிகவும் ஜாக்கிரதையாகத்தான் அந்தக் காலை பிடித்துத் தூக்கி ஸ்ட்ரெச்சரில் படுக்க வைத்தார்கள்.
'நல்லவேளை இன்னைக்கு சனிக்கிழமை. ஒன்பது பத்தரை ராகுகாலம் முடிஞ்சு போயிடுத்து. இனிமே மத்தியான ஒண்ணரை மூணு தான் எமகண்டம். அதுக்குள்ள ஆஸ்பத்திரியில் போய் கால காமிச்சுடலாம். இல்லையாடா ரகு. என்ன பண்றது சொல்லு. நான் ஆத்துல இருந்தா சனிக்கிழமை சனிக்கிழமை சனிபகவானுக்கு எள்ளுஞ்சாதம் பண்ணி, நெய்வேத்தியமும் பண்ணி, காக்காக்கு சாதம் போடுவேன் . வந்த இடத்துல தொந்தரவு பண்ண வேண்டாமேன்னு விட்டுட்டேன். கடைசியில் இப்படி ஆயிடுத்து பாரு.'
அக்கா காமுவைப் பார்த்தால் ரொம்பவுமே பாவமாகத்தான் இருந்தது. கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த தாலிச்சரட்டை எடுத்து கண்களில் ஒற்றிக்கொண்டாள்.
'பகவானே. குலதெய்வமே நீதான் அந்த டாக்டர் வாயில வந்து நல்ல வார்த்தையா சொல்ல வைக்கணும். ஆபரேஷன் அது இதுன்னு இழுத்து விடாம நல்லபடியா ஊருக்கு போய் சேரணும்.'
என்ன பண்ணுவது? கல்லானாலும் கணவன். புல்லானாலும் புருஷன்.
'பாவம் அத்திம்பேர் கீழே விழுந்ததில் கால் மட்டும் இல்லை கையில் இடுப்பில் எங்கெங்கெல்லாம் நரம்பில் அடிபட்டு இருக்கிறதோ. பாவம். இல்லாவிட்டால் அவர் இந்த கூப்பாடு போட மாட்டார்.'
என் பெண்டாட்டிக்கு எப்படித்தான் இவ்வளவு அனுசரணை இருக்கிறதோ எனக்குத் தெரியவில்லை. என் மனம் தான் கல்லாகி விட்டதா? எதற்குமே அசைந்து கொடுக்க மாட்டேன் என்கிறது. அத்திம்பேர் என்பவரிடம் இத்தனை பாசமா? எனக்கே ஆச்சரியமாகத்தான் இருந்தது.
அந்த ஸ்ட்ரெச்சரை ஆம்புலன்ஸூற்குள் தள்ளி படுக்கை நிலையிலேயே அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
ஆஸ்பத்திரி வாசலிலேயே, ' சார் புது பேஷண்டா? ஓல்ட்டா சார்?'
' புதுசுப்பா ..'
'புதுசுன்னா அங்க போய் முதல்ல பணத்தைக் கட்டி பேஷண்ட்டு நேம் சொல்லி ரிஜிஸ்டர் பண்ணிக்கங்க. எந்த டாக்டரை பாக்கணும்னு சொன்னீங்கன்னா, அந்த டாக்டர்கிட்ட அவங்களே அனுப்பி வைப்பாங்க '- இது ஆஸ்பத்திரி எடுபிடி.
'உடம்பெல்லாம் விண் விண்ணுனு வலி தெறிக்கிறது. ரொம்ப நாழியாக்கறாளே. ஜூரம் வராப்புல வேற இருக்கு. உன்ன தாண்டா நம்பி வந்துட்டேன், ரகு. என்னவோ நல்லபடியா என்னை ஊருக்கு அனுப்பி வச்சுடு.'
'அத்திம்பேர், கவலைப்படாதீங்கோ. மனுஷான்னு எதுக்கு இருக்கோம்? ஒத்தாசைக்கு தானே? இவர் எல்லாம் பாத்துப்பார். நீங்க உடம்பை காட்டிட்டு நிம்மதியா ஆத்துக்கு வந்து ரெஸ்ட் எடுங்கோ. நிதானமா ஊருக்கு போனா போறும். என்ன இப்போ அங்க அவசரமா ஆக வேண்டி இருக்கு சொல்லுங்கோ?'
இந்த உஷா இருக்காளே உஷா. வாயை வைத்துக் கொண்டு சும்மாவே இருக்க மாட்டாள். ஆம்புலன்ஸூற்கு கொடுத்தாகிவிட்டது. அடுத்தது ஆஸ்பத்திரிக்கு வந்து ரெஜிஸ்டர் பண்ணவும் பணம் கட்டியாகிவிட்டது. இன்னும் ஸ்பெஷலிஸ்ட்டைப் பார்க்க வேண்டும். அதற்கு எத்தனை பணம் கட்டச் சொல்லப் போகிறார்கள் என்று தெரியாது. இன்றைக்கு யார் முகத்தில் விழித்தேன்? யோசனை செய்து பார்த்தேன்.
எடுபடி குறிப்பிட்ட அந்த அறைக்குள் சென்றோம்.
'சார் பேஷண்ட்ட இந்த பெட்ல படுக்க சொல்லுங்க. செக் பண்ணனும்!'
