அழைப்பிதழ்

காலை எட்டு மணிக்கே வாசலில் குரல் கேட்டது.  அப்போதுதான் காலையில் வந்த செய்தித்தாளைப் படித்துவிட்டுக் கீழே வைத்துவிட்டுக் குளிக்கப் 
அழைப்பிதழ்

காலை எட்டு மணிக்கே வாசலில் குரல் கேட்டது.  அப்போதுதான் காலையில் வந்த செய்தித்தாளைப் படித்துவிட்டுக் கீழே வைத்துவிட்டுக் குளிக்கப் போகலாம் என்று முடிவெடுத்து எழுந்த பரசுராமன் குளியலறைக்குப் போகாமல் வாசல் நோக்கிப் போனான். 
தட்சிணாமூர்த்தி நின்றிருந்தார்.  இவனைப் பார்த்ததும் லேசாகப் புன்னகைத்தார். "உள்ளே வரலாமா?'' என்றபடி.
"சார்.!. என்னது நீங்க போய் உள்ளே வரலாமா என்று கேட்கறீங்க? வாங்க சார் உள்ளே''  என்றபடி அவசரமாய் வாயில் இரும்புக் கதவைத் திறந்துவிட்டு விலகி நின்றான்.
உள்ளே வந்தார் தட்சிணாமூர்த்தி. வாசலின் படியோரம் செருப்புகளைக் கழற்றிவிட்டு பரசுராமன் உள்ளே போக,  அவன் பின்னால் படியேறி உள்ளே வந்தார்.
"வாங்க சார் உக்காருங்க..'' என்றபடி சொகுசு இருக்கையைக் காட்டினான். உட்கார்ந்தார். உட்கார்ந்தவர் கையில் வைத்திருந்த பையை அவனிடம் நீட்டினார்.
"என்ன சார் இது?''
"புடிங்க சார்..! தங்கச்சி வீட்டுக்கு வரும்போது அண்ணன் வெறுங்கையை வீசிட்டு வரலாமா?''
பரசுராமன் வாங்கிக்கொண்டான். அதற்குள் உள்ளிருந்து தேவகி வந்து, "வாங்க அண்ணே. எங்கே லட்சுமி வரலியா?'' என்று தட்சிணாமூர்த்தி மனைவியைக் குறித்துக் கேட்டாள். 
பரசுராமனும் லட்சுமியும் ஒன்றாக ஒரே பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்களாக வேலை பார்த்தவர்கள்.  தற்போது பரசுராமன் பணிநிறைவு பெற்றாகிவிட்டது. பணிநிறைவுக்கு ஓராண்டிற்கு முன்புதான் அந்தப் பள்ளிக்கூடத்துக்கு மாற்றலாகி பரசுராமன் வந்தான். வந்த கொஞ்சநாளிலேயே எல்லா ஆசிரியர்களையும் விடப் பரசுராமன் மூத்தவன் என்பதால் மரியாதைக் காட்டினார்கள்.  அதற்கு பரசுராமன் காட்டிய அன்பு நல்ல விளைச்சலைத் தந்தது. 
பரசுராமனும் லட்சுமியும் அண்ணனும் தங்கையுமாக உறவுக் கொண்டாடிப் பணியாற்றினார்கள்.  அதற்குள் நல்ல புரிதலில் விளைந்த உறவு இது.  பணிநிறைவு பெற்றாலும் அந்த உறவு தொடர்கிறது. சொந்த உறவுகளிலேயே அற்பக் காரணங்களுக்காகப் பிரிவு வருகிற சூழலில் எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து ஒன்றாக ஒரு இடத்தில் வேலை அமையும்போது ஏற்படுகிற இந்த அண்ணன்- தங்கை உறவு குறுகிய காலம் என்றாலும் தொடர்ந்து நிற்கிறது என்பதுதான் பரசுராமன்- தேவகி இணையர்களின் பண்புநிலை. தட்சிணாமூர்த்தியின் குரல் நினைவைக் கலைத்தது.
