பட்டாசு

புலி வாலை பிடித்திருப்பதுபோல் இந்த 'தவுசன் வாலா' பட்டாசை கீழே வைக்கவும் முடியாமல்,  பிடிக்கவும் முடியாமல் பயத்தோடு தவிக்கிறேன்.
பட்டாசு
Updated on
6 min read

புலி வாலை பிடித்திருப்பதுபோல் இந்த 'தவுசன் வாலா' பட்டாசை கீழே வைக்கவும் முடியாமல், பிடிக்கவும் முடியாமல் பயத்தோடு தவிக்கிறேன். இதை கையில் வைத்திருப்பதால்தான் பயந்துப் போய் நிற்கிறேன் என்பது என் மாமனார் வீட்டாருக்குத் தெரியாது. அது தெரிந்துவிடாமல் இருப்பதற்காகத்தான் இப்போது நான் சிரித்த முகத்துடன் நிற்க முயற்சி செய்கிறேன்.
'எனக்கு பட்டாசு என்றாலே பயம். அந்தப் பயத்தை இன்னும் அதிகமாக்குவதுபோல், இந்த பட்டாசை நான்தான் வெடிக்க வேண்டும்' என்று என்னிடமே கொடுத்திருக்கிறார்கள். இது நடக்கிற காரியமா?, அப்படி நடந்தால் நான் வெடிக்கு பயந்துகொண்டிருப்பது அம்பலமாகிவிடுமே என்று அஞ்சுகிறேன்.
நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது, ஒரு தீபாவளிக்கு, பக்கத்து வீட்டு பரமு 'யானை வெடி' ஒன்றை பற்ற வைத்தான். அது வெடிக்க வெகுநேரமாயிற்று. ஏன் வெடிக்கவில்லை என்று ஓடிப் போய் அவன் எடுத்ததும், பட்டாரென்று வெடித்து, அவனது வலது கை விரல் அத்தனையும் பிய்த்துகொண்டு போய்விட்டது. அந்தக் அகோரக் காட்சியை நேரடியாகப் பார்த்ததிலிருந்தே 'வெடி' என்றாலே எனக்கும் அந்த மரண பயம் வந்துவிடும். அன்றிலிருந்து எந்தத் தீபாவளிக்கும் நான் ஒரு வெடிகூட வெடித்ததில்லை.
''எங்க வீட்டில், இங்க பாருடா? உன்னோட சின்னப் பொண்ணு அவ வெடிக்கிறா?'' என்று என் பெற்றோர் தங்கையை வைத்துகொண்டு, கிண்டல் செய்வார்கள்.
''நீங்கள் என்னை என்ன வேண்டுமானாலும் பழித்துச் சொல்லுங்கள்! அதற்காக உடனே ரோஷம் வந்து வெடியை மட்டும் எடுத்து வெடித்துவிடுவேன் என்று நினைக்காதீர்கள்'' என்று சொல்லிவிட்டு, அப்போது எந்தச் சத்தத்தையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் இரண்டு காதையும் பொத்திக் கொள்வேன்.
'அப்படிப்பட்ட என்னிடம், புல்லட்டை ரோலாக சுற்றியிருப்பதுபோல், இந்த பெரிய பட்டாசு என் கையில் இருக்கிறது. அது ஒன்றோடு ஒன்று உரசி வெடித்து விடுவதுபோல் ஒரு இருக்கம் தெரிகிறது. அதுவே எனக்குள் ஒரு பீதியை கிளப்புகிறது. இதை யாரிடமாவது கொடுத்தால்தான் நான் நிம்மதியாக தலைதீபாவளியைக் கொண்டாட முடியும். இல்லையென்றால் இந்த வெடி எப்போது வெடிக்கும்மோ என்ன நடக்குமோ?' என்று பயந்தபடியே இருக்க வேண்டியதுதான்.
வீட்டிலிருந்து கிளம்பி இரு சக்கர வாகனத்தில் வந்துக் கொண்டிருக்கும்போதே என் மனைவியிடம் சொல்லித்தான் அழைத்து வந்தேன்.