'ஏண்டா ரகு, கால் வலி கொல்றது. எப்படி ஏறி இந்த பெட்ல என்னால படுக்க முடியும்? யாராவது ஒத்தாசை பண்ணினாதான் என்னால படுக்க முடியும். புரியறதா?'
கடவுளை வேண்டிக் கொண்டு, ' எப்படியாவது இவரை கட்டிலில் ஏற்றி விடப்பா, காலை கொஞ்சம் தூக்கி விடப்பா' என்று வேண்டிக் கொண்டேன். என்ன செய்வது? மனுஷன் கொஞ்சம் வஞ்சனை இல்லாமல் தான் வளர்ந்திருக்கிறார்.
டாக்டர் பரிசோதித்து பார்த்ததில், முழங்காலுக்குக் கீழே, கணுக்காலுக்கு மேலே தொட்ட இடத்தில், 'ஐயோ அப்பா வலிக்கிறதே!' என்று அந்த ஏரியாவுக்கே கேட்கும் டெசிபலில் கத்தித் தீர்த்தார்.
'காலை எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தால்தான் தெரியும். எப்படி இருக்கிறது என்று. ஸ்லிப் எழுதி தரேன். கவுன்ட்டரில் பணத்தை கட்டிட்டு எக்ஸ்ரே எடுத்துட்டு வாங்க. மேற்கொண்டு என்ன பண்ணலாம்னு சொல்றேன்.'
' ஓ.கே. டாக்டர் ..'
கவுன்ட்டருக்கு ஓடினேன். எக்ஸ்ரே எடுக்க பணத்தையும் கட்டியாகிவிட்டது. அத்திம்பேரை கட்டிலில் இருந்து கீழே இறக்கி எக்ஸ்ரே ரூமுக்கு கூட்டிக்கொண்டு போக வேண்டும். சவால் தான். முயற்சி செய்து பார்க்க வேண்டும்.
தூக்கி இறக்கவே முடியவில்லை. ஒரு வழியாக மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க, மனுஷனை இறக்கி எக்ஸ்ரே ரூமுக்கு கூட்டிக் கொண்டு போய் எக்ஸ்ரேயும் எடுத்தாகிவிட்டது.
நல்ல வேளை எக்ஸ்ரே எடுத்துப் பார்த்ததில் பெரிய அளவில் எதுவும் ஃபிராக்சர் ஏற்படவில்லை என்று ஹாஸ்பிடல் தரப்பில் கூறியது நிம்மதியாக இருந்தது. ஹேர் லைன் கிராக் போன்று இருந்ததால், இலாஸ்டோ கிரேப் கொண்டு கட்டு போட்டு மாத்திரைகள் எழுதிக் கொடுத்தனர். நடக்காமல் ஒரு வாரம் ரெஸ்ட் எடுத்தால் போதும் என்று கூறினர். அவர்களின் ஃபிரண்டும் ஃபோன் பண்ணி கேட்டுக்கொண்டு வந்து சேர்ந்தார்.
எழுதிக் கொடுத்த மாத்திரைகளை அங்கேயே பார்மஸியில் வாங்கிக் கொண்டு, சில மணி நேரங்களில் வீட்டுக்கு வந்து சேர்ந்தோம். அதற்குப் பிறகு அத்திம்பேருக்கு சென்னையில் இருப்பு கொள்ளவில்லை.
'எனக்கு இன்சூரன்ஸ் இருக்கிறது. இன்சூரன்ஸ் கார்டை அவசரத்தில் ஊரில் வெச்சுட்டு வந்துட்டேன். ஏதாவது தேவைன்னா நான் அங்கு பாத்துக்கறேன். ஒரு வாரம் இங்கே தங்க முடியாது. என் ஃப்ரெண்டுக்கும் ஆபீஸ் போகணும். அவர் துணையோட நம்ப கார்லேயே ஊருக்கு போய் சேர்ந்திடுவேன். ரெண்டு நாள் இருந்துட்டு போகலாம்னு வந்தேன். இப்படி ஆயிடுத்து. சரி அடுத்த தடவை பார்ப்போம்' என்றார்.
முன் சீட்டில் காமு உட்கார, பின் சீட்டில் நீட்டிய காலோடு அவர் சாய்ந்தபடி அமர்ந்து கொண்டார். இருவருக்கும் டாடா சொல்வதைத் தவிர வேறு வழி இல்லை. பாவம் எப்பவோ ஒருமுறை வந்த அத்திம்பேரை மனதுக்குள் எப்படி எல்லாம் நினைத்தோம் என்று நானே என் தலையில் ஒரு முறை ஓங்கி குட்டிக் கொண்டேன்.
' என்ன ஆச்சு? ஏன் தலையில குட்டிக்கிறேள்?'
'அது ஒண்ணும் இல்லை. ஏதோ ஆபீஸ் ஞாபகம் வந்துடுத்து. ஒரு விஷயம் மறந்துட்டேன். அதுதான்!'
வேறு என்னத்தைச் சொல்ல? உண்டான வயதுக்கு அடையாளம் இல்லாமல் அச்சு பிச்சு என்று பல விஷயங்களை, என் அருமை அத்திம்பேரோடு ஒப்பிட்ட அசட்டு எண்ணங்களுக்கு 'கமா' போடாமல், முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, 'ஹாம்லெஸ் பர்சன்' என்கிற நற்சான்றை மனதார அவருக்கு நல்கியபடி, உஷாவுடன் வீட்டுக்குள் திரும்பினேன்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com