
என் வயது 65. வயிற்றின் இடதுபுறம் குடல் பகுதியில் தீராத வாயு, தாங்க முடியாத வலி, வாயு வலி இருப்பதால் மலம் கழிக்க சிரமம், பசி இருக்காது, சாப்பிட முடிவதில்லை. இரைப்பை, குடல் பரிசோதனையில் கொலைட்டிஸ் (பெருங்குடல் அழற்சி) என்ற பிரச்னை இருப்பதாகத் தெரியவந்துள்ளது. இதற்கான தீர்வை ஆயுர்வேத மருந்துகளால் பெற முடியுமா?
-எம்.சண்முகசுந்தரம்,
பாவூர்சத்திரம்.
மனிதர்கள் உண்ணும் உணவு வகைகள் அனைத்துமே பஞ்சமஹா பூதங்களின் சேர்க்கையினால் ஆனவையே. அதிலும் வாயு மற்றும் ஆகாயம் நிறைந்த உணவுப் பொருள்களாகிய பருப்பு வகைகள், கடலை வகைகள், கொட்டைகள் (பலா, மொச்சை), கிழங்குகள், கொடிக் காய்கள், குளிர்ந்த நீர், ஆறிய புலால் உணவுகள், கசப்பான கறிகாய் வகைகள் போன்றவற்றைஅதிக அளவில் நாம் உணவாகச் சாப்பிடும்போது, குடலில் இறுதிப் பகுதியில் அவை செரிமானத்துக்காக வரும்போது, இந்த இரு மஹாபூதங்களை வெளியே விடுகின்றன.
அதனால் ஏற்படும் வயிற்று வலி, குடல்நீர் வற்றுவதால் ஏற்படும் வரட்சியின் வெளிப்பாட்டால் மலச்சிக்கல், கீழ்வயிறு உப்புசம், அபானன் எனும் வாயுவின் சீற்றத்தால் கொலைட்டிஸ் எனும் பெருங்குடல் அழற்சி போன்றவை ஏற்படுகின்றன.
இதைச் சரிகட்டுவதற்காகத்தான் தாளிதம் செய்யப்படும் நல்லெண்ணெய், கடுகு, சீரகம், மிளகு, மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, உப்பு, பட்டை, சோம்பு, ஓமம், பெருங்காயம் போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. புதிதாகச் சமைத்த உணவில் அடங்கியுள்ள சூடு ஆறிவிடுவதற்கு முன்பே, சாப்பிடும் நபர்களுக்கு வாயுவின் தொல்லை ஏற்படுவதில்லை. குளிர்ச்சி எனும் குணம் நிறைந்த வாயுவை , உணவிலுள்ள சூடானது குடலில் இதமாகப் பரவிச் செல்லும்போது, தடுத்துவிடுகிறது. உணவின் சூடானது குறைந்து விரைப்பு ஏற்பட்ட நிலையில், அதை மறுபடியும் சூடு செய்து சாப்பிட்டால், பல ஒவ்வாமை நோய்களுக்குக் காரணமாகிவிடும்.
வாய் முதல் ஆஸனவாய் வரை உங்களுக்கு வைத்தியம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. உணவைச் செரிக்க வைக்கும் சீரணத் திரவங்களின் மந்தமான வருகை, குடலில் பரவி நிற்கும் சமானன் எனும் வாயுவின் செயல்திறன் குறைபாடு, குடல் அசைவுகளைத் தன்னிச்சையாகச் செய்யும் நரம்புகளின் சோர்வு, வாயு மற்றும் ஆகாயத்தின் தாக்கத்தினால் குடலில் ஏற்பட்டுள்ள அபரிதமான குளிர்ந்த நிலை ஆகிய அனைத்தும் சீராக்கப்பட வேண்டிய நிலையில் இருக்கின்றன.
'வைஷ்வாணரம்' எனும் பெயரில் ஒரு சூரண மருந்து இருக்கிறது. 'அஹம் வைஷ்வானரோபூத்வா' என்கிறார் கீதையில் கண்ணன். அதற்கு, ' பசி எனும் தீயாக இருக்கிறேன்' என்று பொருள் கொள்ளலாம். அந்த சூரண மருந்தை, நீங்கள் சுமார் ஐந்து கிராம் எடுத்து, நூறு மில்லி சூடான தண்ணீரில் கலந்து, காலை, இரவு உணவுக்கு அரை மணி நேரம் முன்பாகக் குடிக்கவும். பசியைத் தூண்டி, மலம் மற்றும் குடல் வாயுவைக் கலைத்து வெளியேற்றும். வயிற்றுவலியும் நன்றாகக் குறையும்.
'கல்யாண குலம்' எனும் லேஹிய மருந்து, மூன்று கிராம் (அரை தேக்கரண்டி) அளவில் ஒரு நாளில் ஆறுமுறை நக்கிச் சாப்பிடவும். இதற்கு நேரம் காலமெல்லாம் கிடையாது. குடல் மலம், வாயுவை நன்கு கழியச் செய்து வெளியேற்றும்.
சர்க்கரை உபாதையின் தாக்கம் இல்லாதவராக நீங்கள் இருந்தால், பசி ஏற்படவும், குடல் வலி, வாயு குறையவும், மலக்கட்டு நீங்கவும், 'துராலபாரிஷ்டம்' எனும் மருந்தை , சுமார் முப்பது மில்லி காலை, இரவு உணவுக்குப் பிறகு சாப்பிடவும். சர்க்கரை உபாதையிருந்தால், இந்த மருந்துக்குப் பதிலாக 'வாயு குளிகை' எனும் மாத்திரையை சோம்பு, ஓமம் போட்டுக் காய்ச்சிய வென்னீருடன் காலை, இரவு உணவுக்குப் பிறகு பயன்
படுத்தவும்.
விளக்கெண்ணெய்யை சூடாக்கி, வயிற்றின் மீது நன்கு தடவி, அரை மணி நேரம் ஊறிய பிறகு சூடான தண்ணீரால் கழுவிவிடும் முறையை காலை உணவுக்கு முன் செய்து வருவதாலும் தங்களுக்கு நல்லதே!.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.