''இங்க பாரு தில்லை.. அங்க வந்து என்னை பட்டாசு வெடி, பாம் வையி அப்படி இப்படியெல்லாம் சொல்லக் கூடாது, புரியுதா? ஏன்னா? சின்னப் பசங்க இருக்கற இடம்! அவுங்கதான் சந்தோஷமா வெடிக்கணும். என்ன? நான்போய் எடுத்து வெடிச்சன்னா.. இவன் என்னமோ சின்னப் புள்ளமாதிரி எல்லாத்தையும் எடுத்து வெடிக்கறான். சரியான அல்பமா இருப்பான்போலன்னு யாரும் என்னை நெனைச்சடக்கூடாதுல்ல? நான் என் வயசுக்கு எவ்வளவு வெடிச்சுருப்பேன் தெரியுமா? சலிக்க சலிக்க வெடிச்சுட்டேன். சொன்னா நீயெல்லாம் நம்ப மாட்ட? நாட்டுவெடிய வீட்டு விளக்குல காட்டி, அப்படியே அசால்டா கையாலே மேலத் தூக்கிப் போடுவேன், தெரியுமா? சின்னப் புள்ளைங்கெல்லாம் பாத்துச்சின்னா பய்ந்துக்கிட்டு வீட்டுக்குள்ள ஓடுங்க? அதுக்குத்தான் இப்பெல்லாம் அந்த வேலையே வச்சிக்கறதில்ல... டீசன்டா ஒதுங்கி நின்னு வேடிக்கை மட்டும் பார்ப்பேன்.'' என்று என்னுடைய அருமை பெருமையெல்லாம் சொல்லி முடித்தேன்.
'பரவாயில்லை நம்ம வூட்டுக்காரரரு இவ்வளவு பெரிய தைரியசாலியா?' என்று நினைத்து உள்ளுக்குள் அவள் பூரிப்படைந்திருப்பாள். இங்கு உள்ளுக்குள் உதறல் எடுத்திருப்பது எனக்குமட்டும்தான் தெரியும் என்று நான் நினைத்துகொண்டிருந்தேன்.
''அதெல்லாம் இல்லீங்க? எப்பயுமே நாங்க படைத்து முடிச்சதுக்கப்பறம், எங்கப்பா? ஒரு சரம் கொண்டுப் போய் வச்சி வெடிப்பாரு? அதுதான் எங்களுக்கு வழக்கம். இந்த தடவ நமக்கு தலை தீபாவளிங்கறதால உங்களதான் வெடிக்க சொல்லுவாங்க? அதுக்காக அவுங்க 'தவுசன் வாலா' பட்டாசு வேற வாங்கி வச்சிருக்காங்க?''என்றாள்.
''எது.. தவுசன்...''
இதை கேட்டபோதே எனக்கு அடி வயிற்றை கலக்க ஆரம்பித்துவிட்டது. பாதி வழிவேறு வந்துவிட்டோம். திரும்பிப் போகவும் முடியாது. வாயடைத்துப் போயிருந்தவனை, ''என்ன பயப்
படுறீங்களா?''என்றாள்.
கேள்வியே ஒருமாதிரி நக்கலாகத்தான் இருந்தது. ஒருவேளை எங்கம்மா எதாவது ஒன்னுகிடக்க ஒன்னு சொல்லியிருப்பாங்களோ? 'அவனுக்கு வெடின்னா ரொம்ப பயம்மா? கொஞ்சம் பத்திரமா பார்த்துக்கோ?' என்று என் மேல் உள்ள பாசத்தில் உளறி கிளறி விட்டார்களா? என்றும் தெரியவில்லை.
இருந்தாலும், சமாளிக்கும் விதமாக, ''இங்கப் பாரு தில்லை, மாப்ளேன்னா.. ஒரு மிடுக்கா இருக்கறதில்லையா?'' என்று கொஞ்சம் சத்தமாகத்தான் கேட்டேன். இரு சக்கர வாகனத்தில் போகும்போது அப்படி கேட்டால்தான் காதில் விழும்.
