கல்லிலே கலைவண்ணம்..!

சிற்பக் கலையில் தன்னை முப்பத்து ஏழு ஆண்டுகளாக ஈடுபடுத்திக் கொண்டு பயணித்து வருபவர்தான்.
கல்லிலே கலைவண்ணம்..!
Published on
Updated on
2 min read


சிற்பக் கலையில் தன்னை முப்பத்து ஏழு ஆண்டுகளாக ஈடுபடுத்திக் கொண்டு பயணித்துவருபவர்தான். உ.இளங்கோவன். இவர் திருவாரூர் மாவட்டத்துக்கு உள்பட்ட முடிகொண்டான் என்ற கிராமத்தில் பிறந்து, மாமல்லபுரம் அருகேயுள்ள சிறியகிராமத்தில் வசிக்கிறார். சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலைகளைத் தயாரித்து, நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளிநாடுகளுக்கும் விற்பனைசெய்தவர்.

இவருடன் ஓர் சந்திப்பு:சிற்பக் கலை குறித்து?

மண், மரம், செங்கல், கல், உலோகம், தந்தம், மெழுகு, அரக்கு முதலியவற்றைக் கொண்டு உருவங்களையே அமைக்கும் கலையே சிற்பக் கலை. தமிழ்நாட்டில் சிற்பக் கலைக்கென்று ஓர் பாரம்பரியம் உண்டு. தொன்று தொட்டு இருந்துவருகிறது.

போரில் விழுப்புண் பட்டு இறந்த வீரனுக்குக் கல் நடுவது பழந்தமிழர்களின் வழக்கம். மாண்ட வீரனது உருவம் அந்தக் கல்லில் பொறிக்கப்படும்.

வழி, வழியாக வந்த சிற்பக் கலை ஆங்கிலேயர் காலத்திலும் வளர்ச்சிப் பெற்றது. இந்திய நாட்டு அரசப் பிரதிநிதிகளின் உருவச் சிலைகள், மாநில ஆளுநர்களின் உருவச் சிலைகள், டாக்டர் ரங்கச்சாரி, டாக்டர் லட்சுமணசாமி முதலியார் போன்றோரின் உருவச் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

சிற்பக் கலையில் எப்படி ஆர்வம் வந்தது ?

எங்கள் கிராமத்தில் பள்ளிக்கு நடந்து போகும்போது, அந்தப் பாதையில் புகழ்பெற்ற சிற்ப கலைக்கூடம் ஒன்று இருந்தது. அதனால் தினம்தோறும் அங்கே செதுக்கப்படும் சிற்பங்களைப் பார்த்து ரசிப்பேன். பழைய திரைப்படங்களில் கற்சிற்பங்களை அதிக அளவில் பார்த்துள்ளேன். நாமும் இந்தத் தொழிலை நன்றாக கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். பதினைந்து வயதாகும்போதே பக்கத்தில் இருந்த கலைக்கூடத்துக்கு வேலைக்குச் சென்றேன். இரண்டு ஆண்டுகளிலேயே ஓரளவு சிற்பங்கள் வடிவமைக்கக் கற்றுக் கொண்டேன். இதுவரைக்கும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அம்மன், சிவன், விநாயகர், முருகன்,

ஜயனார் சிலைகள் உருவாக்கியிருக்கிறேன். சிற்பக் கலைஞர்களின் பெருமை என்ன?

நாட்டிய நூல்களில் நளிநயமானது ஆங்கிகம், வாசிகம், ஆகார்யம், சாத்விகம் என நான்கு வகைகளில் வகுக்கப்பட்டிருக்கின்றன. ஆங்கிக அபிநயம் தேக உறுப்புகளால் நிகழ்வது. இந்நளிநயம் அங்கம், பிரத்தியங்கம், உபாங்கம் எனப் பிரிக்கப்படும். தலை, கைகள், மார்பு, விலா, இடுப்பு, கால்கள் என்பனவற்றால் நளிநயித்தல் ஆங்கிக நளிநயமாகும். தோள்கள், மேற்கைகள், முதுகு, வயிறு, தொடை, கணைக்கால் என்பனவற்றால் நளிநயித்தல் பிரத்தியங்க நளிநயமாகும். உபாங்க நளிநயம் எனப்படுவது முகம், கண்கள், கண் இமைகள், கண் விழிகள், கன்னங்கள், மூக்கு, தாடைகள், உதடு, பல், நாக்கு, நாடி போன்றவற்றால் மெய்ப்பாடுடையதாகும்.

சிற்பக் கலையில் நளிநயமானது சிற்பக் கலைஞன் பார்க்கும்போது, அவனுடைய மனிதில் உணர்ச்சியை ஏற்படுத்துக் கூடிய விதமாக உடலையும், அதன் உறுப்புகளையும் வளைத்துக் காட்டும் ஒரு முயற்சியாகும். பொதுவாக, நளி நயமானது நாடகம், நாட்டியம் போன்றவற்றில் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளதைக் காணலாம். அவ்வாறே சிற்பக்கலையில் மாதிரியான நளிநயமாகச் சிற்பங்கள் வடிக்கப்படுகின்றன.

சிற்பக் கலைஞர்களின் நிலை..?

சிற்பத் தொழிலில் பொருளாதார வளர்ச்சி இருக்காது. ஏனென்றால் தொழிலுக்கு தேவையான மூலப்பொருள்களின் விலை உயர்வு, பணியாளர்கள் ஊதிய உயர்வு போன்றவை போக கிடைக்கும் பணம் என்பது மிகவும் குறைவுதான். ஆனாலும் மனது முழு உற்சாகத்துடன் செயல்படலாம். சின்ன வயதில் இருந்த சுறு, சுறுப்பும் இப்போது அறுபது வயதிலும் இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com