"இல்லம்மா தங்கச்சி. அவளுக்குப் பள்ளிக்கூடத்து வேலையே சரியாயிருக்கு.. அதுதவிர எல்லாத்தையும் மாணவர்கள் நலன்னு இழுத்துப்போட்டு செஞ்சுக்கிட்டிருக்கா? அதுவும் மாநிலத்து முதல்வரே பாராட்டிட்டாரா லட்சுமியை? போதாதா? எப்பவும் பள்ளிக்கூடத்து நினைவுதான்.. அதனால அவள் வரலே.  உங்க எல்லாரையும் கேட்டதா சொன்னா.. அதனால நான் மட்டும்தான் வந்தேன்.'' என்றார்.
"என்ன சாப்படறீங்க?  காப்பியா? டீயா?''
"காப்பி கொடும்மா. அதுக்கு முன்னாடி நான் இங்கே எதுக்கு வந்தேன்னு தெரியுமா?'' என்றார்.
"எதுக்கு சார்?''
"உங்க ரெண்டுபேர்கிட்டயும் சண்டை போடலாம்னு வந்தேன்.'' 
"சண்டையா? எங்க கூடயா?'' என்றபடி வியப்பாய் பரசுராமன் கேட்க, அதற்குள் தேவகிக்குப் புரிந்துவிட்டது.
"ஏங்க.. நாம அனுப்புன பத்திரிகை கிடைக்கலை போலருக்குங்க?'' என்றாள் மெதுவாக.
பரசுராமன் பேசாமல் இருந்தான் தயக்கத்தில்.
"என் மருமகனுக்குக் கல்யாணம் நடத்தியிருக்கீங்க? பத்திரிகை அனுப்புற சூழல் இல்லாமப் போகலாம். ஏன்னா ஒருத்தரா அலைஞ்சிருப்பீங்க?  ஒரு வார்த்தை போனிலே சொல்லியிருக்கலாம்.. போதும்.  இல்ல வாட்ஸ் அப்லே அனுப்பியிருக்கலாம். எதுவும் இல்லை..  இப்பத்தான் கேள்விப்பட்டேன்.. சும்மா இருக்க முடியுமா? அதான் பரிசுப்பொருள் வாங்கிட்டு என் மருமகனையும் மகளையும் வாழ்த்தறதுக்கு வந்துட்டேன். வாழ்த்திட்டு சண்டையும் போட்டுட்டு ஒரு  வாய் சாப்பிட்டுட்டும் போயிடலாம் வந்தேன்'' என்றார்.
"என்னது பத்திரிகை கிடைக்கலியா?'' என்றான் அதிர்வுடன் பரசுராமன்.
"ஆமாம்.. இன்னிவரைக்கும் வரலே!'' என்றார்.
உடனே பரசுராமன் உள்ளே போய் ஒரு சின்ன குறிப்பேட்டை எடுத்துவந்தான். அதனைப் புரட்டிப் பார்த்து ஒரு பக்கத்தை எடுத்து அதனைத் தட்சிணாமூர்த்தியிடம் காண்பித்தான். அந்தப் பக்கத்தில் தட்சிணாமூர்த்தியின் முகவரியும் பத்திரிகை அனுப்பிய நாளும் எழுதப்பட்டிருந்தது.
தேவகியும் தன்னுடைய கைப்பேசியை எடுத்து வந்து லட்சுமிக்கு பத்திரிக்கை அனுப்பிய வாட்ஸ் அப்பைக் காண்பித்தாள்.
இரண்டையும் பார்த்தார் தட்சிணாமூர்த்தி. சற்றுநேரம் யோசனையில் ஆழ்ந்தார்.
