வாயும் வயிறும் வேறு

'என்னை மன்னிச்சிடுங்கப்பா?''   சுதர்ஸனின் இந்த இரண்டு வார்த்தைகளை  எதிர்பார்த்தே தணிகாசலம்  காத்திருந்தார்.  
வாயும் வயிறும் வேறு

'என்னை மன்னிச்சிடுங்கப்பா?'' சுதர்ஸனின் இந்த இரண்டு வார்த்தைகளை எதிர்பார்த்தே தணிகாசலம் காத்திருந்தார்.
இந்த முடிவுக்குத்தான் அவன் வரவேண்டியிருக்கும் என்று அவன் சார்பில் என்றோ சிந்திக்க ஆரம்பித்து விட்டார் அவர். அவரைப் பொருத்தவரை ஆனது ஆகிப் போனது, மேற்கொண்டு பிரச்னையில்லாமல் வண்டி ஓடினால் சரி. அவ்வளவே! அவனின் முடிவுக்கு அவர் தயாராகி இருந்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.
'தயாராகாவிட்டாலும் நடக்கத்தானே போகிறது' என்று நினைத்து மெளனப் புன்னகை பூத்தார்.
மனைவி தாட்சாயிணியிடம் முன்னதாகச் சொல்லியும் வைத்திருந்தார். அவள் மனதளவில் தயாராக வேண்டுமே என்கிற கலக்கமிருந்தது இவருக்கு. அவரைப் பொருத்தவரை வயதும் தள்ளாமையும்தான் இடித்தது. ஒருத்தருக்கொருத்தர் துணை என்று இருந்துவிடலாம்தான் என்கிற தைரியமும் இருந்தது. மனசு தயாராகிவிட்டால் அது தெம்பைக் கொடுக்காவிட்டாலும், தளர்ச்சியை உண்டாக்காது என்கிற நம்பிக்கை இவருக்குண்டு.
அவள்தான் பாவம். மகனைப் பிரிந்து எப்படியிருப்பாளோ? பிரிவாளா அல்லது சண்டைக்கு நிற்பாளா? சண்டைக்கு நின்றால் கேவலப்பட்டுத்தான் வெளியேற வேண்டியிருக்கும். இன்னும் எத்தனை காலம்தான் பையனை மடியில் கட்டிக் கொண்டு அலைவது என்கிற பிரக்ஞை அவளுக்கு வந்தமாதிரியே தெரியவில்லை. இனி மேலும் தன் பின்னாலேயே கொடுக்கு மாதிரி அலைவது அவளுக்கே கூச்சமாய் உணர வேண்டாமா?
'நான் துணைக்கு இருக்கிறேன்' என்கிற தைரியமேயில்லையே அவளிடம்? தொட்டதற்கெல்லாம் 'சுதா.. சுதா..' என்று அழைத்து அவனிடம் தன் கோரிக்கைகளை, தேவைகளைச் சொல்லும் அவளும், அதனை உடனுக்குடன் சிரமம் மேற்கொண்டு நிறைவேற்றும் அவனும், 'அம்மா கோண்டு', 'அம்மா கோண்டு' என்று அந்தப் பெண்ணின் காதுக்குக் கேட்கும் அளவுக்கே தான் அடிக்கடி வேடிக்கையாய்ச் சொன்னதுதான் இப்போது வினையாய்ப் போய்விட்டதோ என்று எண்ணத் தலைப்பட்டார்.
உண்மையிலேயே அந்தப் பெண்ணும் அதை நம்ப ஆரம்பித்து, அதனாலேயே எரிச்சல் கொண்டிருக்குமோ என்னவோ? இவனுக்காவது தெரிந்திருக்க வேண்டும். மனைவியின் முன் தான் அப்படி தன்னை வெளிப்படுத்திக் கொள்ளக் கூடாது என்று. அவள் முன்னாலேயே அவன் அப்படித்தானே நிற்கிறான். 'ஓ.கே.ம்மா..ஓகே.ம்மா..' என்று சட்டுச் சட்டென்று அம்மா சொன்னதைச் செய்ய முனையும்போது, அந்தப் பெண் எரிச்சல் அடையாமல் என்ன செய்யும்? கணவன் தனக்காகத்தான் அதிகமாய் ஓடியாட வேணும் என்கிற முனைப்பு வந்திருக்கலாம்.
ஒருநாள் இல்லாவிட்டால் ஒரு நாள் வார்த்தை விட்டால்? கேட்டுக் கொண்டு நிற்பாளா அல்லது ஒத்தைக்கு நிற்பாளா? அல்லது அழுது ஆதங்கம் பண்ணுவாளா? இல்லை. அவன்தான் என்ன நீ எங்கம்மாவையே எதிர்த்துப் பேசறே? என்று கேட்பானா? எந்தப் பயல் இந்தக் காலத்தில் அப்படி கேட்கிறான்? அப்படி கேட்டால், 'போடா சொக்கா!' என்று சொல்லி விட்டு விலகி விடும் காலம் இது. அல்லது விலக்கி கொண்டு சென்று விடும் அல்லி தர்பார் ராணிகள்தான்.
