ஆஸ்கர் மேடையில் ஆசிய சினிமா!

கடந்த சில ஆண்டுகளாகவே ஆசிய நாடுகளில் இருந்து வெளியாகும் படங்கள் அமெரிக்க மேடைகளில் தனக்கென தனி மரியாதையை பெற்றுக் கொண்டிருக்கின்றன.
ஆஸ்கர் மேடையில் ஆசிய சினிமா!

கடந்த சில ஆண்டுகளாகவே ஆசிய நாடுகளில் இருந்து வெளியாகும் படங்கள் அமெரிக்க மேடைகளில் தனக்கென தனி மரியாதையை பெற்றுக் கொண்டிருக்கின்றன.

குறிப்பாக, அமெரிக்காவின் ஓடிடி, டிஜிட்டல் தளங்களில் இந்திய, ஆசிய திரைப்படங்களும் பாடல்களும் மிகப் பெரிய வருமானத்தை ஈட்டிக் கொண்டிருக்கின்றன. ஆஸ்கர் வெற்றி பெற்ற 'ஆர்ஆர்ஆர்', 'த எலிபன்ட் விஸ்பெரர்ஸ்' உட்பட பல படங்களும் பாடல்களும் அங்கே கோலோச்சிக் கொண்டிருக்கின்றன.

இத்தனைக்கும் ஆரம்பப் புள்ளியாக இருந்தது 2002- இல் வெளியான 'பார்பர் ஷாப்' படம். 2001- ஆம் ஆண்டு சரியாக 9/11 தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்கா கொஞ்சம் கொஞ்சமாக மீண்டுகொண்டிருந்த வேளை.

அமெரிக்காவின் அரசியல் சாசனத்திலேயே மாபெரும் மாறுதல்கள் நடைபெறத் தொடங்கிய காலகட்டம். அமெரிக்கா மாதிரியான வல்லரசு நாட்டையே ஒரு தீவிரவாதத் தாக்குதல் முற்றிலுமாகக் குலைத்திருந்தது. அந்த வேளை அமெரிக்காவுக்கு அத்தனை நாடுகளின் ஆதரவும் தேவைப்படத் தொடங்கியிருந்தது. அதே நேரம் கொஞ்சம் கொஞ்சமாக அமெரிக்கர்கள் அல்லாத மற்ற நாட்டு நடிகர்களின் நடிப்பும் அமெரிக்கப் படமாக்குதல் துறைக்குள் நுழையத் தொடங்கியது.

அதற்கு முதல் புள்ளி வைத்தார் பர்வேஷ் சீனா. இவர் ஒரு இந்திய- அமெரிக்க நடிகர். தெற்கு ஆசிய நாடுகளில் சலூன், பார்பர் கடைகளில் பணிபுரியும் பணியாளர்களின் வாழ்வாதாரம், அவர்களின் வாழ்க்கைச் சூழல் குறித்து எடுக்கப்பட்ட படம்தான் 'பார்பர் ஷாப்'.

ஆங்கில உச்சரிப்பில் இந்திய வாசனை வந்தாலே அமெரிக்கர்களுக்கு அது காமெடிதான், அப்படியிருக்க இந்தப் படத்தில் பர்வேஷ் சீனா பேசும் வசனங்களே அவர்களை சிரிக்க வைக்கப் போதுமானதாக இருந்தது.

அப்போது வரை அமெரிக்கர்கள் அல்லாத மற்ற நாட்டினர் அனைவரும் வெள்ளையர்களைப் பொறுத்துக் கொண்டும், அவர்களுக்கு மறைமுகமான அடிமையாகவும்தான் அந்நாட்டில் வாழ்ந்து வந்தனர். என்ன... கருப்பினத்தவர்கள் போல் ஆசிய அமெரிக்கர்களின் நிலை அவ்வளவு மோசமில்லை, அவ்வளவுதான். சக மனிதர்களுக்கே அந்த நிலை என்றால் வேறுபட்ட பாலினத்தவர்கள் நிலை எப்படி இருந்திருக்கும்?

அதிலும் ஆசிய -அமெரிக்கர்கள், குறிப்பாக ஆசிய முஸ்லிம்கள் அமெரிக்கத் திரைப்படங்கள், டி.வி. சீரியல்களில் நடிக்கிறார்கள் எனில் அவர்களுக்கு அதிகபட்சமாக அளிக்கப்படும் பாத்திரம், 'டெரரிஸ்ட் நம்பர் 4' குறும்படத்தில் ராமே தாவூத் ஏற்று நடித்த கேரக்டர் மாதிரியான கதாபாத்திரங்கள்தான்.

இதில் மாற்றம் பெறுவதற்கு குறைந்தது 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. மேலும் பர்வேஷ் சீனாவே பல படங்கள், சீரியல்களுக்குப் பிறகுதான் 'கிரேசி - எக்ஸ் கேர்ள் ஃபிரண்ட்' போன்ற கதைகளில் நடித்தார்.

