பேல் பூரி

பேல் பூரி

படிச்சவனுக்கு ஒரே வழி!படிக்காதவனுக்கு பல வழி!படிச்சவனுக்கு பாக்கறதுதான் வேலை!படிக்காதவனுக்கு பாக்குறதெல்லாம் வேலை!
Published on


கண்டது

( சேலத்தில் இருசக்கர வாகன பழுது பார்க்கும் இடத்தில் எழுதப்பட்டிருந்தவை)

படிச்சவனுக்கு ஒரே வழி!
படிக்காதவனுக்கு பல வழி!
படிச்சவனுக்கு பாக்கறதுதான் வேலை!
படிக்காதவனுக்கு பாக்குறதெல்லாம் வேலை!

மா. பழனி,
கூத்தப்பாடி.

(அம்பாசமுத்திரத்தில் ஓர் அச்சகத்தின் பெயர்)

'பாஸ்' பிரஸ்'

-ஆ. மாடக்கண்ணு,
பாப்பான்குளம்

(வேலூர் புறவழிச் சாலை ஆட்டோ ஒன்றின் பின்புறம் எழுதப்பட்டிருந்த வாசகம்)

'மரணவாயிலில் நின்றால்கூட எதிரி முன் அழாதே.. அவனுக்கு தேவை உன் மரணம் அல்ல..
உன் அழுகை தான்..!

எஸ். அர்ஷத் ஃபயாஸ்,
குடியாத்தம்.

கேட்டது


(மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில்கண்டக்டரும், பயணியும்..)

''சார். இந்த பஸ் எங்கே போகுதுங்க!''
''ம். வழக்கமா போற இடத்துக்குதான். நீங்க எங்கே போகணும்!''
''அதுவா. நானும் வழக்கமா போற இடத்துக்குதான்!''

-சோ.மாணிக்கம்,
குத்தாலம்.

(நாகர்கோவிலில் ஒரு வீட்டின் முன் தம்பதி பேசிக் கொண்டது)

'' ஏங்க, வெளியே போயிட்டு வரும்போது பூ வாங்கிட்டு வாங்கன்னு சொன்னா வெறுங்கையோடு வர்றீங்களே! ஏன்?''
'' குண்டுமல்லி பூ தான் கடையில் இருக்குது !''
'' அதை வாங்காமல் வந்திருக்கீங்களே! ஏன் ?''
'' குண்டுமல்லியை நீ சுமந்து சிரமப்படக்கூடாதுன்னுதான்''

-நாஞ்சில் சு. நாகராஜன்,
நாகர்கோவில்.


(சிதம்பரம் வ.உ.சி. தெருவில் உள்ள ஓர் வீட்டின் முன் தம்பதி பேசியது)

''தொடப்பக் கட்டைக்கு கணக்கு தெரியுமா?''
''தெரியாது!''
''அப்புறம் எப்படி பெருக்குது!''

அ.ப.ஜெயபால்,
சிதம்பரம்.

யோசிக்கிறாங்கப்பா!

ஒரு மடங்கு தேடல், இரு மடங்கு திறமை, மூன்று மடங்கு பொறுமை
இவைதான் வெற்றியின் ரகசியம்.

ஆ.ஸ்ரீவித்யா,
தூத்துக்குடி.

மைக்ரோ கதை


நாராயணனுடைய அலுவலகப் பணி நிறைவு பெற்று, பணிஓய்வு நாள். அன்று மாலை வழியனுப்பு விழாவில், அனைவரும் ஆஜர்.

''நான் ஓய்வு பெற்று செல்வதை எண்ணி வருத்தப்பட வேண்டாம். எல்லோரும் தைரியமாக அவரவர் வேலைகளை பாருங்கள். உங்களுக்கு என் வாழ்த்துகள்!' என்று சுருக்கமாக நாராயணன் பேசினார். அவரது பேச்சை கேட்டு, அங்கிருந்தோரின் கண்கள் குளமாயின. அவருக்கு மாலைகள், பொன்னாடைகளைப் போர்த்தினர்.

