

எனது பெரியம்மாவுக்கு 60 வயதாகிறது. 27ஆம் வயதில் அவருக்கு தாங்க முடியாத தலைவலி ஏற்பட்டது. வலது பக்கம் காதுக்கு மேலே தலையில் கட்டி உள்ளதை அறிந்து, பத்து ஆண்டுகள் மருந்து சாப்பிட்டதில் கட்டி உடைந்துவிட்டது. இதனால் காது, மூக்கு, வாயில் சீழ் ரத்தமாக வந்தது. அதற்கு 2 ஆண்டுகளாக மருந்து சாப்பிட்டதில், தலைவலி மீண்டும் வந்துவிட்டது. தொடர்ந்து, 33 ஆண்டுகளாக மருந்து சாப்பிட்டும், வாய் திறந்தாலோ, இரண்டு வார்த்தைகள் பேசினாலோ வலது புற தாடையில் மின்னல் மின்னுவது போல் வலி ஏற்பட்டு அவதிப்படுகிறார். இதற்கு என்ன தீர்வு?
கே.ரேவதி,
ஓமலூர்.
மண்டை ஓட்டின் உட்பகுதியில் தாடை எலும்புகள் சேருமிடத்தில் நரம்பு நசுங்கியிருப்பதாகத் தெரிகிறது. அதை அவ்விடம் விட்டு நெகிழச் செய்து விடுதலை அளிக்க சில ஆயுர்வேத மூலிகைத் தைலங்களாகிய, கார்பாஸாஸ்த்யாதி', 'தான்வந்திரம்', 'ராஸ்னாதசமூலாதி' போன்றவை பயன்படுத்தப்படுகின்றன.
தலை, நெற்றி, முகவாய்க்கட்டை ஆகிய பகுதிகளில் இளஞ்சூடாக இந்தத் தைலங்களில் ஒன்றைத் தடவ வேண்டும். கண்கள் மீது நந்தியார்வட்டை, முருங்கை பூக்களை வைத்துக் கட்டிக் கொண்டு நசுங்கிய பூண்டை பாலில் வேக வைத்து, அதிலிருந்து வெளிவரும் ஆவியை முகத்தின் மீதும், தாடையில் மின்னல் போன்று வலி ஏற்படும் பகுதியில் நன்கு படுமாறு பூண்டின் பால் ஆவிபடுமாறும் செய்துகொள்வது நல்ல பலன்களைத் தரும். இது கிராமங்களில் வழக்கத்திலுள்ள சிகிச்சையாகும்.
மேலும், தலையில் ஓட்டை உள்ள பகுதிகளாகிய மூக்கு, காது, வாய் ஆகிய பகுதிகளிலும் எண்ணெய் நிரப்பும் சிகிசசையினால் அவர் பயன் உணரலாம். மூக்கினுள் நீராவியில் உருக்கிய 'க்ஷீரபலா 101' எனும் மருந்தை நான்கு சொட்டுகள் விடுதல், காதினுள் 'வசாலசுனாதி தைலம்' இளஞ்சூடாக விட்டு நிரப்புதல், வாயினுள் 'அரிமேதாதி தைலம்' விட்டு வாய் கொப்பளித்தல் போன்ற சிகிச்சை முறைகளால் நரம்பினுள் பற்றிய வாயுவின் வலி உணர்வை வெகுவாகக் குறைப்பதுடன் நரம்புகளை வலுவூட்டலாம். கண்களுள் ஊற்றி நிரப்பப்படும் 'திரையலக்ருதம்' , 'ஜீவந்தியாதி க்ருதம்' எனும் நெய் மருந்துகளாலும், அவருக்கு ஏற்பட்டுள்ள நரம்பு உபாதையைக் குறைக்கலாம்.
'சிரோவஸ்தி' எனும் தலையில் மூலிகைத் தைலத்தை நிரப்பி வைக்கும் வைத்திய முறையை ஆயுர்வேதம் தலையைச் சார்ந்த நரம்பு உபாதைகளுக்கு வெகுவாகப் பரிந்துரை செய்கிறது. அவரவர் உடல்நிலைக்கு ஏற்ப, தைலங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்தச் சிகிச்சை முறையை செய்ய வேண்டும்.
பொதுவாக, 'க்ஷீரபலாதைலம்', 'கார்ப்பாஸாஸ்த்யாதி தைலம்' போன்றவற்றைத் தேர்ந்தெடுத்து செய்துகொள்வதும் நலம்.
ஏழ்மையின் காரணமாக, பல சத்துள்ள உணவுகளின் உட்புற வரவை அவர் இழந்திருக்கக் கூடும். அதனால் அவருக்கு அளிக்கப்பட வேண்டிய உள் மருந்துகள், நரம்பின் வலுவைக் கூட்டுவதாகவும், நரம்பிலுள்ள வரட்சி, லேசான தன்மை ஆகியவற்றை மாற்றித் தரும் நெய்ப்பு, கனம் ஆகியவை நிறைந்திருக்கக் கூடிய வகையிலும் அமைந்திருக்க வேண்டும்.
'விதார்யாசக்ருதம்' எனும் நெய் மருந்து , 'தசமூலரசாயனம்' எனும் லேகியம், 'அஸ்வகந்தாரிஷ்டம்' போன்றவற்றை மருத்துவரின்ஆலோசனையின்படி, சாப்பிட வேண்டிய நல்ல மருந்துகளாகும்.
தலையில் குளிர்ந்த நீரைவிட்டுக் குளித்தல், இரவில் தலை, காது நன்கு மூடக் கூடிய குல்லாய் போடாமல் படுத்துறங்குதல், வாயுவின் சீற்றம் தரக் கூடிய ஆறிய பருப்பு வகைப் பொருள்களைத் தவிர்ப்பது நல்லது.
உணவுக்குப் பின்னர், குளிர்ந்த நீரைக் குடிப்பது தவறாகும்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.