சதுக்கப்பூதம்

பழைய ஓலைச்சுவடியைப் பார்த்துக் கொண்டிருந்த மணிமாறனின் காதில் அவனுடைய நட்புக்குரிய வல்லவனின் குரல் காதில் விழுந்தது.
சதுக்கப்பூதம்

பழைய ஓலைச்சுவடியைப் பார்த்துக் கொண்டிருந்த மணிமாறனின் காதில் அவனுடைய நட்புக்குரிய வல்லவனின் குரல் காதில் விழுந்தது.
''மணிமாறா ! பூம்புகார் துறைமுகம் அருகே யவனக் கப்பல் வந்திருக்காம். அழகானது. பெரியது. அதனைப் பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாகப் போகிறார்கள். நானும் போகிறேன். நீயும் வருகிறாயா ?''
''முக்கியமான ஓலைச்சுவடியைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். முடிந்ததும் வருகிறேன்'' என்றான் மணிமாறன்.
''நீ ஓலைச்சுவடிக்குள் போய்விட்டால் திரும்பி வர நேரமாகுமோ ?''
''வல்லவா ! மருத்துவம் கற்கிறேன். குரு கொடுத்த ஓலைகளைப் படித்துவிட்டு இந்த மாதத்துக்குள் திருப்பிக் கொடுக்க வேண்டும். கால் நாழிகை பொறு. வந்து விடுகிறேன்!''
''ம். எப்போது பார்த்தாலும் மருத்துவம் கற்றல், ஓலைச்சுவடி என்று இருக்கிறாய். எப்போது இவையெல்லாம் முடியும்?'' என்று கேட்டான் வல்லவன்.
''நீ இப்படி கேள்வி கேட்டால் எனக்கு கால் நாழிகை போதாது. அரை நாழிகை வேண்டும். ஓலை பார்ப்பதை முடித்துவிட்டு வருகிறேன். பேசிக் கொண்டே போகலாம். அப்போது எத்தனை கேள்வியும் கேளு.''
வல்லவன் அதற்கு மேல் எதுவுமே பேசவில்லை . வீட்டை விட்டு வெளியே வந்து ஆகாயத்தைப் பார்த்தான். மெல்லிய நீல நிறமாய் பரவிக் கிடந்தது. வெயில் அடித்தது. பறவைகள் சில பறந்தன. மெல்லிய காற்று அவனைத் தழுவிச் சென்றது. அந்த வீட்டின் முன்னே இருந்த சிறிய தோட்டத்தில் விதவிதமான மருந்துச் செடிகள். குருவின் கட்டளைப்படி மணிமாறன் நட்டிருக்கின்றான். ' மருத்துவராக வேண்டும்' என்பது அவன் லட்சியம்.
அவனையும் மருத்துவம் கற்கும்படி கேட்டான் அவன் மறுத்து விட்டான். 'ஏன்' என்று கேட்டதற்கு அவன் சொன்ன பதில் விநோதமாக இருந்தது.
''மணிமாறா ! நீயும் மருத்துவம் படித்து நானும் படித்தால் பிற்பாடு நமக்கிடையே போட்டி, பூசல் வரும். அதனால் மருத்துவத்தில் நீயா, நானா என்று வரலாம். வேண்டாம். நான் வேண்டுவது உன்னோடான நட்பு. அது போதும். ஏற்கெனவே என் தந்தை தானிய வாணிபம் செய்கிறார். அவரிடம் கற்று தானிய வாணிபம் செய்வதே என் எண்ணம்.''
''வல்லவா போகலாமா ?'' என்றவாறு மணிமாறன் வெளியே வந்தான்.
''உன் வேலை முடிந்ததா ?''
''ஓர் ஓலைச்சுவடி முழுவதையும் பார்த்து விட்டே ன். இன்னும் ஓர் ஓலைச்சுவடி இருக்கிறது. அதையும் பார்த்துவிட்டால் கற்றல் முடிந்துவிடும்.''
''அப்பறம்?''
''குரு சொல்லும் மருந்து வேர்களை, காய்களை , இலைகளைக் கொண்டு வர வேண்டும்.''
''அப்படி எத்தனை வேர்கள், காய்கள், இலைகளைக் கொண்டு வர வேண்டும்?''.
''ஆயிரம் வேரைக் கண்டறிந்து கொணர்ந்தவன் அரை மருத்துவன். நானோ நூறு வேரைக்கூட கண்டுபிடிக்கவில்லை. இது மருத்துவப் படிப்பு. மருத்துவம் உயிரைக் காப்பாற்றுவது. மிகக் கவனமாக கற்க வேண்டும்.