இதற்கெல்லாம் விதை போட்டவர்கள் மூவர். ஜாக்கி சான், புரூஸ்லீ, ஏ.ஆர்.ரஹ்மான். ஜாக்கி சான், புரூஸ் லீ படங்களுக்குக் கூட அமெரிக்கத் திரையரங்கங்கள் மறுக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளன. இது ஒரு பக்கம் இருக்க உலகையே பாப் இசையால் கட்டிப் போட்டுக்கொண்டிருந்த அமெரிக்க இசைக் கலைஞர்களின் இசையையும் தாண்டி ஒலித்தது ஒரு இந்தியத் தமிழனின் இசை.

2005- ஆம் ஆண்டு 'லார்ட் ஆஃப் வார்' திரைப்படத்தின் ஒரு காட்சியில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் 'பாம்பே' படத்தின் கீ தீம் பயன்படுத்தப்பட்டு டைட்டில் கார்டில் சிறப்பு நன்றியுடன் விழுகிறது ரஹ்மானின் பெயர். ஜாக்கி சான், புரூஸ்லீ போன்றவர்
களுக்கு அமெரிக்கர்கள் இடமளித்தது வேறு ஒரு அரசியல். காரணம் சீனா, ஜப்பான் நாடுகளில் மறைக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்ட தற்காப்புக் கலை இவர்கள் வழியாக வெளியே வருவதை அவர்கள் மறைமுகமாக ரசித்து நின்றனர்.

ஆனால், ஏ.ஆர்.ரஹ்மான் என்ட்ரி முழுக்க முழுக்க தவிர்க்க முடியாத - ஒதுக்க முடியாத திறமையாகவே இருந்தது. அடுத்தடுத்து 'இன்சைட் மேன்', 'த ஆக்சிடென்டல் ஹஸ்பண்ட்' என பல படங்களில் ரஹ்மானின் இசை இடம் பெறத் தொடங்கியது. என்னதான் காலம் காலமாக ஏலியன், டைனோசர்கள், விண்வெளி என கதைகளைக் கொட்டினாலும், அதைப் பார்க்க ஒரு கட்டத்தில் அமெரிக்காவிலேயே ரசிகர்கள் இல்லாமல் போனது.

அதுவும் எத்தனை ஆண்டுகள் என எண்ணும் தருவாயில்தான் 'ஸ்லம்டாக் மில்லியனர்' எனும் எதார்த்தப் படம் அமெரிக்காவின் ஆஸ்கர் கதவுகளை எட்டி உதைத்தது. இந்தப் படத்துக்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளுடன் 'எல்லாப் புகழும் இறைவனுக்கே' என ரஹ்மான் கூறிய வார்த்தைகள் இன்று வரை டிரெண்ட். இனி நல்ல கதை செய்தால்தான் வேலைக்காகும் என அமெரிக்கர்களே ஒரு வழியாக ஒப்புக்கொள்ள, இதுதான் தருணம் என கிடைத்த இடைவேளியில் கோல் அடித்தார்கள் ஆசிய- அமெரிக்க நடிகர்களும் ஆசியப் படைப்பாளிகளும்!

எப்படி கருப்பின மக்கள் தங்களுக்கென ஓர் இடம் பிடிக்க போராடிக் கொண்டிருக்கிறார்களோ, அதே மாதிரியான போராட்டம்தான் இதுவும். அடுத்தடுத்து ஆஸ்கர் மேடையில் தவிர்க்க முடியாத படங்களாக ஆசியப் படங்கள் இடம் பெற ஆரம்பித்தன.

தேசிய விருதுகள், கலைஞர்களுக்கான விருதுகள், சர்வதேச விருதுகள் என அந்தந்த நாடுகள், மொழிகள் என அவர்கள் கலைஞர்களை அங்கீகரித்தாலும், உலகிலேயே பெரிய விருது ஆஸ்கர்தான் என்னும் மாய பிம்பத்தை ஒவ்வொரு நாட்டுக் கலைஞர்கள் மனதிலும் புகுத்தியது அமெரிக்கர்களே. அந்த மாயைதான் இன்று மற்ற நாட்டினரும் அமெரிக்க, ஆஸ்கர் பட்டியலுக்கு ஆசைப்பட்டு அதற்கான மெனக்கெடல்களைச் செய்ய வைக்கிறது.

ஏ.ஆர்.ரஹ்மானின் ஆஸ்கர் விருதுகள் வெறும் திறமைக்கான கதவை மட்டுமல்ல; அடைக்கப்பட்ட வேறு பல கதவுகளையும் திறந்தன. ஆஸ்கர் மேடையில் விருது பெற்ற முதல் ஆசிய இஸ்லாமியராகவும் பார்க்கப்பட்டார் ரஹ்மான்.