''அந்த மிடுக்கெல்லாம் பட்டாசை வெடிச்சிக்காட்டி நிருபீங்க? அப்பத்தான் நமக்கும் பெருமையாயிருக்கும். எதுக்கெடுத்தாலும் பயந்துக்கிட்டே இருந்தீங்கன்னா? வாழ்க்கையில நாம எப்படி முன்னுக்கு வர்றது. எந்த வேலையை செய்யப் போனாலும் மொதல்ல பயமாத்தான் இருக்கும். அப்பறம் போகப் போக பழகிடும். நீங்க தைரியமாப் போய் வெடிச்சீங்கன்னா? அந்த பயம் ஒங்களவிட்டு எட்ட ஓடிடும். இதுக்காக நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க...ஒங்களுக்கு தொணையா நானிருக்கேன்'' என்று சொல்லிக்கொண்டே என் மீது சாய்ந்துக்கொண்டாள். அதன்பிறகு வேறு என்ன நான் சொல்ல முடியும்?
''சரி.. சரி.. பார்ப்போம்'' என்று சொல்லி அழைத்து வந்துவிட்டேன்.
தீபாவளியன்று விடியற்காலை மூன்று மணிக்கே என்னை எழுப்பிவிட்டார்கள். விளக்கொளியில் வீடே பகலைப் போன்று ஒரு தோற்றம் ஏற்பட்டது. எண்ணெய் தேய்த்து கொண்டு, நான்தான் கடைசியாக குளித்தேன்.
'தாமதமாக குளித்தால்தான் என்னை தொந்தரவு செய்யாமல், அவர்களது வேலை என்னவோ அதைப் பார்க்காரம்பித்து விடுவார்கள்' என்பது எனது எண்ணம்.
பட்டு வேட்டி, சட்டையில் பவனி வந்தேன். படக்கென்று அந்த வெடி ஞாபகம் வந்துவிட்டது. ஆகா, அந்த வெடியெல்லாம் எங்கு வைத்திருக்கிறார்கள் என்று சாடையாக அங்குமிங்கும் பார்த்தேன்.
'சும்மா நம்மிடம் விளையாண்டு பார்க்கிறார்களா?' என்றுகூட நினைக்கத் தோன்றியது.
படைக்கத் தயாராகிவிட்டார்கள். எப்போது இந்த வேலையை ஆரம்பித்தார்களோ? தெரியவில்லை. நாலரைக்கெல்லாம் முடித்து தலைவாழை இலையை தரணியில் தலை நிமிரச் செய்த தாய், தந்தையர் போட்டோவுக்கு கீழே விரித்துப் போட்டார்கள். அதில், ஆவி பறக்கின்ற சூடான இட்லி. கொதிக்க கொதிக்க கொண்டு வந்த குழம்பை ஊற்றினார்கள். அந்தக் குழம்பின் வாசனை, 'நான் இங்கதான் இருக்கறேன்' என்பதுபோல் அனைவரையும் சுண்டி இழுக்கத்தான் செய்ததது.
சுழியன், பணியாரம், வாழைக்காய் பஜ்ஜி, என்று எல்லாம் ஒரு சிறு மலைபோல் காட்சியளித்தது. இடது பக்கமாக புத்தாடைகள் அடுக்கி வைத்திருந்தனர். வலது பக்கம்மட்டும் காலியாக இருக்கிறதென்று பார்த்தால், ஒரு பெரிய அட்டை பெட்டியை தூக்கிக் கொண்டு வந்து மைத்துனர் வைத்தார். அந்தப் பெட்டி முழுவதும் வெடியாகவே இருந்தது. எனக்கு அப்போதே படபடப்பு அதிகமாயிற்று. என்னுடைய செய்கையை என் மனைவி கவனித்திருக்க வேண்டும்.
''என்ன கீரியைப் பார்த்த பாம்பு மாதிரி அப்படியே பின்வாங்கறீங்க?'' என்று கிசுகிசுத்தாள்.