"ஆமாம்மா.  அனுப்பியிருக்கீங்க? யாரோ கையெழுத்துப் போட்டு வாங்கியிருக்காங்க?  யாருன்னு நான் பார்க்கிறேன். லட்சுமியோட போன் தொலைஞ்சு போச்சும்மா?  அந்த நேரத்துலதான் நீ வாட்ஸ் அப் அனுப்பியிருக்கே?  கையெழுத்துப் போட்டவரு ஏன்  பத்திரிக்கையை கொடுக்கலே?  மறந்துபோயிருக்கலாம். சரி பார்த்துக்கலாம்.''
"தெரியல அண்ணே.  உங்களுக்கு எப்படி அனுப்பாம இருப்போம். அதுமட்டுமில்ல  முக்கியமானவங்களுக்கு கூரியர்லேயும் மத்தவங்களுக்கு சாதாரண அஞ்சலிலேயும் அனுப்பினோம். அதுகூட இவரோட நண்பர்கள் சிலருக்குக் கூடக்  கிடைக்கலே.. இது அஞ்சல் துறையோட அலட்சியம்ணே.  ஆனா உங்களுக்கு கூரியர்தான் அனுப்புனோம்.''
"சரி விடும்மா.  இப்போ ஒரு சண்டை மிச்சமாயிடிச்சி. எப்படியிருந்தாலும் என்னோட மருமகனுக்கும் மகளுக்கும் பரிசுப்பொருள் வச்சிருக்கேன். கூப்பிடுங்க..'' என்றார்.
"இல்லண்ணே அவங்க வேலையைப் பார்க்க கல்யாணம் முடிஞ்ச நாலைஞ்சு நாள்லேயே போயிட்டாங்க?  இன்னும் ஆறுமாசம் ஆவும் வர்றதுக்கு. அவசியம் வந்தவுடன் சொல்றேன்.. நீங்களும் லட்சுமியும் விருந்துக்கு வாங்க இன்னும் சம்பந்தி வீட்டுக்குக் கறி விருந்தே வைக்கலை'' என்றாள்.
கட்டாயம் ரெண்டு பேரும் வரோம். முதல் நாளே சொல்லிடுங்க! என்றவர் பரசுராமனைப் பார்த்தார்.
பரசுராமன் பேசாமல் பலத்த யோசனையில் இருந்தான்.
தட்சிணாமூர்த்தி கேட்டார். "என்ன சார் பலமான யோசனை?''
"இல்லை சார்.. இந்த அழைப்பிதழ் கொடுக்கப்போய் பட்ட பல துன்பங்களை நினைச்சுப் பார்க்கிறேன். ரொம்ப வருத்தமா இருக்கு.  உறவுன்னு விட்டுடாம மதிச்சுப் போய் கொடுத்தவங்கள்லாம்.. ஒவ்வொண்ணு பேசினாங்க?  நீங்க எனக்கு உறவு கிடையாது.. கொஞ்ச நாள் பழக்கம்.. உங்களுக்கும் பத்திரிகைப் போகலே.. ஆனா அதையெல்லாம் மனசுல வச்சுக்காம வந்திருக்கீங்க?''  என்றான் தழுதழுத்த குரலில்.
"அண்ணே.  நாங்க ரெண்டு பேரும்தான் அலைஞ்சோம்.  ஒவ்வொருத்தரையும் வீடு தேடிப் போய்  கூப்பிட்டு அழைச்சோம்.. நம்ப புள்ள கல்யாணத்துக்கு எல்லாரும் வரணும். வாழ்த்தணும்னு நெனச்சுதான் அலைஞ்சோம்.  வெளியூர்ல என்னோட தூரத்து உறவு தங்கச்சி முறை வேணும் ஒருத்தி இருக்கா? அவளுக்குப் பத்திரிகை கொடுக்கப்போனப்பா.. எனக்கு உடம்பு முடியாமப்போயிடிச்சி..  வயிற்றுப்போக்கு.. என்னால சுத்தமா எழுந்திரிக்கவே முடியலே.. டாக்டர்கிட்ட காமிச்சிட்டு அங்க இவங்களோட உறவுக்கார வீட்டுலே என்னை விட்டுட்டு.. தங்கச்சிக்குப் பத்திரிகை கொடுக்கப் போனாங்க.. என்னால வரமுடியாத சூழலை சொல்லியிருக்காங்க.. ஆனா நான் வரேலேன்னு கோவிச்சுக்கிட்டு கல்யாணத்துக்கு வரலேண்ணே.''
