வானரம் ஆயிரம்

கயல்விழியின் உதட்டோரம் புன்னகை உருவானது.
வானரம் ஆயிரம்

கயல்விழியின் உதட்டோரம் புன்னகை உருவானது.
நாகராஜனுக்கும் மல்லிகாவுக்கும் தங்களது மகளின் முகத்தைப் பார்க்கத் தயக்கமாக இருந்தது. அவள் பக்கமாகத் திரும்புவதைத் தவிர்த்தனர். மனிதர்களை நினைத்து குழப்பம், ஆச்சரியம், கேள்விகள் என அனைத்தும் உருவாகின கயல்விழிக்குள்.
ஸ்ரீரங்கத்தின் பெரும்பாலான வீதிகள் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டிருக்க, ஒலி குறைத்து வைக்கப்பட்டிருந்த ஸ்பீக்கர்களில் ஸ்லோகங்கள் அமைதியாய் ஒலித்துகொண்டிருந்தன.
பாரதத்தின் வட பகுதியிலிருந்து யாத்திரையை துவக்கியிருந்த அப்பண்ணதாசரே இந்தக் கோலாகலங்களுக்கான பின்னணியாக இருந்தார். பல ஷேத்திரங்களைக் கடந்து வந்து கொண்டிருந்த அவர், அரங்கனைத் தரிசித்துவிட்டு ராகவேந்திர மடத்தில் இரண்டு நாள்கள் தங்கியிருந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கவிருப்பதாக சுவரொட்டிகள் ஆங்காங்கே ஓட்டப்பட்டிருந்தன.
பிரபலமான வணிக அமைப்புகளும், பெரிய கல்வி நிறுவனங்களும் தங்களது விளம்பரத்துக்கான நல்ல வாய்ப்பாக இவரது வருகையை பயன்படுத்திக் கொள்ள முனைந்து, நகரின் பெரும்பாலான சந்திப்புகளில் வரவேற்பு பேனர்களை நிறுவியிருந்தனர்.
காலை நேர சாத்தார வீதி பூச்சந்தை வியாபாரிகளோ இவற்றை பெரிதாக எடுத்துகொள்ளாமல், சுற்றுப்புறக் கிராமங்களில் இருந்து வந்திருந்த விவசாயிகளிடமிருந்து வகைவகையான பூக்களை மொத்தக் கொள்முதல் செய்வதில் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்தனர். பள்ளிச்சிறார்களோ, முந்தைய நாள் பள்ளி நேரத்துக்குப் பிறகு தங்கள் தெரு நண்பர்களுடனான சுவாரஸ்ய சம்பவங்களை நண்பர்களோடு பகிர்ந்தபடி நகர்ந்துகொண்டிருந்தனர்.
ராஜகோபுரத்தின் பிரம்மாண்டத்தை வியந்தபடியே உள்ளே நுழைந்து, வெள்ளெருக்கு பிள்ளையார் வியாபாரிகளையும், சாக்குப் பைகளை தரையில் பரப்பி சுண்டைக்காயை குவித்து மேலே உழக்கை வைத்திருந்த பெண்மணிகளையும் கடந்து சற்றே ஏறக்குறைய ஐம்பது மீட்டர்தூரத்தில் வலப்பக்கம் திரும்பினால் சாத்தார வீதி. இரண்டு, மூன்று வீடுகளைக் கடந்ததும் நாகராஜனின் "பார்வதி இல்லம்'. அவரது தந்தையால் கட்டப்பட்ட பழைய வீடு. வாசல் முதல் முற்றம் வரையிலான பகுதி நாட்டு ஓடுகளால் சீராக அடுக்கப்பட்டும், முற்றத்துக்குப் பிறகான பகுதியில் சிறிய அளவிலான மொட்டை மாடிக்கென காங்கிரீட் தளமுமாக அழகாய் வடிவமைக்கப்பட்டிருந்தது.
'தேவையாங்க இதெல்லாம்? வேற யார்கிட்டயாச்சும் வாங்கியாவது அவன் காசை தூக்கிப் போட்டுட்டு வாங்கன்னு சொன்னா உங்களுக்கும் மண்டையில் ஏற மாட்டேங்குது. லட்சக்கணக்கில் குடுத்தவன் எல்லாம் பேசாம இருக்கான். வெறும் பத்தாயிரத்தைக் குடுத்துட்டு,காலங்காத்தால என்னென்ன பேச்செல்லாம் பேசிட்டு போறான் அவன்?'' என்று சமையல் அறையிலிருந்து மல்லிகா கத்திக்கொண்டிருக்க, பதிலேதும் சொல்லாமல் அனைத்தையும் கேட்டுக் கொண்டு அமைதியாக வாசலிலேயே நின்றிருந்தார் நாகராஜன்.