நானும், ''ஏய்..நான் என்ன நினைச்சேன்னா.. இங்க இருக்கறவங்க ஆளுக்கு ஒண்ணுன்னு எடுத்து வெடிச்சாக்கூட இது பத்தாது போலிருக்கே! இது முன்னமே தெரிஞ்சிருந்தா.. நாமகூட இன்னும் கொஞ்சம் வெடியை சேத்து வாங்கி வந்திருக்கலாம்ன்னு யோசிச்சிக்கிட்டிருந்தேன்'' என்று எதேதோ சொல்லி சமாளித்தேன்.
''அந்தக் கவலையெல்லாம் உங்களுக்கு வேணாம். இதுபோல இன்னும் ரெண்டு பெட்டி வேற உள்ள இருக்குது. ஐயா ஆசைப்பட்டீங்கன்னா? இந்தப் பெட்டியில இருக்குற எல்லா வெடியையும் நீங்களே வெடிக்கலாம்''என்றாள்.
'அடிப்பாவி, ஒரு அப்பாவியை கூப்பிட்டுக்கிட்டு வந்து இப்படியா பாடாப்படுத்துறது' என்று கேட்க வேண்டும்போல்தான் தோன்றுகிறது. எப்படி கேட்பது என்னை சுற்றி வெறும் அணுகுண்டல்லவா இருக்கிறது. அதற்குள் என் மனைவி, ''ஏன் ஒரு மாதிரியாயிருக்கறீங்க?''என்றாள்.
என் திருட்டு முழியே என்னைக் காட்டிக் குடுத்திடும்போல என்று நினைத்தவாறு, ''இல்லையே நல்லாத்தானே இருக்கறேன்'' என்று பற்கள் தெரியாமல் சிரித்து வைத்தேன். ஒரு வழியாக மாமனார் வலது கையால் கற்பூரதட்டையும், இடது கையால் சிறிய மணியையும் எடுத்து, 'டிங்.. டிங்..' என்று அடித்துகொண்டே அவர்களுடைய முன்னோர் பெயர்கள், குலதெய்வத்தின் பெயர்கள் என்று வரிசையாக சொல்லிக்கொண்டே கற்பூரத்தட்டை கீழிருந்து மேலாக, மேலிருந்து கீழாக, ஆடைகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பகுதி, வெடிகள் வைக்கப்பட்டிருக்கும் பகுதி என படைத்துவிட்டு கீழே தட்டை வைத்து நீர் மாற்றினார்.
மாமனார், மாமியார், மச்சான், மச்சானின் துணைவியார், அவர்களது இரண்டு பிள்ளைகள், என் மனைவி எல்லோரும் கண்களை மூடி, கைகூப்பி கும்பிட்டுக் கொண்டிருந்தனர். நான் மட்டும் ஒரு கண்ணைத் திறந்து அந்த பெட்டிக்குள் கரடு முரடாக துருத்திக் கொண்டிருக்கும் அந்த வெடிகளை ஒரு பார்வை பார்த்துவிட்டு, நானும் கண்களை மூடிக் கொண்டேன்.
'சுவாமி, யாரும் என்னிடம் வந்து, இந்த வெடியை வெடி, அந்த வெடியை வெடியென்று சொல்லக் கூடாது' என்ற வேண்டுதல்தான்.
படைத்து முடித்ததும் ஒரு சரத்தை கொண்டுபோய் வைத்து வெடிக்க வைப்பது அவர்களது வழக்கமாம். அவர்களே வெடிக்கட்டும்! வெடி சத்தம் கேட்கும்வரை கண்களை மட்டும் திறக்கக் கூடாது என்று நினைத்திருந்தேன். கொஞ்ச நேரம் எந்த சத்தமும் இல்லை. எல்லோரும் பட்டாசை எடுத்துகொண்டு வாசலுக்கு போய்விட்டார்களா என்று மெதுவாக கண்களை திறந்துப் பார்த்தால், பகீரென்றது. எனக்கு முன் இந்த பட்டாசு பந்தை வைத்துகொண்டு மைத்துனர் நின்றுகொண்டிருக்கிறார்.