கொஞ்சம் புத்திசாலியான, சுமுகமான குணமுள்ள பெண்ணாயிருந்தால் அதுவும் 'அம்மா... அம்மா...' என்று ஒட்டிக் கொள்ளும். இந்த வீட்டுக்கு என்று வந்தாயிற்று. 'இனிமேல் இதுதான் தன் வீடு..தன் சுற்றம்' என்று குணமாய் உணர்ந்தால் அந்த நல்லெண்ணம் ஏற்பட வாய்ப்புண்டு. அதைப் புகட்டி அவர்கள் வீட்டில் வளர்த்திருக்க வேண்டும். அல்லது பாங்காகப் பக்குவமாகச் சொல்லியனுப்பி இருக்க வேண்டும். கணவனைத் தன் அதிகாரத்தின் கீழ் வைத்தாக வேண்டும் என்று எண்ணம் கொண்டிருந்தால் விபரீதமாய்த்தானே தோன்றும். 'முதல்ல இதை கட் பண்ணனும். அப்பத்தான் அவன் நம் வழிக்கு வருவான்' என்றல்லவா நினைக்கும். நெஞ்சில் வன்மம் வைத்தால்?
இவர் சொல்லி அவன் எதையுமே உடனுக்குடன் செய்ததில்லைதான். 'இப்ப முடியாதுப்பா, பார்க்கிறேன்ப்பா, செய்றேன்ப்பா?' என்றுதான் கூறியிருக்கிறான். சொல்லி, ரெண்டு மூன்று முறை நினைவுறுத்தி பிறகுதான் செய்வான். போனாப் போகுது என்பதுபோல. அதையெல்லாம் கூட இவர் பெரிதாய் என்றுமே எடுத்துக் கொண்டதில்லை. அப்பன் என்றைக்குமே ஒரு வீட்டில் இரண்டாவது, மூன்றாவதுதான். முடியாது என்று சொல்லாத மட்டும் கெளரவம் என்றுதான் நினைத்துக் கொள்வார்.
'உடனே ஆகாது' என்று அவர் மனதுக்குத் தோன்றும் பலவற்றை முடிகிறதோ, இல்லையோ இவரே புறப்பட்டு ஒருமுறைக்கு இருமுறை அலைந்து செய்து கொண்டு விடுவார். தனக்கும் ஒரு இயக்கம் என்று இருந்தாக வேண்டுமே? ஒரேயடியாக முடங்கிப் போய் விடக் கூடாதே என்கிற பயமும் கூடவே இருக்க அதுவே அவரை விடாது இயக்கிக் கொண்டிருந்தது. மனைவி இருக்கும் வரை ஏதோ ஓட்டலாம். பிறகு? காலம் தன்னை எங்கு கொண்டு போய் நிறுத்துமோ, யார் கண்டது? அப்புறமும் உட்கார்ந்து சோறு தின்பது என்பது மானக்கேடுதானே? என்று நினைத்துக் கொள்வார். தன் காசுதான் வேண்டும். தான் வேண்டாம். அதுவே இன்றைய யதார்த்தம்.
ஆனாலும் அதற்குள் இப்படி ஒரு முடிவுக்கு அவன் வரவேண்டாம்தான். ஒரு குழந்தை பிறந்து, அதற்கு நாலு, அஞ்சு வயசாகி, கிளம்பிப் போவது என்பது பொருத்தமான முடிவாய் இருக்கும். அதுவும் ஒரு கடமை என்றுதானே பெற்றோர்கள் நினைப்பார்கள். அதற்கு இடம் தராமல், இப்போதே? என்று திருமணமாகி மூன்றாவது ஆண்டு ஆரம்பிக்கையிலேயே அவன் வாயெடுத்ததுதான் இவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது. பிள்ளை பெறுவதை சாமர்த்தியமாய்த் தள்ளிப் போடுவது போல், அம்மா அப்பாவை விலக்குவதிலும், தள்ளி வைப்பதிலும் சாமர்த்தியமாய்த்தான் இயங்குகிறார்கள்.
ஒருவேளை அவர்கள் வீட்டில் வந்து இருக்கத் திட்டமிட்டிருப்பார்களோ? தான் பெறப் போகும் குழந்தைக்குத் தன் அம்மா இருந்தால்தான் சரியாய் வரும் என்று அந்தப் பெண் நினைத்திருக்குமோ? பல வீடுகளிலும் அதுதானே யதார்த்த உண்மையும் கூட. பெண்ணுக்குத் தன் தாயார் இருந்தால்தான் திருப்தி. அங்குதான் உரிமையோடு கோபப்பட முடியும். எரிந்து விழ முடியும். சலித்துக் கொள்ள முடியும். என்னால முடியலை. நீயே பண்ணு..என்று வேலைகளிலிருந்து நைஸாக நழுவ முடியும்.