எவரது பேச்சுக்களையும் மூளைக்குள் ஏற்றிக் கொள்ள விரும்பாத மூத்தவள் கயல்விழி, தான் புதிதாகச் சேர்ந்திருந்த வேலைக்குத் தாமதமின்றி கிளம்புவதில் தீவிரம் காட்டிக் கொண்டிருந்தாள். முதுகலை முதலாம் ஆண்டிலிருந்த இளையவன் சாந்தகுமார் மோட்டார் சைக்கிளில் படிந்திருந்த தூசியைத் தட்டிக் கொண்டிருந்தான்.
'இவ்ளோ பேசறேனே. ஏதாச்சும் வாயைத் தொறக்கறீங்களா நீங்க? இதுவரைக்கும் வட்டியே பதினைஞ்சாரம் தின்னுருக்கியேடா? இதுக்கு மேல உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கன்னு துரத்திவிடாமல் எதுக்கு அவன் பேசறதையெல்லாம் பொறுமையா நின்னு கேட்டுகிட்டுருந்தீங்க?''
'அய்யய்யய்ய... அவனே பரவாயில்லை போலிருக்கு. உன் தொல்லை பெரிய தொல்லையால்ல இருக்கு? ஏண்டீ, காசை வச்சு தொழில் பண்ணிகிட்டிருக்கவன் அவன். வருஷக்கணக்கா அசலை குடுக்காம இந்தா, அந்தான்னு இழுத்துக்கிட்டேயிருந்தா கத்திட்டு போவாமல், , கொஞ்சிகிட்டா உட்காந்துருப்பான்? வாங்குன காசை சீக்கிரம் குடுக்கணும்னு நினைப்பியா, அதை விட்டுபுட்டு அவன்கிட்ட வரட்டி இழுப்புக்கு போவச் சொல்றே?'' என்று சமையலறையை நோக்கிக் கத்தினார்.
'எக்கேடோ கெட்டுப் போங்க. நீங்களாச்சு அவனாச்சு. இனிமே அவன் வந்தான்னா நான் ரூமை விட்டு வெளியில வர மாட்டேன், சொல்லிட்டேன். கண்றாவி புடிச்சவன். வீட்டில் பொம்பளைங்க இருக்காங்கன்னுகூட பார்க்காம இப்படியா பேசுவான்? வட நாட்டுலேர்ந்து சுவாமிஜி ஒருத்தர் வர்றாரே, சீக்கிரமா குளிச்சு முழுகிட்டு போயி பாத்துட்டு வரலாம்னு இருந்தேன். எல்லாம் நாசமா போச்சு.''
'அந்தச் சாமியார்தான் ரெண்டு நாளைக்கி இங்க இருக்காராம்ல, அப்பறம் என்ன? நாளைக்கி போயி பார்த்துக்க?''
சுவாமிஜி பற்றி பேசத் துவங்கியதில் கடன்காரன் குறித்த தலைப்பு சற்றே ஆறிப் போகத் துவங்கினாலும், வந்து சென்றவனின் காட்டுக் கத்தல் நாகராஜனுக்குள் செரிமானமாகாமல் ஒரு மாதிரியாகவே நின்று
கொண்டிருந்தது. "கொஞ்ச நேரத்துல என்னென்னல்லாம் பேசிட்டு போய்ட்டான். ச்சே...' என்று நாகராஜனும் நொந்து கொண்டபடியே தெருவில் சென்று கொண்டிருந்த வாகனங்களை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தார்.
'அய்யய்யோ... என்னங்க, கொஞ்சம் இங்கே வந்து பாருங்களேன்'' என்று மல்லிகாவின் திடீர் அலறல் நாகராஜனை பதறியடித்து உள்நோக்கி ஓட வைத்தது.
'என்னாச்சு?'' என்று அவசரமாக வந்து நின்றவரின் முகம் வெகுவாகச் சிவந்தது.
