தப்பேயில்லை...

சொல்ல வந்த விஷயத்தை எப்படி ஆரம்பிப்பது என்று மனதுக்குள் பல தடவை ஒத்திகை பார்த்துவிட்டே படுக்கை அறைக்குள் நுழைந்தான் ரமேஷ். அது என்னவோ?
தப்பேயில்லை...


சொல்ல வந்த விஷயத்தை எப்படி ஆரம்பிப்பது என்று மனதுக்குள் பல தடவை ஒத்திகை பார்த்துவிட்டே படுக்கை அறைக்குள் நுழைந்தான் ரமேஷ். அது என்னவோ? தன் பெற்றோரைப் பற்றிய விஷயங்களைப் பேசும்பொழுது மனைவியிடம் ஒரு தயக்கம் வருவது சகஜமாகிவிட்டது. எதனால் என்று அவனுக்கே புரியவில்லை. மனைவி சுஜாதா கையில் மொபைலை வைத்துகொண்டு படுக்கையில் இருந்தபடி ஏதோ சுவாரசியமாக பார்த்துகொண்டிருந்தாள். மெதுவாக படுக்கையில் அமர்ந்தான்.

'அட என்னங்க சீக்கிரமாவே படுக்க வந்துட்டீங்க? எப்ப பார்த்தாலும் ராத்திரி பத்து மணிக்கு மேல லேப்டாப்பை திறந்து வச்சுக்கிட்டு உட்காருவீங்க? சந்தோஷமா இருக்குங்க?'
'இல்ல ஒரு விஷயம் சொல்ல மறந்து போயிட்டேன். காலையில அப்பா போன் பண்ணினாரு. நாளன்னிக்கி அப்பாவும் அம்மாவும் வராங்களாம்.'
'இப்பதானே வந்துட்டு போனாங்க. ஏன் உங்க அண்ணன் வீட்டுக்கு போகலையா?'
'சுஜாதா.. இது என்ன கணக்கு? பையன் வீட்டுக்கு வரதுக்கு கணக்கு பார்க்கணுமா என்ன? எப்போ அவங்களுக்கு யாரு வீட்டுக்கு போகப் பிடிக்குதோ அப்ப போயிட்டு வரப் போறாங்க? நம்ம வீட்டுக்கு வரேன்னாங்க. இதுவும் அவங்க பையன் வீடுதானே.'
சற்று முன்பு வரை மலர்ந்து இருந்த அவளுடைய முகம் தொட்டாற் சிணுங்கி செடியை போல திடீரென்று சூம்பிப் போனது.
'அவங்களை யாரும் வர வேண்டாம்னு சொல்லலை. என்னோட பிரைவசிதான் போகுது . காலையில அஞ்சரை மணிக்கு எழுந்துக்கணும். குளிரோ, மழையோ வாசல் தெளிச்சு கோலம் போடணும். அடுத்து காபி போடணும். உங்க அப்பா சுகர் பேஷண்ட். எட்டு மணிக்கு டிபன் ரெடியா இருக்கணும். ஏதோ ஒண்ண சாப்பிட்டோமான்னு இருக்க மாட்டாரு? டிபன் செஞ்சா வகையா சட்னி வேணும்பாரு. சாம்பார் வேணும்பாரு. ஏதோ பொடியை தொட்டுக்கிட்டு சாப்பிட்டோம்னு கிடையாது.'
'சாப்பாடு செய்யறதுக்கு யோசனை பண்ணிட்டா இப்படி மூஞ்சிய தூக்கி வச்சிகிட்டு இருக்கே? ஏன் எங்க அம்மாவும் தானே வராங்க? அவங்க எத்தனை உதவியா இருக்காங்க? அத நீ ஏன் யோசனை பண்ணி பாக்க மாட்டேங்குறே.'

'நாம மாத்திரம் இருந்தா, போரடிச்சா ஏதாவது ஒண்ண ஆர்டர் பண்ணிக்கலாம். வீட்டுக்கு சாப்பாடு வந்துரும். சாப்பிட்டுக்கலாம். அவங்க கிராமத்துக்காரங்க. வக்கணையா வீட்டு சாப்பாடுதான் வேணும்பாங்க. அடுத்தது இந்தக் கட்டிலும் மெத்தையும் அவங்களுக்கு போயிடும். நான் தரையில் தான் படுக்கணும். உங்களைக் கேட்டா அப்பா, அம்மாக்கு வயசு ஆயிடுச்சு. இங்க பாத்ரூம் பக்கத்துல இருக்கு. அவங்க உபயோகம் பண்ணிப்பாங்க அப்படின்னு சொல்லுவீங்க?'