"விடும்மா.. அதான் சொல்லிட்டிங்களே தூரத்து உறவுன்னு.. தூரமா இருக்கறது எல்லாம் ஒட்டுதலா இருக்காது தூரமாத்தான் இருக்கும்.''
பரசுராமன் சொன்னான். "சார் இதுலே நிறைய கசப்பான அனுபவங்கள்.  இவங்களுக்கு எல்லாம் அவசியம் அழைப்பிதழ் தரணும். அவங்கள்லாம் வர்றது ரொம்பக் கெüரவம்னு நினைச்சு போன இடத்துலே எல்லாம் அவங்க நடந்துகிட்ட முறையைப் பார்த்தா இவங்கள்லாம் கல்யாணத்துக்கு வராம இருக்கறதுதான் நல்லதுன்னு தோனிச்சு சார்.  அத்தனை கேவலமா நடந்துக்கிட்டாங்க? இன்னொரு பக்கம் இவங்களுக்கு அழைப்பிதழ் கொடுக்கணுமான்னு யோசிச்சு போய் கொடுத்த இடத்துலே அத்தனை மரியாதை கொடுத்தாங்க சார்.  இது ரொம்ப என்னைப் பாதிச்சிடிச்சு.. அதைவிட சிலருக்கு மறந்துபோச்சு.  திடீர்னு நினைவுக்கு வந்தவுடனேயே.. அய்யோ மறந்துட்டோம்னு கல்யாணத்துக்கு முதல் நாள் தனியா கார் எடுத்துட்டுப் போய் வீட்டைத் தேடியலைஞ்சு போய் அழைப்பிதழ் கொடுத்தா அவங்க கல்யாணத்துக்கு முதல்நாள்தான் தருவீங்களான்னு கல்யாணத்துக்கு வரலே சார்  இன்னும் சிலபேரு எங்களால வர முடியாதுப்பான்னு முகத்துக்கு நேரே சொல்றாங்க?  வரமுடியாமல் போவது இயல்புதான். அதை அழைப்பிதழ் கொடுக்கும்போதேவா சொல்லுவாங்க?  என்னமோ நாம பணத்துக்கு அழைப்பிதழ் கொடுத்த மாதிரி மொய்கவர் கொடுத்து அனுப்புற கேவலமான உறவுகளையும் நினைச்சுப் பாக்கறேன் சார்.''
"விடுங்க பரசுராமன் சார்.  என்னோட மகள் கல்யாணத்துலே இதுமாதிரி எனக்கு நிறைய அனுபவம்.  ஒண்ணேயொண்ணு சொல்றேன். கேட்டுக்கங்க? எங்க சித்தியோட நாலாங்கால் உறவு. அத உறவுன்னு சொல்லமுடியாது.  உங்களுக்குப் புரியும்னு நினைக்கறேன்.  இருந்தாலும் எல்லாம் சித்தப்பா உறவுன்னு போய் எல்லாருக்கும் பத்திரிகை கொடுத்தேன் சார்.  அதுலே ஒரு வீட்டுலே வயசானவருக்கு அழைப்பிதழ் கொடுக்கலேன்னு கோவிச்சுக்கிட்டாங்க.. அதுவும் கல்யாணத்துலே வந்து பிரச்னை பண்ணாங்க?  கல்யாணத்துக்கு வந்தவங்க எல்லாம் சொன்னாங்க.. ஒரே வார்த்தையிலே மண்டபத்த விட்டு வெளியே போங்கன்னு அனுப்பியிருப்பேன்.. நாம வளர்ந்த விதம் அப்படியில்லன்னு விட்டுட்டேன் பரசுராமன் சார்.. விடுங்க.. நல்லபடியா எல்லாத்தையும் முடிச்சிட்டீங்க.. இனிமே உங்க பிள்ளைங்க வாழ்க்கையைப் பாருங்க?''