சாப்பாட்டில் ருசி கண்டு, ப்ரீதி உள்ள பெண்ணோ என்னவோ? நினைத்ததையெல்லாம் விதவிதமாய்ச் செய்து சாப்பிட முடியாது. வாங்கிச் சாப்பிட முடியாது. தன் அம்மாவை வரவழைத்துச் செய்து தரச் சொல்லிச் சாப்பிட முடியாது. இஷ்டத்துக்கு வெளியில் சென்று தின்ன முடியாது. இதற்கெல்லாம் தடை என்றால், அது என்ன வாழ்க்கை? இந்தக் காலத்தில் வீட்டில் எந்தப் பெண்தான் சமைக்கிறது? அபூர்வமாய் சிலர் இருந்தால் அதிசயம் இப்படியெல்லாம் சிந்தித்தும் முடிவு செய்திருக்கலாம்.
அவர்களை இங்கு வரவழைத்து, தன் பையன்
எப்படிச் சமாளிக்கப் போகிறான் அவர்கள் நடுவில்? ஒதுங்கியிருப்பதுதானே அவனின் அடிப்படை குணம்? அதுவே அடக்கியாள்வதற்கு அவர்களுக்கு வசதியாய்ப் போய்விட்டால்? புத்தகம் போகும் பெண்ணை நினைத்துத்தான் கவலைப்படுவார்கள் பெற்றோர்கள். இங்கே எல்லாம் தலைகீழாகிவிட்டது. என்ன யோசித்து என்ன செய்ய? தலையைக் கொடுத்தாச்சு..இனி வர்றதை ஏற்றுக்கொண்டுதானே ஆக வேண்டும்? உதறவா முடியும்? அவன் தலைவிதி அது! நாம் என்ன செய்ய முடியும்? சிந்தித்து நொந்தார் தணிகாசலம்.
'எங்க அப்பா, அம்மாவே தனியாத்தான் இருக்காங்க... இவங்களுக்கென்ன இங்க ஜோலி?' என்று குரூரமாய் நினைத்து விட்டதோ என்னவோ? அவர்களையும் தனித்து விடுவதே அதன் திட்டமாயும் இருக்கலாம். யார் கண்டது? எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமென்று?
இந்தச் சென்னையிலேயே அந்தப் பெண்ணின் பெற்றோர் இருக்கிறார்கள் என்பதும் முக்கியமாய் நினைத்துப் பார்க்க வேண்டிய விஷயமாய் இருந்தது. ஆகையால் எதற்கும் பயப்படுவதற்கில்லை. ஒருவேளை இப்படி நகர்ந்ததும் அப்படி வந்து உட்காருவதற்கான திட்டமாயும் இருக்கலாம். யாருக்குத் தெரியும்? எங்கு வெளிப்படையான பேச்சும், சிரிப்பும் நின்றுபோனதோ, இல்லையோ, அங்கு இடைவெளியிருக்கிறது என்றுதானே பொருள்? நடுவில் திரையில்லாத மனிதன்தான் யார்? எல்லா மனிதர்களும் ரெண்டு ரெண்டு. போதாக் குறைக்கு காதல் திருமணம் வேறு. சுமுக நிலை அத்தனை சீக்கிரத்தில் வந்து விடுமா என்ன? வருவதற்கு இடம் கொடுத்தால்தானே? அதற்குள் விரட்டப் பார்த்தால்? காதல் மட்டும்தான் ஒட்டும் போலிருக்கிறது!! மற்றவையெல்லாம் தொட்டும் தொடாமலும். பட்டும் படாமலும். என்னடா உலகம் இது?
ஆளுமை என்பது குடும்பங்களைப் பொருத்தவரை பெரும்பாலும் ஆண்களிடம் இருப்பதில்லை என்றுதான் தணிகாசலத்துக்குத் தோன்றியது. அலுவலகங்களில் வெளிப்படும் அதிகாரத் திறன், ஆளுமைத் திறன் வீட்டில் அடங்கிப் போகிறது அல்லது முடங்கிக் கிடக்கிறது. இதுதான் யதார்த்தம். எல்லாவற்றையும் தலையில் சுமந்து தேவையானதைப் பொறுப்பாய்ச் செய்ய ஒருவன் கிடைத்தானே என்று வெளியில் சொல்லாவிட்டாலும் மனதுக்குள் பெருமைப்படச் செய்வதும், எதிர்க்க முடியாமல் அடங்கிப் போவதும், அடங்கிப் போவதென்ன, சரியானதற்கு ஒத்துப் போவதுதானே குடும்பப் பண்பாடு என்று நேர் கோணத்தில் புரிந்து கொள்வதுமான நடவடிக்கைகள் காலப் போக்கில் தலைகீழாகி விடுகின்றனவே!