''மாப்ளே, நீங்க சாமி கும்பிட்டுக்கிட்டே இருந்ததால உங்கள தொந்தரவு பண்ணலை. இந்தாங்க? போய் வெடிச்சுட்டு வாங்க?'' என்று என் கையில் இந்த பட்டாசு பந்தை திணித்தார்.
நானும் தலைதீபாவளிக்கு வந்திருக்கும் மாப்பிள்ளைக்கு எதோ பெரியதாக தருகிறார்களோ என்று நினைத்து ஆசையாக கை நீட்டி வாங்கிவிட்டேன். அப்புறம்தான் தெரிகிறது. யானை வெடியாம்.
'அடப்பாவிகளா? கை நீட்டனது ஒரு குத்தமா? ‘ என்று நினைத்து சுதாரித்து, ''இதை.. ஏன் எங்கிட்ட?''என்று இழுத்தேன்.
''மாப்ளே இந்த வருஷம் உங்களுக்குத்தான் தலை தீபாவளி! நீங்கதான் இந்த தவுசன் வாலா பட்டாச வெடிக்கணும். இருங்க நான் போய் நீட்டு வத்திய எடுத்துக்கிட்டு வர்றேன்'' என்று சொல்லிவிட்டு போய் இருக்கிறார்.
நானும், ''இல்லல்ல..இதைப் புடிங்க?''என்று அவர் பின்னாடியே நகர்ந்துப் பார்த்தேன். ம்கூம் முடியவில்லை. ஷாட்பூட் விளையாடுவதுபோன்று ஒரு தோரணையோடு நின்றுகொண்டு, என் மனைவியை சாடையாக அழைத்தேன்.
''என்ன இதெல்லாம், உங்கண்ணன் கொண்டார்ந்து எங்கிட்ட குடுத்துட்டுப் போறாரு?''என்று அவளிடம் மெதுவாக கேட்டேன்.
''உங்க திறமைக்கு இது ஒரு சவால்'' என்றாள்.
உள்ளுக்குள் உதறல் எடுப்பது எனக்குமட்டும்தான் தெரியும். நல்ல வேளையாக வேட்டி கட்டியிருக்கிறேன். இல்லையென்றால் தொடை நடுங்குவது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அப்படி தெரிந்திருந்தால், ''என்ன மாப்ளே தொடை நடுங்குது?'' என்று பரிகாசம் செய்திருப்பார்கள்.
பிறகு மற்றவர்கள் முன்னும் அசிங்கப்பட்டு, அசடு வழிய வேண்டியதுதான். இப்போது யானைக்கு சோறு ஊட்டப் போவதுபோல் இந்த பட்டாசு பந்தை பெரிய கவளமாக ஏந்திக்கொண்டு நிற்கிறேன். இன்னும் இரண்டு மூன்று தவுசன் வாலா பட்டாசு பந்தை எடுத்து வந்தார் மைத்துனர். ''என்னது''என்று கண்கள் அகல ஆச்சர்யமாக கேட்டேன்.
''இது உங்களுக்கில்ல மாப்ள! நீங்க துவக்கி வச்சதும்..அடுத்து நாங்க களம் எறங்குவோம்'' என்றார்.
'என் வாழ்க்கை உங்களுக்கெல்லாம் மைதானமாப் போயிடுச்சா?' என்று நினைத்துகொண்டே மெல்ல நடந்து சென்று நாற்காலியில் அமர்ந்திருக்கும் மாமனாரிடம் கொடுத்து விடலாம் என்றிருந்தேன். அவர் வாங்குகிறேன் என்று தப்பித் தவறி கீழே போட்டுவிட்டாரென்றால், அது என் காலில்தான் பொத்தென்று விழும்.