'இந்த வானரங்களைதான் என்ன பண்ணித் தொலையறதுன்னு தெரியலை. நீயாச்சும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்து தொலையக் கூடாதா? இப்படி தான் ஈசியா எடுத்து தின்னுட்டு போற மாதிரி வப்பியா எல்லாத்தையும்? தெனமும் இதே ரோதனையாப் போச்சு உன்னோட? இடிக்கத் தெரியாதவன் உரலை குத்தம் சொன்ன கதையா இருக்கு உங்க கதை.''
'உங்களால ஒண்ணும் பண்ண முடியலேன்னா அப்படியே என் பக்கம் திருப்பி விட்ருங்க?''
'ஏன், கையில குச்சிய வச்சுகிட்டு இருவத்தி நாலு மணி நேரமும் முத்தத்துலேயே உட்கார்ந்து காவல் காக்கச் சொல்றியா என்னை?''
மல்லிகா வெறுப்புடன் அறைக்குள் சென்றுவிட, நாகராஜன் பயங்கரக் கோபத்துடன் நாலாபுறமும் பார்த்தார். வாழைப்பழத் தோல்களும், நேற்றிரவு வாங்கி வந்திருந்த பேக்கரி பண்டங்களின் தூள்களுமாக வீடு முழுவதும் சிதறிக் கிடந்தன.
அனைத்தும் அந்த வானரங்களின் வேலை!
நினைத்த மாத்திரத்தில் சரசரவென ராஜகோபுரத்தின் மீது ஏறுவதும், அங்கிருந்து காவிரியையும் கொள்ளிடத்தையும் பார்வையிட்டுவிட்டு ஏறிய வேகத்தில் மீண்டும் இறங்கிவருவதுமாக பொழுது போக்கிக் கொண்டிருக்கும் வானரங்கள், தங்களுக்கு அகோரப் பசியெடுக்கும்பொழுதெல்லாம் அருகிலிருக்கும் வீடுகளிலோ, கடைகளிலோ கை வைப்பதை வழக்கமாகியிருந்தன.
தோல்களைச் சேகரித்து குப்பைக் கூடையில் போட்டுவிட்டு பெருமூச்செறிந்த நாகராஜன், அடங்காத ஆத்திரத்துடனே மொட்டை மாடிக்கு வந்து நின்று நிமிர்ந்து பார்த்தார். எப்பொழுதும்போல் அமைதியான கம்பீரத்துடன் காட்சியளித்தது ராஜகோபுரம்.
ஒவ்வொரு நிலையிலும் கூட்டமாய் அமர்ந்திருந்த வானரங்களில் சில காற்று வாங்கியபடியே வேடிக்கைப் பார்த்துகொண்டும், மற்றவை மனைவி, மக்களுக்கு பேன் பார்த்துகொண்டுமிருந்தன.
'இதுல எதெல்லாம் நம்ம வீட்டுக்கு வந்து நாசம் பண்ணித் தொலையுதுங்கன்னுதெரியலையே?'' என்று சிறுவர்களைப் போல் யோசித்தார் நாகராஜன்.
'தின்னுட்டுப்போன குரங்கு எதுன்னு தேடிகிட்டிருக்கீங்களா?'' என்ற மல்லிகாவின் குரலுக்குத்திரும்பினார்.
'உருப்படியா என்ன செய்யணுமோ, அதைத் தவிர எல்லா வேலையும் செய்யுங்க?'' என்று கையில் வாளியுடன் படியேறி வந்திருந்தவள், துணிகளைக் கோபத்துடனே இறுக்கிப் பிழிந்து உதறி உலர்த்தத் துவங்கினாள்.
'ஆமாமா, நான்தான் ஒண்ணுக்கும் பிரயோஜனம் இல்லாதவனாச்சே? அறிவாளி நீயாச்சும் என்ன பண்ணலாம்னு சொல்லேன்.''
'ஏன் சொல்லாமலா இருக்கேன்? இந்த ஓடு, முத்தத்தையெல்லாம் எடுத்துட்டு ஒரேயடியா ஒட்டிவிட்றலாம்னு வருஷக்கணக்கா சொல்லிகிட்டுதான் இருக்கேன்? எங்க கேக்கறீங்க. இருக்கற கடனோட சேர்த்து இந்த வேலையையும் முடிச்சு விட்டுட்டா கொஞ்சம், கொஞ்சமா திருப்பிக் கட்டிட்டு போவப் போறோம். உங்களுக்கெல்லாம் மிளகு போற இடம் தெரியாது, கடுகு போறதுதான் தெரியும். என்னமோ பண்ணுங்க?''