பணியில் இருக்கும்வரை தணிகாசலம்தான் கிங். அவரன்றி ஒர் அணுவும் அசையாது. எந்தவொன்றையும் தவறாகச் செய்ததில்லை அவர். செய்ய முனைந்ததும் இல்லை. வண்டி அதுபாட்டுக்குப் போய்க் கொண்டிருக்கையில் எதற்கு வக்கரித்துக் கொள்ள வேண்டும்? இந்தச் சிந்தனை பாமரனுக்கும் வரக்கூடிய ஒன்றுதான். நல்லது கெட்டது என்று எல்லாவற்றுக்கும் நானே பொறுப்பு என்று ஒருவர் அரணாய் நிற்கையில் அதுபோன்ற ஒரு பாதுகாப்பும், விடுவிப்பும், சுகமும், சந்தோஷமும் எங்கேனும் கிடைக்குமா? தாட்சாயிணியும் அப்படித்தான் இருந்தாள்.
ஆனால் பையன் தலையெடுத்ததும் அவளிடம் ஏன் இந்த அதிரடி மாற்றம்? ஒருவன் ஓய்வு பெற்று விட்டால் அதற்குப்பின் அவன் கையில் செங்கோல் இருக்கக் கூடாதா? அவன் தன் தலைவன் பொறுப்பை, அந்தக் கிரீடத்தைக் கழற்றித் தரையில் வைத்து விட வேண்டுமா? கைமாற்றியாக வேண்டுமா? கிரீடம் இன்னொரு தலைக்குப் பொருந்த வேண்டாமா? அந்த பாரத்தைச் சுமக்கும் மனப் பக்குவமும், அனுபவமும், அந்த சரீரத்துக்கு, அந்த மனதுக்கு அமைந்திருக்க வேண்டாமா? குருவி தலையில் பனங்காயை வைத்ததுபோல் ஆகாதா?
'உங்களுக்கு ஒண்ணும் தெரியாது. நீங்க பேசாம இருங்க?' எதற்கெடுத்தாலும் இது ஒரு வார்த்தை? இத்தனை ஆண்டுகள் எல்லாம் தெரிந்தவனாய் இருந்தவன் எப்படி திடீரென்று ஒன்றும் தெரியாதவனானேன்? சிரிப்பதா, அழுவதா தெரியவில்லை இவருக்கு. எல்லாம் தெரிந்தவன் எதிரே நிற்கிறான். இனி நீங்கள் அடங்கிக் கிடவுங்கள் என்று சொல்வதுஅல்லது சொல்லாமல் செய்வது என்பது சரியான திசையில் பயணத்தைத் தொடர்ந்து கொண்டு போய் நிறுத்த உதவுமா? அந்தத் தீர்மானம் மனதுக்குள் வந்தபின்னால்தானே படிப்படியாக , ஒன்றொன்றாகப் பொறுப்புகளிலிருந்து விலகுவது, ஒப்படைப்பது என்பது நியாயமான செயலாக இருக்கும்?
அவனை அவன் இஷ்டத்துக்கு விட்டதும், அதைப் பெருமையாய் நினைத்துக் கொண்டு தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடியதும், இனி எல்லாம் அவன் பார்த்துப்பான் என்று வாய்க்கு வாய் சொல்லி தன்னை அடக்கியதும், ஏதோ? நடந்தாச் சரி.. என்று வேறு வழியின்றி தானும் இருந்து விட்டதுவும், கையாலாகாமல் போனவை இன்று கைநழுவிப் போனதாக உணரப்படுவதும், எல்லாம் காலத்தின் கோலம். எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது..எது நடக்குமோ அதுவும் நன்றாகவே நடக்கும்? இதுவும் கடந்து போகும்?என எல்லாமும் வேறு வழியற்ற சமாதானமாய்த் தாண்டி வந்து நிற்கிறது இன்று.
அந்தப் பெண்ணின் ஆகிருதியே அவனை அச்சப்படுத்தியிருக்க வேண்டும். ஏன் இவருக்கே கூடக் கொஞ்சம் படபடப்பாய்த்தான் இருந்தது. அப்பெண்ணின் மீது அவன் காதல் கொண்டதுதான் ஆச்சரியம். அதைவிட அவளுக்கு இவன் மீது நாட்டம் வந்தது என்பது அதைவிட ஆச்சர்யம். சாந்தமான குணசாலியாய்த் தேடி வலை விரிப்பார்களோ என்னவோ? இவன் ஒன்றும் காதலித்த மாதிரித் தெரியவில்லையே? தெரியவில்லையா அல்லது அமுக்குளி மாதிரி இருந்துவிட்டானா? எவனைத்தான் நம்ப முடியுது இந்தக் காலத்துல? பசங்க நம்மகிட்ட ரொம்ப மரியாதை என்று எந்த அப்பன்தான் பெருமைப்பட முடியும்? மனம் ஒன்றிப்போனால் வேறு எதுவும் பெரிதாகத் தோன்றாது போலும்! அவள் காது உயரத்துக்குத்தான் இருந்தான் சுதர்ஸன். உயரமான ஷூ மாட்டினான் என்றால் ஓரளவு சரிக்கட்டியதாகிவிடும். குட்டை நெட்டையா கணக்கு? அதிகாரத்தில் அவள்தான் உயரம் போலும்.
