பேல் பூரி 

நீங்கள் நினைத்தது முளைக்காது. விதைத்ததே முளைக்கும்.
பேல் பூரி 


கண்டது

(எட்டயபுரம் அருகேயுள்ள ஒரு கிராமத்தின் பெயர்)

''ராமனூத்து''

-அ.யாழினி பர்வதம்,
சென்னை-78.

(கும்பகோணம் மாநகராட்சி அலுவலகம்  அருகேயுள்ள  பிள்ளையார் கோயிலின் பெயர்)

''வட்டி பிள்ளையார் கோயில்''

-சம்பத்குமாரி,
பொன்மலை.

(விழுப்புரம்- புதுச்சேரி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு ஹோட்டலின் பெயர்)

''ஹோட்டல் கூட்டாஞ்சோறு''

-கே.இந்து குமரப்பன்,
விழுப்புரம்.

கேட்டது


(திருச்செந்தூர் கோயில் வாசலில் இருவர் பேசியது)

''கோயிலுக்குத் தனியாகவா வந்தீங்க?''
''துணைவியாரோடுதான் வந்தேன்.''
''அப்போ நீங்க உங்க மனைவியை அழைச்சிட்டு வரலையா?''

-அ.பட்டவராயன்,
திருச்செந்தூர்.

(சென்னையில் மாநகரப் பேருந்தில் இரு பெண்கள் பேசியது)

''உன் புருஷன் நல்லா இங்கிலீஷ் பேசுறாரே? என்ன படிச்சிருக்காருடி...''
''பாரில்தான். குடிக்க ஆரம்பிச்சார்னா இங்கிலீஷ்தான்.''

-ப.சோமசுந்தரம்,
சென்னை-129.

(செங்கல்பட்டில் உள்ள மருத்துவமனை ஒன்றின் அருகே இருவர்)

''ஏம்பா? 'ஜெனரேசன் கேப்'  என்கிறார்களே! என்ன அர்த்தம்?''
''அப்பா.. 50 ரூபாய் மிச்சப்படுத்த 30 நிமிடங்கள் நடந்ததற்கும்,  நான் 30 நிமிடங்கள் மிச்சப்படுத்த 50 ரூபாய் தருவதற்கும் பேர்தான் அது..''

-ஜி.அர்ச்சுனன்,
செங்கல்பட்டு.

யோசிக்கிறாங்கப்பா!

குடையும் செருப்பும் சேவகனால் அல்ல; 
ஒதுக்கப்படவனாய்.

-பொன்.சௌர்ணவேல்,
செங்கோட்டை.

மைக்ரோ கதை


பள்ளி விழா ஒன்றுக்கு முக்கிய பிரமுகர் ஒருவரை நிர்வாகத்தினர் அழைத்தனர். அழைப்பிதழைக் கூட படிக்காமல், தனது உதவியாளர்களிடம் கொடுத்துவிட்டு, நிகழ்ச்சி நாளன்று சொல்லுங்கள் என்று கூறினார்.
விழா நாளன்று தனது பரிவாரங்களோடு வந்த முக்கிய பிரமுகர் பள்ளி நிர்வாகத்தினரிடம், ''எனக்கு முக்கிய நிகழ்ச்சி இருக்கிறது. பேசிவிட்டு உடனே கிளம்பறேன்'' என்றார்.  அதற்கு பள்ளி நிர்வாகத்தினரோ, ''ஐயா.. மாணவர்களை அழைக்கிறோம்.. நீங்க..?'' என்று சொல்லி முடிப்பதற்குள், அதை கேட்காமல் முக்கிய பிரமுகர் பேச வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்து, நேரே மேடைக்குச் சென்று பேசத் தொடங்கிவிட்டார். 
இருபது நிமிடங்களுக்கு மேலாகப் பேசியும் மாணவர்களிடமிருந்து எந்த ரியாக்ஷனும் இல்லை. உடனே முக்கிய பிரமுகர் பள்ளி நிர்வாகத்தினரிடம் கேட்டபோது, ''ஐயா. நீங்கள் எங்களை பேசவே விடலையே? இது காது கேளாதவர்களுக்கான பள்ளி. மாணவர்களுக்கு 'ஹியரிங் மிஷின்' உங்க கையால் வழங்கதான் அழைத்தோம். நீங்கள் அளித்துவிட்டு பேசியிருந்தால் ரசித்திருப்பார்கள்..'' என்றனர்.
இதை கேட்ட முக்கிய பிரமுகர் என்ன பேசுவதென்று தெரியாமல் மௌனமாக நின்றிருந்தார்.

-பத்மா சாரதி,
தஞ்சாவூர்.

எஸ்எம்எஸ்

நீங்கள் நினைத்தது முளைக்காது. 
விதைத்ததே முளைக்கும்.

-ஜி.அழகிரிவேல்,
ஒதியடிக்காடு.

அப்படீங்களா!


கடந்த 20 ஆண்டுகளில் தொலைபேசி, கைப்பேசியாகவும், அறிதிறன்பேசியாகவும் நவீன தொழில்நுட்ப மாற்றங்களைக் கண்டுள்ளது. 
கைக்கு அடக்கமாக இருந்த கருப்பு- வெள்ளை திரைக் கொண்ட விலை உயர்ந்த கைப்பேசிகள், காலப்போக்கில் பெருந்திரைக் கொண்ட அறிதிறன் பேசிகளாக மாறின. 
இணையவழியில் விடியோ, தொலைக்காட்சி என அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களும் அறிதிறன்பேசிகளில் காணக்கிடைப்பதால் பெருந்திரை அறிதிறன்பேசிகளின் விலையும் அதிகமானது.
அதன் அடுத்தகட்ட வளர்ச்சியாக மடக்கும் அறிதிறன்பேசி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டு 5 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் பிரபலமாகி வருகின்றன. அதிலும் மடக்கும் அறிதிறன்பேசியின் விலை ஒன்றரை லட்சம் வரையில் உள்ளது. இந்நிலையில், அறிதிறன்பேசியை கையில் கடிகாரம்போல் அணியும் வகையிலான சுழலாக மடிக்கும் புதிய வகையிலான அறிதிறன்பேசியை மோட்டோரோலா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. 
கையால் அறிதிறன்பேசியை எடுத்து பயன்படுத்துவதைத் தடுக்க இந்த புதிய தொழில்நுட்பம் உதவும். இந்த அறிதிறன்பேசியின் திரையும் அதற்கு ஏற்ப மடக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் பாதியை மட்டும் மடக்கி நிற்க வைத்தும் பயன்படுத்தலாம்.
எந்த வடிவிலும் மடக்கக் கூடிய இந்த புதிய வகை அறிதிறன்பேசியில் பேட்டரி உள்ளிட்ட சாதனங்கள் எப்படி பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதை அந்த நிறுவனம் வெளியிடவில்லை. அதன் பின்புறத்தில் உள்ள காந்தசக்தி, கைக்கடிகாரம்போல்  அறிதிறன்பேசியை கையில் கட்டிக் கொள்ள உதவும் என்று கூறப்பட்டுள்ளது. 
இது எப்போதைக்கு சந்தைக்கு வரும், விலை போன்ற விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. 

-அ.சர்ப்ராஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com