
என் வயது 68. கடந்த பத்து மாதங்களாக நாக்கின் இடது பக்கத்தின் மேல், ஓரம், கீழ்ப் பகுதிகளில் புண் ஏற்பட்டு ஆறாமல் உள்ளது. எத்தனையோ மருத்துவம் பார்த்துவிட்டேன். குணமாகவில்லை. கேன்சர் இல்லை என்றும் மருத்துவ அறிக்கை கூறுகிறது. கூரான பற்கள் காரணமாகலாம் எனக் கூறி மூன்று பற்களைப் பிடுங்கி விட்ட பிறகும் குணம் கிடைக்கவில்லை. இதை எப்படி குணப்படுத்துவது?
-சேகர் ராமானுஜதாசர்,
கோவை.
உடல் வெளிப்புற, உட்புற புண்களை ஆற்றுவதில் கடுக்காய் மிகவும் சிறந்தது. கொட்டை நீக்கிய கடுக்காய் தோலை, நான்கு துண்டங்களாக உடைத்து எடுத்துக் கொண்டு, பசு நெய்யை உருக்கி, அதில் இந்தத் துண்டங்களைப் போட்டு வதக்கவும், சிறிது பொன்னிறமாக மாறியதும் அடுப்பிலிருந்து இறக்கி, ஆறவிடவும். அதை வாயிலிட்டு, மெதுவாகக் கடித்து, நன்கு கூழாக்கி, வாயில் புண் ஏற்பட்டுள்ள பகுதியில் படுமாறு சிறிது நேரம் வைத்திருந்து மெதுவாக விழுங்கிவிடவும். இதைக் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடவும்.
இப்படித் தொடர்ந்து மூன்று அல்லது நான்கு வாரங்கள் கூடச் சாப்பிடலாம். புண் ஆறுவதுடன் இளமையை அல்லது தங்களுடைய முதுமையை மேலும் வளராமல் தக்க வைக்கும் திறனையும் அது செய்துவிடும் ஆற்றலுடையது.
இதைச் சாப்பிட்ட பிறகு, வாயினுள் உணரப்படும் துவர்ப்புச் சுவை நீண்ட நேரம் இருக்கும் என்பதால், அதை ருசித்திடும் பக்குவம் மனிதர்களின் வாயினுள் அமைந்திருக்கும் ருசி கோளங்கள் விரும்புவதில்லை. அதனால் நீங்கள் இம்மருந்தை உண்ட பிறகு, சிறிது சூடாறிய பசும் பாலை சிறிது, சிறிதாகப் பருகலாம். பாலில் இயற்கையாகவே அமைந்துள்ள குளிர்ச்சியான வீரியம் மற்றும் இனிப்பான சுவையினால், புண் ஆறுவதற்கான ஏற்பாடுகள் துரிதப்படும். மேலும், கடுக்காய், பசு நெய்ப்பால் இம்மூன்றினுடைய சேர்க்கையினால் குடலிலுள்ள வேக்காடு தணியும். இதனுடைய வரவு கல்லீரலைச் சென்றடையும்போது, அதன் உட்புறக் கசடுகள் நீக்கப்பட்டு, தூய தான பித்த சுரப்பும் ஏற்படும்.
உட்புற சுத்தத்தினால்தான் மனிதர்களுடைய இளமையும் ஆயுளும் நிலைநிறுத்தப்படுகின்றன என்பதை இதன்மூலம் நீங்கள் நன்கறியலாம். மனிதர்களுடைய மனத்தூய்மைக்கும் இது வித்திடலாம் என்பதை வருங்கால ஆராய்ச்சிகள் நிருபிக்கலாம்.
புண் ஏற்பட்டுள்ள நாக்கின் இடது பகுதியில், ஐந்து மில்லி உருக்கிய பசு நெய்யுடன் கலந்த இரண்டு மில்லி தேனைத் தடவி, சிறிது நேரம் வைத்திருந்த பிறகு விழுங்கலாம். இதை மாலை வேலைகளில் செய்யலாம்.
தங்களுடைய வாட்ஸ் அப் வாய்ஸ் மெஸைஜில், சர்க்கரை உபாதைக்கான மாத்திரை சாப்பிடுவதாகக் கூறியுள்ளீர்கள். தேனினுடைய இந்தச் சிறிய வரவால், சர்க்கரையின் அளவு கூடி விடாது என்று நீங்கள் அறிந்துகொள்வதும் உங்களுடைய பயத்தைப் போக்கும்.
இரவு படுக்கும் முன் திரிபலை எனும் கடுக்காய்- நெல்லிக்காய்- தான்றிக்காய் ஆகியவற்றின் சேர்க்கையினால் தயாராகும் பொடி மருந்தை, ஐந்து கிராம் எடுத்து, இருநூறு மில்லி லிட்டர் இளம்சூடான பாலுடன் கலந்து சாப்பிட்ட பிறகு படுத்துறங்கவும்.
நல்ல ஒரு மலமிளக்கியான இம் மருந்தால், கண் மற்றும் வாய் சார்ந்த சூட்டினை மலமிளகுவதுடன் வாயிலாக வெளியேற்றுவதால் தலையில் குளிர்ச்சியை நீங்கள் உணரலாம்.
இப்படி காலை-மாலை-இரவு என மூன்று வேளை மருத்துவப் பிரயோகம் செய்யும் பல நன்மைகளில் முதன்மையானது உட்புறச் சுத்தமே. உணவில் கசப்பும்- துவர்ப்பும் நிறைந்த மணத்தக்காளிக் கீரை, வாழைப்பூ, சுண்டைக்காய் போன்றவற்றை அதிகம் சேர்க்கவும்.
காரம்- புளி- உப்பு முடிந்தவரை தவிர்க்கவும். திக்தககிருதம், சங்க பஸ்மம், காமதுகா ரஸம் மாத்திரை போன்ற மருந்துகள் பலனளிக்கக் கூடியவை.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.