"மூர்த்தி சார். அப்படி இல்லை.  உறவுன்னா என்னன்னு இத்தனை வயசாகியும் கத்துக் கொடுக்கறாங்க பாருங்க? அதை நெனச்சுப் பார்க்கிறேன் சார்.  எங்கம்மாவுக்கு எண்பத்தியாறு வயசாவுது..  தட்டுக்கெட்டுப்போச்சு.. ஆனா தனியா தானே சமைச்சு, தானே குளிச்சி எல்லாமும் செய்யுது.. எங்கப்பா அரசு வேலையில இருந்தாரு.. அந்த ஓய்வூதியம் எங்கம்மா வாங்கறாங்க.. எங்கப்பா வாங்கினதைவிட அதிகமா வாங்கறாங்க.. எங்கம்மாவை என்னோட வந்து இருன்னு கூப்பிட்டா அதுக்கு சொல்லுவாங்க, "நான் யாரை நம்பியும் இல்லை.. யாரை எதிர்பார்த்தும் நான் வயிறு கழுவ வேண்டிய நிலைக்கு எம்புருஷன் என்ன விட்டுட்டுப் போகலே குந்தியிருக்க சொந்த வீடும்.. சாப்பிட பிஞ்சினும் வருது. உங்க வீட்டுக்கு வந்து சீன்னு ஒரு வார்த்தை சொல்லிட்டா நான் உசிரோட இருக்க தேவையில்லை! நான் தள்ளியே இருந்துக்கறேன்.  நீங்க உங்க வேலையைப் பாருங்கன்னு அவ்வளவுபெரிய வீட்டுலே தனியா இருக்காங்க.. சார்.. எங்கம்மா சொல்லுவாங்க.. ஒருத்தரப் பிடிக்கலியா அவங்களப் பத்தி குறை பேசாத.. அதேசமயம் அவங்க உன் வீடு தேடி வந்தா விரோதத்தக் காட்டாதே. அப்படித்தான் என்னை வளத்திருக்காங்க மூர்த்தி சார்.  அதுக்கு இன்னிவரைக்கும் ஒரு குறையில்ல.. நீங்க வந்தது ரொம்ப மகிழ்ச்சி.. உறவுகள் அப்படித்தான் இருக்கும்.. நண்பர்கள் இப்படித்தான் இருப்பாங்க?''  என்றான் பரசுராமன் நெகிழ்ச்சியுடன். 
" அண்ணே வாங்க சாப்பிடலாம்!''  என்று தேவகி அழைத்தாள்.
 சாப்பிட உட்கார்ந்தார்கள்.
சாப்பிட்டுக் கிளம்பிப்போனார் தட்சிணாமூர்த்தி. அவர் போனபிறகு அவர் தந்த பையைப் பிரித்தார்கள். அதனுள் கொஞ்சம் இனிப்பு வகைகள். அப்பறம் கார வகைகள். அப்புறம் சின்ன பரிசுப் பொருள் இருந்தது. பிரித்தனர். அதற்குள் அழகாக கால்மேல் கால் போட்டுக்கொண்டு தலையில் மன்னர் தலைப்பாகைக் கட்டிக்கொண்டு இரு கைகளாலும் ஒரு புத்தகத்தைப் பிடித்துக் கொண்டு படிப்பதுபோல  வெள்ளியில் ஆனந்தப் பிள்ளையார் சாய்ந்திருந்தார். 
சாய்வு நாற்காலியில் ஆடுவதுபோல அதை வடிவமைத்திருந்தார்கள். இருவருக்கும் பிடித்திருந்தது. அதை தரையில் வைத்து ஆட்டிவிட்டார்கள். பிள்ளையார் படித்தபடியே ஆடினார்.  நான் பார்த்துக்கறேன். எல்லாவற்றையும் என்று சொல்வது போல அவரின் ஆட்டம் இருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com