வல்லவா ! உன்னுடை ய தானிய வாணிபம் போன்றது அல்ல.''.
''வெளிப்பார்வைக்கு தானிய வாணிபம் முட்டுப்பாடு (இக்கட்டு) இல்லாததாகத் தெரியும். போய்ப் பார்த்தால்தான் அங்குள்ளவையெல்லாம் தெரியும்.''
''நீ சொல்வது ஏற்புடையது. ஆனால் மருத்துவம் உயிரோடு தொடர்பானது. அதனோடு எதனையும் ஒப்பிட முடியாது.''
இருவரும் பேசிக்கொண்டே நடந்தார்கள். அவர்கள் நடந்த நடைபாதையெங்கும் மக்கள் போவதும் வருவதுமாக இருந்தார்கள்.
அவர்களைப் பார்த்த மணிமாறன், ''சோழக் கப்பல்களைவிடவா யவனக் கப்பல்கள் அழகானதா ? மக்கள் கூட்டமாகப் போகிறார்களே?'' என்று கேட்டான்.
''யவனக் கப்பல்கள் பார்ப்பதற்கு வித்தியாசமாக இருக்கிறதாம் என்று சொல்கிறார்கள்.'' என்று சொல்லியவாறு வல்லவன் நடக்க ஆரம்பித்தான்.
மூங்கில் குடுவையில் பனஞ்சாறு குடித்துவிட்டு அங்கிருந்த மேடான மண் குவியலில் உட்கார்ந்தார்கள் இருவரும்.
அப்போது இருவர் பேசிக் கொண்டு போனது காதில் விழுந்தது.
''இவ்வளவு வேகமாகப் போகிறாயே ? நீ போகிற வேகத்தில் உன்னை சதுக்கப் பூதம் தின்றாலும் தின்றுவிடும்.''
''போடா போ ! சதுக்கப்பூதம் என் நண்பன். பல தடவை பார்த்து விட்டேன். என்னைப் பிடித்து உண்ணாது. யாரைப் பிடிக்கும் என்பதை அங்கு போய்ப் பாரு!''
அவர்கள் பேசியதைக் கேட்ட மணிமாறன், '' சதுக்கப்பூதமன்றைப் பார்த்துவிட்டுப் போகலாம்!'' என்றான்.
வல்லவன்,'' சதுக்கப்பூத மன்றமா ? பூதம் நம்மைப் பிடித்து விட்டால்..'' என்றான் பயத்தில்..!
மணிமாறன் சிரித்தான்.
''ஏன் சிரிக்கிறாய்?''
''உனக்கு தானிய வாணிபம் மட்டும்தான் தெரியும் போல் தெரிகிறது. சதுக்க மன்றத்தில் இருக்கும் சதுக்கப்பூதம் குறித்து எதுவும் தெரியவில்லையே ? சதுக்கப் பூதம் தவ வேடம் பூண்டு அவம் செய்பவர்களை, மறைந்திருந்து அவம் செய்யும் பெண்களை, அரசில் இருந்து கொண்டே தவறு செய்பவர்களை, பிறர் மனைவியை விரும்புவர்களை, பொய் சாட்சி சொல்லும் புல்லர்களை, புறஞ் சொல்லித் திரிபவர்களைப் பிடித்துக் கொன்று தின்னுமாம்! இப்போது சொல்? உன்னை ஏன் பூதம் பிடிக்கும்?''
''பலரும் சொன்னதைத்தான் சொன்னேன். நான் எந்தத் தவறும் செய்யவில்லை . வா போய்ப் பார்ப்போம்.''
இருவரும் சதுக்க மன்றம் போனார்கள். அது ஒரு மண்டபம்தான் பூதத்தைக் காணவில்லை. ஒரு மேடை இருந்தது. அதுதான் பூதம் அமரும் இடம் போலும்.
''பூதத்தைக் காணோமே !''
என்று சொல்லிக் கொண்டும் பார்த்தவாறும் பலர் போனார்கள்.
வல்லவன், ''இன்று யாரையும் பூதம் சாப்பிடவில்லை போலும்'' என்றான்.
''குற்றம் செய்தவர்களைத்தான் சாப்பிடும். அவர்களைக் கண்டால் நாலு காதம் கேட்கும் விதமாக சத்தம் போட்டு சொல்லி பிடித்து உண்ணும்..'' என்று சொன்னான் மணிமாறன்.