'இருக்கற கடனே மூச்சு முட்டுது. இதுல இன்னும் எவன்கிட்ட போய் கை நீட்டிகிட்டு நிக்கச்சொல்றே? எல்லா பிரச்னையும் தெரிஞ்சவ தானே நீ? வேணும்னே என்னைடென்ஷன் பண்ணிவிடணும்னு பேசிகிட்டிருக்கியா?''
நாகராஜனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. இதற்கு மேல் ஏதாவது பேசினால் கட்டுப்பாடின்றி கத்தத் துவங்கிவிடுவான் என்பதை உணர்ந்த மல்லிகா, சலிப்புடன் கடைசித் துணியை உதறிப் போட்டுவிட்டு இடத்தைக் காலி செய்தாள்.
பிறந்த காலம் தொட்டே நாகராஜன் அனுபவித்துக் கொண்டிருக்கும் ஒரு பிரச்னைதான் இந்த வானரப் பிரச்னை. இவருக்கு மட்டுமல்ல; இந்தப் பகுதி மக்கள் அனைவருக்குமே அவஸ்தைதான். முன்புற வாசல், பின்புற வாசல், முற்றம் என எந்த நேரத்தில் எப்படி வருவார்கள் என்பது எவருக்குமே தெரியாது. கண்ணிமைக்கும் நேரத்தில் விருவிருவென உள்ளே புகுந்து தின்பண்டங்களையும் பழங்களையும் கொத்தாகத் தூக்கிக் கொண்டு பறந்து விடும். அவை கை வைப்பதற்குள், இருந்த இடத்திலிருந்தே தங்கள் கைகளில் கிடைக்கும் பொருள்களைக் கொண்டு விரட்ட முயற்சிப்பார்கள். ஆனால், பெரிதாக எதையும் காப்பாற்ற முடியாமல் போகும்.
பெரும்பாலான வீட்டு வாசலிலும் பின்கட்டிலும் அவர்களைப் பயமுறுத்தும்விதமாக முரட்டுத்தனமான மரக்குச்சிகள் சுவரில் சாய்த்து வைக்கப்பட்டிருக்கும். அவற்றையெல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துகொள்வதில்லை இந்த வானரங்கள்.
சிறுவனாய் இருந்தபொழுது நடந்த சம்பவங்கள் அனைத்தும் அண்மையில் நடந்தவை போல் உயிரோட்டத்துடனே நாகராஜனின் மனதில் பதிந்திருந்தன. ராஜகோபுரமின்றி மொட்டை கோபுரமாக நின்றிருந்த அந்தக் காலகட்டங்களில், வானரக் கூட்டத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும்அட்டகாசங்களுக்கு மட்டும் குறைவில்லாமல் தானிருந்தது.
நாகராஜனுக்கு ஏழு வயது இருக்கலாம். கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தான். கஷாயத்தைக் குடித்துவிட்டு நன்றாக அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த மகன் விழிப்பதற்குள் கடைவீதிக்குச் சென்று திரும்பிவிட எண்ணிய தாய், கதவை வெளிப்புறமாகத் தாழிட்டுவிட்டுக் கிளம்ப, இதனைக் கவனித்த வானரக் கூட்டம், மறுகணமே முற்றம் வழியே நாகராஜன் படுத்திருந்த இடத்துக்கு அருகாமையிலிருந்த குட்டைச் சுவரின் மீது குதித்தது. அவருக்கென வைக்கப்பட்டிருந்த பழங்களை அவசர, அவசரமாய் வாயில் அடக்கத்துவங்கின.
எதேச்சையாய் கண் விழித்த நாகராஜன் தன்னெதிரே திரண்டிருந்த வானரக் கூட்டத்தைக் கண்டு அரண்டு போனான். தொண்டை வரண்டு, மூச்சு வாங்க,விரட்டவோ, எழுந்து ஓடவோ தைரியமின்றி, பயத்தில் காய்ச்சல் பல மடங்கு அதிகமாகிப் போனது. இப்படியான பல சம்பவங்கள் இந்தத் தெருவிலிருப்போர் அனைவருக்குமே இருந்தது.
மாடியின் குட்டைச்சுவரில் அமர்ந்து யோசித்துகொண்டிருந்த நாகராஜனின் முகம் திடீரென பிரகாசமாகி, குதித்து இறங்கி,'மல்லி... மல்லி...'' என குரல் கொடுத்தபடியே படிக்கட்டுகளில் பரபரவென இறங்கி வந்தான்.