ஆள் உயரமா பெரிது? மன உயரங்கள் எந்தளவுக்கு எட்டுகின்றன என்பதுதானே கேள்வி. எப்பொழுது எந்த வேற்றுமையும் பார்க்காமல் ஒரு பெண்ணைக் காதலித்து மணந்தானோ அப்பொழுதே எதிர்பார்ப்புகள் குலைந்து போயினதான். நாமே பார்த்துப் பேசி முடித்து வைத்திருந்தாலும் அது சரியாய்த்தான் இருக்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம்? முறைப்படியான திருமணம் என்கிற நாமகரணமே மிஞ்சும். பெற்றோரும், உற்றாரும், சுற்றத்தாரும் மனமுவந்து அழைக்கப்பட்டு, வந்து வாழ்த்தி நடத்திக் கொடுப்பது என்பது பெரிய கொடுப்பினைதான். ஆனால் அம்மாதிரித் திருமணங்களும் இன்று பெருமளவில் நிலைப்பதில்லையே?
கூடிக் கலையும் கூட்டம்தான். இப்போது கூடாமலே சிந்திக்க வேண்டிய நிலைக்குக் கொண்டு வந்து விட்டது சிந்தித்துச் செயல்பட உற்றவர்கள் இருக்க, நிந்திக்காமல் இருந்தால் போதும் என்று விலகி நின்று விட்டான். அவன் எடுத்த முடிவு, அவர்களாய் எடுத்த முடிவு, விலகி நின்று வினா எழுப்பிய நிகழ்வுதானே?
இனம் மாறுபட்டால் மனம் மாறுபடுமா என்ன? அப்படியும் சொல்வதற்கில்லை. ஆனால் மாறுபட்டு விட்டது. அதுதான் யதார்த்தம். மனிதர்களின் குண விசேஷங்களைப் பொறுத்தது. இதெல்லாம் என்று நினைத்துக் கொண்டார் தணிகை. என்னதான் பெற்றோர்களின் வளர்ப்பு சரியாய் இருந்தாலும், காலமாறுபாட்டில், தலைமுறை இடைவெளியில் வாழ்வியல் நோக்குகள் மாறுபட்டுத்தான் போகின்றன. 'நம் காலம் முடிந்தது, விலகிக் கொள்வோம், ஒதுங்கிக் கொள்வோம்' என்றுதான் நம் இருப்பைச் சுருக்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது. அல்லது கண்காணாமல் ஆக்கிக் கொண்டு கெளரவத்தைக் காப்பாற்றிக் கொள்ள முனைப்பு கொள்ள வேண்டியிருக்கிறது.
ஜன்னல் வழியே வெளியே நோக்கிய போது வேப்பமரத்து இலைகள் அசைவற்று நிற்பது போன்றதான உணர்வு. அவைகளும் கவனிக்கின்றனவோ? இந்த வீட்டில் என்னென்ன நடக்கிறது என்பது அதற்கும் தெரியும்தான். பல சமயங்களில் நடைபெறும் அர்த்தமுள்ள அர்த்தமற்ற உரையாடல்களை அவைகளும் கேட்டிருக்கிறதுதான். பேச்சு சூடாகும்போது ஜன்னலை ஒட்டியுள்ள கிளை கம்பித் தடுப்பு வழியே உள்ளே தலை நீட்டி போதும்! போதும்! எதுக்கு அநாவசியமான பேச்சு.என்று மட்டுப்படுத்துவது போல் உணர்வார் தணிகை.
நாய் ஒன்று வாசல் திட்டியில் படுத்திருந்தது. உள்ளே எழும் சத்தம் அதைத் தொந்தரவு செய்ததோ என்னவோ? கம்முனு இருக்க மாட்டீங்களா? நா தூங்குறதா இல்லையா? என்று அடிக்கடி தலையைத் தூக்கித் தூக்கிப் பார்த்துக் கொண்டிருந்தது. அதற்கு இவர் வீட்டு வாசல்தான் யதாஸ்தானம். பார்க்கச் செழுமையாய் இருக்காது. ஆனாலும் அந்தக் கண்ணில் இருக்கும் தீட்சண்யம் ஆயிரம் பேசும். அந்த நாயின் அடங்கிய தன்மை அதனை அங்கிருந்து விரட்டவே தோன்றவில்லை. கிடந்துட்டுப் போகட்டும்.. என்று விட்டு விட்டார் தணிகாசலம். அவ்வப்போது தாட்சாயிணி அதற்கு சோறு வைத்தாள். பாவம்..இங்கேயே கதியாக் கிடக்கு' என்று சொல்லிக் கொண்டாள். வாயில்லா ஜீவன்கள் கதியாய்த்தான் கிடக்கும் என்பதே
நடப்பியல்.