''இன்று யாரையாவது சாப்பிட்டதா ?''
''குற்றம் செய்தவர்கள் கிடைக்க வேண்டுமே !''
''இது பிடித்து உண்பதைப் பார்க்க வேண்டும். சிறிது நேரம் இருந்து போகலாம்..''
நேரம் ஓடிக் கொண்டே இருந்தது. மக்கள் சதுக்க மன்றத்தைப் பார்த்து பூதத்தை காணவில்லையே என்று போய்க் கொண்டிருந்தார்கள். இரு நாழிகை ஓடியது. திடீரென்று ஒரு சத்தம் கேட்டது. அதனைத் தொடர்ந்து சில விநாடியில் சதுக்கமன்ற மேடையில் எவரோ உட்கார்ந்திருப்பது மங்கலாக தெரிந்தது. மணிவர்மன் உற்றுப் பார்த்தான். மங்கல் மறைய தெளிவாகத் தெரிந்தது. ஒரு பூதம் மேடை யில் உட்கார்ந்திருந்தது. பெருத்த தேகம். உருண்டை முகம் வட்டக்கண்கள்.
ஒருமுறை பார்த்தாலே உடல் நடுங்கும்கையில் வயிறு இருந்தது. திடீரென்று பூதம் மறைந்தது.
வல்லவனும் மணிமாறனும் வியந்து போய் நின்றார்கள்.
''பூதம் எவரையோ பிடிக்கப் போயிருக்கிறது'' என்றான் அங்கிருந்தோரில் ஒருவன். அவன் சொன்னது போல் பூதம் ஒருவனைப் பிடித்துக் கொண்டு வந்தது. அவன்,'' என்னை மன்னித்துவிடு. இனிமேல் தவறு செய்ய மாட்டேன்'' என்று கெஞ்சினான். பூதம் சிரித்தது. நான்கு காத தூரம் கேட்கும் விதமாக கத்தியது.
''இனிமேல் தவறு செய்ய மாட்டாயா? அப்படியானால் இதுவரை செய்த தவறுக்கு என்ன செய்வது? என் பாசக்கயிற்றில் மாட்டியவர்களை விடுதலை செய்ய முடியாது. நீ கையூட்டு வாங்கினாய். அதற்குரிய தண்டனை நான் உன்னை உண்பதேயாகும்'' என்ற பூதம் அவனைக் கொன்று தின்றது. மறுபடியும் திடீரென்று பூதம் மறைந்தது.
''பூதம் யாரையோ பிடிக்கத்தான் போயிருக்கும்'' என்றான் வல்லவன். அவன் சொன்னது போல் பூதம் மீண்டும் வந்தது. இம்முறையும் ஒருவரைப் பிடித்துக் கொண்டு வந்தது.
பூதம் உரத்துக் கத்தியது...'' தவம் வேடம் பூண்டு அவம் செய்து வரும் இம்மானிடனை உண்ணும்படி எனக்கு கட்டளையிடப்பட்டுள்ளது. அதனையிட்டே உங்கள் முன்னே இந்த மானிடனை உண்ணப் போகிறேன்!''
அப்போது தவம் வேடம் பூண்ட மனிதர்,
'' ஐயகோ ! தெரியாமல் தவறு இழைத்தேன். இனிமேல் தவம் வேடத்தில் இருக்க மாட்டேன். மற்ற மானிடர் போல் இருக்கிறேன். என்னை மன்னித்துவிடு...'' என்று கெஞ்சினார்.
பூதம் உரத்துச் சிரித்தது. அச்சிரிப்பைக் கேட்ட பூதத்தைப் பார்க்க வந்தவர்கள் பயந்தார்கள்.
''இந்த சதுக்கத்தில் மன்னிப்புக்கு இடமில்லை .
செய்த தவறுக்கு தண்டனை தருவதுதான் இந்த சதுக்க மன்றத்தி ன் முடிவு. இம்முடிவு முடிவான முடிவு. இதற்கு எதிர்வினை இல்லை'' என்றது பூதம்.
தவம் வேடம் பூண்டவர் அழுதார். புரண்டார். பூதத்திடமிருந்து தப்ப முயன்றார். ஆனால் பூதம் விடவில்லை. அவரைக் கொன்று விழுங்கியது. சிறிது நேரத்தில் பூதம் மறைந்தது.