'சொல்லுங்க?''
'நம்ம மரக்கடை கோபாலுதான் இதுக்கு பக்காவான ஆளு. அவன்கிட்ட பிரச்னையைச் சொல்லி, அப்படியே ஒரு ஐடியாவையும் யோசிச்சு சொல்லிட்டோம்னா, முடிஞ்சுது!''
'அவருகிட்ட பிரச்னையை மட்டும் சொல்லுங்க? நீங்க எதுவும் யோசிச்சு அவரோட ஐடியாவை கெடுத்து விட்றாதீங்க? ஆமா, இத்தனை வருஷமா அந்த மரக்கடை கோபாலு மூஞ்சி உங்களுக்கு ஞாபகத்துக்கு வரலியோ?''
'சும்மா எதாச்சும் விதண்டாவாதம் பேசி பிரச்னையை உண்டாக்காதே. நான் போயி அவனை பார்த்துட்டு வர்றேன்.''
குத்துக்காலிட்டு உட்கார்ந்த நிலையில் பீடியை இழுத்தபடியே பொறுமையாய் அனைத்தையும் கேட்டு முடித்த கோபால், பீடியை தரையில் தேய்த்து பக்கவாட்டில் தூக்கியெறிந்தவிட்டு பெருமூச்சு விட்டான்.
'என்னா நாகு நீ, என்னமோ பெருசா ஐடியா குடுக்கப் போறேன்னு வாயைப் பொளந்து கேட்டுகிட்டுருந்தா, இப்படி புஸ்ஸூன்னு ஆக்கிபுட்ட? கூண்டு வச்சு குரங்கு புடிக்கறதெல்லாம் வேலைக்காவுமா? அதைப் புடிச்சு கம்மங்கட்டி வித்தையா காட்டப் போற நீ? சீரங்கத்துல இருக்கற அத்தனை குரங்குகளையும் இதே மாதிரியே புடிச்சுபுடுவியா?நல்ல ஆளுப்பா நீ..''
'சரி விடு. ஏதோ என் மூளைக்கி எட்டுன வரைக்கும் சொன்னேன். சரியா வராதுன்னா தூக்கி போட்டுட்டு வேற என்ன பண்ணலாம்னு சொல்லுவியா?''
'அப்புடீன்னா நான் சொல்ற மாதிரி செய். அதுங்க ரூட்டுலேயே போயிதான் வேலையை முடிக்கணும். நாளைக்கி என்ன பண்ற, எப்பவும் வைக்கற மாதிரியே பழத்தையெல்லாம் அதுங்க எளிதா எடுக்கற மாதிரி வச்சுட்டு, எல்லாரும் எங்கேயாச்சும் கௌம்பிப் போயிருங்க? ஆனா, வச்சுட்டு போற பழம் ஒவ்வொண்ணுலயும் சயனைட் மாதிரி ஒரு விஷம் இருக்கணும். பழத்தை திங்கிற ஒவ்வொரு குரங்கும் அங்கேயே டப்பு..டப்புன்னு செத்து விழுவறதை மத்ததுங்கள்லாம் பாத்துச்சுன்னா போதும். பயங்கரமா தெறிச்சுஓடஆரம்பிச்சுரும். அங்க வராத குரங்குங்களுக்குகூட விஷயம் போயி சேர்ந்துரும். அதுக்கப்பறம் நீயே பழத்தை வச்சுகிட்டு "வாவா'ன்னு கெஞ்சுனாலும் ஜென்மத்துக்கும் உன் வீட்டுப்பக்கம் கால் வைக்காதுங்க?''
'ஐடியா என்னமோ நல்லாதான் இருக்கு. ஆனா, நமக்கு சரிப்பட்டு வராதுப்பா. விஷம் வாங்கிட்டு வர்றது, செத்ததுக்கப்பறம் எல்லாத்தையும் தூக்கிகிட்டு அலையறதெல்லாம் நம்மளால பண்ண முடியுமா? விஷயம் வெளியில தெரிஞ்சுதுன்னு வையி, கேஸூகீஸூன்னு பெரிய
பிரச்னையாகிப் போயிரும். நியூஸ்ல வேற நிமிஷத்துக்கு நாலாயிரம் தடவை நம்ம மூஞ்சியைக் காட்டிகிட்டேயிருப்பானுங்க? வேற எதாச்சும் யோசிச்சு சொல்லு?''