இதனால் ஆசிய- அமெரிக்க முஸ்லிம் நடிகர்களின் அடையாளமும் கூட அடுத்தடுத்த காலங்களில் உயர்ந்தன. இதன் தாக்கம்தான் 2021-ஆம் ஆண்டு ஆசிய- அமெரிக்க நடிகர் ஹ்மெத் 'சவுண்ட் ஆஃப் மெட்டல்' திரைப்படத்துக்கான சிறந்த நடிகருக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம்பிடிக்க வைத்தது. இவர்தான் ஆஸ்கர் சிறந்த நடிகர்கள் பட்டியலில் இடம்பிடித்த முதல் ஆசிய இஸ்லாமிய நடிகர். அடுத்து சமூக வலைதளங்களின் தாக்கம், ஓடிடி தளங்களின் வரவு என ஆசியப் படங்களில் உள்ள எதார்த்தக் கதைகளின் வலிமையால் அமெரிக்கப் படங்களின் மாயக்கோட்டை சரிய ஆரம்பித்தது.இதனால் மறைக்கப்பட்ட அல்லது கண்டுகொள்ளாமல் விடப்பட்ட சில பழைய படங்களும் கூட வெளியே வந்தன.

இதன் தொடர்ச்சியாக, அமெரிக்கர்களைத் தொடர்ந்து ஆசியர்களின் உறவுகள், அவர்களின் குடும்ப சூழல், திருமணம், குறிப்பாக திருமண வைபோகங்கள் ஆகியவற்றின் மீது கவனத்தை திருப்ப வைத்தது. விளைவு-இதோ 'ஆர்ஆர்ஆர்', 'த எலிபன்ட் விஸ்பெரர்ஸ்', 'எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்' என பல ஆசியப் படங்கள் அங்கே மில்லியன்களில் வருமானம் ஈட்டியிருப்பது. 'ஆர்ஆர்ஆர்', 'தி எலிபன்ட் விஸ்பெரர்ஸ்' படங்களின் நெட்ஃபிளிக்ஸ் வருமானம் தலா 160 மில்லியன் என்கின்றனர்.

இப்படி ஆசியர்களின் வலிமை அதிகரிக்கவே 'மார்வெல்', 'டிசி' கதைகளிலும் ஆசிய, ஆப்பிரிக்கர்கள் ஹீரோக்களாக இடம் பிடிக்கத் தொடங்கினர்.

'பிளாக் பாந்தர்', 'ஷாங்சி அண்ட் த லெஜண்ட் ஆஃப் த டென் ரிங்ஸ்' தொடங்கி வெப் சீரீஸ்களான 'த ஃபேல்கன் அண்ட் த வின்டர் சோல்ஜர்', முற்றிலும் பாகிஸ்தான் அடிப்படையில் எடுக்கப்பட்ட மார்வெல் சீரிஸான 'மிஸ். மார்வெல்'... என பட்டியல் நீளமாகிக் கொண்டே போகிறது.

ஆசியர்களின் வரவும், தாக்கமும் அமெரிக்கர்களின் ஆதிக்கத்தை அவர்களுக்கு எதிராகவே திருப்பி 'ஆமா... உங்க ஆஸ்கர்தான் உலகிலேயே பெஸ்ட்...' எனச் சொல்லி அவர்களிடமே அங்கீகாரம் பெறச் செய்தது. உண்மையில் இந்த யுக்தியை அறியாமல்தான் கருப்பினத்தவர்கள் எதிர்த்துப் போராடி பல ஆண்டுகளாக உயிரையே கூட இழந்தனர்.

ஆனால், ஆசியர்கள் வேறு விதமாக வியூகம் வடிவமைத்து இன்று 50 - 50 சார்ட்டில் அமெரிக்கர்களுடன் தங்களையும் இணைத்து, உடன் கருப்பினத்தவர்களையும் சேர்த்து பயணிக்கச் செய்து வருகிறார்கள். இவ்வளவு போராட்டம் அவசியமா இந்த ஆஸ்கருக்கு?

ஆமாம், அவசியம்தான். காலம் காலமாக அமெரிக்கப் படங்களுக்கு உலகமே எவ்வளவு வாரி இறைத்திருக்கும்? எத்தனை '007' படங்கள், எத்தனை ஏலியன்கள், சூப்பர் ஹீரோக்கள், எத்தனை முறை வெறும் வெள்ளை மாளிகையை உடைத்துக் காட்டி யிருப்பார்கள்? வெறும் பூச்சி, புழுக்கள், டைனோசர்களைக் காட்டி இங்கே எத்தனை கோடிகளை வாரிச் சுருட்டியிருப்பார்கள்?

போதாதென வீட்டு டிவி பெட்டியிலும் ஓடிடி வழியாகவும் வருமானத்தை அள்ளித் தந்திருக்கிறோம். இப்போது அவர்கள் நேரம்... நம் படைப்புகளுக்கு
பணத்தைக் கொடுக்கிறார்கள்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com