'ஓவரா பேசாதே. இப்ப அவங்கள வரணுங்கிறியா? வர வேணாங்குறியா? அதை சரியா சொல்லு.'
'ஆமா வர வேணாம்னு சொல்லிட்டா... அவங்களை வர வேணான்னு சொல்லிடவா போறீங்க? வரட்டும். வரட்டும். என் தலையெழுத்து எப்படி எழுதியிருக்குதோ அப்படி நடக்கட்டும்.'
படுப்பதற்கு முன் அண்ணனுக்கு போன் செய்து பேசினான். தனக்கு மட்டும் தானா இல்லை அண்ணனுக்கும் இதே நிலைமைதானா என்பதைக் கேட்டபொழுது, இங்கும் அங்கும் ஒரே நிலைமைதான் என்பதைப் புரிந்து கொண்டான். இவர்களுக்கு மட்டுமல்ல, நண்பர்கள் என கூறப்படும் ஆபீஸில் வேலை செய்யும் ஆண்களுக்கும் வீட்டில் இதே நிலைதான் என்று அங்கலாய்த்தார் ரமேஷின் அண்ணன்.
ஒன்று, இருவருடைய பெண்டாட்டிகளும் மாற வேண்டும், அல்லது இவர்களைப் பெற்றவர்கள் மாற வேண்டும். இதில் எது சாத்தியம் என்பது புரியவில்லை.
ரமேஷுக்கு எரிச்சலாக இருந்தது படுக்கையில் அவள் பக்கம் திரும்பாமல் எதிர்பக்கமாக ஒருக்களித்து படுத்துகொண்டான். மனசில் ஆயிரம் எண்ண அலைகள் ஓட ஆரம்பித்தது.
ஒரு ஒண்டிக் குடித்தன வீட்டில், தாத்தா, பாட்டி உடன் இருந்த நாள்கள் ஞாபகத்துக்கு வந்தன. பத்துக்கு பத்து அறையில் ஒரு டேபிள் சேர், தண்ணிப்பானை சகிதம் அண்ணன், அப்பா, அம்மா உடன் ஆனந்தமாக படுத்து உறங்கிய நாள்கள். அந்த அறையில் தனக்கும் அண்ணனுக்கும் இடத்தைத் தாராளமாக ஒதுக்கிவிட்டு, அப்பாவும், அம்மாவும் உடலைக் குறுக்கிக் கொண்டு படுத்திருப்பார்கள்.
அடுத்த நாள் காலை வேலைக்குச் செல்லும் அப்பா, முதல் நாள் இரவு தனக்கு நல்ல தூக்கம் இல்லையே என்று கூடக் கவலைப்படாமல் வேலைக்கு ஓடுவார். தங்களின் கஷ்ட நஷ்டங்களைக் கூடப் பாராட்டாமல் மகன்களுக்காக துன்பங்களைத் தாங்கி இருந்த பெற்றோருக்கு தான் செய்யும் சேவை தூசுக்கு கூட சமம் ஆகாது என்பது அவனுக்கு நன்றாகவே தெரிந்தது.
ரமேஷ் சிறியவனாக இருந்தபொழுது அவனுடைய தாத்தா பாட்டிக்கு அம்மா செய்த சேவைகள் கொஞ்சம் நஞ்சம் அல்ல என்பது ஞாபகத்தில் இருந்தது. இருந்தாலும் கட்டினவளை விட்டுக் கொடுக்கவும் முடியாத நிலையில் அவன் புழுவாக நெளிந்தான்.
இதோ அதோ என்று அப்பாவும் அம்மாவும் குறிப்பிட்ட நாளில் வந்து சேர்ந்தனர். ரமேஷுக்கு இவர்கள் வந்துவிட்டு ஊருக்கு போகும் வரை நல்லபடியாக நேரம் போக வேண்டுமே. சண்டை சச்சரவு எதுவும் வந்து விடக்கூடாதே என்பதில் மிகவும் அக்கறையாக இருந்தான். வந்தவர்களை குசலம் விசாரித்து விட்டு அடுப்பங்கரைக்கு சென்று இட்லி மாவை எடுத்து இட்லி பானையில் ஊற்றி வேக வைக்கத் தொடங்கினாள், சுஜாதா.