'ஐடியா சொல்றவன் எல்லாத்தையும் யோசிக்காமலா சொல்லுவேன்? விஷம் வாங்கற வேலையையெல்லாம் நம்மகிட்ட விடு. நான் பார்த்துக்கறேன். பழத்தை மட்டும் கரெக்டான இடத்துல வச்சுட்டு போயிருங்க? கண் காணாத இடத்துல கொண்டு போயி தூக்கிப் போட்டுட்டு வர்றதுக்கெல்லாம் நம்மகிட்ட தெளிவான பசங்க இருக்காங்க?''
'யாருக்கும் விஷயம் தெரியாம பக்காவா பண்ணிருவோம்.''
மாலை நேரம். கோபாலின் ஐடியாவை வீட்டில் வந்து சொன்னபொழுது மல்லிகா மட்டுமேஅமைதியாக இருந்தாள். கயல்விழிக்கும் சாந்தகுமாருக்கும் பகீரென்றது.
'எப்படிப்பா இவ்வளவு கொடூரமாவெல்லாம் யோசிக்கிறீங்க?'' என்றான் சாந்தகுமார்.
'பின்ன என்னதாண்டா பண்ணச் சொல்றே? நீங்களும் எதுவும் பண்ணமாட்டீங்க, பண்றவனையும் எதாச்சும் சொல்லிகிட்டிருப்பீங்களா?''
'அதுக்காக இப்படியெல்லாம் எப்படிப்பா?'' என்றாள் கயல்விழி.
'சரி. நாளைலேர்ந்து இந்தப் பிரச்னை வராத அளவுக்கு நீங்க யாராச்சும் ஒரு ஐடியா சொல்லுங்க? இந்த யோசனையை விட்டுர்றேன்'' என்றார் நாகராஜன்.
'நீங்க பண்ணப் போறது எவ்ளோ பெரிய குற்றம் தெரியுமா?''
'எல்லாம் தெரியும்டா. நான் பார்த்துக்கறேன்போ?'' என்று கடுப்படித்துவிட்டு நாற்காலியில் சாய்ந்தமர்ந்து கால் மேல் கால் போட்டுக் கொண்டார்.
இரவு.
'ஆளுங்கள்லாம் எத்தனைமணிக்கு வர்றாங்க, நாம எங்கே போறோம் என்ன ஏதுன்னு எதுவுமே சொல்லாமஇருக்கீங்க?'' - மல்லிகா.
'நாளைக்கி காலையில சீக்கிரமாவே கிளம்பிருவோம். அண்ணனுக்கு ஃபோன் பண்ணி குளித்தலைக்கி வர்றோம்னு சொல்லிட்டேன். என்ன திடீர் விசிட்டுனு கேட்டாரு. அய்யர் மலைக்கோயிலுக்கு வர்றோம். அப்படியே அங்கே வந்து நைட்டு தங்கிட்டுப் போறோம்னு சொல்லிட்டேன். இந்த விஷயத்தைப் பத்தி அவர்கிட்ட எதுவும் சொல்லலை. நீஎதுவும் உளறி வச்சுப்புடாதே. கோபால்கிட்ட ஒரு சாவி குடுத்துருக்கேன். நைட்டு ரெண்டு மணிக்கு மேல ஆளுங்களோட வந்து, வண்டியை மெயின் ரோட்டுலேயே நிறுத்திட்டு சத்தம் இல்லாம எல்லாத்தையும் சாக்குப் பையில போட்டு தூக்கிட்டு போயிருவான். குளித்தலைக்கி கிளம்பறதுக்கு முன்னாடி சீக்கிரமாவே மடத்துக்குப் போயி அந்த சுவாமிகளைப் பார்த்துட்டு போயிடலாங்க? அவரைப் பார்க்கறதுக்கு எந்தெந்த ஊர்லேர்ந்தோ ஜனமெல்லாம் வந்துகிட்டுருக்கு. இங்க இருந்துகிட்டே பார்க்காம விட்டோமுன்னா நல்லாருக்காது.''
'அதெல்லாம் ஒண்ணும் பிரச்னையில்லை. வீட்டைபூட்டிட்டு கிளம்பிட்டோம்னா எங்க வேணும்னாலும் போவலாம். நம்ம பிளானுக்கு புள்ளைங்க மட்டும் பிரச்னைஎதுவும் பண்ணிடாம பார்த்துக்க, அவ்வளவுதான்.''