தனிமையில் இருக்கும் தருணங்களில் அவர் அந்த மரத்தோடுதான் பேசுகிறார். தன் எண்ணங்களை, மனக் குமுறல்களைப் பகிர்ந்து கொள்கிறார். அவருக்கு ஆதரவாய் அவை தலையாட்டுகின்றன அல்லது சோர்ந்து போய் நின்று விடுகின்றன. சந்தோஷத் தருணங்களில் ஆடி மகிழ்ந்து சுகமான காற்றை இதமாய் அனுப்பிக் கொண்டேயிருக்கின்றன.
மனிதன் தனக்கான ஆறுதல்களை உள்ளே தேடுவதை விட வெளியே அதிகமாய்த் தேடுகிறான். யாரேனும் தன்னை மானசீகமாய் உணர்ந்து அவர்களாகவே நாலு நல்ல வார்த்தைகள் சொல்ல மாட்டார்களா என்று மனதுக்குள் ஏங்குகிறான்.
அவனின் சோர்வற்ற இயக்கத்துக்கு இந்த மாதிரித் தூண்டுதல்கள் அடிக்கடி தேவைப்படுகின்றனதான்.அந்தளவுக்கு முதிர்ச்சி கொண்ட மனிதர்கள் குறைவுதான். என்ன செய்வது? உலகம் நம் எதிர்பார்ப்புக்கு ஏற்றாற் போலவா இருக்கிறது? அது தன்னிச்சையானது. மனிதனும் தன்னிச்சையானவன்தான். ஆனால் குடும்பம் என்கிற அமைப்பின் கட்டுப்பாடு ஆட்டம் காணும்போது அவனை அலைக்கழிக்கிறது. ஸ்திர புத்தியாய் இருக்க விடுவதில்லை.
இப்போது ஜன்னலுக்கு நேரே அருகில் தலை நீட்டும் அந்தக் கிளை ஸ்தம்பித்து நிற்பதாக உணர்கிறார் அவர். இவரின் சோகங்களைப் பகிர்ந்து கொள்ளும் ஒரே ஜீவன். ஆறுதலளிக்கும் உயிரோட்டமுள்ள பந்தம். இந்த உலகத்தில் கவலைகள் இல்லாத மனிதன்தான் யார்? பிரச்னைகளைத் தேடி வரவழைத்துக் கொள்ளாத எளிய மனிதனுக்கும் ஏதேனும் எதிர்பாராத துன்பங்கள் வந்து சேர்ந்து விடுகின்றனதான். வேண்டும் வேண்டும் என்று அலைபவனுக்கும், வேண்டாம், வேண்டாம் என்று ஒதுங்கிக் கிடப்பவனுக்கும் இடையில் வாழ்க்கைச் சிக்கல்களில் அதிக வித்தியாசமில்லை என்றுதான் தோன்றுகிறது. ஆசைகளைக் களைந்தவன் நிம்மதியாய் இருக்கலாம் என்பது முதுமொழி. ஆசைகளற்ற வாழ்க்கையிலும் அவ்வப்போது புயல் வீசத்தானே செய்கிறது? தனி மனிதனாய் இருப்பவனுக்குத்தான் இந்தத் தத்துவ விசாரங்கள் எல்லாம் சாத்தியமோ?
'சரி..என்ன செய்யணும்..சொல்லு' என்று சாதாரணமாய்த்தான் கேட்டார் தணிகாசலம்.
சுதர்ஸன் என்ன சொல்லுவான் என்பது தெரியும்தான். ஆனாலும் அது அவன் வாயால் வரட்டும் என்று காத்திருந்தார். இதை மட்டும் தன்னிடம் வந்து சொல்வானேன். அவனின் இஷ்டமான அம்மாவிடம் சொல்லிச் சாதித்துக் கொள்ள வேண்டியதுதானே? அம்மாவையும் தாண்டி இப்போது அந்த முடிவுக்கு வந்து விட்டான் அவன். அவளிடம் வாய்விடப் பயம். அப்பாதான் இப்போது பாதுகாப்பு.
'நியாயமாய்ப் பார்த்தால் தனிக்குடித்தனம் வைத்துவிட்டு, ஆள விடுங்கடா சாமி' என்று நாமே விலகிக் கொள்ள வேண்டும். அதுதான் கெளரவம். நியாயம். கண்ணியமும் கூட. நிம்மதியான பாடு. அவர்கள் வாழ்க்கையை அவர்கள் வாழட்டுமே! வாழ்ந்து முடித்த நாம் ஏன் குறுக்கே நிற்க வேண்டும்? அன்பு நிலைக்க வேண்டுமென்றால் அல்லது அவ்வப்போது தளிர்க்க வேண்டுமென்றால் அது ஒன்றுதான் வழி. அதையும் தாட்சாயினியிடம் எப்பொழுதோ சொல்லிவிட்டார் இவர். அவள் கேட்டால்தானே? வந்ததே சண்டை பார்க்கணும். வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கிறாள்.