ரமேஷின் அம்மாவும் அப்பாவும் குளித்துவிட்டு வருவதாகச் சொன்னார்கள். அடுத்த நாள் பக்கத்து ஊரில் உறவினர் வீட்டில் கல்யாணம் இருப்பதாகவும் அதற்காக வந்திருப்பதாகவும் தகவல்களை தெரிவித்தனர். குடும்பத் தலைவர் என்கிற முறையில் அப்பா பெயருக்கு பத்திரிகை போட்டிருப்பதாக அம்மா தகவலைச் சொன்னார்.
'அத்தே இட்லி ரெடி ஆயிடுச்சு. மாமாவை பலகாரம் சாப்பிடச் சொல்லுங்க? அப்புறம் நேரமாயிட்டதால சுகர் டவுன் ஆயிடுச்சு உடம்பு வெலவென்னு வருது. தலைய சுத்துது அப்படின்னு ஆரமிச்சுடுவாரு..'
ரமேஷ் சுஜாதாவை தனியாகக் கூப்பிட்டான்.
'சுஜா டிபன் ரெடின்னு சொன்னா போதாதா? மாமா அதை சொல்லுவாரு?, இதை சொல்லுவாருன்னு எதுக்கு வந்ததும் வராததுமா
வம்புக்கு இழுக்குறே?'
' ஹாங்.. இல்லாததையும் பொல்லாததையும் நான் ஒண்ணும் சொல்லிடலை. உங்க அப்பா அலப்பறை பண்ணுவாரு. அதைத்தான் சொன்னேன்..'
' நீ சொல்றது சரிதாம்மா. என் உடம்பு அந்த மாதிரி இருக்கு. என்ன பண்றது சொல்லு. இந்தா கற்பகம் எனக்கு இட்லி எடுத்து வை.' என்று மனைவியை நோக்கி கூறினார், அப்பாவான மகேசன்.
சண்டைக்கு பிள்ளையார் சுழி சுஜாதா போட்டு விட்டதை நினைத்து ரமேஷுக்கு பக் பக் என்று மனம் அடித்துக் கொண்டது .
அப்பா அம்மா முகங்களை ஏறிட்டு நோக்க திராணியில்லாமல், ' அம்மா நீயும் சாப்பிடும்மா. நேத்து எப்ப வீட்டை விட்டு கிளம்பினீங்களோ? ட்ரெயின்ல வந்து இருக்கீங்க? அலுப்பா இருக்கும். கொஞ்சம் பலகாரம் சாப்புட்டு படுத்துக்கோ?'
'இல்லைப்பா ரமேஷ். சுஜாதாவும் வரட்டும். அவளும் காலையிலிருந்து வேலை பாத்துட்டு இருக்கா இல்லையா? அவளுக்கும் பசி எடுக்குமே. நீங்க ரெண்டு பேரும் முதல்ல சாப்பிடுங்க. அப்புறம் நான் சாப்பிடறேன். இல்ல மூணு பேருமா சேர்ந்து உட்கார்ந்து சாப்பிடலாம். பேராண்டி இன்னும் எழுந்துக்கலையா?'
ரமேஷுக்கு அம்மாவும் அப்பாவும் பேசியது மிகவும் ஆச்சரியத்தைக் கொடுத்தது. கிராமத்திலேயே இருந்த அவர்கள், எல்லாவற்றிலும் ஒரு எதிர்பார்ப்போடு இருப்பார்கள். அப்பாவுக்கு ஏதாவது கொஞ்சம் ஏடாகூடமா சொன்னாலே கோபம் வந்துவிடும். அம்மாவும் அப்படித்தான். தான் வைத்ததுதான் சட்டம் என்று இருப்பவள். தான் மருமகளாக இருந்த காலத்தில் மாமியாரிடம் பட்ட அவஸ்தையை மனதில் வைத்துகொண்டு, தன் மருமகள்களிடம் ஆதிக்கம் செலுத்துவதாகத்தான் ரமேஷுக்கு பல சமயங்களில் தோன்றும். மாமியார் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். மருமகள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எல்லாவற்றுக்கும் ஓர் அளவுகோல் நிர்ணயம் செய்பவள்.
காலை பிரேக்ஃபாஸ்ட் முடிந்தவுடன் அப்பாவும் அம்மாவும், ரமேஷையும் சுஜாதாவையும் கூப்பிட்டனர்.
'உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்னு இருக்கேன். உனக்கு ஏதாவது ஆபீஸ் வேலை இருக்காப்பா ரமேஷ்...'
