ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: உணவு மாற்ற அவதிகள் சரியாக...

நான் கல்லூரிப் பேராசிரியராகப் பணிபுரிகிறேன்.  மத்திய அரசின் உத்தரவின்பேரில், வட மாநிலங்களில் உள்ள பல கல்லூரிகளில் ஆய்வு செய்து, அங்கு கல்லூரிப் படிப்பை மாணவர்கள் தொடரலாமா? அல்லது கூடாதா?
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: உணவு மாற்ற அவதிகள் சரியாக...

நான் கல்லூரிப் பேராசிரியராகப் பணிபுரிகிறேன்.  மத்திய அரசின் உத்தரவின்பேரில், வட மாநிலங்களில் உள்ள பல கல்லூரிகளில் ஆய்வு செய்து, அங்கு கல்லூரிப் படிப்பை மாணவர்கள் தொடரலாமா? அல்லது கூடாதா? என்பதை அறிவிக்கும் பணியையும் செய்கிறேன்.  அடிக்கடி ஏற்படும் உணவு மாற்றத்தால், நெஞ்செறிவு, செரிமானக் குறைவுகள் ஏற்பட்டு அவதியுறுகிறேன். விமானப் பயணத்தின்போது, இதை அதிகம் உணர்கிறேன்.  இதற்கு ஆயுர்வேத மருந்துகள் உள்ளதா?

-கணேஷ்ராம்,
சென்னை.

நெஞ்செறிவு, செரிமானக் கோளாறுகள் போன்றவற்றை குணப்படுத்த சில மூலிகைகளின் சேர்க்கையை ஆயுர்வேதம் கண்டறிந்துள்ளது.  

தண்ணீர்விட்டான் கிழங்கு, மாசி பத்திரி, நெல்லி வற்றல், வெட்டபாலையரசி,   கசகசா, வல்லாரை ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் டானிக் தற்சமயம் விற்பனையில் உள்ளது. பதினைந்து மில்லி காலை, இரவு உணவுக்குப் பின்னர் சாப்பிடவும். இனிப்பாக இருப்பதால், சர்க்கரை உபாதைகள் உள்ளவர்கள் இதனைத் தவிர்க்கவும்.

தனியாக உபயோகிக்கும்போது, செய்ய முடியாத ஒரு செயலை கூட்டாகச் சேர்க்கும்போது செய்து காட்டும் தனிப்பட்ட அரிய செயலை மூலிகைகள் செய்கின்றன. வீரியத்தில் குளிர்ச்சியான தண்ணீர்விட்டான் கிழங்கானது குடல், உணவுக் குழாயில் வாத- பித்த தோஷங்களால் ஏற்படும் உபாதையைக் குறைக்கவல்லது. ஞாபக சக்தியை பெருக்கக் கூடியது. பசி, உடல் வலுவை கூட்டக் கூடியது என்று 'ஸýஸ்ருத சம்ஹிதை' எனும் ஆயுர்வேத நூல் கூறுகிறது.

மாசி பத்திரி இதயத்துக்கு நல்லது. கசப்பான சுவையை உடையது. விந்தணுப் பெருக்கத்துக்கு உதவக் கூடியது. மூவகை தோஷங்களாகிய வாத- பித்த- கபங்களை அடக்க வல்லது என்று பாவபிரகாசர் குறிப்பிடுகிறார். குளிர்ச்சியானது என்று ராஜ நிகண்டுவில் காணப்படுகிறது.

தன்னுடைய புளிப்புச் சுவையால் வாதத்தையும், இனிப்புச் சுவையால் பித்தத்தையும் வரட்சி, சுவர்ப்புச் சுவையால் கபத்தையும், குளிர்ச்சியின் வீர்யத்தால் மூவகைத் தோஷங்களையும் கட்டுக்குள் வைத்திருக்கும் தன்மையுடையது நெல்லி வற்றல் என்கிறார்கள் பாவபிரகாசர்,  தன்வந்திரி நிகண்டுவின் ஆசிரியர்.

பசியைத் தூண்டுவதும் செரிமானத் தடை ஏற்படுத்தும் உணவைச் செரிக்க வைப்பதில் சிறந்ததும், ரத்தத்தைச் சுத்தப்படுத்துவதுமான வெட்பாலையின் சேர்க்கையின் முக்கிய குறிக்கோள் மற்ற மூலிகைக் கலவைகளின் குளிர்ச்சியால் பசி மந்தமாகிவிடக் கூடாதே என்பதினால்தான்.

'போஸ்த்தக்காய்' எனும் கசகசா செரிமான இறுதியில் இனிப்புச் சுவையாக மாறும் தன்மையுடையதும், உடல் வனப்பு, வலுவூட்டும் இயற்புடையது என்றும் ராஜ நிகண்டு கூறுகிறது.

குளிர்ச்சி, லேசான தன்மை, வரட்சி, போதை ஏற்றுவது , பசி தூண்டி, கப இருமல் குணமாக்கும் என்று பாவபிரகாசர் தன் பங்குக்கு கசகசாவைப் பற்றி வர்ணிக்கிறார்.

உடல் உட்புற ரத்தக் கசிவை நிறுத்துவதும், இதயத்துக்கு இதமானதும், தோல் உபாதை, சர்க்கரை உபாதை, காய்ச்சல், மூச்சிரைப்பு, இருமல், ருசியின்மை ஆகியவற்றை அகற்றுவதும், குளிர்ச்சியான வீர்யமுடையதுமாகிய வல்லாரை, பித்தத்தையும் தணிக்கக் கூடியது என்கிறார் ஸூஸ்ருதர்.

ஜிட் என்ற பெயரில் விற்பனையாகும் இந்த டானிக் மருந்தை நீங்கள் விமானப் பயணம் மேற்கொள்வதற்கு முன் சுமார் பதினைந்து மில்லி அருந்திய பிறகு மேற்கொள்ளவும்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com