திரைக் கதிர்

திருமணத்திற்குப் பிறகு, படங்கள் தேர்வில் மிகக் கவனமாக இருக்கிறார் நயன்தாரா.
திரைக் கதிர்

திருமணத்திற்குப் பிறகு, படங்கள் தேர்வில் மிகக் கவனமாக இருக்கிறார் நயன்தாரா. அவரது 20 வருடத் திரைப்பயணத்தில் இப்போது 75 படங்களைத் தாண்டிவிட்டார். அவரது 75-ஆவது படமான "அன்னபூரணி'யை ஷங்கரின் உதவியாளரான நிலேஷ் கிருஷ்ணா இயக்கியிருக்கிறார். தமன் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் சத்யராஜ், ஜெய், சச்சு, ரேணுகா எனப் பலரும் நடித்துள்ளனர். வருகிற டிசம்பர் ஒன்றாம் தேதி இப்படம் வெளியாகிறது.இதற்கிடையே மாதவன், சித்தார்த் நடிக்கும் சஷிகாந்தின் "டெஸ்ட்' படத்திலும் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பெரும்பகுதி நிறைவடைந்து விட்டது. அடுத்து பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் 
"மண்ணாங்கட்டி சின்ஸ் 1960' என்ற படத்தில் நடித்து வருகிறார். யோகி பாபுவுடன் இதில் நடிக்கிறார்.

-----------------------------------------------

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் - சிவகார்த்திகேயன் இணையும் படத்தின் அறிவிப்பு, இந்நேரம் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இசையமைப்பாளர் இமான் ஏற்படுத்திய சர்ச்சையால், "அயலான்' ரிலீஸ் வரை அமைதி காக்க விரும்புகிறாராம் சிவகார்த்திகேயன். அதுவரை கதை எழுதும் பணியைக் கவனிக்கச் சொல்லியிருக்கிறாராம். சர்வதேச அளவில் நீளும் கதை என்பதால், ப்ரீ புரொடக்ஷன் வேலைகளைத் தீவிரமாகச் செய்யத் தொடங்கியிருக்கிறார் முருகதாஸ். வெளிநாடுகளில் லொகேஷன் பார்க்கும் வேலைகளை முதற்கட்டமாகத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

-----------------------------------------------

இசையமைப்பில் மீண்டும் தீவிரம் காட்டத் தொடங்கியிருக்கிறார் யுவன் ஷங்கர்ராஜா. அடுத்த ஆண்டு, யுவன் ஷங்கர் ராஜாவின் ஆண்டாக இருக்கப்போகிறது. விஜய்யின் "தளபதி 68', நிவின் பாலியின் "ஏழு கடல் ஏழு மலை', சூரியின் "கருடன்', சதீஷின், "கான்ஜுரிங் கண்ணப்பன்', அமீரின் "மாயவலை', "இறைவன் மிகப்பெரியவன்', தவிர "மேதாவி', "கேங்ஸ் ஆஃப் கோதாவரி', "நிலமெல்லாம் ரத்தம்' உட்பட பல படங்களுக்கு இசையமைத்துவருகிறார் யுவன். 

-----------------------------------------------

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் நடிப்பில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் வெளியான  "ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்'  மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று திரையரங்குளில் ஓடிக்கொண்டிருக்கிறது. ""பேட்ட' படத்திற்கு பிறகு ரொம்ப நாள் கழித்து தியேட்டரில் ரிலீஸாகும் எனது படம் இது. பலர் "ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்', ஜிகர்தண்டாவை முதல் பாகத்தைவிட நன்றாக இருக்கிறது என்று கூறும்போது ஒட்டுமொத்த டீமும் மிக மகிழ்ச்சியாக இருக்கின்றோம். "ஜிகர்தண்டா' படத்தை இயக்கும்போது "ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்'-ஐ இயக்கும் ஐடியா இருந்ததில்லை. ஆனால் இப்போது ஜிகர்தண்டா- 3 எடுக்க வாய்ப்பிருக்கிறது'' என்றார் கார்த்திக் சுப்புராஜ்.

-----------------------------------------------

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் "விஜய் விலையில்லா விருந்தகம்',  "விஜய் விழியகம்', "விஜய் பயிலரங்கம்' உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை விஜய் மக்கள் இயக்கத்தினரின் செயல்படுத்திவருகின்றனர்.  தற்போது "தளபதி விஜய் நூலகம்'  தொடங்கப்படும் என்ற  அறிவிப்புக்கு பெரும் வரவேற்பும் பாராட்டுகளும் கிடைத்துள்ளன. 

குறிப்பாக, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடத்தைப் பிடித்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகையும் பரிசுகளும் அளித்து பாராட்டிப் பேசும்போது, "மாணவர்கள் நிறைய புத்தகங்களைப் படிக்கவேண்டும். முக்கியமாக அம்பேத்கர், ஈ.வே.ரா.பெரியார், காமராஜர் போன்ற தலைவர்களைப் படித்து அறிவை வளர்த்துக் கொள்ளவேண்டும்" என்று விஜய் பேசியிருந்தார். இந்த நிலையில் முதற்கட்டமாக, சென்னை, கிருஷ்ணகிரி, அரியலூர், நாமக்கல், வேலூர் ஆகிய மாவட்டங்களில் 11 இடங்களில் "தளபதி விஜய் நூலகம்' திறக்கப்படும் என விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com