'அதெல்லாம் ஒண்ணும் இல்லையப்பா. நீங்க வர்றீங்கன்னு தெரிஞ்ச உடனே ரெண்டு மூணு நாள் ஆஃபீஸ்க்கு வரலைன்னு சொல்லிட்டேன். ஒர்க் ஃப்ரம் ஹோமுன்னு சொல்லிட்டேன். வீட்ல இருந்தே தான் வேலை செய்ய போறேன். சொல்லுங்கப்பா?'
'நாளைக்கு பக்கத்து ஊர்ல ஒரு கல்யாணத்துக்கு போகணும்னு சொன்னேன் இல்லையா? என் சித்தப்பா பேரனுக்குதான் கல்யாணம். அண்ணன், தம்பி உங்க ரெண்டு பேரையுமே குடும்பத்தோட கூட்டிட்டு போகணும்னு எங்களுக்கு ஆசையா இருக்கு. ஏன்னா நம்ப மக்கள் உங்களையெல்லாம் பார்த்து ரொம்ப நாள் ஆயிடுச்சு. நீங்களும் கல்யாணத்துக்கு வந்தா புது உறவுகளைத் தெரிஞ்சுக்கலாம். அண்ணன்கிட்டயும் இது பத்தி பேசி இருக்கேன்பா. அண்ணனும் அண்ணியும் குழந்தைகளைக் கூட்டிட்டு வரேன்னு சொல்லிட்டாங்க. அதனால அவங்க இங்க வந்து ஜாயின் பண்ணிக்கிறேன்னு சொன்னாங்க. அதனால ஒரு பெரிய வண்டியா எடுத்துடு. எல்லாருமா சேர்ந்து போவோம். எனக்கும் என் வாரிசுகளோடு போய் அங்க இறங்குறதுல பெருமையா இருக்கும் இல்லையாப்பா?'
அப்பொழுதுதான் பேரன் சங்கர் கண்களை கசக்கி கொண்டே எழுந்து வந்தான்.
'பாட்டி எப்ப வந்தீங்க? எனக்கு புடிச்ச முறுக்கு அதிரசம் எல்லாம் சுட்டுட்டு வந்து இருக்கீங்களா? நல்லா இருக்கும் பாட்டி நீங்க செஞ்சா. அம்மா எனக்கு இன்னிக்கு டிபன் வேண்டாம். பாட்டி கொண்டு வந்திருக்காங்க இல்லை.அதுவே போதும்மா. ஆமா நான் வரும்போது எங்கேயோ போறோம்னு பேசிகிட்டு இருந்தீங்களே. எங்க போறோம்? நாம எல்லாம் வெளியே போறோமா பாட்டி? அம்மா அப்பா பெரியப்பா பெரியம்மா அண்ணன் தங்கச்சி எல்லாரும் சேர்ந்து போறோமா ? ஹை ஜாலி.'
பேரக் குழந்தைகளுக்காக தான் செய்து வந்திருந்த பலகாரத்தை ஓலை பெட்டியில் இருந்து வெளியே எடுத்து வைத்தாள், கற்பகம். உறவுக்காக ஏங்கும் பேரனை அள்ளி அணைத்துகொண்டாள்.
'ஆமாம்ப்பா. நாளைக்கு நாம எல்லோரும் சேர்ந்து ஒரு கல்யாணத்துக்காகப் பக்கத்து ஊருக்குப் போகப் போறோம். பெரிய கார் எடுக்க போறாரு அப்பா. அதுல தான் சேர்ந்து போக போறோம். புரியுதா?'
'அம்மா எப்ப வந்தீங்க? நல்லா இருக்கீங்களா? அப்பா நல்லா இருக்காரா? ரொம்ப நாளாச்சும்மா உங்கள எல்லாம் பாத்து..'
வீட்டு வேலை செய்யும் பெண்மணி கற்பகத்தை பார்த்துவிட்டு, விசாரித்துகொண்டே உள்ளே நுழைந்தாள்.
'நல்லா இருக்கேன் மா. இந்திராணி உன் பசங்க எல்லாம் நல்லா இருக்காங்களா? என்ன படிக்கிறாங்க? பொண்ணு வயசுக்கு வந்துருச்சா? புருஷன் தண்ணி போடுறத நிறுத்திட்டானா? போன தடவ நாங்க வந்திருந்த போது, உடம்பு சரியில்லேனு நீ வேலைக்கு வரலை..'
ஒருவரிடம் இவ்வளவு அக்கறையாகப் பேசும் அம்மாவைப் பார்த்ததும் ரமேஷுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.