வல்லவன், ''சதுக்க மன்றம் பார்த்தது போதும் புறப்படுவோம்'' என்று சொல்லி விட்டு நடந்தான்.
உடனே மணிமாறன், ''பொறு, அடுத்து யார் பூதத்திடம் சிக்குவார்'' என்று பார்த்து வி ட்டுப்போவோம் என்று சொல்லி, வல்லவனை நிறுத்தினான். பூதம் இன்னொருவரோடு தோன்றியது.
''இவர் நீதிமன்றத்தில் பொய்சாட்சி சொல்லி குற்றமற்றவரைத் தண்டிக்க வைத்தவர். இவ்வாறு ஒரு தடவையல்ல. பல தடவை செய்துவிட்டார். இதற்கு தண்டனை இதோ?'' என்ற பூதம் வழக்கம் போல கொன்று தின்றது.
''இன்று மூன்று பேர் குற்றம் செய்தவர்கள், கிடைத்தார்கள். பூதம் உண்டது. குற்றம் செய்யாதவர்கள் கிடைக்காவிட்டால் என்ன செய்யும்? மற்றவர்களைப் பிடித்து உண்ணுமா ?'' என்று கேட்டான் வல்லவன்.
''நல்ல வினா. இந்தப்பூதம் பசிக்காக சாப்பிடுவதாக எண்ணாதே. அதற்குப் பசியே இல்லை. பசியே வராது. குற்றம் செய்தவர்களைத் தண்டிக்க மட்டுமே இந்தப் பூதம் இருக்கிறது. அதன் வேலை அது மட்டுமே ! அதனால்தான் இதனை சதுக்கப் பூதமன்றம்'' என்றார்கள்.
''இதுபோல் நான்கு மன்றுகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமானவை . அவை வெள்ளிடை மன்றம், இலஞ்சி மன்றம், நெடுங்கல் நின்ற மன்றம், பாவை மன்றம் என்பனவாகும். பாவை மன்றம் புதுமையானது. அரசன் செங்கோல் தவறினாலும், நீதிமன்றத்தில் ஒரு சார்பாக நீதி வழங்கினாலும் பாவை மன்றில் உள்ள பாவை அழுது கண்ணீரால் குறிப்புக் காட்டுமாம்!''
''நீ சொல்வதைப் பார்த்தால் சோழ நாட்டில் மன்னர் செய்யும் தவறுகளையும் அடை யாளம் காண இயலும்.''
''சோழ நாடு சோறுடைத்தது மட்டுமல்ல; நீதி உடைய நாடு. அதனை உறுதி செய்வதுதான் ஐவகை மன்றம், அதில் முக்கியமாக இந்தச் சதுக்கப் பூதமன்றம்.''
அப்போது பூதம் ஒரு பெண்ணைப் பிடித்து வந்தது. அவள் கண்ணீர் வடித்தாள்.
''இந்தப் பெண்ணையுமா பூதம் தின்னும்?''பூதத்துக்கு ஆண், பெண் வேறுபாடில்லை . குற்றம் செய்தவரே அதன் இலக்கு.''.
இவள் என்ன குற்றம் செய்தாள்?
பூதம் கத்தியது.
''இவள் அலவம் (கணிகைத் தொழில்) செய்தவள். பெண் இனத்தையே கேவலப்படுத்தியவள். இவளுக்கான தண்டனை ..'' என்று பூதம் சொன்னபோது அந்தப் பெண் 'ஓ' வென்று கதறினாள்.
அந்தச் சத்தம் கேட்ட மாதவன் திடுக்கிட்டான். அவன் கையில் சிலப்பதிகாரம் இருந்தது.
அப்போதுதான் இந்தப் பூதம் சதுக்க மன்றம் எல்லாம் கற்பனையால் உருவான நினைவு என்பது புரிந்தது.
சிலப்பதிகாரத்தைப் படித்தபோது அது மறைந்து நூலின் கதையே காட்சிகளாய் நெஞ்சுக்குள் விரிந்தன.
கதையை மீறி சதுக்கப்பூதம் கண்ணுக்குள் நின்றது. நீதியை நிலைநாட்டும் சதுக்கப்பூதம் வாழ்ந்த சோழ நாட்டில் வாழக் கிடைக்கவில்லை . அப்படி ஒரு பூதம் இன்றிருந்தால் இந்தப் பூமி நல்லவர்கள் நடமாடும் பூமியாக இருக்குமே ! அப்படி ஒரு பூதம் இங்கு வருமா ?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com