'பேசிட்டேன். அதெல்லாம் எதுவும் பண்ண மாட்டாங்க. மூஞ்சிய தூக்கி வச்சுகிட்டே நம்மகூட சைலன்ட்டா வருவாங்க. நீங்களும் எதுவும் கேட்டுக்காதீங்க. பயங்கர கோவத்துல இருக்குதுங்க ரெண்டும்..''
'சரிசரி.. பேசாம இருந்தா போதும்.''
மறுநாள் காலை.
கண்ணி வெடிவைக்கும் பயங்கரவாதிகளைப் போல் மிகுந்த எச்சரிக்கையுடன் நாகராஜனும் மல்லிகாவும் செயல்பட்டுக் கொண்டிருக்க, குளித்து முடித்துக் கிளம்பியிருந்த கயல்விழியும் சாந்தகுமாரும் ஹாலில் "உம்'மென்று டி.வி. பார்த்தபடி அமர்ந்திருந்தார்கள். வீட்டின் எந்தெந்த மூலைமுடுக்குகளுக்கெல்லாம் வானரங்கள் வருமென்பது அவர்களுக்கு அத்துப்படி என்பதால், அங்கெல்லாம் கோபால் சொன்ன அந்த "சிறப்புப் பழங்கள்' வைக்கப்பட்டன.
வீட்டைப் பூட்டி சாவியை எடுத்துகொண்டார் நாகராஜன்.
அப்பண்ணதாசரைத் தரிசிக்க நீண்டவரிசையில் மக்கள் காத்திருக்க, நாகராஜனின் குடும்பமும் வரிசையில் இணைந்துகொண்டது. பக்தர்
கள் ஒவ்வொருவரும் சுவாமிஜியிடம் ஆசி பெற்று, பவ்யமாய் குனிந்து சில வார்த்தைகள் பேசி விட்டும் செல்ல, நாகராஜனின் முறை வந்தது.
சுவாமிஜியின் பாதங்களில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி எழுந்தார் நாகராஜன். தொடர்ந்து மல்லிகாவும் பிள்ளைகளும் காலில் விழுந்தனர்.
'ம்... எல்லாரும் ஷேமம்தானே?''
நாகராஜன் மல்லிகாவைப் பார்த்துவிட்டு, பின்னர் சுவாமிஜியைப் பார்த்தார்.
'தொழிலில் கொஞ்சம் நஷ்டமாகி கடன் அதிகமா ஏறிப்போயிருச்சு சுவாமி. அதுக்குதான் கோயில், கோயிலா ஏறி இறங்கிக்கிட்டிருக்கோம். இதைத் தவிர, சொல்ற மாதிரி பிரச்னைங்கள்லாம் எதுவும் இல்லை சுவாமி.''
'ம்.. ஊர்ஊரா ஒவ்வொரு கோயிலுக்கும் போயி பிரச்னையை சொன்னாதான் உங்க கஷ்டமெல்லாம் அவனுக்குத் தெரியணும்னா அவன் கடவுளே கிடையாதே. நமக்கு மேல இருக்கற சக்தியை நீங்க உறுதியா நம்புனா, நமக்கு வர்ற சந்தோஷம், கஷ்டத்தையெல்லாம் குடுக்கறதும் அதே சக்திதான். வாழ்க்கையில உங்களுக்குக் கிடைச்சுருக்கற நல்ல விஷயங்களுக்காக நன்றி சொல்லவும் பழகிக்கங்க. நல்லதே நடக்கும். எந்த ஷேத்திரத்துக்குப் போனாலும் மேலோட்டமா கையெடுத்து கும்பிட்டுட்டு வராம, அமைதியா சந்நிதியில உட்க்காந்து கண்ணுக்குப் புலப்படாத அந்தச் சக்தியை மனசால் தரிசனம் பண்ணப் பழகிக்கங்க. இறைவனோட உருவம் ரெண்டாம்பட்சம்தான்!'' என்று சுவாமி சொல்ல, தலையசைத்துக் கொண்டனர் நாகராஜனும் மல்லிகாவும்.