அம்மா அப்படி எல்லாம் பேச மாட்டாங்களே என்ன ஆச்சு அம்மாவுக்கு என்று யோசனை செய்ய ஆரம்பித்தான். வந்ததிலிருந்தே அம்மாவின் போக்கு ஒவ்வொரு விஷயத்திலும் அவனுக்கு பிரமிப்பைக் கொடுத்தது.
ஒருவழியாக டிபன் கடை முடிந்து அவரவர்கள் சிறிது நேரம் ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தனர்.
'மதியம் லஞ்சுக்கு வெளியில ஆர்டர் பண்ணி விடலாமா? கொஞ்சம் வித்தியாசமா சாப்பிடலாமே. பாவம் சுஜாதாவும் அடுப்புகிட்டயே எத்தனை நேரம் நிப்பா? அவள ஃப்ரீயா இருக்க சொல்லு. கற்பகம் ஒண்ணு நீ போய் சமை. வேணாம் வேணாம். நீ கூட சமைக்க வேணாம். ஏன்னா நீ கிச்சன்குள்ள நுழைஞ்சா அவளும் கூடவே பின்னாடி வருவா? அவளுக்கு ரெஸ்ட் இல்லாம போயிரும். பெரியவனும் அவன் பொண்டாட்டியும் குழந்தைகளோட சாப்பாட்டுக்கு வராங்க இல்லையா?. நிறைய பேருக்கு பண்ணும்படியா இருக்கும். பேசாம வெளியில ஆர்டர் பண்ணிடலாம். என்ன சொல்ற?'
'ஹை. ஹோட்டலில் இருந்து வரவழைக்க போறீங்களா தாத்தா? ஜாலி .ஹோட்டல் சாப்பாடு சாப்பிடலாம் . அம்மா நல்லாதான் சமைப்பாங்க. இருந்தாலும் சேஞ்சா இருக்கும்ல அதுதான். பெரியம்மா, பெரியப்பா கூட வர்றாங்க போலிருக்கே. அண்ணன் தங்கச்சியோட எல்லாருமா சேர்ந்து சாப்பிடலாம். ஜாலியா இருக்கும். நம்ப விடே கல்யாண வீடு மாதிரி இருக்க போகுது இல்லையா?'
ரமேஷுக்கு அடுத்த மண்டைக் குடைச்சல் ஆரம்பித்துவிட்டது. அம்மா தான் அப்படி இருக்காங்கன்னு பார்த்தா அப்பா எப்படி இப்படி மாறினார்? வெளியிலிருந்து வரவழைத்த சாப்பாடு வேண்டாம். வீட்ல தான் சமைக்கணும்னு பிடிவாதமாக சொல்வாரே. எப்படி மாறினார் என்று புரியலையே? என்று குழம்பிப் போனான்.
ரமேஷின் அண்ணனும் அண்ணியும் குழந்தைகள் சகிதம் வர, வெளியில் ஆர்டர் செய்திருந்த சாப்பாடும் வந்து சேர்ந்தது. வெகு நாள்களுக்குப் பிறகு எல்லோரும் ஆனந்தமாக ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டது எல்லோருக்குமே ஒரு மாறுதலாக இருந்தது.
சாப்பிட்ட பாத்திரங்களை எடுத்து வந்து அண்ணியும் சுஜாதாவும் கொல்லைப்புறத்தில் போட, கற்பகம் சட்டென்று புடவையைத் தூக்கி சொருகிக்கொண்டு பாத்திரங்களைத் தேய்க்க உட்கார்ந்தாள்.
'அத்தே.. அத்தே.., நீங்க எந்திரிங்க. நான் தேய்க்கிறேன். எதுக்காக இந்த வயசுக்கு கீழே உட்கார்ந்து பாத்திரம் தேய்க்கணும்? நாங்க ரெண்டு பேர் இருக்கோம் இல்ல? முதல்ல எந்திரிங்க..'
இப்படி பேசிக் கொண்டிருக்கையில் மகேசனும் கொல்லைப் பக்கம் வந்தார்.
'அம்மா மருமகள்களா, உங்க ரெண்டு பேர் கிட்டேயும் நாங்க கொஞ்சம் பேசணும்னு இருக்கோம். ஒரு அஞ்சு நிமிஷம் இங்க நிக்கிறீங்களா?'
'சொல்லுங்க மாமா என்ன பேசணும் சொல்லுங்க?'- இது பெரிய மருமகள்.
