மண்ணிலிருந்து...

சொர்ணத்துக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.  பிள்ளையைப் பார்க்கும்போதெல்லாம் மனசு நொந்து போகிறது.
மண்ணிலிருந்து...

சொர்ணத்துக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. பிள்ளையைப் பார்க்கும்போதெல்லாம் மனசு நொந்து போகிறது. மதுரை வீரன்போல வேகமும் துடிப்புமா ஊரையே சுத்தி வர்ற பிள்ளை. இப்போ சுணங்கிக் கிடக்கு. சரியா சாப்பிட்டுப் பல நாள் ஆச்சு. தகப்பன் இல்லாத பிள்ளைன்னு செல்லமா வளர்ந்தவன்.

சொர்ணத்துக்கு இரண்டு பிள்ளைகள். நாகராஜனும் சரவணனும்.. சொர்ணத்தின் கணவன் இறந்தபோது, இரண்டு பிள்ளைகளும் சிறியவர்களாக இருந்தனர். நிலம், நீச்சுன்னு ஒன்றும் கிடையாது. குடியிருக்கும் வீடு மட்டும் பல தலைமுறையாகத் தொடர்ந்து வரும் பூர்விகச் சொத்து. கலங்கி நின்றவளை, "" ரெண்டும் ஆம்பளை பிள்ளைங்க... ரெண்டும் ரெண்டு கோடி. தெம்பா இரு!'' என்று சொல்லி ஆறுதல்படுத்தின சொந்தங்கள்.