அப்புறம், ''என்ன மாப்ளே நீங்க! இதைகூட புடிக்க துப்பில்லாம விட்டுட்டீங்க?''என்று சொல்லி அவமானப்படுத்திவிடுவார். அதுகூட பரவாயில்லை வெங்காய வெடிபோல் கிழே விழுந்ததும், 'டமால்' என்று வெடித்துவிட்டால் என்ன செய்வது? இப்போதெல்லாம் எந்த வெடி எப்படி வெடிக்கும் என்றே தெரியாது என்று நினைக்கும்போதே நெஞ்சு பதை பதைக்கின்றது.
எதோ மல்லிப் பூ பந்தை கையில் கொடுத்துவிட்டு போயிருப்பதுபோல் அவர்கள் பாட்டுக்கு அலட்சியமாக இருக்கிறார்கள். மச்சான் பையன்வேறு, ''மாமா, சீக்கிரம் வெடிய வெடிங்க..
அடுத்து நானும் வெடிக்கணும்ல்ல'' என்று அவன் வேறு வத்தியை கொளுத்தி கையில் வைத்துகொண்டு, ஆர்வக் கோளாறில் சுற்றிக் கொண்டிருக்கின்றான்.
நான் அசந்த நேரத்தில் கையில் வைத்திருக்கும் இந்த பட்டாசை பற்ற வைத்துவிட்டு போய் விடப் போகிறான்? பிறகென்ன.. 'தலை தீபாவளிக்குச் சென்ற மாப்பிள்ளை பட்டாசு வெடித்து...' என்ற செய்திதான் மறுநாள் செய்திதாளில் வரும்.
''இந்தாங்க மாப்ளே வத்தி! போய் வெடிச்சுட்டு வாங்க.'' என்றார் மைத்துனர். நெற்றியில் திலகமிட்டு போருக்கு அனுப்பி வைப்பது
போல் சொல்கிறார். இதற்குமேல் தாமதிக்க கூடாதென்று, ''மாமா.. வருசா வருசம் நீங்க எப்படி செஞ்சீங்களோ.. அப்படியே செய்யுங்க? வழக்கத்த மாத்தாதீங்க. அப்பறம் சாமி குத்தமாயிடும்?'' என்று கெஞ்சாத குறையாகச் சொல்
கிறேன்.
''இங்க பாருங்க மாப்ளே.. எங்க குல வழக்கப்படி தலை தீபாவளிக்கு மாப்ளேதான் மொத வெடிய வெடிக்கணும். நீங்க எதைப் பத்தியும் கவலைப்படாதீங்க?''என்று தைரியமூட்டி அனுப்பி வைத்தார். எல்லோரும் என்னை பிடித்து தள்ளாத குறையாகத்தான் இருக்கிறது. இந்தக் காலை வேளையிலும் எனக்குமட்டும் வியர்த்து விறுவிறுக்கிறது. எங்கே என்னவள் என்று திரும்பிப் பார்த்தேன்.
எதோ சொல்ல நான் நினைக்கிறேன் என்பதை புரிந்துக்கொண்டவள், அருகில் வந்து, ''ஏங்க சீக்கிரம் போய் வெடிய வச்சிட்டு வாங்க...நீங்க வந்த பிறகுதான் எல்லாரும் சாப்பிடவே ஒக்காருவாங்க? படைச்ச எலையெல்லாம் அப்படி அப்படியே கெடக்குது பாருங்க?'' என்று எனக்கு உற்சாகமூட்டுகிறாள். பின்பு அவளே தொடர்ந்து, ''தைரியமாப் போய் வெடியுங்க? இல்லன்னா.. மாப்ளே சரியான பயந்தாங்கொள்ளிப் போலன்னு தப்பா நெனைச்சிப்பாங்க?'' என்று ரகசியமாக காதில் சொல்லிவிட்டு விடுவிடுவென செல்கிறாள்.