'அனுமனை விடாம கெட்டியா புடிச்சுக்கங்க. அவர் ஸ்ரீராகவேந்திர சுவாமிகளோட இஷ்டதெய்வம். அவரோடஅனுக்ரகம் இருந்தா பிரச்னை காலங்களில் மனசுலேயும் உடம்புலேயும் பலம் உறுதியாகும். உறுதியாக நின்னு போராடமுடியும். நம்ம முன்னால உலாவிகிட்டிருக்கற வானரங்களுக்கு தினமும் நாலு வாழைப்பழத்தை அன்போடவும் நல்ல எண்ணங்களோடவும் தானம் பண்ணிப் பழகுங்க. ஸ்ரீரங்கத்துலதான் அவங்களைத் தேடிஅலைய வேண்டிய வேலை இல்லையே. அவங்களே உங்க வீட்டைத் தேடி வந்துர்றாங்களே?'' என்று சொல்லிவிட்டு புன்னகைத்தார்.
மல்லிகாவும் நாகராஜனும் வழிந்தபடியே ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள, கயல்விழிக்கும் சாந்தகுமாருக்கும் புன்னகை அரும்பியது.
கோபாலின் வார்த்தைகள் நாகராஜனுக்குள் அசரீரியாய் ஒலித்தன.'
'இதுக்கப்பறம் நீ பழத்தை வச்சுகிட்டு'வாவா'ன்னு கூப்பிட்டாலும் ஜென்மத்துக்கும் உன் வீட்டுப் பக்கம் கால் வைக்காதுங்க...''
மொத்தக் குடும்பமும் சுவாமிஜியிடம் விடைபெற்றது.
நொடியில் மடத்தைவிட்டு வெளியேறிய நாகராஜனுக்கு பல்ஸ் எகிறத் துவங்கியிருந்தது. மகனைப் பார்த்தார்.
'டேய், சீக்கிரமா வீட்டுக்கு ஓடிப்போயி அந்தப் பழத்தையெல்லாம்...நீங்க முதல்ல சாவியைக் குடுத்துத்தொலைங்க...'' என்று நாகராஜன் சாவியைப் பறிக்காத குறையாக வாங்கிக்கொண்டுஓடினான்.
'ஆஞ்சநேயா...வீட்டில் எந்த விபரீதமும் நடந்துடாம நீதாம்ப்பா பார்த்துக்கணும். வர்ற சனிக்கிழமையே பஞ்சாமிர்த அபிஷேகம் பண்ணி, வடை மாலையும் வெண்ணையும் சாத்தறேன். வானரங்களுக்கு வாழைப்பழம் மட்டும் இல்லை. தெனமும் என்னென்ன பழமெல்லாம் குடுக்க முடியுமோ அத்தனையும்குடுக்கறேன்'' என்று மல்ல்லிகாவும் வேண்டத் துவங்கியிருக்க, நாகராஜன் கோபாலுக்கு போனை போட்டார்.
'கோபால், ஆளுங்க யாரையும் வீட்டுப் பக்கம் கூட்டிட்டு வர வேணாம்ப்பா. இப்போதைக்கி அந்த பிளானையே கேன்சல் பண்ணிடு. மத்ததையெல்லாம் நேரில் வந்து வெளக்கமா சொல்றேன்.''
ஃபோனை வைத்தவருக்கு லேசாக கிறுகிறுவெனவந்தது. சாலையோரக் கல் ஒன்றின் மீதுஅமர்ந்து கொண்டார். என்னபேசுவதெனத் தெரியாமல் மல்லிகா குழப்பத்துடனேநாகராஜனின் அருகே நின்றிருந்தாள்.
கயல்விழி மட்டும் சற்று தள்ளிதனியே நின்றிருந்தாள்.
'திட்டமிட்டு படுபாதகமான கொலை செய்யவிருந்த ஒரு உயிரினத்தை, திடீரென எப்படி கடவுளாக பார்க்க முடிகிறது? இந்தக் கணத்திலிருந்து முதன்மையான கடவுளே இவர்கள்தான் என தெய்வமாயிற்று. என்னவிதமான ரசாயன மாற்றம் இது?' என மனதுக்குள் வியந்து, புரியாமல் குழம்பி, கேவலமாய் புன்னகைத்து தலையை இப்படியும் அப்படியுமாக அசைத்தாள் கயல்விழி.
வீட்டை நோக்கி நடக்கத் துவங்கியிருந்த நாகராஜனும் மல்லிகாவும் சற்றுத் தள்ளி வந்துகொண்டிருந்த கயல்விழியின் பக்கம் திரும்புவதைத் தவிர்த்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com