வருஷம் ஆறு ஆச்சு. சின்னவன் சரவணன் ஏழாவது படிக்கிறான். ரெண்டு மாசம் முன்ன வரைக்கும் ஒன்னும் பிரச்னை இல்லை. ரெண்டு மாசம் முன்னால் நம்ம குடிக்கிற தண்ணித் தொட்டியிலே கழிவைக் கொண்டு வந்து கலந்து உட்டுட்டாங்க. வாந்தி, பேதி வந்து ஆசுபத்திரியிலேயே வச்சு பார்த்து உடம்பு குணமாகி வீட்டுக்கு வர ஒரு வாரம் ஆச்சு. இதெல்லாம் நடந்து ரெண்டு மாசம் ஆச்சு. ஆனா, இன்னும் சரவணனுக்கு ஒரு வாய் சாப்பாடு உள்ள இறங்க மாட்டேங்குது.
சாப்பிட நினைச்சாலே ஒரு நாற்றம் அடிக்குதுன்னு சொல்றான். பக்கத்து வீட்டு அக்கா , ""அவனுக்குப் பிடிச்ச கருவாட்டுக் குழம்பு வச்சுக்க குடு. அவன் விரும்பிச் சாப்பிடுறத கடன் வாங்கியாவது ஆக்கிப் போடு. பிள்ளை உடம்பு தேறணும்ல'' என்று புத்திமதி சொன்னாள். சொர்ணமும் கருவாட்டுக் குழம்பும் கோழி சாறுமுன்னு ஆக்கிப் போட்டுத் தான் பார்த்தாள். ஒன்னும் பலன் இல்லை. பிடிச்சதும் பிடிக்காமல் போனதுதான் மிச்சம்.
என்ன நடந்ததுன்னு விசாரிக்க யார் யாரோ ஊருக்குள் வந்து போகிறார்கள். எல்லாரும் ஊரைக் கூட்டி நிற்க வைத்துப் படம் எடுத்துக் கொள்கிறார்கள். தண்ணீர்த் தொட்டியையும் சுற்றிச் சுற்றிப் படம் பிடிக்கிறார்கள். வந்து போனவர்கள் எல்லாரும் பளபளன்னு உடுத்திக் கொண்டு நம்ம விஷயத்தைப் பற்றிப் பேசுகிறார்கள். பக்கத்து வீட்டு அக்கா படம் பாக்குற போனில் காட்டினாள். ஆனால், ஒன்னும் இங்க மாறலை.
"எல்லாரும் ஒத்துமையா இருக்கணும்' என்று அறிவுரை சொல்றாங்க..! கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு பண்ணி பொங்கல் வைக்கிறாங்க! கொண்டாட்டமும் விளையாட்டும் பார்த்தா பிள்ளை மனசு மாறுமுன்னு சொர்ணமும் ரெண்டு பிள்ளைகளையும் அனுப்பினாள். அம்மா அங்க குடுத்த பொங்கச் சோறுலேயும் அதே நாற்றம் அடிக்கிறாப்ல இருக்குமான்னு சரவணன் அழுதான். சொர்ணம் மனசு விக்கித்துப் போய் நின்றுவிட்டாள்.
பழைய தண்ணீர்த் தொட்டியை கழுவியாச்சு எல்லாம் சரியாய் போச்சுன்னு சொன்னார்கள். எல்லாருக்குமே அந்தத் தண்ணீர்த் தொட்டியிலிருந்து தண்ணீர் எடுத்துக் கொள்ளப் பயம். என்ன நினைத்தார்களோ ஒரு நாள் அந்தத் தண்ணீர்த் தொட்டியை இடித்து விட்டு புதிய தண்ணீர்த் தொட்டி கட்டுவதாகச் சொன்னார்கள். சரவணன் மனசில் இன்னும் அழுத்தமாக அந்த நாற்றம் பதிந்து போயிருக்கிறது.
""சமபந்தி போஜனம் ஏற்பாடு செய்திருக்கிறார்களாம். நல்ல கல்யாண விருந்துபோல இருக்கும். கூடப் படிக்கிற பிள்ளைகளோடு அனுப்பி வை. விளையாட்டுப் போக்குல சந்தோஷமா இருக்கும்போதே சாப்பிடட்டும்''.
அவன் வகுப்பு டீச்சர் சொல்ல அதிலேயாவது அவன் மனசு மாறி ஒரு வாய் சாப்பிட்டால் போதும் என்று அனுப்பினாள். காய்ந்த வயிற்றோடு தான் திரும்பி வந்தான். வீட்டுக்கு வந்து தண்ணீர் குடிக்கவும் யோசிக்கிறான்.
சரவணன் ரெண்டு மாசத்தில் எலும்பும் தோலுமாய் நிற்கிறான். பெத்தவளுக்கு அதே கவலையில் தானும் இளைத்துப் போனாள். ""நம்ம குலதெய்வம் கருப்பண்ண சாமி கோயிலுக்குக் கூட்டிட்டுப் போய் மந்திரிக்கச் சொல்லு எல்லாம் சரியாப்போகும்''. உறவுகள் சொல்ல அதையும் செய்துவிட வேண்டியது தான். மகனைக் கூட்டிக் கொண்டு கருப்பண்ண சாமி கோயிலில் மந்திரிச்சு காப்புக் கட்டிக் கூட்டி வந்தாள். மகனைப் பிடிச்ச துஷ்டமெல்லாம் விலகிப் போகும்னு பூசாரி ஐயா நம்பிக்கையாகச்சொன்னார்.
ஒரு வாரம் ஆகிப் போச்சு. ஒரு முன்னேற்றமும் இல்லை. யார் வந்து அறிவுரை சொன்னாலும் பிள்ளை தலையைக் குனிஞ்சுக்கிட்டு கண்ணீர் வடிக்கிறானே தவிர வேற ஒன்றும் ஆகலை. மூத்தவன் நாகராஜன் இருபது வயசுப் பிள்ளை. ராத்திரி சரவணன் உறங்கியதும் அம்மாவிடம் வந்து தன்னுடைய எண்ணத்தைச் சொன்னான்.
""அம்மா இந்த சூழ்நிலையில் இருக்குற வரைக்கும் சரவணன் மனசுல இருந்து இந்த எண்ணம் போகாது. அதனால நாம இங்கிருந்து போயிரலாம்.''
நாகராஜன் சொன்னதும் சொர்ணத்துக்கு பதறிப் போச்சு. ""ஐயா, நாம தலைமுறை தலைமுறையா இங்கன தான சாமி இருக்கோம். இங்கிருந்து எங்கன போய் பிழைக்குறது? காலமெல்லாம் உங்க பாட்டன், பூட்டன் வாழ்ந்த வீட்டை விட்டுட்டு எங்க போய் பிழைக்க முடியும்?'' கண்ணீர் வடிய கேட்ட பெத்தவளை பரிதாபமாகப் பார்த்தான் நாகராஜன்.
" "அம்மா நம்ம சென்னைக்குப் போயிறலாம். அங்கே எனக்கு ஒரு வாட்ச்மேன் வேலையாவது கிடைக்கும். பிழைச்சுக்கிடலாம். வண்டி ஓட்டப் பழகிட்டா டிரைவர் வேலைக்குப் போயிரலாம்". இங்கயே இருந்தா தம்பிக்கு ஏதும் மனசுக்கு பிரச்னை வந்துருமோனு பயமா இருக்கு. என் சொல்லைக் கேளுமா'' கெஞ்சினான்.
"" சரி தான்'' என்று சொர்ணத்துக்கும் தோன்றியது.
"எங்கேயிருந்தாலும் பிள்ளை நல்லாயிருந்தா போதும்' என்ற முடிவுக்கு வந்து விட்டாள். காலையில் தன் உறவுகளையும் தாயாதிகளையும் பார்த்து விவரத்தைச் சொல்லி ஊரை விட்டு நகர்வதை உறுதிப் படுத்திக் கொண்டாள். இந்த யோசனை இதே மனநிலையில் இருந்த இன்னும் சில வீடுகளின் பிள்ளைகள் மனதுக்கும் சரி என்று தோன்ற நிலம் நீச்சோடு வசதியாக இருப்பவர்கள் பக்கத்துக்கு ஊரில் வாடகைக்கு வீடு அமர்த்திக் கொண்டார்கள்.
தட்டு முட்டுச் சாமான்களையெல்லாம் ஒதுக்கி விட்டு தேவைக்கு மட்டும் எடுத்துக் கொண்டு சொர்ணம் தன் பிள்ளைகளோடு புறப்பட்டாள்.
"கருப்பண்ண சாமி குலதெய்வம் அதையும் விட்டுட்டு தானே போயாக வேண்டும். "கருப்பண்ண சாமி உனக்கு இந்தக் கோவிலை எடுத்துக் கட்ட என் குடும்பமே பாடுபட்டுச்சு. என் பிள்ளைகளை இந்த மண்ணுல காலூன்ற இடம் இல்லாமல் செய்துட்டியே. உனக்கு மனசு இல்லையா உன்னாலயும் முடியலையா?'' மனம் அரற்றியது.
கருப்பண்ண சாமி விழி விரியப் பார்த்துக் கொண்டு நிற்க சொர்ணம் மகன்களோடு நடந்து கொண்டிருந்தாள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com