என்னைப் போல் என் மனைவிக்கும் இந்த வெடி மீது பயமிருக்கலாம். அதான் வெடுக்வெடுக்கென்று நாலு எட்டாக ஓடிப் போய் அவுங்க அம்மா பின்புறம்போய் நிற்கிறாள். இப்போதைக்கு நான் நகர்வதுபோல் தெரியாததால் தனது அண்ணன் மகனை அழைத்து என்னவோ சொல்கிறாள். அவன் ஐந்தாவதுதான் படிக்கறான். அவன் அங்கிருந்து ஓடி வந்து, ''வாங்க மாமா...'' என்று என்னை தள்ளிக் கொண்டு வாசலுக்கு வந்தான்.
சாம்பல் பூத்ததுபோல் இன்னும் விடிந்தும் விடியாததுமாக பொழுது இருக்கிறது.
''தவுசன் வாலாவை தரையில் வையுங்க மாமா...'' என்றான். நானும் வைத்தேன். அப்படியே உருட்டிவிட்டான். பாயை விரிப்பதுபோல் அது வெகுதூரம் தன்னை விரித்துகொண்டே சென்றது. ஒரு கொட்டாங்குச்சியை கவிழ்த்து வைத்து திரியை நன்றாக முறுக்கி அதன் மீது தூக்கி வைத்தான். மலைப்பாம்பு நாக்கை நீட்டிக்கொண்டு படுத்திருப்பதுபோல் ஒரு பிரமை என்னை திடுக்கிட வைக்கிறது.
வீட்டுப் பக்கம் ஓடுவதற்கு தயாராக என்னை நிற்க வைத்து, என் கையைப் பிடித்து, நீட்டி திரியிடம் கொண்டு போகும்போது ஒரு நடுக்கம் வர ஆரம்பித்துவிட்டது. 'என்னடா ரொம்ப ஆடுகிறதே' என்று பார்த்தால், என்னை இயக்கிக் கொண்டிருந்தவனை காணவில்லை. திரும்பிப் பார்க்கிறேன். எல்லோரும் காதைப் பொத்திக்கொண்டு வீட்டு வாசலில் நின்றுக் கொண்டிருக்கிறார்கள்.
நடுக்கடலில் தத்தளித்துகொண்டு நிற்பதுபோல் தோன்றுகிறது. நானும் ஆனவரைக்கும் எப்படியாவது திரியை பற்ற வைத்துவிட வேண்டும் என்றுதான் நினைக்கிறேன். திரியும் அகப்படவில்லை. ஒருவேளை இருளில் தெரியவில்லையா? அல்லது பயத்தில் தெரியவில்ûயா? என்று தெரியவில்லை.
சர்புர்ரென்று எங்காவது சத்தம் கேட்டாலே இதுதான் பற்றிக் கொண்டதென்று இரண்டு மூன்று முறை ஓடி விடுவதுபோல் ஒரு பாவனை செய்கிறேன். இப்போது பயத்தில் வியர்த்து ஊற்றுகிறது. வத்தியை தூக்கிப்போட்டுவிட்டு ஓடிவிடலாமாயென்றுகூட நினைக்கத் தோன்றுகிறது.
'ச்சை..அசிங்கம் அசிங்கம்...' என்று என் மனசாட்சி வேறு குத்துகிறது.
இந்த முறை வத்தியை தடதடவென்று ஆட்டிக்கிட்டே அருகில் கொண்டுப் போய் வத்தியால் திரியை தடவினேன். எப்போது பற்றியதென்றே தெரியவில்லை. படபடவென்று பட்டாசு பயங்கர சத்தத்தோடு வெடித்து சீறி எழுந்தது.
பயத்தில் எனக்கு என்னமோ ஆகிவிட்டதென்று ''அம்மா... '' என்று அலறியபடி விழுந்து எழுந்து ஓட முற்படும்போது, ஓடிவந்து என் கைகளைப்பற்றிக் கொண்டு, ''அவ்வளவுதான் இதுக்குப்போயா பயந்தீங்க...'' என்று என் கண்களைப் பார்த்து ஆசுவாசப்படுத்திய என் மனைவியால், இப்போது அந்த பயம் கொஞ்சம் கொஞ்சமாக தள்ளித் தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com