

"வெங்கி-75' என்கிற அடைமொழியில் ரெடியான வெங்கடேஷின் 75-ஆவது படத்துக்கு "சைந்தவ்' எனப் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. 80 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பான் இண்டியா ஃபார்முலாவில் தயாராகும் இந்தப் படத்தில், எட்டு முக்கிய ஹீரோக்களை அணி சேர்த்திருக்கிறார்கள். "மனாஸ்' என்கிற பாத்திரத்தில் தமிழிலிருந்து ஆர்யா நடித்திருக்கிறார். "இதுவரை நான் செய்திராத பாத்திரம்' என நெருங்கிய வட்டாரத்தில் ஆர்யா ஆச்சர்யப்பட, படத்தின் மீதான எதிர்பார்ப்பு தமிழ்நாட்டிலும் எகிறியிருக்கிறது.
---------------------------------------------------------------
பிரபாஸ் நடித்து வரும் பேன் இந்தியா படமான "சலார்' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டனர். படம் இரண்டு பாகங்களாக வெளிவருகிறது. அடுத்த ஆண்டு செப்டம்பர் 28-ஆம் தேதி ரிலீஸ் என்பதால், மகிழ்ச்சியில் இருக்கிறார் அதில் நடித்துள்ள ஸ்ருதி ஹாசன். தமிழ், ஹிந்தி உட்பட மொத்தம் ஐந்து மொழிகளில் ரெடியாகி வருகிறது. இதில் விசேஷம் என்னவென்றால், அத்தனை மொழிகளிலும் ஸ்ருதியே டப்பிங் பேசியிருப்பதுதான். "சலார்' படத்தைத் தவிர தெலுங்கில் இரண்டு படங்கள் கைவசம் வைத்திருக்கிறார் ஸ்ருதி.
---------------------------------------------------------------
ஒரு வழியாக இயக்குநர் அ.வினோத், கமல்ஹாசனுக்காக உருவாக்கிய திரைக்கதையை எழுதி முடித்துவிட்டார். சமீபத்தில் திரைக்கதைப் புத்தகத்தை கமலிடம் கொடுத்திருக்கிறார் அ.வினோத். உடனடியாக அதை வாசித்து, வசனங்களில் விளையாடும் விதமாகச் சில திருத்தங்களைப் போட்டு, வினோத் பார்வைக்கு அனுப்பியிருக்கிறார் கமல். படத்தின் முக்கால்வாசி ஷூட்டிங் வெளிநாட்டில்தான் என்பதால் இதே வேகத்தில் படப்பிடிப்புத் தளங்களை பார்க்கும் படலமும் தொடங்கவிருக்கிறதாம். அடுத்த மாதம் இயக்குநர் உள்ளிட்ட படக்குழு பல நாடுகளுக்குப் பறக்கப்போகிறது.
---------------------------------------------------------------
கேரளா விழிஞ்சம் கடற்கரையில் 300 கிலோ ஹெராயின் போதைப்பொருள், ஆயுதக்கடத்தலில் ஈடுபட்டதாக கைதான ஆதிலிங்கம் என்பவர் நடிகை வரலட்சுமியின் உதவியாளர் என்பதால் வரலட்சுமிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் அதனை மறுத்து என்.ஐ.ஏ.விடம் இருந்து தனக்கு நோட்டீஸ் ஏதும் வரவில்லை என நடிகை வரலட்சுமி சரத்குமார் விளக்கமளித்து அறிக்கை ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், ஆதிலிங்கம் தொடர்பான வழக்கில் தேசிய புலனாய்வு முகமை எனக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக வரும் செய்திகள் அனைத்தும் பொய்யானவை. மற்றும் அவை வெறும் வதந்திகள். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஃப்ரிலான்ஸ் மேலாளராக ஆதிலிங்கம் என்னிடம் பணியாற்றினார். இன்றுவரை எங்களுக்குள் எந்த ஒரு தொடர்பும் இல்லை. உண்மைகளின் அடிப்படையில் தகவல்களை வெளியிடுமாறு ஊடகங்களை கேட்டுக் கொள்கிறேன்." என்று அதில் குறிப்பிட்டிருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.