'இங்க பாருங்கம்மா. இத்தனை வருஷமா நாங்க கிராமத்திலேயே இருந்ததுனால எங்களுக்கு சில பழக்க வழக்கங்கள விட்டுக் கொடுக்க முடியாமல் இருந்தது. அதனால நாங்க கூட கொஞ்சம் உங்க ரெண்டு பேருகிட்டயும் முன்ன பின்ன நடந்திருப்போம். கோவமா பேசி இருப்போம். உங்க சவுகரியங்கள அனுசரிச்சு அதுக்கு தகுந்தா போல நடந்துக்காம இருந்திருப்போம். தப்பு எங்க மேலயும் இருக்கு. அதனால நீங்க ரெண்டு பேரும் எதையும் மனசுல வச்சுக்காம சகஜமா எங்ககிட்ட இருக்கணும்னு தான் நாங்க விரும்புறோம். கற்பகம் நீயும் சொல்லணும்னு நெனச்சியே அத சொல்லிடு..'
'நீங்க ரெண்டு பேரும் மருமகள்கள் இல்லை. மகள்களா நினைக்கிறேன். எனக்கு கிராமத்து பழக்கம் இருந்ததுனால சட்டுனு மாறிக்க முடியலை. இனிமே நாங்களும் கொஞ்சம் கொஞ்சமா மாறிடுவோம்னு தீர்மானமா சொல்றேன். இந்தக் குலத்த தழைக்க வைக்க வீட்டுக்கு வந்த மகாலட்சுமி நீங்க. உங்கள உதாசீனப்படுத்துறது எவ்வளவு தப்பு என்று எங்களுக்கு புரியுது. இருந்தாலும் இந்த பாழாப்போன வரட்டு கவுரவம்னு இருக்கில்ல. அதனாலதான் இத்தனை வருஷமா நமக்குள்ள சரியான ஒரு பிணைப்பு இல்லாம போயிடுச்சு. இனிமே அப்படி இருக்காது.'
பக்கவாட்டில் இரண்டு கைகளையும் நீட்டி, கற்பகம் இரு மருமகள்களையும் அணைத்துக் கொண்டாள்.
'அத்தை, மாமா, நீங்க ரெண்டு பேரும் இப்படி எல்லாம் பேசக் கூடாது. இந்தக் குலம் தழைக்கிறதுக்கு பெரியவங்களோட ஆசீர்வாதம் நிச்சயமாக வேணும். அதனால நீங்களும் மாமாவும் எங்களை மனதார ஆசிர்வாதம் பண்ணுங்க? எங்க பக்கமும் நிறைய குறைங்க இருந்திருக்கு. இனிமே குறைகளை எல்லாம் தவிர்த்துட்டு நிறைவான வாழ்க்கை நம்ம எல்லோரும் வாழணும்.'
'ஆமா அத்தே. சுஜாதா சொல்றது சரி. இந்த உலகத்துக்கு குடும்பம்னா எப்படி இருக்கணும்ங்கறதுக்கு நாம ஒரு உதாரணமாக இருந்து காமிக்கணும். நாளைக்கு எல்லாரும் கல்யாணத்துக்கு சேர்ந்து போகப் போறோம். இன்னியிலிருந்து நம்ம எல்லோருக்கும் ஒரு புது பாதை அமைஞ்சு இருக்கு. அதில் நல்லபடியா பிரயாணம் செய்யணும் தான் நானும் விரும்புறேன் அத்தை.'
இந்த உரையாடல்களை மறைவில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த ரமேஷும், அவன் அண்ணனும் மிகுந்த மன நிறைவோடு ஒருவருக்கொருவர் பார்த்து சமிக்ஞை செய்து கொண்டனர்.
உள்ளே குழந்தைகள் ஒருவருக்கொருவர் ஒருவர் சீண்டிக் கொண்டும் விளையாடிக் கொண்டும் பரவசத்தோடு பெரும் குரல் எடுத்துப் பேசிக் கொண்டிருந்தனர். என்ன வயதானால் என்ன? ஈகோ என்னும் அரக்கனை விட்டொழித்து விட்டு, அனுசரித்து போனால் உறவுப் பாலம் பலமாக இருக்கும் என்று ஏற்கனவே கற்பகமும் மகேசனும் பேசிக் கொண்டு வந்தது சரியாகத்தான் வேலை செய்தது. இனி அவர்கள் குடும்பத்தில் என்றுமே புயல் வீசாது. தென்றல்தான் வீசும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com