அது ஒழுங்கா நாம பார்த்து வச்சுக் கல்யாணம் பண்ணியிருந்தா யாரையோ இழுத்திட்டு வந்து நின்னிட்டிருக்கானே! அந்தப் பொண்ணுக்காக நாம விலை கொடுத்து வாங்கின இந்த வீட்டை விட்டுப் போகணுமா? எந்தச் சட்டம் சொல்லுது அப்படி? என்று குமுறினாள். வேணும்னா அவுங்க போகட்டும் என்றும் ஒரு வார்த்தை அதிகமாய்ப் போட்டாள். வந்தது வந்தாச்சு…மருமகள் என்பதை மறுக்கத்தான் முடியுமா? உலகம் ஏற்குமா? பொருந்தியும் பொருந்தாமலும் கலந்து கட்டி இருந்து கழிக்க வேண்டியதுதான்.
இப்படியெல்லாம் பேசலாமா? யாரையோ இழுத்திட்டு வந்து! இந்த வார்த்தைகள் அவன் காதில் விழுந்தால் என்னாவது? இத்தனை காலம் இஷ்டமாய் இருந்த அம்மா எப்படி பேசுகிறாள்? கம்முன்னு கிடந்த அப்பா சகித்து இப்போதும் கமுக்கமாய் இருக்கவில்லையா? அம்மா மட்டும் ஏன் இப்படி கொதிக்கிறாள்? என்றுதான் கண்டிப்பாய் நினைப்பான். அந்தப் பெண் காதில் விழுந்தால்? கேட்கவே வேண்டாம், பிரளயம்தான். அது ஒன்றே வெளியேற வசமான சாக்காகி விடும்.
பெற்ற வயிறு அத்தனை சீக்கிரம் சமாதானமாகி விடுமா? எவ்வளவு கனவுகளோடு வளர்த்திருப்பாள். எவ்வளவு ஆசை ஆசையாய்ச் செய்து போட்டிருப்பாள். எவ்வளவு பார்த்துப் பார்த்து ஊட்டியிருப்பாள். கண் காண அவன் வளருவதைக் கண்டு எவ்வளவு மானசீகமாய் ரசித்திருப்பாள். அவன் நலத்துக்காக, எத்தனை கோயில்களுக்கு அலைந்து வேண்டியிருப்பாள். எத்தனை வேண்டுதல்களை நிறைவேற்றியிருப்பாள். சுயநலம் பார்க்காது, கண் துஞ்சாது காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு என்று எப்படியெல்லாம் பொத்திப் பொத்திப் பாதுகாத்திருப்பாள்? எல்லாமும் தூள் தூளாகிவிட்டதே? கானல் நீராகி விட்டதே!
உன் பையனுக்குப் பிடிச்சதுதான் இனி இந்த வீட்ல சமையல் போலிருக்கு. நா ஆசைப்பட்டு இனி எதுவும் கேட்க முடியாது. கேட்டுறவும் கூடாது. அவனுக்குப் பிடிச்சதை எனக்குப் பிடிச்சதா நினைச்சு முழுங்கிட்டுப் போகணும் அதானே? இல்லன்னா வேண்டாம்னு எழுந்திரிச்சு ஓடணும். இப்பத்தான் உண்மையிலேயே சாப்பாட்டுக் கஷ்டத்தை உணர்றேன் நான். சர்வீஸ்ல இருக்கைல எத்தனையோ வெளியூர்ல சாப்பிட்டுக் கழிச்சிருக்கேன். அப்பல்லாம் எதுவும் பாதிச்சதில்லை. இப்ப சொந்த வீட்லயே என் நிலைமையைப் பார்த்தியா? எங்கயாவது சொந்த வீட்லயே பிச்சக்காரனா ஒருத்தன் இருக்கிறதைப் பார்த்திருக்கியா? என் வயிறு, என் ஜீரண சக்தி, என் பசி என்று பொருட்படுத்தி ஏதேனும் தயாராகிறதா இந்த வீட்டில்? எனக்கு எந்த நோக்காடும் வராம இருக்க வேணும்னா நீ வச்சத வாயை மூடிட்டுத் திங்கணும் இல்லன்னா ஒதுக்கணும். அதுதானே?
ரிடையர்ட் ஆகி வருஷம் ஓடிப் போச்சு. இன்னும் என்ன நாக்கு ருசி கேட்குது? போடுறதத் தின்னுட்டு பேசாமக் கிடங்க? வாய்விட்டுச் சொல்லியே விட்டாள். எதைத் தின்னாலும் வாயு.வர்ணம்னு அங்க பிடிக்குது, இங்க பிடிக்குதுன்னு முதுகையும், வயித்தையும் பிடிச்சிட்டு நெளிஞ்சிட்டிருக்கீங்க? நாக்கு ருசியெல்லாம் மட்டுப் படுத்துங்க!! இன்னும் வித விதமா சாப்பாடு கேட்கிறதாக்கும் ஐயாவுக்கு?
