ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சிறுநீர்த்  தடைக்கு தீர்வு என்ன?

ஆசனவாய் வழியாகச் செலுத்தப்படும் 'வஸ்தி' எனும் சிகிச்சை முறையால் தங்களுக்கு நல்லதொரு தீர்வைப் பெறலாம்.
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சிறுநீர்த்  தடைக்கு தீர்வு என்ன?

எனக்கு 61 வயதாகிறது. பெருங்குடல் வாயுவின் ஓட்டத்தினால் இரவில் பெரும் உபாதை ஏற்பட்டு, மலம் கழிக்கச் சென்றால் போவதில்லை. சிறுநீர்த் தடையும் ஏற்படுகிறது.  அடிவயிறும் கட்டிக் கொள்கிறது. இதை எப்படி குணப்படுத்துவது?
-ராம்ஜி, பெங்களூரு.

ஆசனவாய் வழியாகச் செலுத்தப்படும் 'வஸ்தி' எனும் சிகிச்சை முறையால் தங்களுக்கு நல்லதொரு தீர்வைப் பெறலாம்.  அதைச் செய்வதற்கு முன் உடலெங்கும் மூலிகைத் தைலத்தைத் தடவி, வெதுவெதுப்பாக மூலிகை இலைகளால் மூன்று நாள்களுக்கு ஒத்தடம் கொடுக்க வேண்டும்.  

இந்த வஸ்தி சிகிச்சை செய்யப்படும் இரண்டு நாள்களுக்கு மூலிகைத் தைலம் அல்லது நெய், மஞ்ஜை,  மிருகக் கொழுப்பு போன்றவற்றின் வாயிலாக, மலப்பைக்கு குழாய் மூலமாகச் செலுத்தப்பட்டு மூன்றாம் நாள் மருந்துகளால் தயாரிக்கப்பட்ட கஷாயத்தை வஸ்தியாகச் செலுத்தி, குடல் உள்புறம் சேர்ந்துள்ள வாயு, மலம் ஆகியவற்றை நன்கு நீக்கிவிடும் சிகிச்சை முறையே தங்களுக்கு மிகவும் சிறந்தது.

மருந்து, மாத்திரைகளை வாய் வழியாகச் சாப்பிடுவதால் ஏற்படும் கால விரயம், தீர்வின்னை போன்றவை வஸ்தி சிகிச்சையின் மூலம் தவிர்க்கப்படும். 
நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் மனிதர்கள் வஸ்தி சிகிச்சையால் பெறலாம் என்று ஸூஸ்ருதர், சரகர், வாக்படர் போன்ற ஆயுர்வேத மகரிஷிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.

விளக்கெண்ணெயில் சிட்டிகை உப்பு கரைத்து சூடாக்கி, மேல் வயிறு, அடி வயிறு என எல்லாப் பகுதிகளிலும் தடவி அரை- முக்கால் மணி நேரம் ஊறிய பிறகு வென்னீரால் கழுவிவிட்டு, அதன்பின்னர் வயிற்றின் மீது வென்னீர் ஒத்தடம் கொடுப்பதன் மூலமாகவும் உங்கள் உபாதை குறைய வாய்ப்பிருக்கிறது.

சோம்பு நல்லதொரு மலமிளக்கியாகும். அதை சுமார் ஐந்து கிராம் மென்று சாப்பிட்ட பிறகு, வென்னீர் குடிப்பதால் குடல் வாயு, மலச்சிக்கல் போன்றவை நீங்கிவிடும்.

கடுக்காய் பொடி தற்சமயம் விற்கப்படுகிறது. ஐந்து கிராம் தூளை நூறு அல்லது நூற்று ஐம்பது மில்லி வென்னீருடன் கலந்து இர வு படுக்கும் முன் சாப்பிட, மறுநாள் மலம் நன்கு கழிவதுடன் குடல் வாயும் வெளியேறும்.

'உதிவர்த்தனம்' என்ற பெயரில் ஒரு பொடி மருந்து விற்பனையில் உள்ளது. சுமார் நூறு கிராம் தூளை, புளித்த மோருடன் கலந்து சூடாக்கி, வயிற்றின் மீது பற்று போடுவதால், உள்பகுதியில் வாயுவின் ஓட்டம், ஆசனவாய் வழியாக நன்கு வெளியேறிவிடும். 

வயிறு உப்புசத்தால் அவதியுறுபவர்கள் இந்தச் சூரணத்தை காலை உணவுக்கு ஒரு மணி நேரம் முன் பயன்படுத்துவதையும், மாலையில் முன்குறிப்பிட்ட விளக்கெண்ணை பயன்பாட்டை, இரவு உணவுக்கு ஒரு மணி நேரம் முன் பயன்படுத்துவதையும் வழக்கமாக்கிக் கொள்வதும் நலம்.

'கல்யாணகுலம்' எனும் லேகிய மருந்தை நீங்கள் காலை, மாலை என இரு வேளைகள் சுமார் பத்து கிராம் உணவுக்கு முன் பயன்படுத்தினால் உங்கள் உபாதைகள் நன்கு குறையும்.
(தொடரும்)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com