எழுத்தர் கிருஷ்ணன் நெருங்கி, ''சார்! என்னை மறந்து விட மாட்டீங்களே? நீங்க ரிட்டையர்டு ஆகும்போது பெரும் தொகை உங்களுக்கு கிடைக்கும் என்று நம்பித்தான் நாங்கள் இருந்தோம். ஆனால் பி.எஃப். பணம் முதற்கொண்டு எல்லா பணத்தையும் துடைத்து எடுத்து செலவழித்து இருப்பீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை. பென்ஷன் பணம் மட்டும்தான் உங்களுக்கு கிடைக்கும் போல தெரிகிறது!'' என்றார்.

ஆமாம் கிருஷ்ணன்! என் வாழ்க்கை செலவுக்கு மட்டும்தான் போதுமானதாக இருக்கும் என நினைக்கிறேன்!''

அப்படி நீங்க சொல்லக் கூடாது சார்! ஆபீஸில் நீங்கள் கடன் வாங்காத ஆள் இல்லை. அதிகபட்சமா நான்தான் உங்களுக்கு ஒண்ணே கால் லட்சம் ரூபாய் வரை கடன் கொடுத்து இருக்கிறேன். வட்டிக்கு ஆசைப்பட்டேன். ஏதோ கொஞ்சம் வட்டி தரவும் செய்தீர்கள். இப்போது ரிட்டயர்டு ஆகிவிட்டீர்கள். மறக்காமல் அசல் பணத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக தர முயற்சி செய்யுங்கள் சார்!'' என்றார் கிருஷ்ணன்.

'பார்க்கலாம் பார்க்கலாம்!' என தலையாட்டி விட்டு சென்றார் நாராயணன்.

கு.அருணாசலம்,
தென்காசி.


எஸ்எம்எஸ்


பாவம் உன் பின்னால் நிழலாய் வரும்.
புண்ணியம் உன் பின்னால் நிஜமாய் வளரும்!

தா.முருகேசன்,
திருத்துறைப்பூண்டி.

அப்படீங்களா!


தகவல் பரிமாற்றத்தில் உலகின் முன்னணி செயலியான வாட்ஸ் ஆப்பை கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். இது வணிக, பணப் பரிமாற்றம் செய்யும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. எனினும், பெரும்பாலான பொதுப் பயனர்களின் பயன்பாட்டுக்காக, அந்த நிறுவனம் பல்வேறு புதிய சேவைகளை அவ்வப்போது அறிவித்து வருகிறது.

அதன்படி, ஒருவருக்கு எழுத்து வடிவில் அனுப்பிய தகவலை திருத்தும் வசதி புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அனுப்பிய தகவலில் தவறு இருந்தால் அதை முழுமையாக அழித்துவிட்டு மீண்டும் புதிய தகவலை அனுப்ப வேண்டியிருந்தது. தற்போது அனுப்பிய தகவலை 15 நிமிஷங்களில் திருத்தலாம்.

திருத்தப்பட்ட தகவலாக இருந்தால் அந்தத் தகவலில் திருத்தப்பட்டது என எழுதப்பட்டிருக்கும். எனினும், தகவல் வந்ததை காண்பிக்கும் நோட்டிபிகேஷனில் திருத்தப்படாத தகவல் காண்பிக்கும். பின்னர் உள்ளே சென்றால் திருத்தப்பட்ட தகவல் இருக்கும்.

ஆண்ட்ராய்டு பயன்பாட்டாளராக இருந்தால் திருத்த வேண்டிய தகவலைத் தேர்வு செய்து மேலே உள்ள மூன்று புள்ளிகளை கிளிக் செய்து தகவலை திருத்தி மீண்டும் அனுப்ப வேண்டும்.

ஐஓஎஸ் பயன்பாட்டாளராக இருந்தால் தகவலை தேர்வு செய்து சிறிது நேரம் அழுத்தி எடிட் செய்து அனுப்பிவிடலாம்.

தனிநபருக்கும், குழுவுக்கும் அனுப்பப்பட்ட தகவலை திருத்த இதே முறையை கடைப்பிடிக்க வேண்டும். இதற்காக முதலில் உங்கள் வாட்ஸ்ஆப்பை புதிய வெர்ஷனுக்கு அப்டேட் செய்து கொள்ள வேண்டும். தவறான தகவல் பரவி விடக் கூடாது என்பதற்காக வாட்ஸ்ஆப் நிறுவனம் கொண்டு வந்துள்ள இந்தச் சேவை பயனாளிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

அ.சர்ப்ராஸ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com