தனக்கு மட்டும் சுளீர் சுளீர் என்று கொடுப்பாள். பேச்சில் தன்னிடம் கிடைக்கும் சுதந்திரம் பையனிடம் கிடைத்திருக்கிறதா அவளுக்கு? ஏதாச்சும் வித்தியாசமாய்ச் சொன்னால் முணுக்கென்று கோபித்துக் கொண்டு ரெண்டு நாளைக்குச் சாப்பிட மாட்டான் அவன். அவ்வளவு அம்மாச் செல்லம்! அப்புறம் என்னவெல்லாமோ புதிதாய்ச் செய்து போட்டு தாஜா பண்ணுவாள் அவனை. இனி அம்மாச் செல்லம்.சும்மாச் செல்லமாகிவிடும்!
என்ன.. தொட்டதுக்கெல்லாம் கோவிச்சிக்கிட்டிருக்கே? போடுறதத் தின்னுட்டுக் கிளம்பு.எல்லாம் எங்களுக்குத் தெரியும்..எதைச் செய்யணும், எப்படி செய்யணும்னு ஒரு போடு போட்டிருந்தால் பயப்படுவான். ஒரு முறையேனும் கண்டித்திருப்பாளா? அடியாத மாடு படியாது. அதைப் போலத்தானே பிள்ளைகளும்? கண்டிச்சு வளர்த்தால்தான் பிள்ளைகள். ஒழுக்க நெறி என்பது பின் எப்படிப் படியும்? அன்பு செலுத்தும் அளவுக்குக் கண்டிப்பும் வேண்டாமா? நல்லவைகள் உஷ்ணமாய்த்தான் வரும். கடைப்பிடிக்கக் கஷ்டமாய்த்தான் இருக்கும். படிந்தால் விடவே விடாதே! அதுவல்லவோ வளர்ப்பு…? இளம் வயதிலேயே புகட்டி விட்டால்தானே தடம் மாறாமல் கழியும்?
எதைச் சொன்னாலும், ஒண்ணே ஒண்ணுகண்ணே கண்ணு.என்று முடியும். அந்த ஒண்ணே ஒண்ணு இன்றைக்கு அன்பைக் கொட்டிய அம்மாவுக்கே தெரியாமல் இன்னொன்றை இழுத்துக் கொண்டு வந்து நிற்கிறதே…? அவளுக்கே, அவள் அன்புக்கும் பாசத்திற்குமே வந்தது வினை.
எல்லாம் நினைத்துப் பார்த்து, நினைத்துப் பார்த்து பெருமூச்சுதான் மிஞ்சியது தணிகாசலத்திற்கு. வம்பு தும்பு இல்லாமல் வாழ நினைப்பவனுக்குத்தான் வேண்டாததெல்லாம் வலை கட்டி நிற்கிறது.
வீட்டை அவன் பேருக்குத்தான் வாங்கிப் பதிஞ்சிருக்கோம்.. ஞாபகம் இருக்கில்ல? அம்மா மறந்திட்டீகளோ? அவன் பேருக்கே பதிஞ்சிடுங்கன்னு நீதானே பரிஞ்சு பரிஞ்சு சொன்னே! நல்லா யோசிச்சுக்குங்கன்னு பில்டர் கூட ஒரு வார்த்தை தன் பங்குக்குன்னு ரிஜிஸ்டர் ஆபீஸ்ல வச்சுக் கடைசியாச் சொன்னான். ஞாபகம் இருக்கில்லை. வாயை மூடிட்டுக் கிளம்புற வழியைப் பாரு? இன்னம் வேறே இழுத்தடிச்சு, கேவலப்பட்டு வெளியேத்தணும்னு, வெளியேறணும்னு தலைவிதியா? அது என்னால ஆகாது.பொட்டியக் கட்டுற வழியைப் பாரு? சொல்லிப்புட்டேன். என் பேச்சுக்கு மறு பேச்சுங்கிறது இருக்கப்படாது. அப்புறம் நான் மனுஷனா இருக்க மாட்டேன். சொல்றது புரியுதுல்லை? மீதி வாழ்க்கையினுடைய கெளரவம் நம் மகையில்ஞாபகமிருக்கட்டும்'என் வழக்கமான அந்தப் பழைய பாணியில் குரல் உயர்த்தி கள யதார்த்தத்தை அழுத்தமாய்ப் பதிவு செய்தேன். ஆளுமை கணீரென்று வெளிப்படும்போது அதில் சத்தியமும் தத்துவமும் விஞ்சி நிற்க வேண்டும். அதுவே அதற்குப் பெருமை!
'நீங்களே கிளம்பிட்ட போது அப்புறம் எனக்கென்னங்க?''என்றாள் தாட்சாயிணி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com